Jun 17, 2023

அப்படியே..அதன் போக்கில்

சென்னையில் இருக்கிறேன். 

ஏன் எழுதவில்லை என்றால் வேலை அந்த மாதிரி அமைந்துவிட்டது. சரி, அமைதியாக இருப்போம் என்று எழுதவில்லை.


தொடர்ச்சியாக எழுதுவது என்பது உண்மையிலேயே ஒரு தவம். எல்லாவற்றையும் மனத்தடை இல்லாமல் கொட்டிவிட ஒரு சுதந்திரமான மனநிலை அமைந்திருக்க வேண்டும். அஜெண்டா எதுவுமில்லாமல் நாம் பார்க்கும் மனிதர்கள், பேசியது, ரசித்தது, வாசித்தது என எல்லாவற்றையும் எழுதுவது உண்மையிலேயே சந்தோஷமானதுதான். பெங்களூரில் இருக்கும் வரை அப்படித்தான் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. 


காலையில் பைக் எடுத்தால் அலுவலகம் செல்வதற்குள் ஒரு சம்பவமோ, கதையோ கிடைத்துவிடும். அப்படியே காலையில் கிடைக்கவில்லை என்றாலும் கூட வீடு திரும்புவதற்குள் கிடைத்துவிடும். கபகபகபவென்று எழுதிவிட்டு படிக்கும் போது ஏதோ பெரிய ஆசுவாசம் கிடைக்கும். மனமும் இளகிக் கிடக்கும். 


கடந்த சில வருடங்களில், சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட பிறகு  அனைவருமே அரசியல்வயமாகிவிட்டோமோ என்கிற எண்ணம் இருக்கிறது. அரசியல் நிலைப்பாடுகள் தாண்டி மனிதர்களை நேசிப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் எழுதினாலும் அதில் ஒரு வரி அல்லது சொல்லைக் கொண்டு விமர்சனம் செய்ய ஆட்கள் உண்டு. எதுக்கு வம்பு என்று அமைதியாகிவிடுவது உத்தமம். 


யாவரும் பதிப்பாளர் ஜீவகரிகாலன் நாவல் எழுதச் சொன்னார். கடந்த ஆண்டு எம்..பி.வைஷ்ணவா கல்லூரியில் பாடத்திட்டத்தில் மூன்றாம் நதி நாவலை வைப்பதாகச் சொல்லி தகவல் அனுப்பியிருந்தார்கள். இந்த ஆண்டும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. சிலர் எப்பொழுதாவதுஏன் எழுதவில்லைஎன்று கேட்கும் போதெல்லாம் எழுதிவிடலாம் என்றுதான் தோன்றும். கரிகாலனுடன் பேசிய பிறகு ஒரு நாவல் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.


நிசப்தம்.காம் என்ற டொமைன் காலாவதியாகிவிட்டது. ஒரு உந்துதலில் வாமணிகண்டன்.காம் என்ற டொமைன் பதிவு செய்துவிட்டேன்.


அரசியல் கலக்காமல், புத்தகங்கள், மனிதர்கள் பற்றி மட்டுமே எழுதலாம்தான். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று உண்மையிலேயே தெரியவில்லை.


கி..திலீபன் என்ற இளைஞரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்கள் ஊர்ப்பக்கம்தான். தூக்கநாய்க்கன்பாளையம். சில நாட்கள் எங்கேயாவது வேலையில் இருக்கிறார். பிறகு வடமாநிலங்களிலோ அல்லது வடகிழக்கு மாநிலங்களிலோ சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு குட்டி லாட்ஜில் அறை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை முறை, உணவு என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார். தெரியாதவர்கள் ஃபேஸ்புக்கில் தேடிப் பார்க்கலாம். இதையெல்லாம் பார்த்தால் வாழ்ந்தால் திலீபன் மாதிரி வாழ வேண்டும் என நினைத்துக் கொள்வேன்.


இன்னொருவரைப் பார்த்து ஆசைப்படுவதும் தவறுதான். 


சில நாட்களுக்கு முன்பாக ஒரு ஆட்டோக்காரர் சண்டைக்கு வந்தார். ‘ஒரு நாளைக்கு எத்தனை பேரைப் பார்க்கிறோம் தெரியுமா? இந்த வெயில்ல, இந்த ட்ராபிக்ல வண்டி ஓட்டிப் பாருங்க தெரியும்….இவன் குறுக்க வருவானா, அவன் ப்ரேக் போடுவானான்னு கணிச்சு கணிச்சே ப்ரஷர் ஏறுதுஎன்றார்.


சரியா போச்சு என நினைத்துக் கொண்டேன். அவரவருக்கு அவரவர் பிரச்சனை. 


எதையுமே பெரிதாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டியதில்லை. வாழ்க்கை அதுபாட்டுக்கு ஓடட்டும்.

2 எதிர் சப்தங்கள்: