Jun 4, 2020

செந்தூரன்

 'நீங்க சோனா காதா’

இந்தக் கேள்வியை தமிழ்நாட்டில் யாராவது கேட்டிருந்தால் ஆச்சரியமாக இருந்திருக்காது. விசாகப்பட்டினத்தில் யாரோ கேட்ட போது பிரதீப்புக்கு ஆச்சரியம்தான் . கேட்டவரைப் பார்த்தான். மண்டைக்குள் கசகசவென ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து வெகு சில முகங்கள் வேகமாக வந்து  போயின. முக்கால் வினாடிக்குள் கண்டறிந்துவிட்டான். மறக்கக் கூடிய முகமா அது?

‘செந்தூரா...எப்படி இருக்க?’- சிற்சில மாற்றங்களுடன் செந்தூரன் அப்படியேதான் இருந்தான். கல்லூரிக் காலத்தில் அவனுக்கு மீசை சற்று அடர்த்தி குறைவாக இருக்கும். மாறியிருந்தது. தவிர, இப்பொழுது தலையில் சில நரைமுடிகள் தெரிந்தன. முகத்தில்தான் பழைய களை இல்லை. படிப்பை முடித்து பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன. கிட்டத்தட்ட ஆயுளின் மத்திமத்தை நெருங்கியாகிவிட்டது. எல்லோருக்கும் இருக்கக் கூடிய நெருக்கடிகள், சுமைகள்தானே அவனுக்கும் இருக்கும்?

செந்தூரன் குளித்தலையிலிருந்து படிக்க வந்திருந்தவன். அப்பா இல்லை. பக்கத்திலேயே கரூரிலோ திருச்சியிலோ அம்மா படிக்கச் சொன்ன போது பி.ஈ ஐ.டி எங்கே கிடைத்தாலும் சென்றுவிடுகிறேன் என்று சேலம் வந்து சோனாவில் சேர்ந்ததாகச் சொல்லியிருக்கிறான். பிரதீப் எலெக்ட்ரிக்கல் டிபார்ட்மெண்ட். இருவரும் விடுதியில் பக்கத்து அறைகள். மிகவும் நெருங்கவில்லை என்றாலும் நண்பர்கள்.  

‘வைசாக்ல எங்க இருக்கீங்க’- செந்தூரன் கேட்டான் - கால இடைவெளி போடா வாடாவை அழித்து மரியாதையைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தது.

‘ரிஷிகொண்டா பீச் ஏரியால ஒரு ரிசார்ட் கட்டிட வேலை நடந்துட்டு இருக்கு...ரெண்டு நாள் மீட்டிங்..ஹோட்டல்லதான் தங்கியிருக்கேன்’ பிரதீப் சொல்லிக் கொண்டிருந்தபடியே ஸ்ரீவித்யாவின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டான். 

‘நீ?’ -  ங்க விகுதியில்லாமலே கேட்டான். செந்தூரனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடுவதற்கான முயற்சி அது. 

‘பக்கத்துலதான் வேலை’ என்றான். நிறுவனம் பற்றியெல்லாம் பெரிதாக விசாரித்துக் கொள்ளவில்லை. வித்யா பற்றிக் கேட்கச் சொல்லி மனம் குதித்தது. பிரதீப்புக்கு வித்யாவிடம் இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. யாருக்குத்தான் இல்லாமல் இருந்திருக்கும்? அவள் யட்சி. 

செந்தூரனும், வித்யாவும் ஒரே வகுப்பு. ஐ.டி. டிபார்ட்மெண்ட்.  ஆனால் பிரதீப்புக்கு அவளிடம் நேரடியாகப் பேசுகிற வாய்ப்பே அமைந்ததில்லை. அமைந்ததில்லை என்பதைவிடவும் அவள் நறுக்குத் தெறித்தாற் போல பேசிவிடுவாள். அதுவே பல பையன்களுக்கும் பயத்தைத் தந்திருந்தது. பேச யோசிப்பார்கள். சற்றே பிசகினாலும் ஜென்மத்துக்கும் அவளோடு பேச முடியாது. உடைத்து வீசிவிடுவாள். அப்படித்தான் பிரதீப்பும் பேசாமலே காலம் தள்ளியிருந்தான்.

இப்பொழுதும் கூட அவ்வப்பொழுது  ஸ்ரீவித்யா சோனா, ஸ்ரீவித்யா ராமச்சந்திரன் என்று பல்வேறு விதங்களில் அவளது முகத்தை ஃபேஸ்புக்கிலும் கூகிளிலும் தேடிப் பார்ப்பதுண்டு. ஆனால் அவளைப் பற்றி எந்தத் தகவலையும் எடுக்க முடிந்ததில்லை. எதுவும் செய்யப் போவதில்லை- முகத்தைப் பார்க்கலாம் என்று அவ்வப்பொழுது தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாமல் இருந்தது. இப்பொழுதும் கூட ‘உங்க க்ரஷ் யார்?’ என்று கேட்டாள் அவள் பெயர்தான் வந்து போகிறது. பிரதீப்புக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வித்ய ப்ரீத்தா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘நீ வைசாக் வந்து எவ்ளோ வருஷம் ஆச்சு?’ பிரதீப்தான் கேள்வியைக் கேட்டான். 

‘ஆறேழு வருஷம்’ 

‘ஐடி- யா?’

‘இல்ல’- இந்த பதில் செந்தூரனை நெருடியது. என்னவோ சரியில்லையோ என்று நினைத்தான். அடுத்த கேள்வியாக வித்யா குறித்துக் கேட்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் அமைதியாக இருக்க வேண்டியதாகிவிட்டது. பலரும் அணுகத் தயங்கிய வித்யா செந்தூரனிடம்தான் அதிகம் பழகினாள். மெக்கானிக்கல் சீனியர் பாலகுமாரன் ஒரு முறை தனது விடுதி அறைக்கு செந்தூரனை அழைத்து வித்யா குறித்து விசாரித்தார். 

செந்தூரனிடம் ஒரு தெனாவெட்டு இருக்கும். பார்ப்பதற்கு நளினமானவனாகவும், நாசூக்கானவனாகவும் தெரிந்தாலும் கட்-த்ரோட் என்பதன் சரியான உதாரணம். அதெல்லாம் இயல்பிலேயே வர வேண்டும். என்னதான் பயிற்சி செய்தாலும் வந்து சேராது. அது கூட வித்யாவை ஈர்த்திருக்கக் கூடும். 

தாம் இங்கு ஏதேனும் மென்பொருள் துறையில் பணிபுரியக் கூடும் என பிரதீப் நினைத்திருப்பான் என்பதை செந்தூரனும் உணர்ந்தவனாக பேச்சை மாற்ற விரும்பினான். 

‘வேலை என்ன வேலை... நம்மைச் சுத்தி வெளியில் இருக்கிறதுதான் நமக்கு சந்தோஷம்ன்னு நினைக்கிறோம்..இல்லையா?’ என்றான். 

பிரதீப் மெலிதாக புன்னகைத்தான்.

‘கார், வீடு, வசதி...இப்படி’

‘ம்ம்ம்’

‘வெளியில் இருக்கிறது என்னதான் நம்மை டிஸ்டர்ப் செஞ்சாலும் உள்ளுக்குள்ள நாம அலட்டிக்காம இருக்கணும்..ஆனா பாருங்க...வெளியில் செளகரியமா இருக்கணும்ன்னு உள்ளுக்குள்ள பயங்கரமா அலட்டிக்கிறோம்’- உள்ளுக்குள் என்று சொல்லும் போது நெற்றிப்பொட்டில் கட்டை விரலை வைத்துக் காட்டினான். செந்தூரன் எதையோ அப்பட்டமாக பேசுவதாக பிரதீப் நினைத்தான். மனிதர்கள் தங்களுக்குள் எவ்வளவுதான் சுமைகள் சேர்ந்தாலும், அழுத்தங்கள் வந்து குவிந்தாலும் பணம், சம்பாத்தியம், சுகபோகம் எனபதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார்கள். இல்லையா? 

‘வித்யா எப்படி இருக்கா?’ - இப்பொழுதும் பிரதீப் உள்ளுக்குள்தான் அலட்டிக் கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான்.

‘தெரியலை’- செந்தூரன் சாவகாசமாகச் சொன்னான். விரக்தியில் சொல்கிறானா, இயல்பாகச் சொல்கிறானா என்று புரிபடாத தொனி அது. 

அலுவல் பணி முடிந்து அறையில் லேப்டாப்பை வைத்துவிட்டு காலாற நடந்து வரலாம் என்று வரும் போதுதான் செந்தூரனை எதிர்கொண்டான். இந்தச் சூழலில் செந்தூரனை- தாம் விரும்பிய பெண்ணின் காதலனாக இருந்தவனை எதிர்கொள்வோம் என்று பிரதீப் நினைக்கவில்லை. அவன் இப்படியெல்லாம் பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

பாலகுமாரனிடம் எதிர்த்துப் பேசிவிட்டு வந்த போதே விடுதி முழுக்கவும் அதுதான் பேச்சாக இருந்தது. கல்லூரியிலும் பேசினார்கள். பாலாவைப் பார்த்தால் எல்லோருக்குமே சற்று பயமாக இருக்கும். திடீரென்று அடித்துவிடுவார். அதற்காகவே அவரை கல்லூரியிலிருந்து பல முறை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். செந்தூரனை எதுவும் செய்யாமல் அனுப்பியிருந்தார். அந்தத் தகவல் வித்யாவுக்கும் சேர்ந்திருந்தது. அடுத்த சில மாதங்களிலேயே செந்தூரனும் வித்யாவும் நெருங்கியிருந்தார்கள். அது காதல்தான். 

அதன் பிறகு மற்றவர்கள் யாரும் வித்யாவிடம் பேச முயற்சித்ததாக நினைவில் இல்லை. பிரதீப்பும் அவளை ஓரக்கண்ணால் பார்ப்பதோடு ஒதுங்கியிருந்தான். கல்லூரியின் இறுதிக் காலம் வரையிலும் அவர்களது காதல் தொடர்ந்தது. பிரதீப்புக்கு எலெக்ட்ரிக்கல் துறையைச் சார்ந்தவர்களுடனேயே கூட அத்தனை பேருடனும் தொடர்பில் இல்லாத சூழலில் ஐ.டி. டிபார்ட்மெண்ட்டைச் சார்ந்தவர்கள் யாருடனுமே தொடர்பில் இல்லை. கோபால் அமெரிக்காவில் இருப்பதாகச் சொன்னார்கள். முரளியும் வெளிநாடு சென்றுவிட்டான். எல்லாமே செவி வழிச் செய்திதான். 

வித்யாவைத் தேடும் போதெல்லாம் செந்தூரனையும் தேடியிருக்கிறான். பிரதீப்புக்கு இருவருமே பிடிபடவில்லை.

‘நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கலயா?’ தான் மட்டுமில்லை யாராக இருந்தாலும் செந்தூரனிடம் அவனைவிடவும் அவளைப் பற்றித்தான் கேள்வி கேட்டிருப்பார்கள் என பிரதீப் உள்ளுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டான்.

‘இல்ல’

வித்யா பற்றியக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொற்களுடன் முடிக்கிறான். ‘ஏன் செஞ்சுக்கல’ என்று கேட்டுவிடலாமா என்று குழப்பமாக இருந்தது. 

‘அம்மா என்ன பண்ணுறாங்க?’ என்றான் பிரதீப். கல்லூரியின் நான்காண்டு காலத்தில் ஒரேயொரு முறை வந்திருந்தார். இவன் கல்லூரிக்கட்டணத்தை வாங்கி வர ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் பணத்தைப் புரட்ட முடியாமல் இவன் கல்லூரிக்கு வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் எடுத்து வந்து கட்டினார். கைத்தறிப் புடவை, கழுத்தில் ஒரு மெல்லிய செயின் அணிந்திருந்தார். 

‘அம்மாவும் போய்ட்டாங்க...சூசைட்’- இவன் முகத்தில் ஏன் களை குறைந்திருக்கிறது என்பதைப் புரிந்தவனாக பிரதீப் அமைதியானான். செந்தூரன் சொல்கிற எந்த பதிலுமே மறு கேள்விக்கு வாய்ப்பைத் தராமல் தாழிடும் பதில்களாகவே இருக்கின்றன.

உள்ளே-வெளியே என அப்பட்டமாக பேசியது கூட தன்னை ஆறுதல்படுத்திக் கொள்வதற்காக அவனே பேசுகிற வார்த்தைகள் என்று தோன்றியது.

‘நீ உள்ளுக்குள்ள அலட்டிக்காம இருக்கிறயா?’- பிரதீப் கேட்டான். செந்தூரன் எதிர்பார்க்கவில்லை. ‘அப்படித்தான் இருக்க ட்ரை பண்ணுறேன்’ சொல்லிவிட்டு மெதுவாகச் சிரித்தான்.

‘வேற ஏதாச்சும் பேசுவோமா? ஃபேமிலி பத்தி...’ என்று பிரதீப் கடந்த காலத்தைவிட்டு நிகழ் உலகத்துக்கு அவனை அழைத்து வர விரும்பினான்.

‘என் எல்லா பதிலுமே உனக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும்...கல்யாணம் நடக்கவே இல்ல.....அம்மா இறந்த பின்னாடி தனியாகிட்டேன்..அதுக்கு முன்னாடியே அவ விலகிட்டா...எல்லாம் சேர்ந்து டிப்ரெஷன்....தேடல் அது இதுன்னு பல வருஷம் ஓடிடுச்சு... ஒழுங்கான வேலை இல்லை...’

‘இப்போ என்ன செய்யற?’

‘அங்க பெட்ரோல் பங்க் தெரியுதா...ஹெச்.பி...அங்க மேனேஜர்...இது டீ டைம் இது..ஒரு தம் அடிக்கலாம்ன்னு வந்தேன்...தெரிஞ்ச முகமா இருக்கேன்னு பார்த்தா நீ...முடிதான் கழண்டுடுச்சு உனக்கு’ சொல்லிவிட்டுச் சிரித்தான்.

ஐடி படிப்புக்காக அம்மாவை தனியே விட்டு வெளியில் வந்தவன், எல்லோரும் பயந்த பாலகுமாரனை  சாதாரணமாக டீல் செய்தவன், கல்லூரியே விரும்பிய யட்சி ஒருத்தியை மிகச் சாதாரணமாக காதலிக்கத் தொடங்கியவன். இப்பொழுது எல்லாமே புதிராக இருந்தது பிரதீப்புக்கு. 

எல்லோருக்கும் வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருப்பதில்லை. அது நிறையப் பேர்களை புரட்டி ஓரத்தில் வீசிவிடுகிறது. முனகலோடு கிடக்கும் அவர்களைக் கண்டறிவதில் நமக்கு நேரமும் சூழலும் வாய்ப்பதில்லை. 

‘நீ கேட்ட இல்ல...எதுக்குமே நான் அலட்டிக்கிறதில்லையான்னு? அலட்டிக்க என்ன இருக்கு சொல்லு? ஒரு ரூம் இருக்கு..சின்னதா டிவி இருக்கு....முடிஞ்ச வரைக்கும் பங்க்ல கிடப்பேன்...ரூமுக்கு போனா தூங்கறது மட்டும்தான்...தனிமையைத் தவிர நான் கவலைப்பட ஒண்ணுமே இல்ல’

‘பழசெல்லாம்?’

‘உன்னை மாதிரி யாராச்சும் கிளறினாத்தான்...இன்னைக்கு தூக்கம் வராது...தண்ணியடிப்பேன்’ 

பிரதீப் எதுவும் சொல்லவில்லை. அவனது வலது கரத்தைப் பற்றினான். அப்படியொரு பற்றுதல் செந்தூரனுக்கு சமீபகாலத்தில் நிகழவேயில்லை என்பதை அவனது பதில் பற்றுதல் உணர்த்தியது. 

‘ஒரேயொரு வார்த்தை...இல்லன்னா ஒரேயொரு வாக்கியம் போதும்...ரெண்டு பேருக்கான ரிலேஷன்ஷிப்பை உடைச்சுட’ என்றான். அவனை மீறி கண்ணீர் கசிவது போலத் தெரிந்தது. அவன் வித்யாவை நினைத்துச் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அம்மாவை நினைத்துமாகவும் இருக்கலாம்.

‘எனக்குள்ள இருந்த ஸ்டெபிலிட்டியை அசைச்சு பார்க்குற நீ’ என்று சிரித்தான். அப்பொழுது கண்ணீர் உருண்டுவிட்டது.

‘ரெண்டு பேருக்கும் இடையில் நட்போ, உறவோ உருவாகும் போது அப்பட்டமா பேசிடக் கூடாது....மறைச்சு வெச்ச ஓவியம் மாதிரி....ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் மறைப்ப மெல்ல விலக்கலாமே தவிர ஒரேயடியா விலக்கிட கூடாது...அது எல்லாத்தையும் குலைச்சு போட்டுடும்’ என்று சொல்லிவிட்டு  ‘சிகரெட் வெச்சிருக்கியா’ என்றான். இது நிச்சயமாக வித்யாவை நினைத்துப் பேசுகிறான்.

‘இல்ல’

‘நீ உன் ஃபேமிலி பத்தி சொல்லவே இல்லை’ செந்தூரனின் கேள்வி காதுக்குள் நுழையவே இல்லை. பிரதீப்புக்கு ஏனோ மனசுக்குள் அலையடித்தபடியே இருந்தது.

‘நாளைக்கும் இங்கதான் இருப்பேன்...பங்குக்கு வரட்டுமா’ என்றான்.

‘கிளம்புறியா?’ செந்தூரன் அவனை இருக்கும்படியான தொனியில் கேட்டான்.

‘நாளைக்கு வர்றேன்’ என்றான்.

‘நூறு ரூபா தந்துட்டு போறியா’ என்றான். பிரதீப்புக்கு என்னவோ போலாகிவிட்டது. ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

‘இல்ல...நிறைய தண்ணி அடிச்சுடுவேன்..நூறு மட்டும் கொடு’ என்றவன் ‘மாசக் கடைசி’ என்று அவனாகவே சொல்லிக் கொண்டான்.

பிரதீப் கொடுத்தான். வாங்கும் போது பழைய கட்-த்ரோட் செந்தூரனாக அவனில்லை. உடைந்து போனான்.

பிரதீப் நடக்கத் தொடங்கினான். செந்தூரன் எதிர்திசையில் நடந்தான். கடற்காற்று பிரதீப்பின் வியர்வை முழுக்கவும் கரிப்பை படியச் செய்திருந்தது.

Jul 26, 2019

Unconditional Love

‘கொன்னுட்டேன்’ - அவளுக்கு வழங்கப்பட்ட காபியில் ஒரு மிடறு உறிஞ்சியபடி சொன்னாள். எனக்கு முன்பாக இருந்த தேநீரை இன்னமும் உறிஞ்சத் தொடங்காமல் வைத்திருந்தேன். அந்தச் சொல்லை, மிக இயல்பாக- கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கை தவறி சிதறடிக்கும் போது இருக்கும் பதற்றம் கூட அவள் வார்த்தைகளில் இல்லை. 

வடபழனி சிக்னலில் இருக்கும் இந்த தேநீர் கடையில் அரை மணி நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்திற்கு முன்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துணிப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவளைக் கடைசியாகப் பார்த்தது. அப்பொழுதும் கூட அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. சிரித்து, சில கணங்கள் நல விசாரிப்புக்குப் பிறகு அதே புன்னகையுடன் விலகிக் கொண்டோம். அதன் பிறகு இன்றுதான் - அவளாகவே அழைத்திருந்தாள். குழந்தையின் படிப்பு, கணவனின் வேலை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அவளும் வேலைக்குச் செல்கிறாளாம். அது எனக்கு புதிய செய்தி.

‘என்கிட்ட  என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன?’ என்று ஆரம்பித்தேன். 

‘மனசு நிறைய இருக்கு...ஏதேதோ சொல்லணும்ன்னு நினைச்சேன்...ஆனா ஒண்ணுமில்ல...’ என்று சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றைப் பேசிக் கொண்டிருந்தாள். பெண்கள் பேச விரும்பவில்லையெனில் கிளறாமல் விட்டுவிடுவதுதான் சரி. பெண்களாகவே எல்லைக் கோடுகளை அழித்து மாற்றி மாற்றி வரைய அனுமதிக்க வேண்டும் என்று ஏதோவொரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதுவுமில்லாமல் அவளுக்கும் எனக்கும் பெரிய பந்தம் எதுவுமில்லை. சில ஆண்டுகளாக அறிமுகம் உண்டு. ஏதோவொரு ஈர்ப்பு என்பதைத் தாண்டி எதுவுமில்லாத தொடர்பு. சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறாள். அவை முக்கியமான விஷயங்கள் என்று நம்பியிருக்கிறேன். 

மனம் உணர்ச்சிகளால் நீர் நிறைந்த பலூனைப் போல ததும்பிக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு கை நீண்டு அதில் ஊசியால் குத்திவிட வேண்டும் என நினைப்பதுதானே மனித இயல்பு? எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும் சுமந்து கொண்டே திரிய முடிவதில்லை. அப்படித்தான் அவள் இன்று என்னை அழைத்திருக்க வேண்டும்.

திடீரென ‘ஏமாத்திட்டான்...’ என்றாள். திருமணமான பெண்ணொருத்தி அப்படிச் சொல்லும் போது கணவனை நினைப்பதுதானே இயல்பு.

அந்தத் தருணத்தில் அவளிடம் என்ன சொல்ல வேண்டுமென உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. அவளது கண்களை மட்டும் பார்த்தபடியே தேநீரை எடுத்து உறிஞ்ச எத்தனித்தேன். கண்கள் கசிந்திருந்தன. அழுகையை மறைத்துக் கொள்ள முயற்சித்தாள். போலியாகப் புன்னகைத்தாள். கைகள் அவசரமாக டிஸ்யூ பேப்பரை எடுத்தன. கீழ் இமைகளில் ஓரமாக ஒத்தியெடுத்தாள்.

‘பொண்ணு எப்படி இருக்கா?’

‘நல்லா இருக்கா..பாட்டி வீட்ல’

‘ஹஸ்பெண்டா ஏமாத்தினது?’

‘இல்ல...அவர் ஊர்ல இருக்காரு....’

‘........’

‘அண்டர்ஸ்டேண்டிங் இல்ல...நிறைய சந்தேகம்..வெளிய கூடப் போகக் கூடாதுன்னு’

‘அப்போ...ஏமாத்திட்டான்னு சொன்னது?’

‘எங்க ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டேண்டிங் இல்லன்னு அவனுக்குத் தெரியும்’

‘வேற ஒருத்தனா?’ என்று வெளிப்படையாகக் கேட்கத் தேவையிருக்கவில்லை.

‘பொண்ணு உடையுற போதெல்லாம் அவளுக்கு சாஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படுது...பெரும்பாலும் தோள் கொடுக்கிறவனுக்கு அவ உடம்புதான் தேவைப்படுது’- இப்பொழுது தேநீரை உறிஞ்சியிருந்தால் புரை ஏறியிருக்கும். அதே மாதிரியொரு தோளை எதிர்பார்த்துத்தான் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வழக்கமான ‘ஆல் பர்ப்பஸ் அங்கிள்’ ஒருத்தனின் கதையாகத்தான் அது இருந்தது. அவனுக்கு இவள் ஒருத்தி மட்டுமில்லை- பல தோழிகள். அதை இவள் புரிந்து கொள்ளும் போது நிலைமை கை மீறியிருக்கிறது. 

‘எனக்கு அவனின் காதல் தேவையாக இருந்தது...Unconditional Love...எனக்கு மட்டுமேயான காதல்’- சலிப்பேற்றக் கூடிய இந்த வசனத்தை அவள் சொல்ல, இனி இந்த உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ‘கொன்னுட்டேன்’ என்றாள்.

ஒரு வினாடி உலகமே ஸ்தம்பித்துப் போனதாக உணர்ந்தேன். காதல், காமம், கொலை என எல்லாமே எவ்வளவு எளிதாகிவிட்டது? அதை தைரியமாக என்னை வேறு அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். காவல்துறையினர் விசாரிக்கும் போது ‘இவன்கிட்ட எல்லாத்தையும் எப்பவோ சொல்லிட்டேன்’ என்று கை நீட்டினால் என் கையை முறித்து தோளில் தொட்டில் கட்டிவிடுவார்கள். 

அதற்குமேல் அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவள் இத்தோடு நிறுத்திக் கொண்டால் போதும் என்றுதான் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன்.  அவளாகப் பேசி முடிக்கும் வரைக்கும் குறுக்குக் கேள்வி கூட கேட்காமல், அதே சமயத்தில்  எந்தவிதத்திலும் வார்த்தைகளைச் சிந்திவிடாமல் கவனமாக உரையாடலை முடித்துவிட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

அவளது அவனது விவகாரங்கள் தெரிந்த பிறகு, ஒன்றிரண்டு சண்டைகளுக்குப் பிறகு, காதலை முறித்துக் கொண்ட பிறகு, தனது செல்போன் எண்ணை மாற்றிக் கொண்ட பிறகு, இப்படி பல பிறகுகளுக்குப் பிறகு, ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் அவனை ப்ளாக் செய்து வைத்திருந்தாள். போலியான கணக்குகளைத் தொடங்கி அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணக்குப்படி நூற்றி நாற்பத்து ஏழு நாட்கள். மனம் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. அவனது லீலைகள் தொடர்ந்தபடியேதான் இருந்தன. நூற்றி நாற்பத்தியேழாவது நாள் ஆடி கிருத்திகை நட்சத்திரத்துக்கு முந்தைய நாள் அவளைத் தேடி அலுவலகத்துக்கு வந்துவிட்டான். அவன் மீதான வஞ்சகம் தலை முழுவதும் நிறைந்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவன் தன்னை நோக்கி வருவான் என்றும், வரும் போது கொன்றுவிட வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தாள். அதற்கான திட்டமிடலையும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அத்தனை நாட்களுக்குப் பிறகாக அவனைப் பார்த்த போது எந்த பதற்றமுமில்லை. சாலையின் முனையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்கள்.

‘மகாதேவ மலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்...’

‘அது எங்க இருக்கு?’

‘குடியாத்தம் பக்கம்’

‘நானும் வரலாமா?’

‘ஒண்ணும் பிரச்சினையில்லையே’

‘ம்ம்...உனக்காக’

‘நாலு மாசம் என்னைத் தெரியலையா?’

‘தெரிஞ்சுது’

‘மத்தவங்க சலிச்சு போய்ட்டாங்களா?’

அவன் பதிலேதும் சொல்லவில்லை. 

‘ஆறேகால் மணிக்குக் கிளம்புவோம். உன் ஃபோன் வேணும்’ என்றாள்.

‘ஃபோன் எதுக்கு?’ என்று கேட்க விரும்பினான். வெகு நாட்களுக்குப் பிறகான சந்திப்பு அது. அவள் துரத்திவிடுவாள் என்றுதான் நினைத்து வந்திருக்கக் கூடும். அவள் தன்னோடு வர அனுமதித்ததை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அத்தனை ஆப்களும் பயோமெட்ரிக் லாக் செய்யப்பட்டிருக்கிறது. நம்பிக் கொடுத்தான். 

வாங்கியவள் ‘கோயம்பேட்டுல பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ‘ஆறேகால்...வேலூர் வண்டி நிக்குற இடம்’. 

சாலை திரும்பியவுடன் அவன் மறைந்து போனான். மெட்ரோ ரயிலில் ஏறியவள் கிண்டியில் அவனது செல்போனை அணைத்தாள். நங்கநல்லூர் சாலையில் இறங்கி ஏதோவொரு சாக்கடையில் வீசிவிட்டுத் திரும்பவும் மெட்ரோவில் கோயம்பேடு வந்து நின்றாள்.

ஆறேகாலுக்கு அவனும் அங்கிருந்தான். அவன் கையில் பை எதுவுமில்லை.

‘வீட்ல சொல்லல..துணி கூட எடுத்துக்கல...என் ஃபோன் எங்க?’

‘ஆபிஸ்ல வெச்சுட்டு வந்துட்டேன்....என்கிட்டவும் ஃபோன் இல்ல..ரெண்டு நாளைக்கு அதைப் பத்தி யோசிக்காத...எனக்கே எனக்காக ரெண்டு நாளைக் கொடு...அது போதும்’ அவனுக்கு கை முறிந்தது போலிருந்தது. 

வேலூரை அடைந்த போது மகாதேவமலைக்கு செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது.

‘ஊர் பேரே புதுசா இருக்கு...என்ன மாதிரியான ஊரு அது? தங்க இடம் இருக்கா?’

‘கோவில்தான்...அங்கேயே படுத்துக்கலாம்’

‘என்னை பக்திமான் ஆக்கப் போறியா?’ அவள் சிரித்து வைத்தாள்.

நேற்றிரவு மழை பெய்திருக்கிறது. இரவு பத்தே முக்கால் மணிக்கு மலையை அடைந்தார்கள். விடிந்தால் ஆடி கிருத்திகைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அங்கங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் ஆள் அரவமற்ற இடமொன்றைத் தேடி அமர்ந்தார்கள். என்னென்னவோ பேச வேண்டும் என அவளுக்குத் தோன்றியது. எதுவும் பேசவில்லை. பேசுவதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தாள். 

‘இப்படி உம்முன்னு இருக்கத்தான் கூட்டிட்டு வந்தியா?’

‘உன் பர்ஸைக் கொடு...பையில் வெச்சுக்கலாம்’- பதில் பேசாமல் கொடுத்தான். அவனிடம் வேறு எதுவும் அடையாளமிருப்பதாகத் தெரியவில்லை. கருப்பு டீஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தான். 

ஒரு பெண் தான் செய்த கொலையை விவரிப்பதை கேட்கும் சூழ்நிலை எந்த ஆணுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். அவள் சொல்லச் சொல்ல, அவளது திட்டமிடலும் நேர்த்தியும் என்னை சில்லிடச் செய்திருந்தன. எனது கண்கள் நிலைகுத்தியிருந்தன.

‘தள்ளிவிட்டுட்டேன்’ என்றாள். 

எந்தச் சத்தமுமில்லாமல் விழுந்தான். அதே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தாள். நள்ளிரவு நெருங்க நெருங்க காவடியோடு ஆட்கள்  மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்கள். இருள் செறிந்து கிடந்தது. கீழே குனிந்து பார்த்தாள்.  சலனமற்று அமர்ந்திருந்தாள். நள்ளிரவு கடந்து மழை பெய்தது. யாரோ ஒரு பெண்  ‘மழையில நனையாத..கோயிலுக்குள்ள போய்டு’ என்றாள். அவளுக்கு அவ்விடத்தை விட்டு நகரத் தோன்றவில்லை. கோவிலை விட்டு வெளியே வந்தாள். அதிகாலையில் முதல் பேருந்து கோவிலை விட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதல் பூஜை முடிந்திருக்க வேண்டும். பேருந்தில் கூட்டம் நிறைந்து. 

‘இதை என்கிட்ட எதுக்கு சொன்ன?’ என்றேன்.

அவள் எதுவும் சொல்லவில்லை. 

வீட்டுக்குக் கிளம்பினோம். மனம் படபடத்துக் கொண்டேயிருந்தது. அறைக்கு வந்து சேர்ந்த போது ‘தேங்க்ஸ்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் எழுதாமல் அவளது எண்ணை ப்ளாக் செய்துவிட்டேன். 

பல நாட்களாக எனக்குத் தூக்கமில்லை. மகாதேவமலையில் ஏதேனும் பிணம் கிடைத்ததா என்றோ சென்னையில் காணாமல் போன ஆள் ஒருவனைப் பற்றி ஏதேனும் விசாரிக்கிறார்களா என்றோ செய்திகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

(மின்னல் கதைகள்)

Jul 24, 2019

தண்டுவன்

அய்யனுக்கு கோவணம்தான் உடுப்பு. அய்யனை நீங்களும் பார்த்திருக்க முடியாது. நானும் பார்த்திருக்க முடியாது. நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே மண்டையை போட்டுவிட்டார். தொட்டகுறை விட்டகுறையாக தவிட்டுக்கார ஆயா சொன்ன கதையை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதென்ன தொட்டகுறை என்று நீங்கள் கேட்கக் கூடும்.  அந்த ஆயா வயதுக்கு எல்லாவற்றையுமா என்னிடம் சொல்ல முடியும்? தனிக்கட்டையாக குடிசையில் சாய்ந்து கிடந்த அந்தக் கிழவிக்கு பேச்சுத் துணைக்கு கூட யாருமில்லை. பேச வாய்த்தவனிடம் இலைமறை காயாகச்  சொன்னதை வைத்து, புரிந்ததைக் கொண்டு இட்டுக்கட்டி சொல்வதில்தானே கதை சொல்வதன் சுவாரசியம் இருக்கிறது? அப்படியான கதைதான் அய்யனின் கதையும்.

அய்யனுக்கு திருமணம் ஆகவில்லை- செய்து கொள்ளவில்லை. அப்பனும் அம்மாவும் சிறுவயதிலேயே போய்விட, தண்டுவனாகத் திரியத் தொடங்கிய ருசி கண்ட பூனை அது. அந்தக் காலத்தில் ஊருக்கு ஒருத்தராவது இப்படித் தண்டுவனாகத் திரிந்தார்கள். வட்டல் கண்ட பக்கம் வாய் வைத்தபடி ஊருக்குள் திரிந்தால் அப்படியொரு பெயர் வந்துவிடும். வட்டலில் மட்டுமா வாய் வைத்தார்கள்? மாட்டுச் சாலை, வாய்க்கால் கரையோரம், ஏரித் தடம், மாடு மேய்க்க போகையில், கிணற்று மேட்டில் என கண்டபக்கமும் கையைப் பிடித்து இழுத்த வரலாறுகள் அய்யனைப் போன்ற தண்டுவனுங்களுக்கு உண்டு. வாட்ஸாப்பும் ஃபேஸ்புக்குமில்லாத காலத்தில் காதும் காதும் வைத்த மாதிரி மண்ணைத் தட்டிவிட்டு, கொசுவத்தைச் சரி செய்தவர்களும் உண்டு. ‘இந்த வேலையெல்லாம் தொண்டு முண்டைங்ககிட்ட வெச்சுக்க...என்ரகிட்ட வந்து உன்ர கோவணத்தை அவுத்தீன்னா இழுத்து வெச்சு அறுத்துப் போடுவம் பார்த்துக்கோ....ஆருன்னு நினைச்ச?’ என்று சண்டைக்கு நின்ற பெண்களும் உண்டு. 

அய்யனிடம் ஒன்றரை ஏக்கர் நிலமிருந்தது. தோட்டத்து வேலையில் துளி சுணக்கம் இருக்காது. ஒன்றரை ஏக்கர் பண்ணையமும் அவருடையதுதான். ஒத்தாசைக்கு கூட யாரையும் கால் வைக்க விட மாட்டார். மாடு பூட்டி உழவு ஓட்டுவதிலிருந்து கதிர் அறுத்து போர் போடுவது வரையும் ஒத்தை ஆள் பண்ணையம் என்பதால் உடம்பு முறுக்கேறிக் கிடந்தது.  காலையில் குடித்த ஒரு சட்டி பழைய சோறுதான் சாயந்திரம் வரைக்கும். பொழுது சாயும் நேரத்தில் கோவணத்தோடு அமர்ந்து ஆட்டுக்கல்லில் மிளகு ஆட்ட ஆரம்பித்துவிடுவார். தினமும் கறிதான். காடையும், கவுதாரியும், தோட்டத்தில் மேயும் நாட்டுக் கோழியும், முயலும், ஆடும் என்று அன்றைய தினம் நாக்கு எது கேட்கிறதோ அந்தக் கவிச்சை - நாலு சொம்பு கள்ளையும் குடித்துவிட்டு வெறி ஏறி கட்டிலில் விழுந்தால் இடியே இறங்கினாலும் தெரியாமல் தூங்குவார்.

அக்கம்பக்கத்து ஊர்களிலும் இப்படி தினவெடுத்த ஆம்பளை ஒருத்தனும் இல்லை. ஆறேகால் அடி உயரமும், திமில் காளையைப் போன்ற தோள்களும், கருகருவென நெஞ்சு முழுவதும் பரவிக் கிடந்த சுருள் முடியும் ‘கருமாந்திரம் புடிச்சவன் மேல ஒரு துண்டை போட்டாத்தான் என்னவாம்?’ என்று உள்ளுக்குள் எண்ண வைத்துவிடுகிற முரட்டுக்காளையாகத் திரிந்தார் அய்யன்.  ஆனால் அதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாதது போல மாரியம்மன் கோவில் வேப்பமரத்தடி நிழலில் வலது உள்ளங்கை மீது இடது உள்ளங்கையை வைத்து தலைக்கு அணையாகக் கொடுத்து கால் மீது காலைப் போட்டு அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் அய்யன். அப்பொழுதும் கோவணம்தான்.

‘அய்யனுக்கு ஊர் பொம்பளைங்க ஒவ்வொருத்தி மேலவும் கண்ணு..’ என்று ஆயா சொல்லிக் கொண்டிருந்த போது ‘உனக்கு?’ என்று  கேட்டிருக்கக் கூடாது. நாக்குத் துடுக்கில் கேட்டுவிட்டேன். அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் முடித்துக் கொண்டது. அந்தக் காலத்தில் உள்ளூரில் அய்யனை எதிர்த்துப் பேச ஒருத்தருக்கும் தெம்பில்லை. உடம்பும் அதன் விறைப்பும் மட்டுமே காரணமில்லை. அக்கம்பக்கத்தில் எந்தக் கருப்பராயன் கோவிலில் ‘கருமான் குத்து’ நடந்தாலும் விழாவில் பன்றியைக் குத்தில் வயிற்றுக்குள் வாழைபழங்களைப் போட்டு ரத்தத்தோடு குழைத்து அய்யன் உண்பார். அந்தச் சமயங்களில் அய்யனின் கண்களில் தெறிக்கும் ரத்தத் சிவப்பும் நெஞ்சில் வடியும் ரத்தமுமாகப் பார்த்தவர்கள் எந்தக் காலத்திலும் பயத்தை விடமாட்டார்கள்.  

‘அய்யன் மனுஷனே இல்ல’ என்றுதான் ஊரில் பல ஆண்களும் நினைத்திருந்தார்கள். 

பொம்பளை வாசம் பிடிப்பராகவே கடைசி வரைக்கும் இருந்த அய்யனிடம் அதைத் தாண்டி வேறொரு திறமையும் இருந்தது. அது முட்சிலம்பு. கருவேல முட்களை முறித்து இரண்டு கைகளிலும் பிடித்துச் சுழற்றினால் தன் மீது ஒரு கீறல் படாமல் எதிராளியைச் சிதைத்துத் தொங்கவிட்டுவிடும். அதை எப்படி பழகினார் என்று தெரியவில்லை. ஆனால் அதுவொரு பெரும் கலை. யார் வந்து கேட்டாலும் ‘காலம் வரட்டும் சொல்லித் தர்றேன்’ என்று சொல்வதோடு சரி. நள்ளிரவில் கள்ளர்களை விரட்டியதாகவும், அயலூர்காரர்களுடனான சண்டையில் ஒற்றை ஆளாக முள்ளை வைத்துச் சுழற்றியதாகவும் பேச்சு உண்டு. அதனை வெகு சிலர் கண்ணாலும் பார்த்திருக்கிறார்கள். கருப்பராயனே வந்து விசிறியதாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களாம். 

‘எல்லா ஆம்பள மேலயும் ஆச வந்துடுமா?’ என்று வெகு நாள் கழித்து ஆயா கேட்டது. எப்பொழுதோ கேட்ட கேள்விக்கு அது பதிலுமில்லை.

‘அய்யனை எந்த பொம்பளைக்குத்தான் புடிக்காது? ஆனா ஒருத்தியும் வெளிய காட்டிக்கமாட்டாளுக’  என்ற போது ஆயாவின் கண்களில் வெளிச்சம் மின்னியது.

ஆயா தனிக்கட்டையாகவேதான் எப்பொழுதும் வாழ்ந்திருக்கிறது.  பெரிய வாய்க்கால் ஓரமாகவேதான் கடைசி வரைக்கும் நீரின் சலசலப்போடு வாழ்ந்து கிடந்தது கிழவி. திருமணம் ஆனதா? குழந்தைகள் இருக்கிறார்களா? எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அய்யனுக்கும் ஆயாவுக்குமான உறவின் பின்னல்கள் இந்தக் காலத்து மனிதர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்து மனிதர்களுக்கும் கூடத் தெரியுமா என்று தெரியவில்லை. 

‘அது ஆயிப்போச்சு நாப்பது வருஷம்...இன்னக்கு வரைக்கும் ஆரு பண்ணுனாங்கன்னு தெரில..கள்ளுக்குடிச்சுட்டு படுத்துட்டு இருந்த அய்யனைக் கட்டலோட தூக்கிட்டு வந்து இங்க போட்டு கல்லைத் தாங்கி தலைல போட்டுட்டாங்க’ ஆயாவின் வார்த்தைகளில் இன்னமும் அன்றைய தினத்தின் ரத்தவாடை இருந்தது. 

‘கருப்பராயனாவே இருந்த அந்த மனுஷனைக் கொன்னவங்க சாதரண ஆளுங்களா இருக்க முடியாது’ என்று கிழவி நம்பிக் கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து திட்டுக்கிட்டு எழுந்த ஆயா, கூரையில் செருகியிருந்த அரிவாளைத் தூக்கி ஓடி வந்து பார்த்துவிட்டு ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாள். கோவணமும் உடற்கட்டும் அய்யனின் அடையாளத்தைக் காட்டிவிட என்ன செய்வதெனத் தெரியாமல் தலையோடு அய்யனைத் தாங்கி எடுத்து மடியில் படுக்க வைத்தாள். அய்யன் உடல் துடித்துக் கொண்டிருந்தது. தலையைத் தொடும் போது கை கொழ கொழவென நுழைந்தது. அய்யனின் குரல் வளையை உடைத்துக் கொண்டு வரும் கதறல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. வாய்க்கால் கரையோரம் அந்த இருளில் யாரும் வரப் போவதில்லை. ஆயா பதறிப் போனவளாக அணைத்துக் கொண்டாள். கோடையின் வெம்மையில் வியர்த்திருந்த அவளது மார்பு முழுவதும் ரத்தப் பிசுபிசுப்பு விரவியது. அடுத்த சில கணங்களில் அய்யன் துடித்து அடங்கிய போதும் நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருந்தாள். 

நிலவின் வெளிச்சத்தில் அய்யனின் உடல் ரத்தத்தில் மினுமினுத்தது. குடிசைக்குள்ளிருந்த ஈயப்பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து வாய்க்க்கால் நீரில் உடல் முழுக்கவும் தொட்டுத் துடைத்து ரத்தக் கறையெல்லாம் கழுவினாள். அய்யனின் முகம் கோரமாக இருந்தது. மாராப்பைக் கிழித்து முகத்தை மறைத்த பிறகு பயம் எதுவுமில்லை. விடிய இன்னமும் வெகு நேரமிருந்தது. என்றைக்குமில்லாமல் அன்றைக்கு அவளது கைகளுக்கு அதீத சுதந்திரம் கிடைத்திருந்தது. அன்று அவள் தான் முழுமையடைந்ததாக உணர்ந்தாள். 

அய்யனைப் பற்றிப் பேசிய போதெல்லாம் அய்யனின் உடலைப் பற்றி மட்டுமேதான் கிழவி பேசிக் கொண்டிருந்தாள் அல்லது அவளையும் மீறி அது பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது. 

காமம், காதல் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் கடைசி வரைக்கும் ஏதோவொரு ரகசியத்தைப் புதைத்து வைத்துக் கொண்ட தவிட்டுக்கார ஆயாவின் கடைசிக் கணங்களில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னமும் சில கணங்கள்தான். அவள் திணறிக் கொண்டிருந்தாள். அய்யனின் அணைப்பில் அவள் திமிறுவதாகத் தோன்றியது. சுற்றிலும் நின்றவர்கள் முதலில் நீர் ஊற்றினார்கள். பின்னர் பால் ஊற்றினார்கள். கிழவியின் மூச்சு அடங்கவில்லை. மண்ணாசை இருக்கும் என்று மண்ணைக் கரைத்து ஊற்றினார்கள். அப்பொழுதும் இழுத்துக் கொண்டிருந்தாள். அடுத்து ஒற்றை ரூபாயை நீருக்குள் போட்டு ஊற்ற ஆயத்தமானார்கள். மேலும் பார்க்க மனமில்லை. குடிசைக்கு வெளியில் வந்து நின்ற போது வாய்க்கால் நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. ஆயாவின் காமத்தைப் போலவோ அல்லது அவளது மனதுக்குள் அலையடித்த அய்யனின் நினைவுகளைப் போலவோ.

(புனைவு)

Oct 30, 2018

ஏழரை மணி நேரச் சந்தோஷம்

‘சென்னை போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’ கோவை எக்ஸ்ப்ரஸில் எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பையன் கேட்கும் வரையில் கவனம் அவள் மீதுதான் இருந்தது. இசுலாமியப் பெண். பச்சை நிறப் புடவை. அதன் மீது பர்தா அணிந்திருந்தாள். அதுவரை அவனருகில் அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தவள் அவன் திடீரெனக் கேட்டவுடன் சற்று சிணுக்குற்று என்னைப் பார்த்தாள். 

கவனத்தை அவன் பக்கம் திருப்பி ‘ஏழரை மணி நேரம் ஆகும்’ என்றேன். அதன் பிறகு வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியில் பார்க்கத் தொடங்கியிருந்தேன். ஆனாலும் அவளது செய்கைகள்தான் தூண்டில் வீசிக் கொண்டிருந்தது. 

புதிதாகத் திருமணமாகியிருந்த புது ஜோடி. அப்படித்தான் இருக்க வேண்டும். திங்கட்கிழமை மதியம் என்பதால் வண்டியில் பெரிய கூட்டமில்லை.  டீ,காபி விற்பவர்கள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்தார்கள். தம்பதியின்  மீதிருந்த கவனத்தை முழுமையாக திசை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவன் தனது செல்போனைத் தடவியபடி அவளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தான். வாழ்க்கையின் எல்லாவிதமான சந்தோஷத்தையும் இந்த ஏழரை மணி நேரத்தில் அனுபவித்துவிட முடியும் என்கிற உற்சாகத்தில் இருந்தாள் அவள். 

எல்லை மீறாத சீண்டல்கள். சிரிப்புகள். ஒரு கட்டத்துக்கு மேல் ‘நல்லா இருக்கட்டும்’ என்று மூன்றாம் மனிதன் நினைக்கத் தோன்றும்படியான முகபாவனைகள்.

வண்டி சேலம் தாண்டிய போது சிறு தூக்கம் களைத்து எழுந்திருந்தேன். அப்பொழுதும் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். ‘உங்களைத்தான் கிண்டலடிச்சுட்டு இருந்தா’ என்றான் அவன். சம்பந்தமேயில்லாத ஒரு பெண் நம்மைப் பார்த்து நகைக்கும் அளவுக்கு என்னவாக இருக்கும் என அதிர்ச்சியாகியிருந்தேன். 

‘எதுக்கு?’

‘வாயைத் தொறந்து தூங்கிட்டு இருந்தீங்க அங்கிள்’ என்றாள். அவளைவிட அநேகமாக பத்து அல்லது பனிரெண்டு வயதுதான் எனக்கு அதிகமாக இருக்கும். 

‘அங்கிளா?’

‘இப்பவெல்லாம் எல்லா அங்கிளும் இதையேதான் கேட்கிறாங்க...உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல’

‘ஆச்சு...’

‘குழந்தை இருக்குல்ல?’

‘இருக்கு..’

‘அப்படின்னா அங்கிள்தான்’ அவள் மீண்டும் சிரித்தாள். கொஞ்சம் தொண்டை கட்டியது போன்ற சற்றே கரடுமுரடான அதேசமயம் ஈர்க்கும்படியான சிரிப்பு.

‘உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுல்ல’

‘அப்படி நினைச்சுட்டீங்களா?...ஏமாந்துட்டீங்க’- திருமணம் ஆகாமல் எதற்காக இவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறாள் என்று குழம்பத் தொடங்கிய போது அவன் பேசினான்.

‘லவ்வர்ஸ் ப்ரோ...வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்’. 

‘உங்க பேரு என்ன தம்பி?’ என்றேன். ‘நீ என்ன ஆளுன்னு சார் கண்டுபிடிக்க அங்கிள் ட்ரை பண்ணுறாரு’ சொல்லிவிட்டு அவளே சொன்னாள்.

‘ரிலீஜியனெல்லாம் ப்ராப்ளம் இல்லை அங்கிள்...இவன் பேரு அபு...நான் யாஸ்மின்’

‘ரெண்டு பேரும் சென்னையா?’

அபுதான் சொன்னான். ‘இவ சென்னை...நான் கொடைக்கானல்’

‘டேய் லூசு...இப்படிச் சொன்னீன்னா எப்படி ரெண்டு பேரும் லவ் பண்ணுனாங்கன்னு அங்கிளுக்கு சந்தேகம் வரும்ல..உனக்கு கதையே சொல்லத் தெரியல’ அவனைத் துண்டித்துவிட்டு யாஸ்மின் தொடர்ந்தாள்.

‘சென்னையில் படிச்சுட்டு இருந்தான் அங்கிள்...கேட்டரிங் டெக்னாலஜி..அப்போத்தான் என்னைப் பார்த்தான்..இவனைப் பாருங்க..ஆளும் அவன் மூஞ்சியும்...நான் இவனை விட அழகுதானே? நான் இவனைக் கண்டுக்கவே இல்லை...ஆனா இவன் என்னைத் துரத்திட்டே இருந்தான்....’

‘டேய் மணிக்கட்டை காட்டு’ என்று அவள் உத்தரவிடவும் அபு வலது கை மணிக்கட்டை நீட்டினான். ப்ளேடினால் கிழிக்கப்பட்ட தழும்புகள் இருந்தன. 

‘இப்படியெல்லாம் செஞ்சு வசப்படுத்திட்டான் அங்கிள்...நல்ல பையன்’

ஜோலார்பேட்டையில் வண்டி நின்றது. இறங்கி தோசை வாங்கிக் கொண்டு வந்தேன். அவர்களுக்கும் சேர்த்து வாங்கியிருந்தேன். நீட்டிய போது ‘நீங்க ட்ரெயின் கொள்ளையரா...இது மயக்க மருந்தா?’என்று சிரித்தாள். 

‘மொக்கை ஜோக்கு அடிச்சுட்டு ரிங்டோன் மாதிரி சிரிக்காதடி’ என்று அபு யாஸ்மினைக் கலாய்த்தான். அவள் மீண்டும் மீண்டும் அதே போலச் சிரித்துக் காட்டியபடியே தோசையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள்.

‘தேங்க்ஸ் அங்கிள்...பரிதாபப்பட்டு வாங்கிட்டு வந்தீங்களா? என்கிட்ட நிறைய காசு இருக்கு...வீட்ல இருந்து அடிச்சுட்டு வந்துட்டேன்’. தனது கைகளிலிருந்த தங்க வளையல்களைக் காட்டினாள். எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால் நிறைய இருந்தன. 

படித்து முடித்த பிறகு கொடைக்கானலில் வேலை வாங்கிவிட்டான் அபு. 

‘இவன் அடுத்த ஸ்டெப் எடுக்கவேயில்லை...ஆனால் வீட்டில் விடுவாங்களா? மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிட்டாங்க.. அதான் நானே கொடைக்கானல் போய்ட்டேன்..’

அபு சொன்னான். ‘இவங்க வீட்டில் என்னைப் பத்தித் தெரியும் ப்ரோ..தேடி கொடைக்கானல் வந்துட்டாங்கன்னா பெரிய பிரச்சினை ஆகிடும்..அதான் இவளைக் கூட்டிட்டு கோயமுத்தூர் வந்துட்டேன்...சுந்தராபுரத்துல ஒரு ஜிம் மாஸ்டர் இருக்காரு..அவர் வீட்டுலதான் இருந்தோம்...ஒரு வாரம் ஆச்சு’

இரண்டாம் நாள் யாஸ்மின் அப்பா அபுவை அழைத்திருக்கிறார். தெரியாதது போல பேசியிருக்கிறான். ‘அவ எங்கேன்னு தெரியல அபு...உன் கூட வந்துட்டாளா?’ என்று கேட்டிருக்கிறார். அவன் மறுத்திருக்கிறான். தான் கொடைக்கானலில் இருப்பதாகச் சொன்னதை அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் தேடாத இடமில்லை. வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று காவல்துறைக்கும் செல்லவில்லை. அதன் பிறகு யாஸ்மின் அப்பாவை அழைத்துப் பேசியிருக்கிறாள். 

‘அப்பா..நான் அபுவைக் காதலிக்கிறேன்...நீங்க சரின்னு சொன்னா நான் வர்றேன்..இல்லைன்னா வர மாட்டேன்’.

‘இவ வீட்டுக்கு ஒரே பொண்ணு ப்ரோ...இவ சொன்னவுடன் சரின்னு சொல்லிட்டாங்க....என்னைக் கூப்பிட்டு பேசினாங்க’

‘என்ன ட்ராமா போடுறீங்களான்னு கேட்டாங்க அங்கிள்...அப்போ நானும் இவன் பக்கத்துலதான் இருந்தேன்...ஆனா செமையா நடிச்சுட்டான்...இவன் கொடைக்கானல்ல இருக்கிற மாதிரியும் நான் கோயமுத்தூர்ல இருக்கிற மாதிரியும் நம்பிட்டாங்க’ யாஸ்மினுக்கு அவ்வளவு பூரிப்பு.  

பருவத்தின் காதலில் அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் மட்டும்தான் கண்களுக்கு முன்பாக நிற்கிறார்கள். பிற எல்லாமும், எல்லோருமே இரண்டாம்பட்சம்தான். 

‘கோயமுத்தூர்ன்னா எனக்குத் தெரியும் அங்கிள்..நான் போய் கூட்டிட்டு வர்றேன்’ என்று யாஸ்மினின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அபுவும் யாஸ்மினும் ரயிலில் சென்று கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று முறை யாஸ்மினின் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அதன் பிறகுதான் எனக்கு பயம் பரவத் தொடங்கியது.

‘வீட்டுக்குப் போன பிறகு பிரச்சினை ஆகிடாதா?’

‘கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ப்ரோ..நான் இவளைக் கூட்டிட்டு ஓடல...இவதான் என்னைக் கூட்டிட்டு போறா’ என்றான் அபு. 

‘என்னை மீறித் தொடுங்கடான்னு சொல்லுவேன்’ என்றாள் யாஸ்மின். அவள் இன்னமும் விளையாட்டுத்தனமாகவே பேசிக் கொண்டிருக்கிறாள். 

வேலூர் தாண்டிய பிறகு ‘இன்னமும் பெரம்பூர் போக எவ்வளவு நேரம் ஆகும்?’ என்றான் அபு. சொன்னேன். 

‘என் நெஞ்சு படபடக்குது’ என்றான். 

யாஸ்மின் தந்தைக்கு வீடியோ அழைப்பைச் செய்தாள். ‘அப்பா... உங்ககூட யாரு இருக்காங்க?’ என்றதற்கு யாருமில்லை என்றார். 

அவள் சிரித்துக் கொண்டே ‘உங்களைச் சுத்தியும் காட்டுங்க’ என்றாள். அவள் சொன்னதையெல்லாம் அவர் செய்தார். ஆனால் அபுவுக்கு தைரியமில்லை.

எனக்கு அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘உங்க வீட்டுல இருந்து யாரும் வரலையா?’ என்று மட்டும் கேட்டேன்.

‘நாளைக்கு காலையில் ப்ரெண்ட்ஸ் வருவாங்க ப்ரோ...நைட் இவங்க வீட்டுலதான்...அவளை பத்திரமா கூட்டிட்டு வந்துடு..நீதான் என் மருமகன்னு இவங்கப்பா சொன்னாரு’ என்று சொல்லிய போது அவள் அவனது நெஞ்சைத் தடவினாள். மாலை மங்கி இரவு முழுமையாகக் கவிந்திருந்தது.

இருவரும் நல்லபடியாக வாழ வேண்டும் எனக் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். யாஸ்மின் ‘தூங்குங்க அங்கிள்...நான் கிண்டலடிக்கமாட்டேன்’ என்றாள்.

‘பெரம்பூர் வரப் போகுது..நான் வேணும்ன்னா வரட்டுமா?’ என்றேன்.

‘அய்யோ ஒரு புருஷனுக்கே அடி விழும்ன்னு நினைக்கிறேன்..நீங்களும் வந்தா அவ்ளோதான்’ என்று சொல்லிவிட்டு வெடித்துச் சிரித்தாள். சிரித்து வைத்தேன்.

பெரம்பூர் நெருங்க நெருங்க அபுவுடன் சேர்த்து எனக்கும் திக் திக்கென்றானது. ‘அப்பா நிக்கிறாரு..கூடச் சித்தப்பா’ என்றாள் யாஸ்மின். அவர்கள் பெட்டியின் அருகிலேயே வந்து நின்றார்கள். இறங்கியவுடன் யாஸ்மின் சிரித்தாள். அவளது சித்தப்பா ‘சிரிப்பு வருதா சிரிப்பு’ என்றார். படியில் நின்று அவர்களைப் பார்த்தேன். அதே புன்னகையுடன் கையசைத்தாள். வண்டி கிளம்புவதற்கு முன்பாக ரயில்வே ட்ராக் நோக்கி நால்வருமாக நடந்தார்கள். விசில் ஊதப்பட்டது. ரயில் கிளம்பியது. மெல்ல நகர்ந்த ரயில் அவர்களைத் தாண்டிய போது அவர்கள் கிட்டத்தட்ட இருளுக்குள் நுழைந்திருந்தார்கள். அவர்களது அலைபேசி எண்ணை வாங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றியது. ரயில் வேகமெடுத்த போது இன்னமும் சிலர் அவர்களைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். எனக்கு வியர்த்துப் போனது. 

கடவுளை மீண்டுமொருமுறை பிரார்த்தித்துக் கொண்டேன்.

(மின்னல் கதைகள்)

Sep 18, 2017

குஞ்சாமணி பண்டிதர்

பண்டிதர் என்றவுடன் தமிழ் பண்டிதர் போலிருக்கிறது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு அவர் எந்தவிதத்திலும் ஜவாப்தாரி ஆக மாட்டார். அரசியல் பண்டிதர். ‘அது என்ன பண்டிதர் ஜவகர்லால் நேரு? அவருதான் பண்டிதரா? எங்களுக்கும்தான் அரசியல் தெரியும்’ என்று அவர் பிள்ளையார் கோவில் அரசமரத்தடியில் அமர்ந்து அறிவித்துக் கொண்டார். அது அந்தக் காலம். அந்தக் காலம் என்றால் அண்ணாதுரை கட்சி தொடங்கி காமராஜர் தோற்கத் தொடங்குவதற்கு முன்பிருந்த காலம். 

தேர்தல் சமயத்தில் ராத்திரியோடு ராத்திரியாக அண்ணாத்துரையே நேரடியாக ஆள் அனுப்பி குஞ்சாமணி பண்டிதரிடம் பேசி வரச் சொன்னதாகக் கூட ஊருக்குள் பேச்சு உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிக் கேட்டால் பண்டிதர் ஏற்கவும் மாட்டார். மறுக்கவும் மாட்டார். ‘அண்ணாத்துரையும் தெரிஞ்சவந்தான் காமராசனும் தெரிஞ்சவந்தான்...ஒருத்தனுக்கு வேண்டி இன்னொருத்தனை விட்டுக் கொடுக்க முடியுமா? தில் இருக்கிறவன் ஜெயிச்சுக்க வேண்டியதுதான்’ என்று பண்டிதர் பெருந்தன்மையாகப் பேசும் போது மெச்சாத ஆட்களே இல்லை.

எப்பொழுதுமே அரச மரத்தடிதான் பண்டிதருக்குக் காணி. திருமணம் செய்து கொள்ளாத தனிக்கட்டை. அப்பன் கட்டி வைத்திருந்த மண் சுவர் வீடு ஒன்றிருந்தது. முன்பக்கமாக தடுத்து விட்டிருந்தார்கள். நாற்பத்தேழு வீடுகளிருந்த அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லை.  பீடி வாங்கக் கூட பக்கத்து ஊருக்குத்தான் போக வேண்டும்.

நெல்லை நாடார் ஒருவர் வந்து ‘ உங்க வீட்டு முன்பக்கத்துல கடை போட்டுக்கட்டுமா?’ என்றார். நாடார் ஊருக்குப் புதிது. உற்சாகமாக ‘உங்களுக்கும் காமராசருக்கும் சிநேகிதம் உண்டுல்லா?’ என்றார்.

‘அரசியல் வேற.. வேவாரம் வேற... ரெண்டையும் சேர்த்து முடிச்சுப் போடாத.. இங்க பாரு! நான் தனியாளு...எனக்களவா சோறாக்கிக்குவேன்.. வேணுங்குற சாமானத்தையெல்லாம் உங்கடைலதான் எடுத்துக்குவேன்..சரின்னா சொல்லு’ என்றார்.

சற்றே பயந்தாலும் நாற்பத்தேழு வீட்டு வணிகம் நாடாருக்கு முக்கியமாகத் தெரிந்தது. ஒத்துக் கொண்டார். பண்டிதரின் வார்த்தை சுத்தம். எந்த அத்துமீறலும் செய்ததில்லை. வியாபாரம் செழிக்கச் செழிக்க கடைச் சாமான் போக மாதம் பதினைந்து ரூபாயைப் பண்டிதரின் கைச் செலவுக்கும் கொடுக்கத் தொடங்கினார் நாடார். 

குஞ்சாமணி என்பது இந்த இடத்தில் முக்கியமான பெயர். ‘அது என்ன குஞ்சாமணி?’ என்ற கேள்விதான் உங்களை இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது என்பது தெரியும். காலையில் குளித்து முடித்து ரசமோ வெஞ்சனமோ வைத்துத் தின்றுவிட்டு வெளுத்து மடித்து வைத்திருக்கும் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வந்து அரசமரத்தடியில் படுத்தால்- படுக்கும் தோரணை முக்கியம்- இரு கைகளையும் கோர்த்துத் தலைக்குக் கீழாக வைத்துக் கொண்டு இடது கால் மீது வலது காலைப் போட்டபடி உறங்கியிருப்பார். ‘உச்சிச் சூடு பொச்சுல எறங்குற வரைக்கும் பண்டிதருக்குத் தூக்கம்தான்’ என்றுதான் பெண்கள் கேலி பேசுவார்கள். அவர் உறங்கும் தோரணையை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தால் அவருடையை பெயருக்கான காரணம் தெரிந்திருக்குமே. அதேதான். யார் வைத்த பெயரோ தெரியவில்லை. அதுவே நிலைத்துவிட்டது.

மாலை வேளைகளில்தான் குஞ்சாமணி பண்டிதரின் சபை கூடும். உருமால்களும் பீடிகளும் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். பண்டிதருக்கு பீடி சிகரெட் பழக்கமில்லை. அடுத்தவர்கள் புகைப்பதைத் தடுப்பதில்லை. திண்ணைப் பள்ளிக் கூட படிப்பும் செய்தித்தாள் வாசிப்பும் ரேடியோ செய்திகளும் பண்டிதரை பேச வைத்திருந்தன. சுற்றிலும் இருப்பவர்கள் அதிசயமாகக் கேட்பார்கள். சரியோ தவறோ- அவர் பேசுவார். மற்றவர்கள் கேட்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் ‘எந்திரிச்சுப் போடா டேய்...’ என்று துரத்தியடித்துவிடுவார். அதில் ஒரு செண்டிமெண்ட் உருவாகியிருந்தது. அவர் யாரையெல்லாம் அடித்துத் துரத்துகிறாரோ அவர்கள் பெரிய ஆள் ஆகிக் கொண்டிருந்தார்கள். 

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலம் அது. உள்ளூர் பொடியனொருவன் ஆட்களைத் திரட்டிப் போய் இரட்டை இலையில் ஐக்கியமாகியிருந்தான். அடுத்து வந்த தேர்தலில் அவனுக்குத்தான் தொகுதியை ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். தனக்குத் தெரிந்த அரசியல் சூத்திரங்களையெல்லாம் பெருக்கி வகுத்து அவன் தோற்றுவிடுவான் என்றுதான் பண்டிதர் முடிவு கட்டியிருந்தார். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. ‘நம்மூர்க்காரன் ஜெயிச்சா சந்தோஷமப்பா’ என்று மற்றவர்களிடம் பேசினார். எம்.ஜி.ஆரின் தகதகப்பும் ஈர்ப்பும் பண்டிதரின் கணிப்பை தவிடு பொடியாக்கியிருந்தது. பொடியனாக இருந்தவன் எம்.எல்.ஏவாக ஆனார். அவனைத் தனது சபையிலிருந்து துரத்தியடித்தது பண்டிதருக்கு நினைவுக்கு வந்து போனது.

பதவியேற்பை முடித்துக் கொண்டு சென்னையிலிருந்து ஊர் திரும்பும் போது எம்.எல்.ஏவுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள். அது எம்.எல்.ஏவே தனக்காக நடத்திக் கொள்கிற கூட்டம் என்பது பண்டிதரின் அனுமானம். 

‘கூட்டத்துல நீங்க பேசோணும்ன்னு அண்ணன் ஆசைப்படுறாரு’ என்று ஒருத்தன் வந்து பண்டிதரிடம் கேட்டான்.

‘வக்காரோலி அவன் வந்து கேட்க மாட்டானா? ஆள் அனுப்பிக் கேட்கிறாம்பாரு...’ என்று நினைத்துக் கொண்டவர் ‘அதுக்கென்ன அப்புனு..வந்து பேசறேன் போ’ என்று சொல்லியனுப்பிவிட்டு மேடையேறியிருந்தார். அதே வெற்றுடம்பும் அதை மறைக்க ஒரு துண்டும் தோளில் கிடந்தன.

புது எம்.எல்.ஏ பந்தா காட்டத் தொடங்கியிருந்த தருணம் அது. அவர் மேடைக்கு வருவதற்கு முன்பாகவே ‘இப்பொழுது...நம்மூர் அரசியல் மாமேதை குஞ்சாமணி பண்டிதர் அவர்கள் அண்ணனை வாழ்த்திப் பேசுவார்’ என்று அறிவித்து பண்டிதரைப் பேச அழைத்தார்கள். தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘நம்ம பையன் ஜெயிச்சுட்டான்.. சந்தோஷம்... நெம்ப சந்தோஷமப்பா... நான் திண்ணையைப் புடிச்சு நடக்கிறப்போ என் சுன்...’ என்று பேச்சை வளர்க்க வளர்க்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர் வேண்டுமென்று அப்படிப் பேசவில்லை என்பது அவரைப் புரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா?

குசலமூட்டியொருவன் எம்.எல்.ஏ மேடையேறுவதற்கு முன்பாகவே பண்டிதரின் பேச்சை வரி வரியாக போட்டுக் கொடுத்துவிட்டான். ‘நெசமாவே அதைப் புடிச்சு நடந்தேன்னு பேசுனானா கெழவன்?’ என்றான். அவன் ஆமாம் என்று தலையை ஆட்டவும் ‘இந்ந்ந்தததத குஞ்சாமணிய....’ என்று கருவிக் கொண்டான். ‘பொம்பளைங்க எல்லாம் காதை மூடிட்டாங்கண்ணா’ என்று குசலமூட்டி கொஞ்சம் எண்ணெய்யையும் ஊற்றினான். நிகழ்ச்சி முழுக்கவும் எம்.எல்.ஏவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன. ஆனால் பண்டிதரை என்ன செய்ய முடியும்? கத்தியைத் தூக்கிக் கொண்டு குத்தச் சென்றால் கூட ‘தம்பீ..இவடத்தை குத்துனீன்னா சீக்கிரம் உசுரு போயிரும் கண்ணு’ என்று வாகான இடத்தைக் காட்டுவார்.

அரசியலில் பண்டிதரால் தனக்கு எந்தச் சலனத்தையும் உண்டாக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள எம்.எல்.ஏவுக்கு வெகு காலம் பிடிக்கவில்லை. பண்டிதரின் அரசியல் வேறு. எம்.எல்.ஏவின் அரசியல் வேறாக இருந்தன. ஐம்பதும் நூறுமான தாள்கள்தான் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை எம்.எல்.ஏ புரிந்து கொண்ட அளவுக்கு பண்டிதர் புரிந்து கொள்ளவில்லை. 

‘எல்லாம் மாறிடுச்சு’ என்பது பண்டிதரின் புலம்பலாகியிருந்தது. வெற்றுப் புலம்பல். காலமும் உலகமும் ஓடுகிற வேகத்தில் ஓட முடியாமல் ஒதுங்கிக் கொள்கிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் பற்றிக் கொள்கிற இரண்டு சொற்கள் அவை. அவற்றையேதான் பண்டிதரும் பற்றியிருந்தார். ‘நீங்க எலெக்‌ஷன்ல நிக்கலாம்ல’ என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் யாராவது கேட்டதுண்டு. ‘அந்தக் கருமாந்திரம் நமக்கெதுக்கு?’என்று கேட்டு அவர் சிரித்த தருணங்கள் அநேகம். எப்பொழுதுமே தான் பதவிக்கு வர வேண்டும் என அவர் விரும்பியதில்லை. தன்னைவிடவும் நல்லவர்கள் இருப்பதாக நம்பியிருந்தார். அவர்கள் வென்று பதவிக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. 

‘இவனே ஜெயிச்சுட்டு இருக்கிறான்... வேற யாராச்சுக்கும் உடுலாம்ல?’ என்கிற இடத்துக்குப் பண்டிதர் வந்து சேர்ந்திருந்தார். காலம் ஓட ஒட எம்.எல்.ஏ அமைச்சரானார். அல்லக்கைகளின் எண்ணிக்கையும் அதிகமானது. தொகுதிக்குள் சைரன் வைத்த காரில் வரும் போதும் போகும் போதும் அரசமரத்தடியும் பண்டிதரும் அமைச்சரின் கண்களில் படாமல் இல்லை. ஆனால் இறங்கிப் பேச வேண்டும் என்றெல்லாம் அமைச்சர் நினைத்ததில்லை. அமைச்சரின் வண்டி கடக்கும் போதும் கூட பண்டிதரும் அதே தோரணையில்தான் படுத்திருப்பார்.

கட்சியின் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் ‘பண்டிதர் மாதிரி ஓர் ஆள் ஊர் ஊருக்கு வேணும்’ என்று அமைச்சர் பேசியதாகப் பண்டிதரிடம் சொன்ன போது பண்டிதர் வறப்புன்னகையை உதிர்த்தார். கம்யூனிசம் தெரியுமோ இல்லையோ- மார்க்ஸ் என்றும் ஜென்னியென்றும் அமைச்சர் பேசுவதெல்லாம் பண்டிதரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். அம்பேத்கரும், பெரியாரும் யாரென்று சொல்லிக் கொடுத்ததும் பண்டிதர்தான். இருந்துவிட்டுப் போகட்டும். பழைய பல்லவியையும் பாட்டையும் யார் கேட்கிறார்கள்? பண்டிதரின் அரசியல் சாணக்கியத்தனம் செல்லாகாசாகிவிட்டன. முன்பு போல அவரது சபைக்கும் யாரும் வருவதில்லை. டிவி விவாதங்களில் பெருமாள்மணியும் சிவஜெயராஜனும் அரசியல் பேசுவதைக் கேட்டுவிட்டுத் தூங்கிவிடுகிறார்கள். பண்டிதர் மட்டும் பொழுது சாயும் வரைக்கும் அதே அரச மரத்தடியில் படுத்திருந்துவிட்டு பிறகு எழுந்து சென்று கட்டையைச் சாய்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார். நாடாரின் மகன் கடையை விரிவுபடுத்தி மாதாந்திரத் தொகையை அதிகமாக்கியிருக்கிறான். யாராவது வழியில் பார்க்கும் போது ‘நல்லாருக்கீங்களா பண்டிதர்?’ என்று கேட்பதுண்டு. பேச்சுக் குறைந்து போன பண்டிதர் யாரைப் பார்த்தாலும் சுரத்தே இல்லாமல் தலையை ஆட்டிக் கொள்கிறார். 

அரசமரத்தடியில் படுத்திருக்கும் போதுதான் பண்டிதரின் உயிர் பிரிந்தது. ஊரில் யாருக்கும் பெரிய வருத்தம் எதுவுமில்லை. இறுதி ஊர்வலத்தில் அமைச்சரும் கலந்து கொண்டார். நிறையக் கூட்டம். பண்டிதர் இல்லாத வெறுமையை அடுத்தடுத்த நாட்களில் மரத்தடி காட்டிக் கொடுத்தது. ‘ஒரு காலத்துல எப்படி இருந்த இடம் ஜேஜேன்னு...’என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள். அதே அரசமரத்தடியில் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. பண்டிதர் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயரையே சூட்ட வேண்டும் என கவுன்சிலர் பேச்சை ஆரம்பித்து வைத்தார். அடுத்த வாரத்திலேயே பஞ்சாயத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மரியாதைக்காக அமைச்சருக்கும் தீர்மானத்தின் ஒரு பிரதியை அனுப்பினார்கள்.

அமைச்சருக்கும் ஆட்சேபனை எதுவுமில்லை. ‘குஞ்சாமணி பண்டிதர்ன்னு வேண்டாம்..அவரோட உண்மையான பேரிலேயே இருக்கட்டும்’ என்று சொல்லி அனுப்பியிருந்தார். உள்ளூர்வாசிகள் அமைச்சர் சொல்வதும் சரியென்றார்கள். பண்டிதரின் நிஜப் பெயரைத் தேடாத இடமேயில்லை. வாக்காளர் அடையாள அட்டையிலிருந்து ரேஷன் கார்டு வரைக்கும் எல்லாவற்றிலும் குஞ்சாமணி பண்டிதர் என்றே இருந்தது. அந்தப் பெயரை அவர் உள்ளூர விரும்பியிருக்கிறார். பண்டிதரின் வயதையொத்தவர்களுக்கும் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை. ஒருவர் சுப்பிரமணி என்றார். இன்னொருவர் கந்தசாமி என்றார். குழப்பம் அதிகமானது. வீட்டுப்பத்திரம் கூட அவரது அப்பாவின் பெயரில்தான் இருந்தது. கடைசியில் குஞ்சாமணியைக் கத்தரித்துவிட்டு பண்டிதர் வீதி என்ற பெயர்ப் பலகையை அமைச்சர் திறந்து வைத்தார். வருடங்கள் ஓடிவிட்டன. பழையதாகிக் கிடக்கும் அந்தப் பெயர்ப்பலகை இன்னமும் அங்கேயதான் இருக்கிறது. அதன் மீது சதுரங்க வேட்டை திரைப்படத்தின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள்.

Sep 15, 2017

பயணம்

காலையிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். மணி பதினொன்று ஆகப் போகிறது. எம்.எஸ்.எஸ் பேருந்திலிருந்து அழைத்திருந்தார்கள். ‘வயசானவர்...வேஷ்டின்னுதான சொன்னீங்க சார்? சில்க் போர்டுல எறங்கிட்டாருன்னு பையன் சொல்லுறான்’ என்றார் மேலாளர். வேல் தனது ஃபோனை மாரத்தஹள்ளி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். அவர் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளாமல் பேருந்தில் பணியாற்றிய பையனையும் ஓட்டுநரையும் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கச் சொன்னார்.

‘நைட் பூரா அவங்க தூங்கல சார்..திரும்பவும் இன்னைக்கு வண்டியேறுவாங்க’ என்று மேலாளர் பம்மவும் ‘நீங்க அனுப்புறீங்களா? இல்ல கான்ஸ்டபிளை வரச் சொல்லட்டுமா?’ என்றார். அடுத்த சில வினாடிகளில் ஃபோனைத் துண்டித்துவிட்டு ‘பஸ் மாறி ஏறியிருப்பாரு...கவலைப்படாதீங்க’ என்றார். பெங்களூரு காவல்துறையில் நயமாகப் பேசுகிறார்கள் என்று அந்தப் பதற்றத்திலும் வேலுக்குத் தோன்றியது.

அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தார். ‘அப்பா ஃபோன் ஸ்விட்ச் ஆகியிருக்குங்கம்மா...நீங்க கவலைப்படாதீங்க..நானே கூப்பிடுறேன்’ என்றான் வேல். மறுமுனையில் வெடித்து அழுதார் அம்மா.

நேற்றிரவு வேல் அம்மாவிடம் பேசியிருந்தான். அம்மாதான் அழைத்து அப்பா பெங்களூரு கிளம்பிய தகவலைச் சொன்னாள். ‘நாங்கதான் தீபாவளிக்கு வர்றோம்ன்னு சொன்னனுங்கள்ல..அதுக்குள்ள ஏங்ம்மா அவரு கிளம்பினாரு?’ என்று கோபமாகத்தான் கேட்டான். அம்மா என்ன செய்வார்? அப்பாவின் பிடிவாதம் அப்படி. ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தால் உடனடியாகச் செய்துவிட வேண்டும். நான்கு மணி வரைக்கும் பெங்களூரு கிளம்புகிற திட்டமெதுவும் இல்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் மூர்த்தி வாத்தியார் போகிற வழியில் ‘பேரன் செளக்கியமா?’ என்று கேட்கவும் அப்பாவுக்கு நினைப்பு வந்துவிட்டது.

வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக ‘சித்ரா நான் ஒருக்கா பெங்களூரு போய்ட்டு வந்துடட்டுமா?’ என்று அனுமதி கேட்பது போலக் கேட்டார். அதுதான் வழமை. அவர் கேட்டால் மறுப்புச் சொல்வது சாத்தியமில்லை என்று அம்மாவுக்குத் தெரியும். ‘அவரு கூட எத்தன வருஷமா காலங் கொட்டுறேன்..சொன்னா கேட்பாரா கேட்கமாட்டாரான்னு எனக்குத் தெரியாதா?’ என்பதுதான் அம்மாவின் சமாதானமாக இருக்கும்.

‘ராத்திரில போறீங்களா? காத்தால கிளம்பி போலாம்ல?’ என்று மட்டும் கேட்டார்.

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல..எம்.எஸ்.எஸ்ல டிக்கெட் இருக்குதாமா...சில்க் போர்டுல எறங்குனா மாரத்தஹள்ளிக்கு டவுன் பஸ்..நான் பார்த்துக்குறேன்’ என்று அதோடு முற்றுப்புள்ளி வைத்தார். வேல் மாரத்தஹள்ளியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியதிலிருந்து இரண்டு மூன்று முறை வந்து போயிருக்கிறார். பையன் நன்றாகப் பிழைப்பதாக அவருக்கு கன பெருமை. வந்து போவது கொஞ்சம் தடுமாற்றம்தான். ஆனால் காட்டிக் கொள்ளமாட்டார். வந்தாலும் தங்கியதில்லை. ஒருவேளை அல்லது இருவேளை உணவுதான். ஈபீஸ் பேக்கரியில் பேரனுக்கு தேங்காய் பன் ஒரு பொட்டலம் வாங்கிப் பையில் வைத்துக் கொள்வார். அதே பைக்குள் ஒரு வேஷ்டி சட்டையும் இருக்கும். மறக்காமல் கண்ணாடி டப்பா அப்புறம் க்ளூக்கோட்ரால் மாத்திரை அட்டை. ஆஸ்பிரினும் கூட இருக்கும். இவ்வளவுதான் அவரது பயணச் சரக்கு.  

‘ரெண்டு பேரும் சிட்டுக்குருவிகளாட்ட ஓடிட்டு இருக்குதுக..நாம இருந்தோம்னா நமக்கு டிபன் செஞ்சு சோறாக்கின்னு தனியா வேலை’ என்பார். அவரது சுபாவமே அப்படித்தான் என்று யாரும் வற்புறுத்துவதுமில்லை. ‘நாய்க்கு வேலையில்லை நிக்க நேரமில்லை’ என்று சொல்லிச் சிரித்துக் கொள்வார். 

வேல் அம்மாவின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அப்பாவை அழைத்தான். 

‘பஸ் ஏறிட்டீங்களாப்பா?’

‘இல்ல சாமீ....யாரு அம்மா சொன்னாளா? உங்கிட்டச் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்..அவ சொல்லிட்டாளா?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.

‘ஓசூர் தாண்டுனதும் ஃபோன் பண்ணுங்க..நான் பைக் எடுத்துட்டு வந்துடுறேன்’ என்றான். அவர் என்ன பதில் சொல்வார் என்று தெரியும்.

‘நீங்க எல்லாம் தூங்குங்க சாமீ..நானே வந்துடுறேன்’ என்றார்.

‘இல்லீங்கப்பா...நாலு மணிக்கு வந்தா பஸ் புடிச்சு வர்றது சிரமம்...பைக்ல வந்துக்கலாம்’ என்றான். அவர் ஒருவாறு ஆமோதித்தார். இதற்கு முன்பாக பெங்களூரு வந்த போதெல்லாம் பகலில்தான் வருவார். அவன் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. இரவு நேரப் பயணம் என்பதுதான் அவனுக்கு கோபம் உண்டாக்கியது. அப்பாவிடம் காட்டிக் கொள்ளவில்லை.


அப்பா பொதுப்பணித்துறையில் ஊழியர். ஒற்றைச் சம்பளம். சம்பளம் வாங்கி சீட்டுப் போட்டு சொசட்டியில் உறுப்பினர் ஆகி உள்ளூரில் இரண்டு சைட் வாங்கி வீடு கட்டி பையனையும் பெண்ணையும் படிக்க வைத்து ஒரு சைட்டை விற்று வேல்முருகனின் அக்காவுக்குத் திருமணம் செய்து- அக்கா இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறாள்- ஐடி மாப்பிள்ளை. அப்பா சிரமம் பார்க்காமல் உழைத்தார். அம்மாவும் அப்பாவுக்கு எல்லாவிதத்திலும் ஒத்தாசை. அரை அரிசி வீணாகப் போகாது. அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாம் நேர்பட ‘சித்ரா வேக்யானம்’ என்பார்கள். அந்தப் பக்கமாகச் சென்று ‘எச்சக் கைல காக்கா ஓட்டமாட்டா’ என்று பழிப்பார்கள். 

இப்பொழுதுதான் கொஞ்சம் செலவு செய்கிறார். முந்தய மனிதராக இருந்திருந்தால் அரசுப் பேருந்தில்தான் ஏறியிருப்பார். ஐம்பது காசு அதிகம் என்பதால் எந்தக் காலத்திலும் அன்புபவனில் டீ குடித்ததில்லை. இரண்டு ரூபாய் கொடுத்து கார்னர் கடையில் செடில்தான் டீ குடிப்பார். அப்படியான மனிதர். ‘மிச்சம் புடிச்சு என்ன சாமீ பண்ணுனேன்..உங்களுக்குத்தானே?’ என்று அக்காவிடம் ஒரு முறை அப்பா சொன்ன போது அவள் உடைந்து போனாள்.

நான்கு மணிக்கு அவர் இவனை அழைத்திருக்க வேண்டும். ஐந்தரை ஆகியும் அழைக்கவில்லை. மடிவாலா எம்.எஸ்.எஸ் பேருந்து அலுவலகத்தை அழைத்தான். யாரும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வண்டியை எடுத்துக் கொண்டு சில்க் போர்ட் சென்றிருந்தான். அதற்குள்ளாகவே நண்பர்கள் ஒரு சிலரை எழுப்பியிருந்தான். எம்.எஸ்.எஸ் ஓட்டுநரின் எண்ணை கணேஷ்தான் தேடிப் பிடித்திருந்தான்.

‘நாலேகாலுக்கு சில்க் போர்டைத் தாண்டிடுச்சு சார்..’ என்ற போதுதான் விபரீதம் புரிந்தது. அப்பா குறித்தான விவரங்களைச் சொன்னான். ‘நான் கவனிக்கல சார்..பையன்கிட்ட விசாரிச்சுட்டு கூப்பிடுறேன்’ என்றார். அதன் பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன், புகார், அம்மாவின் அழைப்பு என்று இழுத்துக் கொண்டேயிருக்கிறது. மனைவியை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு காவல் நிலையம் வந்தான். ‘ஏதாச்சும் பிரச்சினைன்னா மடிவாலா ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டிருப்பாங்க சார்...அங்கேயும் இன்பார்ம் பண்ணியாச்சு’ என்றார் காவலர். அரைகுறையான கன்னடம். சில்க் போர்டில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். மாரத்தஹள்ளிக்குப் பதிலாக வேறு இடத்துக்கு பேருந்து மாறி ஏறியிருக்க வேண்டும் என்று அவனை சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனாலும் பயமில்லாமல் இல்லை.

என்ன செய்வது என்று தெரியவில்லை. நண்பர்கள் இரண்டு மூன்று பேர்கள் வந்திருந்தார்கள். பேருந்துப் பையனும் ஓட்டுநரும் வந்து சேர்ந்த போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. 

‘ட்ராபிக் சார்..அதான் லேட் ஆகிடுச்சு’என்றார் ஓட்டுநர்.

‘சில்க் போர்டுலதான் எறங்குனாரா?’ இதே கேள்வியை மீண்டும் ஆய்வாளர் கேட்கவும் பையன் கொஞ்சம் பதறினான். ஓட்டுநர் குறுக்கே புகுந்து ‘அப்படி யாரும் எறங்கலன்னு சொல்லுறான் சார்’ என்றார். அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள்.

‘வேஷ்டி சட்டையில் ஒருத்தர் ஏறுனதைப் பார்த்திருக்கான்..ஓசூர் தாண்டி எங்கேயோ எறங்கியிருக்காரு..ஆனா எங்கேன்னு தெரியலங்கறான்’ எனவும் ஆய்வாளர் அவரை முறைத்தார். ‘வரும் போது சொல்லிட்டு வந்தான் சார்’ என்றார். பையன் பிதுங்கப் பிதுங்க விழித்தான். பதினெட்டு வயதுக்குள்தான் இருக்கும். வேல் முகத்தில் பதற்றம் கூடியிருந்தது. கணேஷ் அவனது கைகளை இறுகப் பற்றினான்.

‘எங்கெல்லாம் நிறுத்துனீங்க?’

‘மொம்மசந்திரா, எலெக்ட்ரானிக் சிட்டி, கூட்லு கேட் அப்புறம் பொம்மனஹள்ளி, சில்க் போர்டு சார்’

ஒரு கணம் யோசித்த ஆய்வாளர் ‘ஹெப்பகோடி போலீஸ் ஸ்டேஷன்ல கூப்பிட்டுக் கேளு’ என்று ஒரு காவலருக்கு உத்தரவிட்டார். பொம்மசந்திரா அந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஹெப்பகோடி காவல்நிலையத்திலிருந்தே சூர்யா நகர் காவல் நிலையத்திலும் விசாரித்துவிட்டு ஒன்றும் தகவல் இல்லை என்றார்கள். நான்கைந்து மணி நேரம் ஆகிவிட்டது. எலெக்ட்ரானிக் சிட்டி, கூட்லு கேட் இரண்டுமே எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தின் எல்லைதான். அழைத்து விசாரித்தார்கள். 

ஆய்வாளர் கணேஷையும் வேலையும் அழைத்து அமரச் சொன்னார். ‘ஆக்ஸிடெண்ட்....கூட்லு கேட்ல இறங்கியிருக்காரு...ஒரு கேப் அடிச்சு வீசிட்டு போயிருக்கான்’ என்றார். வேலுக்கு மூச்சு ஒரு கணம் நின்று கண்கள் இருண்டு போயின.  

‘அடையாளம் கேளுங்க’ என்றான் கணேஷ்.

‘வேஷ்டி,  கையில் ஒரு பை வெச்சிருந்தாராம்..இந்தியா சில்க் ஹவுஸ் பை’

‘பாடி விக்டோரியாவுல இருக்கு’

இறந்துவிட்டதை அந்தச் சொல் உறுதிப்படுத்தியது. கணேஷ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. வேலுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. மனைவியை அழைத்தான். குழறியபடி ‘அப்பா போய்ட்டாரு’ என்றான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. கதறியபடி இணைப்பைத் துண்டித்தான். அவனது அம்மாவை அழைக்க ஃபோனை எடுத்தான். விரல்கள் எண்களைப் பிசைந்தன. ஆனால் அழைக்கவில்லை. ‘அம்மாகிட்ட என்ன சொல்லுறதுன்னு தெரியலடா’ என்ற போது அவனது மொத்த நாடியும் அடங்கி ஒடுங்கியது. 

‘எதுக்கும் கன்பார்ம் பண்ணிட்டு சொல்லிக்கலாம்’ என்றான் கணேஷ்.

அப்பா தன்னை சைக்கிளில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றதிலிருந்து ஒவ்வொன்றாக மனக்கண்ணில் ஓடின. வேல் சரிந்து அமர்ந்தான். வானம் இருட்டிக் கொண்டிருந்தது.

Jul 7, 2017

பரமசிவன் பண்ணாடி

ராமசாமிதான் முதலில் ஓடினார். 

ஓட்டம் எடுப்பதற்கு முன்பாக ‘பெரிய தோட்டத்து மோட்டார் ரூமா?’ என்று கேட்டுக் கொண்டார். அவர் போய்ச் சேர்ந்த போது மோட்டார் அறையில் அரவமில்லை. கிணற்று மேட்டில் காரி மாடு மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது. மடி பெருத்திருந்த நல்ல கறவை. அதன் காம்பு எட்டாத தூரத்தில் கன்றுக் குட்டியைக் கட்டியிருந்தார்கள். அநேகமாக வீரக்காயன்தான் கட்டியிருக்க வேண்டும். பெரிய தோட்டத்தில் பண்டம்பாடிகளை மேய்க்கிற வேலை அவனுக்குத்தான்.

ராமசாமி நந்தியாம்பாளையத்து பஞ்சாயத்து போர்டில் க்ளர்க். கிணற்று மேட்டுக்கு யாராவது வருகிறார்களா என்று பார்த்தார். பெருந்தலைக்காகம் ஒன்று வலமிருந்து கரைந்தபடியே இடப்பக்கமாக பறந்தது. ‘கெரகத்த’ என்று சொல்லிக் கொண்டார். அவருக்கு சகுனங்களின் மீது நம்பிக்கை உண்டு. காகம் வலமிருந்து இடம் பறந்தால் தடத்தை மறிப்பது போல. கவனத்தைத் மாற்றுவதற்காக மோட்டார் அறையைப் பார்த்தார். அது  சீமை ஓடு வேயப்பட்டிருந்த அறையாக இருந்தது. நூற்றுக்கணக்கான முறை அந்த அறையைப் பார்த்திருக்கிறார். ஆனால் இப்பொழுது அது ஏதோ புத்தம் புதியதாகத் தெரிந்தது. அன்றைய தினம் கூட காலையில் பெரிய தோட்டத்துக் கிணற்றில்தான் குளித்துவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார். மார்கழி மாதத்துக் குளிருக்கு கிணற்று நீர் நிலச்சூட்டோடு இதமாக இருந்தது. சிவாஜிகணேசனும் சரோஜாதேவியும் நடித்த படமொன்றின் பாடலைப் பாடிக் கொண்டே குளித்தது அவருக்கு நினைவில் வந்து போனது. ‘முத்து..பவளம்..முக்கனிச் சர்க்கரை..மூடி வைக்கலாமா’. ரிலீஸாகி ஒன்றரை மாதங்கழித்து புளியம்பட்டி ரவி கொட்டகையில் திரையிட்டிருந்தார்கள். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. தனியாகப் பார்த்துவிட்டு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. 

பெரிய தோட்டம் என்றால் அது உண்மைக்கே பெரிய்ய்ய்ய்ய தோட்டம். நந்தியாம்பாளையத்தில் முப்பது ஏக்கர். மொத்தமாக வளைத்துச் சுற்றிலும் கிளுவமரத்து வேலி போட்டிருந்தார்கள். மாரக்காயாள் தெம்பாக இருந்த வரைக்கும் வேலியில் பாகற்கொடிகளும் பூசணிக்கொடிகளும் படர்ந்திருக்கும். பண்ணாடியின் அம்மாதான் மாரக்காயாள். கிழவி ஓய்ந்து அமர்ந்த பிறகு ‘கண்டவிங்களும் பொறிச்சுட்டு போய்டுறாங்க’ என்று யாரும் கண்டு கொள்வதில்லை. கொடிகள் காய்ந்து கிடந்தன. 

பண்ணையத்து ஆட்களெல்லாம் ‘பண்ணாடி வெவரமப்போவ்’ என்பார்கள். பண்ணயத்து ஆட்கள் மட்டுமில்லை- ஊரே அப்படித்தான் சொல்லும். பண்ணாடி மட்டுமில்லை அவரது அப்பாவுமே விவரம்தான். இரண்டு தலைமுறைகளாகவே ஒற்றை வாரிசுகளுக்காக பார்த்துப் பார்த்து சேர்த்து வைக்கப்பட்ட சொத்துக்கள்தான் ஊர் பூராவும். பண்ணாடியுடன் கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அவருக்கும் மகனைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை.

மூன்று தலைமுறைக்கு முன்பாக சேவூர் பக்கத்திலிருந்து நந்தியாம்பாளையத்துக்கு பஞ்சம் பிழைப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். அப்பாரு காலத்தில் ஒன்றுமில்லாத குடும்பம் அது. ஆரம்பத்தில் கணக்குப்பிள்ளையிடம் பண்ணயத்தாளாக இருந்தவர் கொஞ்சம் காட்டை வாங்கிக் கிணறு வெட்ட முப்போகம் விளையத் தொடங்கியது. வருமானத்தில் இண்டம் பிடித்து மிச்ச மீதியை வட்டிக்குக் கொடுத்து என பரமசிவனின் தாத்தனும் அப்பனும் சேர்த்த சொத்துக்கள்தான் அத்தனையும். இனி காலாகாலத்துக்கு காலை நீட்டி அமர்ந்து தின்றாலும் கூட இன்னமும் இரண்டு தலைமுறைக்கு பாடுபடாமலேயே சாப்பிடலாம். அப்படியொரு கணக்கு. 

‘மூணு தலக்கட்டு பொழச்சவீங்களும் இல்ல..மூணு தலக்கட்டு தோத்தவீங்களும் இல்ல...அப்படித்தானுங்க சார்?’ என்று பரமசிவன் க்ளர்க்கை ஒரு முறை கேட்டான். 

‘நாங்க எல்லாத் தலக்கட்டுலயும் இப்பிடியேதான்..சம்பளத்து ஆளுங்க..என்னையக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டுச் சிரித்தார் ராமசாமி. 

‘அதுக்கு இல்லீங்க சார்...எங்களுதுல நான்தான் மூணாவது தலக்கட்டு...மூணு தலக்கட்டா பொழச்சாச்சு..நான்தான் சொத்து பூராத்தையும் தொலைக்கப் போடறனோ என்னமோ’ என்றான்.

பரமசிவன் வாட்டசாட்டம். அம்மாவின் லட்சணத்தை அப்படியே வாங்கிக் கொண்டு வந்திருந்த ஆணழகன். பெரும்பணக்காரன் என்பது நமக்கே தெரியுமே. அக்கம்பக்கத்துக்காரர்களுக்குத் தெரியாதா? ‘அங்க பொண்ணு இருக்குது..இங்க பொண்ணு இருக்குது’என்று ஆட்கள் வராத நாட்களே இல்லை. நடைக்கு அஞ்சு பத்து வாங்கிக் கொள்வார்கள். சோற்று நேரமாக இருந்தால் மொந்தை சோறு போட்டு அனுப்புவார்கள். ஒரு ஜாதகமும் பொருத்தமில்லை. குருபலம் வர இன்னமும் ஆறு மாதம் இருப்பதாக பாளையத்து ஜோசியகாரன் சொல்லி நாற்பத்தைந்து நாட்கள் ஆகியிருந்தது. பண்ணாடி பரமசிவனுக்கு புல்லட் வாங்கிக் கொடுத்திருந்தார். ‘செயினு போட்டுக்க சாமி’ என்று அம்மா அணிவித்துவிட்டிருந்ததை அவன் கழற்றியதே இல்லை.

ராமசாமிக்கு அந்த ஊரில் பரமசிவன்தான் வெகு ஸ்நேகிதம். அவர் காங்கேயத்துக்காரர். வேலைக்காக நந்தியாம்பாளையம் வந்து ஏழெட்டு வருடங்கள் ஆகியிருந்தன. வந்த புதிதிலிருந்தே பரமசிவனோடு ஒட்டிக் கொண்டார். அவனும் பணக்கார தோரணையில்லாமல் பழகினான். அந்த ஊரில் படித்தவனாக மட்டுமில்லாமல் டவுனுக்குச் சென்று வரும்போதெல்லாம் விகடனோ, குமுதமோ, கல்கியோ வாங்கி வருவான். புது இதழ் வாசம் போகாமலேயே க்ளர்க்குக்கு கொண்டு வந்து தந்து தருவதாலேயே அவன் மேல் தனிப்பாசம் அவருக்கு. அவன் பைக் வரும் சத்தத்தை வைத்தே பஞ்சாயத்து போர்ட் பள்ளி மாணவர்கள் ‘ஓஓஓ’ என்று கூச்சலிடுவார்கள். வண்டியின் உறை நிறைய பரமசிவன் சாக்லெட் வைத்திருப்பான். ஈ மொய்ப்பது போல மொய்க்கும் பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாகக் கொடுப்பதால் அவன் கிட்டத்தட்ட ஹீரோவாக இருந்தான். 

க்ளர்க்கும் பரமனும் ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது ‘ஏதாச்சும் பொம்பளப் புள்ள சகவாசம்...’ என்று ராமசாமி இழுப்பதுண்டு. பரமசிவன் பிடி கொடுக்கவே மாட்டான். இந்தமாதிரியான விவகாரங்களில் வெகு இளக்கம். யாராவது விளையாட்டுக்குச் சொன்னால் கூட நெளிந்துவிடுகிற ஆளாக இருந்தான்.

பரமசிவன் மூன்று நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து போர்டுக்கு ராமசாமியைப் பார்க்க வந்திருந்தான். ‘எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சா நம்ம ஊர்ல நான்தான் மொதக் கொடிக்கம்பம் கட்டுவேன்’ என்பதைச் சொல்வதற்காகவே வந்திருந்தான். ராமசாமிக்கு எம்.ஜி.ஆர் போணி ஆவாரா என்ற சந்தேகமில்லாமல் இல்லை. ‘சினிமாவும் அரசியலும் சூதாட்டம் பரமு...ஜெயிச்சா தப்பிச்சுடலாம்..இல்லன்னா சொத்து போயிரும் பாத்துக்க’ என்றார். அவன் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தான். தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லிவிட்ட திருப்தி ராமசாமிக்கு. ஒருவேளை எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்தால் உள்ளூரில் பரமசிவன் எம்.எல்.ஏ ஆகிவிடுவான் என்று அவருக்குத் தோன்றாமல் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆரால் வெல்ல முடியவில்லையென்றால்? பரமனுக்கும் க்ளர்க் சொன்னது ஊசியில் குத்துவது போல இருந்தது. ஆனால் முப்பது ஏக்கரா பண்ணையம் அவ்வளவு சீக்கிரம் கரைந்துவிடுமா என்ன?

உள்ளூரில் தானொரு குட்டி எம்.ஜி.ஆர் என்ற நினைப்பில் இருந்தவன் அவன். தனது தலைவர் எப்படியும் முதல்வர் ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில்லாமல் இல்லை. அன்றைய தினம் தொண்டுப்பட்டியில் அமர்ந்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். குடோனில் மட்டும் ஆயிரம் மூட்டைகள் மஞ்சளை அப்பா அடுக்கி வைத்திருந்தார். மஞ்சள் விற்கிற விலைக்கு அது போதும். நாளைக்கே தேர்தல் என்றாலும் கூட கோயமுத்தூர் ஜில்லாவையே ஜெயிக்கலாம். ஆனால் அப்பனும் அம்மாவும் அதை விற்றுத்தான் கல்யாணச் செலவு செய்வதாக முடிவு செய்து வைத்திருந்தார்கள். எவள் வரப்போகிறாளோ என்று நினைத்த போது பெரு மூச்சு வந்தது. 

கருக்கல் ஏறிக் கிடந்தது. ‘மாசங்கெட்ட மாசத்துல மழை வருமா?’ என்று நினைத்துக் கொண்டே எம்.ஜி.ஆர் பற்றி மறுபடியும் யோசித்தான். ‘கருணாநிதி ஒன்னும் லேசுப்பட்ட ஆள் இல்லை..அந்த மனுஷனை எதிர்த்து நம்ம தலைவர் மேல வர முடியுமா?’ என்றுதான் திரும்பத் திரும்ப மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. 

அப்பனின் ஏப்பச் சத்தம் கேட்டது. இரவு உணவை முடித்துக் கொண்டார் போல. காற்று வாங்க தொண்டுபட்டிக்கு வருவது வழக்கம்தான். பண்டம்பாடிகளின் வயிறு நிரம்பியிருக்கிறதா என்பதை அவர் பார்ப்பதும் அப்பொழுதுதான். வெற்றுடம்போடு தன் நெஞ்சு முடிக்குள் கைகளை விட்டு அளாவியவர் ‘என்னப்பா ரோசனை பலமா இருக்குது?’ என்றார்.

‘ஒண்ணுமில்லீங்ப்பா’ என்றபடியே எழுந்து கொண்டான். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுவதே அவருக்குப் பிடிக்காது. அவரும் அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

பரமசிவன் வீட்டுக்குள் நுழைந்தான். விசாலமான தொட்டிக் கட்டு வீடு. சோறாக்கி வைத்திருந்த போசியிலிருந்து எடுத்துப் போட்டு உண்டான். வீட்டில் அம்மாவைக் காணவில்லை. ‘இந்நேரத்துக்கு எங்க போச்சோ’ என்று நினைத்துக் கொண்டான். அப்பன் உள்ளே வரவும் ‘அம்மா எங்கீங்ப்பா’ என்றான். அவருக்கு காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. அம்மா பற்றி அப்பாவுக்குத் தெரியாது. குஞ்சம்மாள் இருந்தாள் அவளைக் கேட்கலாம். வீட்டில் அம்மாவுக்கு அவள்தான் ஒத்தாசை. இந்நேரம் வரைக்கும் அவளுக்கு என்ன வேலை? கிளம்பிச் சென்று வெகு நேரமாகியிருக்கும். அப்பா தனது இரும்புக்கட்டில் மீது சுருட்டி வைத்திருந்த மெத்தையை விரித்துத் தட்டிவிட்டு ரேடியோவைத் திருகினார். கோவை வானொலி நிலையம் கரகரத்தது. 

யாரேனும் மோட்டார் அறைப்பக்கமாக வந்திருக்கக் கூடும் என்று ராமசாமி நினைத்தார். ஒருவரையும் காணவில்லை. யாருமற்ற அந்தச் சமயத்தில் மோட்டார் அறைக்கதவைத் தட்டலாமா என்று ராமசாமி க்ளர்க்குக்கு குழப்பமாக இருந்தது. 

வீரக்காயன்தான் ஓடி வந்தான். அவன் முகம் வெலவெலத்து போயிருந்தது.

வந்தும் வராததுமாக ‘இப்படி ஆயிப்போச்சுங்களே சாமீ....இதெல்லாம் நெசமாத்தான் நடக்குதுங்களா?’ என்றான். 

‘என்ன நெசம்?’ என்றார் ராமசாமி.

‘அடசாமீ உங்களுக்குத் தெரியாதா?’ என்றான் அடக்கமுடியாத அழுகையுடன். 

‘நம்ம சின்னச்சாமி நாண்டுக்கிட்டுச்சுங்க’ என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக ராமசாமிக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

‘என்ரா சொல்லுற?’ என்ற போது கிட்டத்தட்ட கத்திவிட்டார். அவருக்கு பரமசிவன் தூக்குப் போட்டுக் கொண்டான் என்ற தகவல் தெரியாது. மோட்டார் அறைக்குள் யாரோ ஒருவர் ஒளிந்து பூட்டிக் கொண்டதாகத்தான் அவருக்குத் தகவல் சொன்ன பொடியன் சொன்னான். திருடனாக இருக்கக் கூடும் என்கிற நினைப்பில்தான் ஓடி வந்திருந்தார். பரமசிவன் வெளியே எங்கேயாவது சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில்தான் அதுவரையிலும் இருந்தார். மாடு பிடித்துச் செல்ல வந்த வீரக்காயன் பரமசிவனைப் பார்த்துவிட்டு பண்ணாடியிடம் நேரடியாகத் தகவலைச் சொல்வதற்குப் பயந்து தன் வளவில் யாரிடமோ சொல்லிவிட்டு திரும்ப வந்திருக்கிறான்.

அடக்கமுடியாத பதற்றத்துடன் க்ளர்க்கும் வீரக்காயனும் கதவைத் தள்ளிப்பார்த்தார்கள். உள்ளே தாழிடப்பட்டிருந்தது. அடுத்த கணம் அறை மீதேறி சீமை ஓட்டைப் பிரிக்கத் தொடங்கினார். வீரக்காயன் கதறியழ ஆரம்பித்திருந்தான். ஊர்க்காரர்கள் அவனது கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். அறைக்குள் இறங்கியிருந்த ராமசாமியால் பரமசிவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பார்க்கும் நிலையில் அது இல்லை. கோரமாகிக் கிடந்தது. எச்சில் ஒழுகியபடித் தொங்கியவனின் விழிகள் பிதுங்கியிருந்தன. அவனது சட்டைப்பையிலிருந்த காகிதத்தை உருவி மடக்கித் தனது சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டார்.

அவர் கதவைத் திறந்த போது கிட்டத்தட்ட ஊரே வந்து சேர்ந்திருந்தது. மாரக்காயாள் கிழவி மாரை அடித்துக் கொண்டு அழுதபடியிருந்தாள். பண்ணாடி மூர்ச்சையற்று விழுந்தார். பரமசிவனின் அம்மா தலைவிரிகோலமாகத் தலையில் அடித்துக் கொண்டாள். போஸ்ட்மார்ட்டம், போலீஸ் என்றெல்லாம் போகாமல் அடுத்த அரை மணி நேரத்தில் கட்டையை அடுக்கி அவனைக் கரியாக்கினார்கள். பரமசிவன் எதனால் இறந்து போனான் என்று ஊரில் யாருக்கும் தெரியவில்லை. காரியங்கள் முடிந்த பிறகு தனது அறையில் ஒளித்து வைத்திருந்த கடிதத்தைக் கைகள் நடுங்க படிக்கத் தொடங்கினார் ராமசாமி க்ளர்க்.

‘எப்பொழுதும் உடலே மனதை வெல்லும் என்று தெரியும். வேறு யாரையும் அந்தக் கோலத்தில் பார்த்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன்...அம்மாவை’ என்று நீண்டிருந்த கடிதத்தை அதற்குமேல் படிக்க மனமின்றி கிழித்து வீசினார்.

உங்களுக்கு இருக்கும் அதே கேள்விகள்தான் எனக்கும். ராமசாமி க்ளர்க் பதில் எதுவும் சொல்லவில்லை.

Jun 29, 2017

வெள்ளாஞ்சட்டியின் மாமனார்

'படிச்சவன்னு சொல்லித்தானே உனக்குக் கட்டிக் கொடுத்தோம்? அயோக்கியத்தனம் பண்ணுறியா?’ என்றபடி அந்த கழுமுண்டராயன் குத்திய போது வெள்ளாஞ்சட்டிக்கு மூச்சு ஒரு கணம் நின்று போனது. சிரமப்பட்டு ஒன்றிரண்டு இழுப்புகளை இழுத்துத் தயாராவதற்குள் முகத்திலும் ஓர் இறக்கு இறக்கினார்கள். அடித்தவர்கள் ஆளாளுக்கு தடிமாடு மாதிரி இருந்தார்கள். இவர்களையெல்லாம் பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லை. யாருடைய முகத்தையும் ஒழுங்காகப் பார்க்கவும் முடியவில்லை. ஒன்றிரண்டு வினாடிகள் உற்றுப் பார்த்தாலும் கூட ‘மொறைக்கிறான் பாருங்கய்யா’ என்று அடித்தார்கள். 

வெள்ளாஞ்சட்டிக்கு முப்பத்தியிரண்டு வயது. பெயரை வைத்துத் தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. மாரத்தஹள்ளியில் அலுவலகம். பி.டெக் முடிப்பதற்கு முன்பாகவே வேலையை வாங்கியிருந்தான். சாமர்த்தியசாலி. அவனது வகுப்பில் இருந்து மட்டும் ஏழு பேர் அவனோடு வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். இந்த நெரிசலூருக்கு வந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களைக் கடப்பதற்குள்ளாக வருடா வருடம் நண்பர்கள் திக்குக்கு ஒருவராகப் பறந்து போயிருந்தார்கள். இவனது சம்பளம் லட்சத்தை நெருங்கியிருந்தது. தனிக்கட்டைக்கு அது பெரிய சம்பளம்தான். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. பெண் கிடைக்கவில்லை. பெயருக்கு வேண்டியே கழித்துக்கட்டினார்கள். அவனது வீட்டில் பல வருடங்களாகத் தேடித்தான் நித்யாவைக் கண்டுபிடித்தார்கள்.

இன்றைக்கு வெள்ளாஞ்சட்டிக்கு நடக்கும் பூசையை மாமனார் சஞ்சலமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்களையெல்லாம் மாமனார்தான் கூட்டி வந்திருக்கிறார். வந்திருக்கிறார் என்ன வந்திருக்கிறார்? வந்திருக்கிறான். அவனுக்கு இவ்வளவுதான் மரியாதை. முன்பின் தெரியாத ஆட்களை வைத்து மருமகனையே அடிக்கிறவனுக்கு வேறு என்ன மரியாதை வேண்டும்? கூட்டி வந்ததுமில்லாமல் வெள்ளையும் சுள்ளையுமாக நின்று வேடிக்கை வேறு பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை பேசவில்லை. பலாப்பழத்தை முழுதாக விழுங்கி விக்கித்தவன் போலவே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆளும் மீசையும். ச்சை. 

ஆரம்பத்தில் அவர் சைகை காட்டும்போதுதான் குத்தினார்கள். பிறகு நேரம் ஆக ஆக யார் வேண்டுமானாலும் அடிக்க ஆரம்பித்தார்கள். சிலருக்கு கை வலிக்கும் போலிருக்கிறது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் வாங்கிய காசுக்கு மேலாக அடித்தார்கள். இத்தனை பேரிடம் அடி வாங்கியும் தான் அசையாமல் நின்றிருப்பது வெள்ளாஞ்சட்டிக்கே ஆச்சரியமாக இருந்தது. தான் ஒன்றும் அவ்வளவு பெரிய கஜபலத்தான் இல்லை என்பது அவனுக்கும் தெரியும். இவ்வளவு அடி விழுந்தும் ரத்தத்தையும் காணவில்லை. ஒருவேளை ஏற்கனவே முடிவு செய்து வைத்து உள்குத்தாகக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று சந்தேகமாகவும் இருந்தது. நல்லவேளையாக, வில்லனிடம் அடி வாங்கும் நாயகன் போல உதடு மட்டும் ஓரமாகக் கிழிந்திருந்தது. அடித்தார்கள் என்பதற்கான சாட்சியமே அந்த உதட்டுக் கிழிசல்தான். சாட்சி இருந்து மட்டும் என்ன பயன்? வெளியில் சொல்லவா முடியும்? 

நித்யாவும் பெங்களூரில்தான் வேலையில் இருக்கிறாள். ப்ளாட்டினச்சிலை. அம்சமாக இருப்பாள். அவளது அலுவலக விதிகளின்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து கொள்ளலாம். எதிர்ப்படும் ஒவ்வொரு சோடிக் கண்களும் அவளை திரும்பிப் பார்த்துச் செல்லும். திங்கட்கிழமை மட்டும் என்ன குறைச்சல்? உந்திச்சுழி தெரிந்தும் தெரியாமலும் கட்டிய புடவை காற்றில் அசையும் போதெல்லாம் பல ஆண்களுக்கு இருதயம் தொண்டைக்குழியில் வந்து அடைத்துக் கொள்ளும். அதீதமாகப் புகழ்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவன் மனைவியைப் பார்த்து வழிவது நல்லதில்லைதான். ஆனால் வேறு எப்படி அவளது அழகை உங்களுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. காற்றில் அசைந்தாடும் கற்றைக் கூந்தலும் எம்பிக் குதித்து நடக்கும் அவளது நடையும்..ம்ஹ்ஹ்ம். ஒரு கணம் காத்திருங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.

அடி விழுந்து கொண்டிருந்த போதும் வெள்ளாஞ்சட்டி வாயைத் திறக்கவேயில்லை. திறந்தால் கூட்டத்தில் எவனுக்கு வெறியேறும் என்று தெரியவில்லை. திறக்காவிட்டாலும் அவனவனுக்கு வெறியேறிக் கொண்டுதான் இருந்தது. ‘வக்காரோளி..வாயத் திறக்கறானான்னு பாருங்க..’ என்று கத்தியபடியே ஆட்டுகிடா மீசைக்காரன் ஒருவன் வெள்ளாஞ்சட்டியைப் பார்த்தான். வெள்ளாஞ்சட்டிக்கு அந்த கணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாசூக்காகப் பார்வையைத் திருப்பி வேறொருவனின் முகத்தைப் பார்த்தான். அவன் அரிவாளோடு நின்றிருந்தான். சும்மா நின்றிருக்கும் காட்டுப்பன்றியை சொறிந்துவிட்டது போல ஆகிவிட்டது. 

‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க..வாயிலேயே வெட்டுகிறேன்’ என்று பாய்ந்து வந்தான் அவன். அவன் வெட்டினாலும் வெட்டிவிடுவான். ஆள் ஒரு தினுசாக இருந்தான். இவர்களையெல்லாம் மாமனார் எங்கேயிருந்து பிடித்து வந்திருப்பார் என்று பிடிபடவேயில்லை. காசுக்கு வந்தார்களா அல்லது மாமனாருக்காக சேவை செய்ய வந்தார்களா என்றும் குழப்பமாக இருந்தது. சுற்றிலும் இத்தனை பேர் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளாஞ்சட்டி எதையாவது வக்கனையாகப் பேசியிருப்பான். அவன் அப்படியான ஆள்தான். இப்பொழுது பேச வழியில்லாமல் வசவாக சிக்கியிருக்கிறான். 

இப்பொழுது இல்லை- ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவிருந்தே சிக்கியிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகத்தான் நித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். எழுபத்தைந்து பவுன் நகை போட்டு ஒரு கார் கூட வாங்கிக் கொடுத்தார்கள். சாண்ட்ரோ. புதுக்காரும், புது மனைவியுமாக பெங்களூரு வந்த தினத்தில் வெள்ளாஞ்சட்டிக்கு மனதுக்குள் பாரமாகத்தான் இருந்தது. இனம் புரியாத பாரம். நித்யாவின் அம்மாவும் அப்பாவும் உடன் வந்திருந்தார்கள். வெள்ளாஞ்சட்டிதான் கார் ஓட்டினான். புதுமணம் விரவிக் கிடந்த காரில் வழிநெடுகவும் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மாமனார் மட்டும் அவ்வப்போது ‘மெதுவாவே போலாம்..தப்பில்லை’ என்று சொன்னார். வெள்ளாஞ்சட்டி காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் போக்கில் ஓட்டிக் கொண்டிருந்தான். 

இருட்டுவதற்கு முன்பாகவே பெங்களூரை அடைந்துவிட்டார்கள். திருமணத்திற்கு விடுப்பில் செல்வதற்கு முன்பாகவே எலெக்ட்ரானிக் சிட்டியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தான். ஒற்றை படுக்கையறை, சமையலறை போக பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பறை. இரண்டு பேருக்கு இது போதும் என்று நினைத்தான். யாராவது வந்தால் படுக்கக் கூட இடமில்லை என்பதால்தான் அம்மாவையும் அப்பாவையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருந்தான். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து காரை விட்டு இறங்கியவுடன் ‘சீக்கிரம் இந்த வீட்டைக் காலி பண்ணிடுங்க மாப்பிள்ளை’ என்றார் மாமனார். வெள்ளாஞ்சட்டியின் முகத்தைப் பார்த்தபடிதான் சொன்னார். வந்தும் வராததுமாக எதிர்மறையாகப் பேசிய மாமனாரை வெள்ளாஞ்சட்டி குழப்பமாகப் பார்த்தான். ‘தெக்க பார்த்த தலவாசல்...கல்யாணம் பண்ணிட்டு மொத மொதலா இருக்கீங்க...ஆகாது’என்றார்.

‘சரிங்க’ என்று தலையாட்டிக் கொண்டான். மாமனார் ஒரு மார்க்கமான ஆள் என்ற முடிவுக்கு வருவதற்கு அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நித்யாவுக்கு எல்லாமே பெருமிதமாக இருந்தது- அவனது பெயரைத் தவிர.

அவளது வீட்டில் ஜாதகம் பார்த்து பொருத்தம் இருப்பதாக முடிவான பிறகு அவனுடைய பெயருக்காகத்தான் நிராகரிக்க விரும்பினாள். அவனிடமிருந்துதான் குறுஞ்செய்தி வந்தது. நேரில் சந்திக்க விரும்பியிருந்தான். கத்தரித்து விடுவதற்கான யோசனைகளோடு கிளம்பிச் சென்றவள் நேரில் பார்த்த போது முடிவை மாற்றிக் கொண்டாள். முதன்முறையாக இந்திராநகர் காபிஃடேயில் சந்தித்தார்கள். பேச்சிலும் நடத்தையிலும் ஏதோவொரு கவர்ச்சி அவனிடமிருந்தது. இரண்டாம் முறையாக அவளது வீட்டில் சந்தித்தார்கள். ‘இதெல்லாம் தப்பில்லையா?’ என்று கேட்டுக் கொண்டே எல்லை மீறினார்கள். அதன் பிறகு அவளுக்கு பயமானது. திருமணம் உறுதியானது. 

அம்மாவும் அப்பாவும் காரில் இருக்கிறார்கள் என்பதற்காக அறிமுகமே இல்லாதவனோடு பயணிப்பது போல அமர்ந்திருந்தாள். புது வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. பைகளை எடுத்துக் கொண்டு படி ஏறித்தான் வந்தார்கள். நான்கு பேருக்குமே மூச்சு வாங்கியது. சாவியை வைத்திருந்த வெள்ளாஞ்சட்டி கடவுளை வேண்டிக் கொண்டு திறந்தான். உள்ளே வந்தும் மாமனார் குறை சொல்லிக் கொண்டேயிருந்தார். காற்றோட்டம் இல்லை, அக்னி மூலையில் சமையலறை இல்லை, மனையடி சாஸ்திரமும் பொருந்திப் போகவில்லை என்று அவர் அளக்க அளக்க எல்லாவற்றுக்கும் வெள்ளாஞ்சட்டி தலையாட்டினான். மாமியார் எதுவுமே பேசவில்லை. மகளிடம் மட்டும் அவ்வப்போது கிசுகிசுத்தார். அவரைவிடவும் மெதுவாகவே நித்யா கிசுகிசுத்தாள். 

‘நீங்க சாப்பாடு செய்யுங்க..நானும் மாப்பிள்ளையும் ஏரியாவைச் சுத்திப் பார்த்துட்டு வர்றோம்’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு லுங்கி சட்டையோடு கிளம்பினார். 

வீடு வெறிச்சோடிக் கிடந்தது. சாமான்கள் என்று எதுவுமேயில்லை. சிறு பணக்கட்டை வெள்ளாஞ்சட்டியிடம் நீட்டி ‘வேணுங்கிற சாமானெல்லாம் வாங்கிப் போடுங்க...எங்களுக்கு ஊர் தெரியாது..இல்லீன்னா நாங்களே போய் வாங்கிட்டு வந்துடுவோம்’ என்றார். ஏற்கனவே கட்டி வைத்திருந்த கட்டு அது. ஆயிரமும் ஐநூறுமாக கட்டில் இருந்தது. எவ்வளவு இருக்கும் என்று மனம் கணக்கு போட்டாலும் தயக்கத்தோடு ‘பரவால்லீங்க மாமா’ என்றான்.

மாமனார் தனது மனைவியைப் பார்த்தார். மாமியார் மருமகனிடம் நேரடியாகப் பேசாமல் நித்யாவை நோக்கி ‘மாப்பிள்ளையை வாங்கிக்கச் சொல்லு’ என்றார். நித்யா எதுவும் சொல்லாமல் நின்றாள். வெள்ளாஞ்சட்டி பணக்கட்டை வாங்கி பூஜையறையில் வைத்தான். மாமியார் பூஜையறையில் தீபம் ஒன்றைப் எரிய விட்டிருந்தார்.

அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு மாமனாருடன் நடந்த போது வானம் மங்கிக் கிடந்தது. மழை வரும் என்றும் சொல்ல முடியாது. வராது என்றும் நம்ப முடியவில்லை. 

‘குடை இருந்தா எடுத்துக்குங்க’ என்றார் மாமனார். குடை வீட்டில் இல்லை என்று சொல்லாமல் நடக்கத் தொடங்கியிருந்தான். மாமனார்தான் பேச ஆரம்பித்தார். ‘இப்போ எல்லாம் ஒண்ணும் பருவத்துக்கு நடக்கிறதில்ல..ஆடில காத்து இல்ல, ஐப்பசில மழ இல்ல..வெய்யில் மட்டும் எல்லா மாசமும் கொளுத்துது’ என்றார். வெள்ளாஞ்சட்டிக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அமைதியாக நடந்தான். 

உயர்ந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தைக் காட்டி ‘இது பூராவும் ஒருத்தருதா?’ என்றார். 

‘ஆமாங்க’ என்று முடித்துக் கொண்டான். பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவனுக்கு அவருடன் நடப்பது ஏனோ சங்கோஜமாக இருந்தது.

பெங்களூரு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாகரிக பெண்கள் மாமனாருக்கு வித்தியாசமாகத் தெரிந்தார்கள். ‘நீங்க பெங்களூரை விட்டுட்டு வந்துடுங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அமைதியாகச் சிரித்தான். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது.

‘இந்த ஊரை விட்டுட்டு வர மாட்டீங்கன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டீங்கள்ல’ என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். சற்றே ஆசுவாசமாக வெள்ளாஞ்சட்டி சிரித்து வைத்தான்.

‘இங்கேயே இருந்துக்குங்க...நினைச்சா வந்து பார்த்துட்டு போயிடுறோம்..ஆனா ஒண்ணுங்க மாப்பிள்ள....ஏதாச்சும் முன்னபின்ன ஆச்சுன்னா எல்லாரும் மாதிரியும் சும்மா இருக்க மாட்டேன்’ என்ற போது மிரட்டுகிற தொனி தெரிந்தது. எதற்காக இப்படி மிரட்டுகிறார் என்று வெள்ளாஞ்சட்டிக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்ற யோசனை எழாமல் இல்லை. மாமனார் சில வினாடிகள் நிசப்தமானார். பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கே தோன்றியது. ஆனால் கட்டுப்படுத்த இயலாமல் ‘மிரட்டுறதுக்கு சொல்லல..ஆனா முன்னாடியே நாஞ் சொல்லலன்னு இருக்கக் கூடாது பாருங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி பதில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டான். ஏதோ வயிற்றைப் பிசையத் தொடங்கியிருந்தது. 

இருள் மெல்ல படர்ந்தது. பெங்களூரின் சாரல் விசிறியடித்தது. இரண்டு பேரும் வேகவேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

இப்பொழுது ஏன் அடி வாங்குகிறான் என்று யூகித்திருப்பீர்கள் அல்லவா? அதேதான். ஒன்றரை வருடங்களில் அவர் சொன்னபடியே நடந்து கொண்டிருக்கிறது. நன்றாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சுனாமி முந்நூற்று அறுபது டிகிரியில் சுழன்றது. கடந்த வாரம்தான் சிக்கினான். தன்னோடு பணிபுரியும் நர்மதாவுடனான தொடுப்பை வாட்ஸப் காட்டிக் கொடுத்திருந்தது. அவள் கன்னடக்காரி. வேள்ஸ், வேள்ஸ் என்று அவள் கொஞ்சியிருந்தாள். கொஞ்சலோடு நிற்கவில்லை. அதற்கு மேல் இத்யாதி இத்யாதி. ஒரு வாரம் நித்யா அழுது புலம்பினாள். வடிவதாகவே தெரியவில்லை. அவளால் அவனது சமாதானங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நேற்றிரவு அம்மாவை அழைத்து ‘குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணுங்குதும்மா உம்மாப்பிள்ளைக்கு’ என்று ஒற்றை வரியோடு இணைப்பைத் துண்டித்தாள். நர்மதா யார் என்ன என்கிற விவரமெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.

பதறிய நித்யாவின் அம்மா மீண்டும் அழைத்து ‘உங்கப்பாவே அப்படித்தான்..வட்டல் வெச்ச இடத்துல வாயை வெச்சுடுவாரு....நான் கட்டுல வெச்சுக்கலையா? யோசிச்சு முடிவெடு’ என்று அவளது அம்மா சொன்னாள். 

‘மறுபடியும் யோசிக்கச் சொன்னீங்கன்னா மாடியில இருந்து குதிச்சுடுவேன்’ என்று நித்யா கத்திய போது அத்தனையும் எல்லை மீறிப் போயிருந்தது.

‘இந்தக் காலத்துச் சின்னஞ்சிறுசுக அப்படி இப்படின்னு இருக்கும்..புள்ளதான் அவசரப்படுறா..நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு மட்டும் வாங்க’ என்று மாமியார் சொல்லியனுப்பியதை மாமனார் கண்டுகொள்ளவே இல்லை. பெண் மருமகனை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்பது அவளது எண்ணம்.

‘இவன் இல்லைன்னா எம்புள்ள என்ன வீணாவா போய்டும்?’ என்பது இரவு முழுவதும் அவரது எண்ணமாக இருந்தது. ‘அவனைச் சும்மா விடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார்.

மறுநாள் காலையில் வந்து இறங்கிவிட்டார்கள். நித்யா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டாள். மனம் கல்லாகிக் கிடந்தது. சாயந்திரம் அவரோடு ஊருக்கு வந்து இரண்டொரு நாட்கள் ஓய்வெடுப்பதாகச் சொன்னாள். மாமனாரோடு சேர்ந்து மழைக்குத் தப்பி ஓடி வந்த அந்தச் சம்பவம் வெள்ளாஞ்சட்டியின் நினைவில் வந்து போனது. சில கணங்கள்தான் அந்த ஞாபகம். இன்னமும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அவனுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான். ஆண்களின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். திருந்தலாம் என்று நினைப்பதைவிடவும் தப்பித்திருக்க வேண்டும் என்றுதான் மனம் கணக்குப் போடும். அதற்குள் எவனோ வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். மிகக் கனமான குத்து அது. 

எல்லோருக்கும் தனக்கு மாதிரியேவா மாமனார் மாட்டுவாங்க என்று நினைப்பதற்குள்ளாக விழுந்த குத்து அது. 

வெள்ளாஞ்சட்டி ‘ப்ப்ப்பா’ என்றான். அடி வாங்கத் தொடங்கிய பிறகு அவனிடமிருந்து முதன் முதலாக வந்து விழுந்த வார்த்தை அது. அப்பொழுது நித்யா அலுவலகக் கேண்டீனில் சிக்கன் மீல்ஸ் ஒன்றுக்கு பில் வாங்கிக் கொண்டிருந்தாள். மூன்று முடிச்சுகளும் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொண்டிருந்தன.

Jan 12, 2016

வேட்டைக் காடு

‘கொன்னுடுவாங்களாப்பா?’ பரதன் கேட்ட போது பழனிக்கு நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்டது.

எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘இல்ல சாமி..தப்பிச்சுடலாம்’ என்றான். இதைச் சொல்லும் போது அவனது தைரியம் முற்றாகத் தொலைந்திருந்தது. வெளியில் மனிதர்களின் சலனம் எதுவுமில்லை. ஆனால் யாருமில்லை என்பதை உறுதியாகக் கணிக்க முடியவில்லை. டார்ச் விளக்கொளி இல்லை என்பது ஆசுவாசமாக இருந்தாலும் கவிந்திருந்த இரவு திகிலூட்டுவதாக இருந்தது. புதருக்குள் இரவுப்பூச்சிகள் கடிக்கத் தொடங்கியிருந்தன. 

பரதன், ‘போயிடலாம்ப்பா’ என்றான்.  

‘கொஞ்ச நேரம் பொறுத்துக்க தங்கம்’ - பழனி கெஞ்சலாகச் சொன்னான். பரதனுக்கு பொறுத்துக் கொள்ளும் வயதில்லை. ஆறு வயது கூட முழுமையாக பூர்த்தியடைந்திருக்கவில்லை. மதியத்துக்கு மேலாக எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அப்பனோடு சேர்ந்து மரணத்திடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அழ வேண்டும் போலிருந்தது. பழனி அவனை அழ விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். துரத்துபவர்களுக்கு அழுகைச் சப்தம் சமிக்ஞையாக மாறிவிடக் கூடும். 

பழனிக்கு இருள் பழக்கமானதுதான். எத்தனையோ முறை களவுக்குச் சென்றுவிட்டு இருளுக்குள் புதைந்து கிடந்திருக்கிறான். உடல் முழுக்கவும் எண்ணையை மட்டும் பூசியபடி பிடிக்க முயற்சிப்பவர்களிடமிருந்து வழுக்கி வந்து புதர்களுக்குள் படுத்துக் கிடந்ததுண்டு. இப்பொழுது பரதன் இருப்பதுதான் பாரமாக இருந்தது. அவனைச் சுமந்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறான். மெல்ல மெல்ல குரூரமாக மாறிக் கொண்டிருந்த ஊர் இப்பொழுது வெறியெடுத்துத் திரிகிறது. தனது குழந்தையையும் சேர்த்துக் கொன்றுவிடப் போவதாக முடிவெடுப்பார்கள் என்று பழனி நினைத்திருக்கவில்லை. அவனையாவது காப்பாற்றிவிட்டாலும் கூட போதும் என்பதுதான் நினைப்பாக இருந்தது.

ஒடிக் களைத்து ஒளிந்திருந்த போது தனது தினவெடுத்த உடலை கிழித்து வீசி விட வேண்டும் என பழனிக்குத் தோன்றியது. சித்ராவோடு தொடுப்பு வைத்திருக்கக் கூடாது என்கிற எண்ணம் நிலைமை கை மீறிப் போன பிறகு துளிர்ப்பதாக தனக்குத் தானே கசந்து கொண்டான்.

ஆரம்பத்திலிருந்தே அவளின் வனப்பு அவனை நோக்கி வலை வீசிக் கொண்டேயிருந்தது. சின்னசாமிக்கு வெளியூர் சோலி அதிகம். நெல் அறுப்பு இயந்திரம் வைத்திருந்தான். அவ்வப்போது அவன் போய்விடுவது சித்ராவுக்கும் பழனிக்கும் செளகரியமாகப் போய்விட்டது. கொள்ளிக்கட்டையைத் தண்ணீரில் அழுத்தினாலும் புகை காட்டிக் கொடுத்துவிடுவதைப் போல சித்ராவின் பூரிப்பு சின்னசாமிக்கு சந்தேகத்தைக் கிளறிக் கொண்டேயிருந்தது. அதிக நாட்கள் பிடிக்கவில்லை. ஊர் வாய் திறந்து கொண்டது.

புதருக்குள் பரதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ‘அம்மாகிட்ட போறேன்’ என்றான். பசியும் பயமும் இருளும் அவனை திகிலடையச் செய்திருந்தன. அம்மாவின் முகம் அவனுக்கு நினைவிலேயே இல்லை. அந்தச் சூழலில் தன்னுடைய அப்பாவிடம் என்ன கேட்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. பழனிக்கு சுதாவின் நினைப்பு மின்னலைப் போல வந்து போனது. பங்களாப்புதூர்காரர்கள் பழனியை நிர்வாணமாக்கி மின் கம்பத்தில் கட்டி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்ட போது பரதனைத் தூக்கி இடுப்பில் போட்டுக் கொண்டு சுதா வந்திருந்தாள்.

நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. செட்டியார் தோட்டத்து கிணற்றில் மோட்டாரைத் திருடிய போது பிடித்துவிட்டார்கள். தப்பிக்கவே முடியாமல் சிக்கியிருந்தான். சுதா வந்து சேர்ந்த போது பழனியின் முகம் கிழிந்து வீங்கியிருந்தது. ‘தேக்குக் கட்டை’ என்று அவள் வர்ணித்த உடல் அப்பொழுது ஊருக்கு காட்டப்பட்டிருந்தது. அழுது கதறினாள். யாரோ இரண்டு பேர் அவளது தலைமுடியைப் பிடித்தார்கள். அவளது இடுப்பில் இருந்த பரதன் வீறிட்டான். சில பெண்கள் உள்ளே வந்து அவளை அடிக்க வந்தவர்களைத் தடுத்தார்கள்.

‘அவன் திருடறது இந்தத் தேவடியாவுக்கு தெரியாமலா இருக்கும்?’ என்று ஒருவன் கேள்வி எழுப்பினான். சுதாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பைத்தியம் பிடித்தது போல அரற்றினாள். பழனி இரும்பு வேலைக்குச் செல்வதாகத்தான் தனக்குத் தெரியும் என்றாள். அவளுக்கு வாய் கசப்பேறிக் கொண்டிருந்தது. அவிழ்ந்து கிடந்த தனது கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டவள் ‘இவனும் வேண்டாம்...இவன் பையனும் வேண்டாம்’ என்று பரதனைக் கீழே விட்டுவிட்டுக் கிளம்பினாள். ஒற்றைக் கணத்தில் முடிவெடுத்துவிட்டாள். கூட்டத்திலிருந்து நெஞ்சழுத்தக்காரி என்று குரல் எழும்பியது. பழனியால் எதுவும் பேச இயலவில்லை. பரதன் அடித் தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தான். அடித்துச் சலித்தவர்கள் கயிற்றை அவிழ்த்துவிட்டுச் சென்றார்கள். ஒரு பெண்மணி கொடுத்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு குடிசைக்கு வந்து சேர்ந்தான். அதன் பிறகு தனது அம்மாவை இப்பொழுதுதான் பரதன் கேட்கிறான். சுதா தன்னைவிட்டு விலகாமல் இருந்திருக்க வேண்டும் என்று பழனிக்குத் தோன்றியது.

நெல் அறுப்பு முடிந்து அந்தியூரிலிருந்து திரும்பியிருந்த சின்னசாமிக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனது அமைதி சித்ராவுக்கு நடுக்கமூட்டுவதாக இருந்தது. இயல்பாக இருப்பது போல முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தாள். வீட்டை விட்டுத் தப்பித்து ஓடிவிட வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சின்னசாமி அதிக அவகாசம் கொடுக்கவில்லை. தென்னை மரத்துக்கு வைக்கும் மருந்தை எடுத்து வந்து வாழைப்பழத்தில் திணித்தான். அதை அவள் பார்க்கும் படியாகவேதான் செய்தான். முகத்தை கடுமையாக வைத்தபடி பழத்தை அவளுக்கு முன்பாக நீட்டி கண்களாலேயே தின்னச் சொல்லி சைகை காட்டினான். திடீரென உடைந்து நொறுங்கிய கண்ணாடிக் குடுவையாய் அவனது கால்களில் விழுந்து ‘என்னை உட்டுடுங்க’ என்று கதறினாள். அவன் ஓங்கி உதைத்ததில் சித்ராவின் வயிறு கலங்கியது. ஆனால் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. மீண்டும் சைகை காட்டினான். கையெடுத்துக் கும்பிட்டாள். தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை உருவினான். அவன் வீச்சுக்கு முன்னால் அவளுடைய எதிர்ப்பு சுருண்டது. அவளுக்கான அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டிருந்தது. வழியும் கண்ணீரோடு சேர்த்து வாழைப்பழத்தை விழுங்கினாள். கடைசி விழுங்கலின் போது அவனுடைய பரிதாபத்தைக் கோரியபடி பார்த்தாள். சின்னசாமி துளியும் சலனமின்றி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இழுத்துச் சென்று கிணற்று மேட்டில் வீசினான். 

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் எரித்து முடித்தார்கள்.

‘இதோட முடிஞ்சுதுன்னு நினைச்சுக்கக் கூடாது. அந்தத் தாயோளியை வெட்டோணும்...அப்போத்தான் நாய்களுக்கு புத்தி வரும்’ இடுகாட்டில் சின்னசாமி உறுமிய போது யாரும் எதுவும் பேசவில்லை.  ‘அவனுக்கு ஒரு பையன் இருக்கிறானப்பா’ என்று சின்னதுரை பேச்சை ஆரம்பித்த போதே ‘இருந்தா?’ என்று எகிறினான் சின்னசாமி. 

‘ரெண்டு பேரையும் வெட்டி காக்காய்க்கு வீசினாத்தான் ஊருக்குள்ள பயம் இருக்கும்’ என்று ஓர் இளவட்டம் உரக்கப் பேசிய பிறகு சின்னதுரையும் எதுவும் பேசவில்லை. தன்னால் இவர்களிடம் பேச முடியாது என்று அடங்கிக் கொண்டார். நெருப்பு அணைவதற்கு முன்பாகவே சின்னசாமியும் அவனோடு சேர்ந்து ஏழெட்டுப் பேருமாக கிளம்பினார்கள். பழனியைக் குடிசைக்குள் பூட்டி கொளுத்திவிடுவது என்றுதான் முடிவு செய்திருந்தார்கள். அவனது குடிசைக்கு அருகாமையில் வேறு குடிசைகள் இல்லை. ஏரிக்கரை புறம்போக்கு நிலம் அது. 

‘வெளிய தப்பிச்சு வந்தான்னா ஒரே வெட்டா வெட்டிப் போடலாம்’ என்று சின்னசாமி சொல்லியிருந்தான்.

பொழுது சாயத் தொடங்கியிருந்தது. கொக்குகள் கூட்டம் கூட்டமாக கூடு திரும்பிக் கொண்டிருந்தன. பழனி பரதனுடன் டீக்கடையில் அமர்ந்திருந்தான். ‘பன்னு வாங்கித் தர்றியாப்பா?’ என்று பரதன் கேட்ட போதுதான் அவர்கள் பழனிக்கு அருகாமையில் வந்து சேர்ந்திருந்தார்கள். டீக்கடைக்காரருக்கு என்னமோ விபரீதம் நடக்கப் போவது புரிந்தது. அவர் பழனிக்கு சாடை காட்டினார். சுதாரித்துக் கொண்ட பழனி பரதனைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். பரதனுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. ‘பயப்படாத சாமி..ஒண்ணும் ஆவாது’ என்று பழனி சொன்னதை பரதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதல் வெட்டு பழனியின் முதுகில் விழுந்தது. ஆழமான வெட்டு இல்லையென்றாலும் ரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தது. பரதன் அவனது தோள் மீது கிடந்ததால் தனது அப்பனின் முதுகைப் பார்க்க முடிந்தது. 

‘அப்பா...ரத்தம்’ என்றான். 

‘நீ கண்ணை மூடிக்க சாமி’ என்றான். பரதன் கண்களை இறுக்க மூடிக் கொண்டான். 

பழனியோடு போட்டி போட்டு அவர்களால் வரப்புகளுக்குள் ஓடி வர முடியவில்லை. இருள் கவிந்தது. புதருக்குள் ஒளிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்று தாழம்பூ புதருக்குள் ஓடினான். அந்தத் தாழம்பூ புதருக்குள் சித்ராவுடன் பல நாட்கள் கிடந்திருக்கிறான். வாய்க்காலுக்கு துணி துவைக்கச் செல்வதாக போக்குக் காட்டிவிட்டு அவள் வந்துவிடுவாள். அப்படியொரு இடம் புதருக்குள் இருப்பதை வெளியிலிருந்து பார்த்துக் கண்டுபிடிப்பது சிரமம். நிலத்தைச் சுத்தம் செய்து அதன் மீது வைக்கோலைப் போட்டு வைத்திருந்தார்கள். உடைகள் விலகிக் கிடந்த தருணமொன்றில் தாழம்பூவின் வாசம் தன்னைக் கிறங்கச் செய்வதாக அவள் சொன்னாள். ‘இந்த வாசத்துக்கு பாம்பு வரும் தெரியுமா?’ என்று முதன்முறையாக அவன் சொன்ன போது அவள் சிணுங்கினாள். வியர்வை மினுமினுத்துக் கிடந்த அவளது உடலைத் தாழம்பூவால் ஒற்றியெடுத்தான்.  ‘நீ என்னமோ பண்ணுற’ என்று அவள் கண்களை மூடிக் கிடந்தது பழனிக்கு ஞாபகம் வந்து போனது. அவளின் அந்தச் சொற்கள் அவனைக் கிளர்ந்த மிருகமாக்கியிருந்தது. காமத்துக்கு சாதியில்லை என்று சொல்லிச் சிரித்தான். 

தனது பழைய ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என்று தலையை ஒரு முறை வேகமாக ஆட்டினான். இந்த ஊரிலிருந்து தப்பித்துச் சென்று விட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். காமம் தன்னை இழுத்து வந்து வேட்டைக்காடு ஒன்றில் விட்டுவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. புதருக்கு வெளியில் வேட்டை மிருகங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. முதுகில் வலி கடுகடுத்துக் கொண்டிருந்தது. கையை வைத்துப் பார்த்தான். பிசுபிசுத்தது. பழனிக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் வெளியில் செல்வது சரியில்லை என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான். பரதன் உறங்கியிருந்தான். இருளில் பரதனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. கைகளால் விசிறிக் கொடுத்தான். எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை தான் வதைப்பதாகத் தோன்றியது. நள்ளிரவு தாண்டியதும் பரதனைத் தூக்கிக் கொண்டு ஓடி விட வேண்டும் என முடிவு செய்திருந்தான். சத்தியமங்கலத்துக்குச் சென்று அங்கேயிருந்து சாம்ராஜ்நகருக்குச் சென்றுவிடுவதென தீர்மானித்திருந்தான். 

சலனமேயில்லாமல் இரவு நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனையும் அடங்கிவிட்டதாக பழனி நினைத்த தருணத்தில் புதருக்குள் பெரும் கல் ஒன்று வந்து விழுந்தது. பழனிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மூன்று கற்கள் வந்து விழுந்தன. அவசர அவசரமாக பரதனை எழுப்பினான். அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேற முயற்சித்தான். ஏழெட்டு டார்ச் விளக்குகள் ஒளிர்ந்தன. 

‘ஒளிஞ்சிட்டா விட்ருவோமா?’ என்றான் சின்னசாமி. அதைக் கேட்ட தொனியில் வன்மம் கொப்புளித்தது. பழனி தப்பிக்க வழியில்லை என்று புரிந்தவனாய் நொறுங்கிப் போனான். 

‘என்னைக் கொன்னுடுங்க...ஆனா எம்பையனை விட்டுடுங்க’ என்றான்.

‘அவ கூட படுக்கறப்போ பையன் நெனப்பு வரலையா?’ என்று எகத்தாளமாகக் கேட்டான். பழனியால் எந்த பதிலையும் சொல்லவில்லை.

‘தப்புதான்...எனக்கு என்ன தண்டனை வேணும்ன்னாலும் கொடுங்க...இந்தப் பிஞ்சை விட்டுடுங்கய்யா’ - அவனது கதறல் பரிதாபமாக இருந்தது.

‘இன்னமும் என்ன பேச்சு’ என்றான் ஒருவன். அந்தக் குரல் அடங்குவதற்குள் பழனியின் பின்னந்தலையில் ஓங்கி ஒரு வெட்டு விழுந்தது. இரண்டு கைகளாலும் தனது தோள் மீது கிடந்த பரதனை இறுக்க அணைத்துக் கொண்டான். பரதனின் முகத்தைப் பார்க்க முயற்சித்தான். அவன் அப்பொழுதும் தூக்கத்திலேயே கிடந்தான்.