Jun 27, 2016

என்ன செய்யலாம்?

நேற்று எழுதிய பதிவுக்கு எதிர்பாராத எண்ணிக்கையிலான விசாரிப்புகள் வந்திருக்கின்றன. ஏற்கனவே இது குறித்து சில தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் தவறு எதுவுமில்லை. அதேசமயம் விசாரித்தவர்கள் ஆசைக்காகக் கேட்காமல் உண்மையிலேயே உதவுகிற எண்ணத்தில் மனப்பூர்வமாகக் கேட்டிருக்க வேண்டும் என்று கருப்பராயனை வேண்டிக் கொள்கிறேன்.

சில வழிமுறைகள்-

மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட விரும்பினால் ஒரு சிலர் இணைந்து குழுவாகவும் செயல்படலாம் அல்லது தனித்தனியாகவும் செயல்பட முடியும். இரண்டிலுமே நிறை குறைகள் இருக்கின்றன. குழுவாகச் செயல்படும் போது அர்பணிப்பு(Commitment)இருக்கும். குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் அவ்வப்போது சந்தித்துப் பேசும் போது இதுவரை என்ன செய்தோம் என்பதைச் சொல்வதற்காகவாவது உருப்படியாக வேலை செய்வோம். ஏதேனும் சந்தேகம் என்றால் குழுவின் சக உறுப்பினர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ‘வாழை’ அமைப்பினர் இப்படித்தான் செயல்படுகிறார்கள். ஒரு குழுவாகச் சென்று ஒரு கிராமத்தில் இருக்கும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தை ஒரு தன்னார்வலருக்கு ஒதுக்கப்படுகிறது. அடுத்த ஒரு வருடத்திற்கு அந்தக் குழந்தையை அந்தத் தன்னார்வலர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். மாதம் ஒரு முறை சந்திக்கிறார்கள். அவ்வப்பொழுது தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள். எப்பொழுதாவது கடிதம் கூட எழுதுகிறார்கள். இதே திட்டத்தை கல்லூரி அளவில் செயல்படுத்தலாம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் ஏழு அல்லது எட்டு கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

முடிந்தவரைக்கும் அரசுக் கல்லூரிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமப்புற கல்லூரிகள்தான் முதல் இலக்காக இருக்க வேண்டும் அல்லது கிராமப்புறங்களிலிருந்து வந்து நகர்ப்புற கல்லூரிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள். களமிறங்கிப் பார்த்தால்தான் தெரிகிறது- நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது.

‘என்னால இப்படி டைம் டேபிள் போட்டு வேலை செய்ய முடியாதுப்பா..எப்பொழுது முடியுமோ அப்பொழுது செய்கிறேன்’ என்று சொல்கிறவர்கள் குழுவோடு இணையாமல் தனியாகச் செயல்படுவதுதான் உசிதம். மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டால் சரி. ஒருவேளை அப்படியான மாணவர்கள் யாரும் தென்படவில்லையென்றால்  நமக்கு தோதான ஊரில் செயல்படும் கல்லூரிக்கு நேரடியாகச் செல்லலாம். எந்தக் கல்லூரி முதல்வரும் சந்திக்க முடியாது என்று தவிர்க்கமாட்டார்கள். அங்கே விருப்பத்தையும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் சொன்னால் ஒரு மாணவரை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஆரம்பகாலத்தில் ஒரேயொரு மாணவர் போதும். மாணவரின் படிப்பு, அந்தப் படிப்புக்கான எதிர்காலம் என்ன, வேலை வாய்ப்புகளுக்காக எவ்வாறு தயாரிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களைச் சொல்லிக் கொடுத்தால் போதும். இதுதான் அடிப்படையான உதவி. மேலதிகமாக எதை வேண்டுமானாலும் சொல்லித் தரலாம். நமக்கும் அந்த மாணவனுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அவர்கள் நம்மிடம் நெருங்குவார்கள். நாம் விறைப்பாக நின்றால் அவர்களும் விறைப்பாகத்தான் நிற்பார்கள். 

உள்ளூரிலும் அக்கம்பக்க நகரங்களிலும் வசிக்கிறவர்களுக்கு மேற்சொன்ன காரியம் செகளரியம். ஆனால் வெளிநாடுகளில் வாழ்கிறவர்களுக்கு இது அவ்வளவு சாத்தியமில்லை. என்னதான் இணையம், செல்போன் என்றாலும் மாணவர்கள் மனதுக்கு நெருக்கமாக தம்மை உணர்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அவரவரளவில் உதவ முடியும் என்றுதான் தோன்றுகிறது. 

நேற்று ஒரு கல்லூரியின் தாளாளரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 

பள்ளிகளில் விளையாட்டு வீரர்களாக இருக்கக் கூடிய மாணவர்கள் ஆரம்பத்தில் உற்சாகமாக இருப்பதாகவும் காலப் போக்கில் விட்டுவிட்டு வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் சொன்னார். என்ன காரணம் என்று கேட்டால் சரியான புரவலர் கிடைப்பதில்லை என்பதை முக்கியமான காரணமாகச் சொன்னார். எங்கேயாவது விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். போக்குவரத்துச் செலவு, ஷூ, பனியன் உள்ளிட்ட முக்கியமான செலவினங்களுக்குக் கூட அவர்களின் பெற்றவர்களிடம் போதுமான வருமானம் இருக்காது. மெது மெதுவாக விளையாட்டை விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரனுக்கு ஊட்டமிக்க உணவான முட்டை, பால், தானியங்கள், போக்குவரத்துச் செலவு, ஷூ உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால் அதிகபட்சமாக மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்குள்ளாகத்தான் வரும். இது அதிகபட்சக் கணக்கு. வருடத்திற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய். இப்படி ஒரு தொகையைக் கணக்கு செய்து கொண்டு சரியான மாணவர்களைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாணவனை அழைத்துப் பேசலாம். அவனது வளர்ச்சியைக் கண்காணிக்கலாம். ஒன்றில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்- வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்காக அந்த மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு நாமே வழிகோலிவிடக் கூடாது. எவ்வளவு தேவையோ அந்தத் தொகை மட்டும் கல்லூரி வழியாகக் கிடைக்கும்படி ஏற்பாடுகளைச் செய்துவிடுவது முக்கியம்.

மேலே எழுதியிருப்பது ஒரு வரைவுதான். ‘என்னால் எப்படி உதவ முடியும்?’ என்று கேட்டவர்களுக்காக எழுதியிருக்கிறேன். இந்த வரைவுகளை வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். ஏதாவதொரு வழிமுறை தோன்றும். இந்தக் கல்வியாண்டிலிருந்தே செயல்படுத்தத் தொடங்கலாம்.

முடிந்தவரை அவரவர் தமக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதைத்தான் வரவேற்கிறேன். ஆனால் தனியாகச் செயல்படுவது சாத்தியமில்லை என்று நம்புகிறவர்கள் என்னோடு சேர்ந்து கொள்ளலாம். எடுத்தவுடனேயே பிரம்மாண்டமான அளவில் இதைச் செயல்படுத்தப் போவதில்லை. Pilot mode தான். நான்கைந்து தன்னார்வலர்கள் மட்டுமே தேவை. 

முதல் மாணவியைத் தேர்ந்தெடுத்தாகிவிட்டது. சென்னையில் பொறியியல் படிக்கிறார். படிப்பது என்னவோ சென்னையில்தான். இன்னமும் கிராமத்தாளாகவே இருக்கிற மாணவி அவர். அவருக்கு வழிகாட்டியாகச் செயல்பட ஒரு பெண் வழிகாட்டி தேவை. பொறியியல் படித்தவராக இருந்தால் சரியாக இருக்கும். அவ்வப்பொழுது சந்தித்துப் பேசி அந்த மாணவியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். இரண்டு வருடங்களில் அந்த மாணவியை தம்மால் அடுத்த நிலைக்கு நகர்த்திவிட்டுவிட முடியும் என்று நம்புகிறவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். எல்லோருக்கும் இந்த முறை வாய்ப்பளிப்பது சாத்தியமில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டு தொடர்பு கொள்ளவும். இடையிடையே மாணவர்களைக் கண்டறியும் போது தன்னார்வலர்கள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அனுபவத்திலிருந்து மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி முறைகளைக் கண்டறிந்து வழிகாட்டிகளாகச் செயல்படுகிறவர்களுக்கான சிறப்பு பயிற்சி பயிலரங்குகளை நடத்தலாம். எவ்வளவோ இருக்கிறது.

பெரிய காரியம்தான். பணத்தை நன்கொடையாளர்களிடமிருந்து வாங்கி கல்வி உதவித் தொகை என்று கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நிசப்தம் அறக்கட்டளையின் அடுத்த கட்டச் செயல்பாடாக இதுதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வருடத்திற்கு பத்து கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டலைச் செய்தால் கூட போதும். அவர்கள் மேலே வரட்டும். தங்களுக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும். அதன் விளைவு மிகப்பெரியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நம் சமூகத்திற்கு நம்மால் நிறையச் செய்ய முடியும். தயங்கிக் கொண்டேயிருந்தால் எதுவுமே நடக்காது. துணிந்து இறங்கிவிட வேண்டும். மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

8 எதிர் சப்தங்கள்:

Santhosh said...

வாழைங்கிற அமைப்பு இது மாதிரி செய்றாங்க.. பெங்களூர், சென்னைன்னு அவங்க இயங்குறாங்க.. அவங்களக் அணுகலாம்..

Vaa.Manikandan said...

கட்டுரையின் இரண்டாவது பத்தியில் வாழை பற்றி எழுதியிருக்கிறேன். அவர்கள் செய்வது பள்ளி மாணவர்களுக்கு. நம்முடைய முயற்சி கல்லூரி மாணவர்களுக்கானது.

சேக்காளி said...

வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான முயற்சி! நானும் என்னுடைய பழைய மாணவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்!

Muralidharan said...

இங்கு நாம் பள்ளி மாணவர்கள் குறிப்பாக பத்து மற்றும் பன்னிரெண்டாவது மாணவர்களை வழி நடத்த வேண்டும். இப்பொழுது உள்ள மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் சரியான வழி முறைகள் தெரிவதில்லை.

பன்னிரெண்டாவது முடித்த பின்னர் என்ன கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்று தெரிவதில்லை.

சூர்யா said...

எனக்கு தெரிந்த ஒரு மாணவன் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்து வந்தவன் ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் முடித்து 1.5 வருடங்கள் ஆகின்றன, கொஞ்சநாள் சென்னையில் தங்கி வேலை தேடிவிட்டு கிடைக்கவில்லை என்று வீட்டிற்கு வந்து விட்டான். எனக்கு தெரிந்து அவன் பெற்றோர் அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் தினமும் அவனுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கின்றனர் (அவரை போய் பாரு, இவரை போய் பாரு, சும்மா இருக்குற நேரம் ஏதாவது சின்ன வேலைக்கு போலாம்ல, உன்கூட படிச்ச பையன் பாரு இப்போ எவ்ளோ சம்பளம் வாங்கறான், அந்த மாமாட்ட கேட்டேன் அவரு அப்படி பண்ண சொன்னாரு) இப்படி தினம் தினம்ஏதோ ஒன்று.

ஆரம்பத்தில் JAVA-ல உங்க பிரண்ட்ஸ் யாராவது கம்பெனில வேலை இருந்தா சொல்லுங்கண்ணா என்று சொன்னவன், சென்றமுறை சந்தித்தபொழுது எந்த வேலையா இருந்தாலும் செய்றேன் சொல்லுங்கண்ணா, வாழ்க்கையே வெறுத்திடுச்சுங்கண்ணா என்கிறான். எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் வந்து விட்டேன். தெரிந்த இடங்களில் எல்லாம் முயற்சி செய்கிறேன் என்னாலும் முடியவில்லை. என்ன ஆலோசனை சொல்லலாம் என்றும் புரியவில்லை.

Jayanthi Ponnusamy , Canada said...

Proud of you. All the best in your new endeavour.

Vinoth Subramanian said...

Good move.