May 9, 2006

காரணம் தெரியாமல் அழும் பெண்

பூமா ஈஸ்வர மூர்த்தி கவிதை.

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.

*****************************************************************
இந்தக் கவிதை மிக இயல்பானது. முதலில் வேகமாக படித்துவிட முடியும். தடங்கலோ அல்லது உடனடியாக திரும்பப் படிக்க வேண்டிய அவசியமோ அற்றது. திரும்ப படிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் குறிப்பிடுவது அதன் எளிமையை.

சில கவிதைகள் படிக்கும் போது ஒரு வரியினை படித்து முடிக்கும் போது, ஏதாவது புரியாமல் சிறு பிசிரு தட்டுப் படும். உள் வாங்குவதற்காக அதே வரிக்குள் திரும்பவும் உள் நுழைந்து வர வேண்டியிருக்கும். இந்தக் கவிதையில் வரிகளுக்கிடையிலோ அல்லது சொற்களுக்கு இடையிலோ, புரிந்து கொள்ளுதலுக்கான சிக்கல் எதுவுமில்லை.

கவிதையின் இறுதி வரியினை முடித்தவுடன் மீண்டும் கவிதையினை ரசிக்க படிக்க ஆரம்பிக்கத் தோன்றும். இந்தப் புள்ளியில் இந்தக் கவிதை வென்றுவிடுவதாக உணர்கிறேன். சில கவிதைகளில் தென்படாத இந்த எளிமை படிப்பவனை சலிப்படைய வைத்துவிடக் கூடும். ஆனால் இது எனக்கு கவிதையின் சிக்கலாகத் தெரியவில்லை. சிலர் திரும்பவும் படித்து எப்படியாவது புரிந்து கொள்வார்கள். ஆனால் கவிதையின் நுணுக்கம் பற்றி அறிந்திராத வாசகன்,சிக்கலான வரிகளை புறக்கணித்து விடக்கூடும்.

எளிமையாக தென்படும் காரணத்தினால், கவிதை என ஏற்றுக் கொள்ள முடியாதவையும், அதனை படைத்தவர்களும் கொண்டாடப்படுவது நிகழ்கிறது. நல்ல கவிதை வாசகனுக்கு புரியும் போது போலிகள் தோற்கலாம்.

இந்தக் கவிதையில் காதலை சில முரண்களுடன் ஒப்பிடும் கவிதை சொல்லி,காதலின் ஆழமான சோகத்தையும் வைக்கிறார். முன்னிலைப் படுத்தாமலே, சோகம் முன்னிலை பெற்றுவிடுகிறது. காதலை பிணந்தின்னி,இருளில் கொட்டும் தேள் என்றெல்லாம் சொல்வது வாசகனுக்குள் அதிர்வினை ஊட்டும். காதலை வானவில்லாகவும், ரோஜாத் தோட்டமாகவுமே பார்த்த மனதினுள் அதிர்வுண்டாவது இயல்பே.

ஒருவள் ரயில் ஏறி செத்துப் போகிறாள். அவளின் கழுத்தில்-இரத்த சகதிகளுக்கிடையே மல்லிகை சேதமற்று கிடக்கிறது. யோசித்துப் பார்த்தால், சிந்தனை கிளைகள் விடும். அவள் அப்பொழுதுதான் கிளம்பி வந்திருக்கக் கூடும். உற்சாகத்துடன் வந்திருப்பாள். எதனை எல்லாம் நினைத்துக் கொண்டே நடந்திருப்பாள்? அல்லது தற்கொலை செய்து கொள்ள வந்திருப்பாளா? எனில் மல்லிகை எதற்கு? கணவனோ அல்லது காதலனோ வாங்கித் தந்திருக்கலாம்.

கவிதை எதை பற்றியும் விளக்குவதில்லை. வாசகனின் சிந்தனைக்கு விடுகிறது. ஆனால் காட்சியின் வலியை உணர முடியும். காதலின் வலியினை இவ்வளவு ஒரு கொடூரமான வலியுடன் ஒப்பிடுகிறார்.

அடுத்த வரி. நல்ல புணர்ச்சியில் அழும் பெண். அவள் மனைவியா? காதலியா? அல்லது வேறு ஒருத்தியா? எல்லாக் கேள்விகளும் ஒளிந்து நிற்க- அவள் காதலின் உவர்ப்புத் தன்மையோடு கவிதையில் ஒட்டி தன்னைக் காதலுக்கு ஒப்புமைப் படுத்துகிறாள்.

6 எதிர் சப்தங்கள்:

கார்திக்வேலு said...

nice picks manikandan.

Chellamuthu Kuppusamy said...

நல்ல கவிதை!! நயமான எழுத்து. ரசனையே இல்லாதவரைக் கூட ரசிக்க வைத்துவிடும்.

-குப்புசாமி செல்லமுத்து

கவிதா | Kavitha said...

ரொம்ப நல்லாயிருக்கு மணிகண்டன்..!

செல்வநாயகி said...

முன்பு மரத்தடியில் நண்பர் பாபு இப்படி நல்ல கவிதைகளை எடுத்துப்போட்டு அவை சொல்லவரும் பொருளை அழகாக எழுதிக்கொண்டிருந்தார். அதன்பிறகு இணையத்தில் இப்படிக் கவிதைகளுக்கான கட்டுரைகள் வந்ததாக நினைவில்லை எனக்கு. இப்போது நீங்கள் ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். பிடித்திருந்தன அவை.

ilavanji said...

மணி,

நல்லதொரு முயற்சி!

உங்க புண்ணியத்தில் நல்ல கவிதைகள் படிக்ககிடைப்பது மகிழ்ச்சிதான்! அருமையா இருக்கு!

நின்னு ஆடுங்க! :)

Vaa.Manikandan said...

கவிதை குறித்தான என் புரிதல்களை பதிவு செய்யும் இந்தக் கட்டுரைகள் குறித்து வரும் கருத்துகளும் பாராட்டுகளும் மிகுந்த உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது. இவைகள் பெறும் கவனிப்பு எனக்கான பொறுப்புணர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. இன்னும் கவனத்துடன் இனிவரும் கட்டுரைகளை எழுத முயல்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.