Jun 18, 2020

படிப்பு கெட்டுப் போகாதா?

பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமா? நடத்தப்படக் கூடாதா என்றொரு கேள்வியை ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தேன். 404 பேரில் 335 பேர் நடத்தக் கூடாது எனவும் 67 பேர் நடத்த வேண்டும் என சொல்லியிருந்தார்கள். அதே சமயத்தில் திருமதி.கோகிலா ஒரு நீண்ட மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார். பத்தாம் வகுப்பு மாணவியின் தாயார். உரையாடலுக்காக முழுமையான மின்னஞ்சல்...


                                                                          ***

கொரானா மாதிரியான பெருந்தொற்றுக் காலம் மட்டுமல்ல, வளர் இளம் பருவக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கும், அந்த குழந்தைகளுக்குமே கூட அந்த பருவம் முழுவதும் ஒரு நெருக்கடியான அழுத்தம் மிகுந்த காலகட்டம்தான். இந்த நோய்தொற்று இருமடங்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கிறது என்றால் அரசாங்கமோ அளவிட முடியாத அழுத்தத்தை எங்கள் மீது செலுத்துகிறது. பத்தாம் வகுப்பு ரத்து என்ற முடிவை எடுப்பதற்குள் மாற்றி மாற்றி குழப்பம் ஏற்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு பதற்றத்திலேயே வைத்திருந்தார்கள். இப்போதும் மதிப்பெண் கணக்கிடுதல், ஆன்லைன் வகுப்புகள் என்று தொடர்ந்து ஏதாவது அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.  


தேர்வு எழுதாமலே ‘ஆல் பாஸ்’ ஆகி விட்ட அதிர்ஷ்டக்கார மாணவர்கள் என்பது மாதிரி வேடிக்கையான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனாலும் கூட இந்த வருடம் பத்தாம் வகுப்பை எதிர்கொண்ட மாணவர்கள் அப்படி ஒன்றும் அதிர்ஷ்டக்காரர்கள் இல்லை. ‘நீட்’ தேர்வுக்கு தயாராகும் வகையில் இருக்கவேண்டும் என புதிய, கடினமான பாடத்திட்டம் இந்த வருடம்தான் அறிமுகப்படுத்தப் பட்டது. போதுமான பயிற்சி இல்லாமல்தான் ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கினார்கள். மொழிப்பாடம் 2 தாள்கள் என்றார்கள். பிறகு அதையும் மாற்றினார்கள். 2 தாள்களாக எழுதுவதற்கு தயார் படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக் கல்வி ஆண்டில் இருந்து அதே அளவு பாடத்தை ஒரே தாளாக எழுதத் தயார் செய்தார்கள்.


‘கடினமானதுதான் தரமானது’ என்பது, என்ன மாதிரியான சிந்தனை என தெரியவில்லை. பல தீவிர இலக்கிய வாசகர்களே படித்து முடிக்காத ப.சிங்காரம் ஐயாவின் நாவல்கள் எல்லாம் பத்தாம் வகுப்பு பாடத்தில் இருந்தது. வழமையான ப்ளூப்ரிண்ட் முறையின்றி புதிய முறையில் புத்தகத்தில் இல்லாத கேள்விகள் வரும் என்றார்கள். கொரானா தாக்கத்தால் எல்லா மாணவர்களும் தேர்வு ரத்தாகி விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தேர்வு கட்டாயம் நடக்கும் என்ற அரசின் அறிவிப்பால் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். 


குறைந்தபட்சம் நோய்த்தொற்று பயம் நீங்கிய பிறகு சில நாட்கள் பாடங்களை திரும்பப் படிக்க நேரம் கொடுத்து தேர்வு நடத்துவோம் என அறிவித்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருக்கும். பலமுறை தேர்வு தேதிகளை அறிவித்து பின் மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.  திடீரென தேர்வு வைத்தால் என்ன செய்வது என தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் இருந்தார்கள். பல பள்ளிகளும் தொடர்ந்து மாதிரித் தேர்வுகளை நடத்திக்கொண்டே இருந்தது. என் மகள் இந்த கொரானா விடுமுறையில் 4 முறை மாதிரித் தேர்வுகளை எழுதினாள். 4x5 பாடங்கள் என மொத்தம் 20 தேர்வுகள். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு படிக்க வேண்டிய டென்ஷன் என்றால், ஸ்மார்ட் போன் இல்லை இன்டர்நெட் இல்லை என தேர்வு எழுத முடியாத மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் பட்ட கவலை அதைவிட அதிகம். தேர்வு நடத்தியே தீர்வோம் என அரசு நீதிமன்றத்தில் அடம் பிடித்துக்கொண்டிருந்தேபாது என் மகள் தேர்வு எழுத வேண்டிய பள்ளி இருந்த தெருவை தடுப்பு வைத்து குவாரண்டைன் செய்துகொண்டிருந்தார்கள். நல்லவேளையாக தேர்வை ரத்து செய்தார்கள். பத்து லட்சம் மாணவர்களில் சயின்ஸ், மேத்ஸ் குரூப் எடுக்க விரும்பும், அதுவும் 10வது படித்த அதே பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளியில் சேர விரும்பும் மிகச்சிறு எண்ணிக்கையிலான மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுமானால் வருந்தலாம். நானும், நான் பேசிய பெற்றோர்கள் யாரும் அப்படி கொதிக்கவில்லை.


என் மகள் நன்கு படிக்கக் கூடிய, 90-க்கு மேல் மதிப்பெண் எடுக்க கூடிய மாணவி. தமிழகச் சூழுலில் அதுவே ஒரு பிரச்சனைதான். ஏனெனில் பள்ளி நிர்வாகம் இத்தகைய மாணவர்களை தேர்ந்தெடுத்து 10-15 பேர்களை மட்டும் தனிக் குழுவாக செச்ஷன்பிரித்துதான் பாடமே நடத்துவார்கள். எல்லா விதமான மாணவர்களுடனும் நட்பாக இருக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டு அவளைப் போலவே அதிகம் படிக்கும் நபர்களுடன் மட்டும் தான் அவள் பழகும் நிலை வாய்க்கிறது. நாங்கள் அப்படி ஒன்றும் படி படி என்று சொல்லும் பெற்றோர்கள் அல்ல. மருத்துவம் பொறியியல் என்று எந்த கனவையும் நாங்கள் திணிக்கவில்லை. ஏதோ ஒரு டிகிரி படிப்பேன் என்பதைத் தவிர அவளுக்கும் இப்போது வரை எந்த பெரிய கனவும் இல்லை. அவள் படிப்பதும் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு சுமாரான பள்ளியில்தான். இந்தி படிக்கத் தேவையில்லை சிபிஎஸ்சி தேவையில்லை என்று தெளிவாக முடிவெடுத்தே சமச்சீர் கல்வி முறையில் சேர்த்தேன். சாதாரண டிவி மட்டுமின்றி அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் என எல்லாம் இருக்கிறது. 16+ ரேட்டிங் உள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கிறாள். அது போதாது என்று பொன்னியின் செல்வன், வேள்பாரி, தாய், ஹாரிபாட்டர், ஹங்கர் கேம்ஸ் என்று படித்துத் தள்ளுகிறாள். இவ்வளவுக்குப் பிறகும், பொதுவான மாணவர்களுடன் படிக்கும் போது அவள் எடுத்த முதலிரண்டு இடங்களிலேயே தொடர்ந்து இருப்பதற்காக அவள் அதிகம் உழைக்கிறாள்.  


அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து தானாகவே எழுந்து படிக்கும் மகளுக்கு பிளாஸ்கில் காபி போட்டு வைப்பது என்ற அளவிலாவது ஒத்துழைப்பை வழங்கித்தானே ஆகவேண்டும்? இரண்டிலிருந்து மூன்றாவது இடத்திற்கு மதிப்பெண் குறைந்து விட்டால் பரவால்ல அடுத்த முறை அதிகம் முயற்சி செய்து நிறைய மதிப்பெண் வாங்கு என்று நான் உற்சாகப்படுத்த வேண்டுமா அல்லது போதும் போதும் இதுவே அதிகம் என்று அவளது ஆர்வத்தை குறைக்கும் படி பேசவேண்டுமா? அவள் இப்போது 95க்கு கீழ் மதிப்பெண் எடுத்தால் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என சித்திக்கும் அளவுக்கு நானே பழகிவிட்டேன்.  


இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது ஏன் அதிமுக்கியமான தேர்வாக கட்டமைக்கப்பட்டது என்று புரியவில்லை.  இந்த வயதில் ஆண் பெண் இரு பாலரும் பருவ மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள், மாவிடாய் காலம் தொடங்கும் அல்லது தொடங்கிய மாதவிடாய் சரியான கால இடைவெளியில் வரும் ஒழுங்கு முறையை அடையாத வயது இது. ஹார்மோன் மாற்றங்களால் வரும் மன உளைச்சல், தொடர்ந்து தன்னுடைய செல்ப் எஸ்டீமை சந்தேகப்படும் இந்த வயதில் மொத்தமாகவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதை ரத்து செய்யலாம்.  அடிப்படை நிலையிலான அரசுப் பணிக்கு, 11ம் வகுப்பில் என்ன குரூப் எடுப்பது என்பதை முடிவு செய்ய என்ற  இரண்டு காரணங்களுக்காக இந்த தேர்வு முக்கியம் என்கிறார்கள். பத்தாம் வகுப்பு பாஸ் செய்தால் போதும் மேற்கொண்டு படிக்க குடும்பச் சூழ்நிலை அனுமதிக்காது என்கிற நிலையில் இருப்பவர்களே அடிப்படை நிலை அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கப் போகிறார்கள். இப்பணியில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர் என்பதே போதும். யாரும் எவ்வளவு மதிப்பெண் என பார்ப்பதில்லை. தேர்வு எழுதுகிறவர்களில் 95 சதவிகிதம் பேர் தேர்ச்சியடையும் நிலையில் குரூப் செலக்ஷன் எனும் ஒற்றை விஷயத்திற்காகவே இந்த தேர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமா? 


படிப்பு தடைபடுவதால் கொதிக்கும் பெற்றோர் என்று ஒரு கட்டுரை பார்த்தேன். இப்பொழுது ஆன்லைன் வகுப்பு பற்றிய விவாதமும் ஆரம்பமாகியிருக்கிறது.  நிஜமாகவே பெற்றோர்கள் இந்த நோய்த்தொற்று உள்ள நிச்சயமற்ற நிலையிலும் சில மாதங்கள் கூட என் குழந்தையின் படிப்பு வீணாகக்கூடாது என்று கருதி ஆன்லைனிலாவது படித்து அமெரிக்கா போக வேண்டும் என்ற ஆசையுடன் செய்தியாளர்களுக்கும், கல்வித்துறைக்கும் மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்களா? அல்லது மீடியா சும்மாவே ஏதாவது பிரச்சனைகளை கிளப்பிவிடுகிறதா? 


ஒருவேளை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தினால் ஃபீஸ் கேட்கலாம் என இத்தகைய செய்திகளை பரப்புகிறார்களா? இன்டர்நெட் வசதியில்லாத குழந்தைகள் என்ன செய்வார்கள்? இந்த சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் மாணவர்களின் மீது செலுத்தப்படும் அப்பட்டமான வன்முறை. நிலைமை பல காலம் இப்படியே நீடிக்கும், வருங்காலத்தில் அனைவரும் ஆன்லைனில்தான் படிக்கவேண்டும் என்றால் கூட எல்லா மாணவர்களும் ஆன்லைன் கல்வி சென்று சேரும்படியான நிர்வாக கட்டமைப்பை அரசு உறுதிசெய்யும் வரை சமத்துவமில்லாத இத்தகைய விஷயங்களை அரசு தடுத்து நிறுத்தத்தான் வேண்டும்.  


மலைவாழ் மாணவர்களுக்காக பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி, அரசு ஹாஸ்டல்கள் மூடப்பட்டதால் அவருடைய மாணவர்கள் போதிய உணவும், கழிவறை, மாதவிடாய் கால நாப்கின்கள் இன்றி அவதிப்படுவதாக தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டிருந்தார். நோய்த்தொற்று அச்சம் முடியும் வரை கல்வி தொடர்பான எந்த செயல்பாடுகளும் தேவையில்லை என அறிவித்துவிட்டு பள்ளிக்கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் இத்தகைய குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் செலுத்தலாம்.  


பள்ளிக்கல்வித்துறை, மத்திய மாநில அரசுகள், ஊடகம், தனியார் பள்ளிகள், சமூகம், பெற்றோர்கள், மாணவர்கள். இவர்களில் யார் யாரை  ‘இன்ஃபுளுயன்ஸ்’ செய்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே விளங்கிக் கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. 


டிவி கனெக்சனை கட் செய்து குழந்தையை படிக்க கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? என் மகள் வகுப்பில் படிக்கும் தோழி ஒருத்தி 95 மார்க் எடுத்தாலும் அப்பா திட்டுவார் என கண்ணில் தண்ணீர் வர அழுது அடம் பிடித்து, ஆசிரியரிடம் கெஞ்சி கையெழுத்துகாகவோ, அல்லது சிறு எழுத்துப்பிழைக்காகவோ விடுபட்டுப் போன 2-3 மதிப்பெண்களை எப்படியாவது வாங்கிக்கொண்டுதான் வீடு செல்வாள். எந்த வகைப் பெற்றோர் பெரும்பாண்மை என எப்படி கண்டறிவது? சமூகம், பள்ளிகள், அரசு, பெற்றோர், மாணவர்கள் அனைவரும் ஒரு சங்கிலித் தொடர்போல. இதில் நீங்கள் என்ன முயன்றாலும் உங்களால் அந்த சங்கிலியை தகர்க்க முடியாது. காலப்போக்கில் நீங்களும் அச்சங்கிலியின் ஒரு கண்ணியாகவே மாறிப்போவீர்கள் என்பதுதான் நிதர்சனம். 


அச்சமூட்டும் அழிவை எதிர்நோக்கியிருக்கும் இந்நேரத்திலாவது மாணவர்கள் சற்றே இளைப்பாற அவகாசம் கொடுங்கள். அவர்கள் படிக்காமல் விட்ட கதைகளை படிக்கட்டும். பார்க்காமல் விட்ட படங்களை பார்க்கட்டும். ஆண் பெண் பேதமின்றி வீட்டில் இருக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்யப் பழகட்டும். அவர்கள் விரும்பும் வகையில் நேரத்தை செலவு செய்யட்டும். அட எதுவும் வேண்டாம், தின்றுவிட்டு படுத்து நன்றாக தூங்கட்டும். எல்லா கோட்டையையும் அழித்துவிட்டு புதிதாக ஆரம்பித்துக் கொள்ளலாம். தேவையில்லாத ஆணிகளை பிடுங்குவதை விடுத்து ‘அன்டர் பிரிவிலிஜ்ட்’ மாணவர்களின் உயிர் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.


rkokilababu@gmail.com

1 எதிர் சப்தங்கள்:

மதன் said...

தெளிவான மின்னஞ்சல். கோகிலாம்மாவுக்கு நன்றிகள். “தின்றுவிட்டு படுத்து தூங்கட்டும்” என்ற ஒருவரி போதும் இதன் சாராம்சம் அறிய.