சாதா தோசையே ஐம்பது ரூபாயைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அப்புறம் எப்படி மசால் தோசை 38 ரூபாய்க்கு? எல்லாம் அப்படித்தான். இதுதான் அடுத்த புத்தகத்திற்கான தலைப்பு. முதலில் வேறொரு தலைப்புதான் ஐடியாவில் இருந்தது. நிறைய பேர் ‘இது சரியில்லை’ என்றார்கள். சரி அடுத்து என்ன வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தோன்றிய தலைப்புதான் இது.
உள்ளடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அட்டையும் தலைப்பும் ஏதாவதொரு விதத்தில் ஈர்க்க வேண்டும் அல்லவா? ஒவ்வொரு கண்காட்சியிலும் புத்தகங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கோடிக்கணக்கான புத்தகங்கள். லட்சக்கணக்கான தலைப்புகள். பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள். இந்தப் பெருங்கூட்டத்தில் நம் தலை துளியாவது வெளியே எட்டிப்பார்க்க வேண்டும் அல்லவா? எட்டிப்பார்ப்பதற்கான முதல் முயற்சி இந்தத் தலைப்பு.
அப்படியே நம் தலை வெளியில் எட்டிப்பார்த்தால் மட்டும் வாங்கிவிடுவார்களா? ம்க்கும். வாய்ப்பே இல்லை. வாங்குகிறவர்கள்தான் வாங்குவார்கள். எழுத்தாளரின் பெயரைத் தெரிந்து புத்தகம் வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம். என்னதான் தலைப்பு ஈர்ப்பாக இருந்தாலும் எழுதியவர் யாரென்று தெரியவில்லை என்றால் புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு கீழே வைத்துவிடுவார்கள். தலைப்புக்கு இவ்வளவுதான் முக்கியத்துவம் என்ற பிறகு எதற்காக தலைப்புக்காக மண்டை காய வேண்டும்? இதேதான் என் கேள்வியும். சீரியஸாக இல்லாமல் மிக எளிமையான தலைப்பாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லவா? தேர்ந்தெடுத்தாகிவிட்டது.
மசால் தோசை 38 ரூபாய்.
புத்தகத்திற்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது அடக்கமான தலைப்பாக இருக்க வேண்டும் என தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் நினைப்பார்கள். சினிமா தலைப்பு மாதிரியெல்லாம் இருக்கக் கூடாது என்பார்கள். அதுமட்டும் இல்லாமல் புத்தகத்திற்கான விளம்பரம் கூட தேவையில்லை என்றும் சொல்வார்கள். ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இருக்க வேண்டியதில்லை. நாம் என்ன சூப்பர் ஸ்டாரா? நம் புத்தகத்தைக் கொண்டு வந்து காட்சிக்கு வைத்தவுடன் அள்ளியெடுத்துச் செல்வார்கள் என்பதற்கு. நம் பொருளை நாம்தான் விளம்பரப்படுத்த வேண்டும். எழுதுகிறோம். புத்தகமாக்குகிறோம். அதை செலவு செய்து ஒருவர் பதிப்பிக்கிறார். அவர் எதற்காக நட்டம் அடைய வேண்டும்? ஆயிரம் பிரதிகளை அச்சடித்து நூறு பிரதிகளை இலவசமாகக் கொடுத்துவிட்டு மிச்சமிருக்கும் தொள்ளாயிரம் பிரதிகளை பரணில் அடுக்கி கரையான் அரிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்பது எழுத்தாளனுக்கும் பதிப்பாளனுக்குமான தலையெழுத்தா என்ன?
அசிங்கமான அக்கப்போர்களில் இறங்காமல் ஓரளவுக்கு ஈர்ப்பான தலைப்பாகத் தேர்ந்தெடுத்து அதை விளம்பரப்படுத்துவதில் தவறே இல்லை. விளம்பரப்படுத்துகிறோம். வாங்குகிறவர்கள் வாங்கட்டும். அதைக் கூடச் செய்யாமல் ‘எழுதுவது மட்டும்தான் என் வேலை’ என்று இருப்பதாக இருந்தால் புத்தகமாகவே கொண்டு வரக் கூடாது. ‘முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்து புத்தகத்தை கொண்டு வந்துவிட்டேன். ஆனால் எழுத்தாளர் இது பற்றி எதுவுமே எழுதவில்லை’ என்று புலம்பும் பதிப்பாளர்களிடம் பேசியிருக்கிறேன். ‘கடை எண் 320ல் என் புத்தகம் XYZ கிடைக்கும். விருப்பமிருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்’ என்று ஸ்டேட்டஸ் போட்டு கெத்துக் காட்டும் எழுத்தாளர்களையும் தெரியும். இப்படியெல்லாம் செய்தால் பத்து புத்தகம் கூட நகராது. கடைசியில் பதிப்பாளர்தான் பாவம்.
என்னால் இப்படி இருக்க முடியாது. நேற்று பெய்த மழையில் முளை விட்டிருக்கிறேன். தம் கட்டி மேலே வந்துவிட வேண்டும். புத்தகத்தின் விற்பனை பதிப்பாளருக்கு உற்சாகத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் பத்து பைசா கூட நட்டமடையக் கூடாது என நினைக்கிறேன். கொஞ்சமாவது புத்தகம் பற்றிய பேச்சை உருவாக்கித்தான் தீர வேண்டும். ஆனால் தலைப்பு, விளம்பரத்தையெல்லாம் பார்த்துவிட்டு Populism என்பார்கள். சொல்லிவிட்டு போகட்டும். பேசுகிறவர்கள் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.
என்னதான் யோசித்து வைத்தாலும் பெயரைப் பொறுத்த வரையில் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. அது புத்தகத்துக்காக இருந்தாலும் சரி; மனிதனுக்காக இருந்தாலும் சரி. மணிகண்டன் என்ற பெயரை வைத்த போது ‘என்ன மணி மணின்னு....நாயைக் கூப்பிடற மாதிரி’ என்றார்களாம். இன்றைக்கு இந்த உலகத்தில் பிற எல்லாவற்றையும் விட இந்தப் பெயரைத்தான் நேசிக்கிறேன். சென்ற முறை லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற போது ‘இது என்ன தலைப்பு?’ என்றார்கள். ஆனால் டிசம்பருக்குள் நிறையப்பேருக்கு பிடித்திருந்தது. நிறையப்பேர் என்றால் ஒரு கோடி பேர் எல்லாம் இல்லை. எந்நூற்று சொச்சம் பேர். ஒரு மாதிரியாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த மசால் தோசைக்கும் கூட அப்படித்தான். பத்து பெண்களில் எட்டு பெண்களுக்கு பிடிக்கவில்லை. பெண்களுக்கு மசால் தோசை பிடிக்காது போலிருக்கிறது. ஆண்களில் நிறையப்பேருக்கு பிடித்திருந்தது. மசால் தோசை கட்சியினர்.
மொத்தம் ஐம்பது கட்டுரைகளை ஏழெட்டு பேருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு வகையறா. ஒருவர் ட்விட்டரில் மட்டும்தான் இருப்பார். இன்னொருவர் ஃபேஸ்புக்கில் மட்டும். இன்னொருவர் வலைப்பதிவில் மட்டும். இன்னொருவர் இணையத்திற்கே வராத ஆள். இப்படியானவர்கள். இவர்கள் அனுப்பும் பட்டியலில் இருந்து இருபத்தைந்து கட்டுரைகளைச் முடிவு செய்து நூறு அல்லது நூற்றியிருபது பக்கங்களில் ஒரு தொகுப்பு. விலை நூறு ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என பதிப்பாளரிடம் கோரியிருக்கிறேன்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் வேலை முடிந்துவிடும்.
இனி இந்தத் தலைப்புக்கான அட்டையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் கொஞ்சம் சிரமம். வெறும் தோசையைக் காட்டினால் ‘சமையல் புத்தகம்’ மாதிரியான பாவனை வந்துவிடும். தேட வேண்டும். தேடிவிடலாம்.
ஆனால் பாருங்கள்- வருடத்திற்கு நான்கைந்து புத்தகங்கள் எழுதுபவர்கள் கூட அமைதியாக இருப்பார்கள். இப்படி ஒரேயொரு புத்தகம் வெளியிடும் ஆசாமிகள் இருக்கிறார்களே...என்னவோ உலகத்தரம் வாய்ந்த புத்தகத்தை எழுதி நோபலுக்கு அனுப்புகிற ரேஞ்சில் அலப்பறையை நிகழ்த்துவார்கள்- வேறு யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டாம். என்னைத்தான் சொல்கிறேன்.
22 எதிர் சப்தங்கள்:
//சாதா தோசையே ஐம்பது ரூபாயைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அப்புறம் எப்படி மசால் தோசை 38 ரூபாய்க்கு? எல்லாம் அப்படித்தான்.//
Naan kooda unga office cafetriala dosai kadai arambichu peru-muthalali aka mudivu panni agreement sign panniteengaloooo nenaichaen :)
Manikandan..I am waiting..
உங்கள் தோசை மொருமொருவென்று வர
வாழ்த்துக்கள் மணி.
Congrats :)
முதலில் வாழ்த்துக்கள்.
புத்தகத் தலைப்பு (பெயரே) நன்றாக வித்தியாசமாக இருக்கிறது.
All the best sir
All the best
தோசையைச் டேஸ்ட் பண்ணிட்டு தான் சுவை பற்றி சொல்ல முடியும்!!!
Mani,
Page Layout Idea... Saravana bavan menu card with the caption Adi discount ... :-)
-Sam
Congrats
சொல்லலாமா என்று தெரியவில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன். சென்ற முறை லிண்ட்சே லோஹன் புத்தகம் ஆன்லைனில் புக் செய்தேன். சில பல follow up கள் செய்தும் புத்தகம் கைக்கு வந்து சேரவில்லை. இது சம்பந்தமாக உங்களுக்கு மெயில் அனுப்பினேன். நீங்கள் அதை வேடியப்பனுக்கு அனுப்பினீர்கள். அவர் கொரியர் கம்பனியின் ட்ராகிங் லிங்க் அனுப்பியதோடு சரி. (ஆனால் அது மற்றொரு நண்பருக்கு அனுப்பிய கொரியர்). புத்தகம் இன்னும் வந்த பாடு இல்லை. இப்போது லிண்ட்சே, மாரியப்பனைக் காட்டிலும் என் கனவில் தான் அதிகம் வருகிறாள்.
நல்ல யோசனைதான். ஆனால் சரவண பவனுக்கு விளம்பரம்?!!
இந்த மாதிரியான புகார்கள் சில வந்தன. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த முறை இத்தகைய பிரச்சினைகள் வராமல் இருக்க முயற்சி செய்கிறேன். உங்களின் இந்திய முகவரியை மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். என்னிடம் இருக்கும் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
என்ன இது? ஏற்கெனவே இரு பின்னூட்டம் இட்டும் இங்கு வரவில்லை! ஏதோ காத்து கருப்பு இங்க இருக்கும் போல...!
எப்படியோ... புத்தகத்தில் கட்டா;யம் “மசாலா” இருப்பது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள். வளர்க.
அட .. நீங்களாவது சொந்தமா புத்தகம் எழுதி அதைப் பற்றிப் பதிவு போடூறீங்க. இன்னொரு ஆளு... ஒரு புத்தகத்தை மொழி மாற்றம் செய்து விட்டு அது பற்றி நாலஞ்சி பதிவு போட்டுட்டாரு... //வேறு யாரையும் திரும்பிப் பார்க்க வேண்டாம். என்னைத்தான் சொல்கிறேன்.// .!
மசால் தோசையின் சுவையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றேன்!
மசால் நல்லா காரமா போடுங்க மணி ! வாழ்த்துகள்!
எனது முகவரியை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.
Just compare with this post and the status which you put about rajini kochadiayan release and twitter account opening.Looks like contradictory.Judge yourself.
- Krishnappan
வாழ்த்துகள்
ரஜினி கோச்சடையான் ப்ரோமோஷனுக்காக மட்டுமே ட்விட்டர் கணக்குத் தொடங்கினார். அதை விமர்சித்திருந்தேன். இந்த மசால் தோசை புத்தகத்துக்காக மட்டுமே இந்த வலைப்பதிவை நான் தொடங்கியிருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வேன். இந்தப்புத்தகம் விற்றாலும் விற்கவில்லையென்றாலும் எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறேன். இதில் எதை ஜட்ஜ் செய்யச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
மசாலா நெறய இருக்கட்டும்.ரெடியா இருக்கிறோம்
Post a Comment