Jun 23, 2020

படிப்பு காத்திருக்குமா?

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆன்லைன் வழியாகப் பாடங்களை ஆசிரியர்கள் நடத்துவதைக் கவனித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். வழக்கமாக வகுப்பறைகளில் பாடம் நடத்துவதைப் போன்ற காரியமில்லை அது. ஆன்லைன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் அல்லது அவற்றில் அனுபவம் பெற்றவர்களின் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தால் நமக்கே ஒரு விஷயம் பிடிபடும். எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்வதற்கான திட்டமிடலையும் பயிற்சியையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.  ஒரு மணி நேர வகுப்பு என்றால் அதில் குறைந்தபட்சம் 55 நிமிடங்கள் நமக்கு ஏதாவதொரு வகையில் உருப்படியானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்நிறுவனம் படுத்துவிட வேண்டியதுதான். காசையும் செலவழித்து ஜல்லி அடிப்பதையும் யார் பொறுத்துக் கொள்வார்கள். அதனால்தான் அந்நிறுவனங்கள் ஆன்லைன் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றன. 

கடந்த வாரத்தில் ‘ஜூம்’ வழியாக சுமார் 30 பேர்களிடம் பேசப் போவதாக எழுதியிருந்தேன் அல்லவா? மாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு அந்த உரையாடல் நிகழ்ந்தது. தொடக்கத்தில் பத்து நிமிடங்கள் மட்டும் நிகழ்வை ஒருங்கிணைத்தவர் பேசினார். அதன் பிறகு முழுமையாக நான்தான் பேச வேண்டியிருந்தது. யாருமே இல்லாத ஒரு அறையில் அடைத்து வைத்து பேசவிட்டால் ‘யாராவது இருக்கீங்களா?’ என்று அவ்வப்பொழுது கேட்கத் தோன்றுமல்லவா? அப்படியானதொரு மனநிலை இருந்தது. வினாக்களைக் கூட தட்டச்சு செய்து ‘சாட்டிங்’ வழியாக அனுப்பினார்கள். இடையில் யாருமே பேசாமல் நான் மட்டுமே பேசி உரையாடல் முடிந்த பிறகு தொண்டை காய்ந்து அடித்துப் போட்டது போன்ற அயற்சி ஏற்பட்டிருந்தது. இதை ஏதோ மிகைப்படுத்திச் சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 

எதற்காகச் சொல்கிறேன் என்றால் இதுவரை வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த 99% ஆசிரியர்களால் ஆன்லைனில் சுலபமாக பாடம் நடத்திவிட முடியாது. அதற்கென தனித்துவமான அனுபவமும் பயிற்சியும் அவசியம்.  நேரம் மேலாண்மையில் தொடங்கி, சலிப்பில்லாமல் பேசுவது, திரையில் காட்ட வேண்டிய பாடத் தயாரிப்புகள், குழந்தைகள் என்ன புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கேட்டுப் பெறும் திறன் (feedback), பாடம் நடத்திவிட்டு களைத்துப் போகாமல் இருப்பது வரையிலும் சிறு, பெரு விஷயங்கள் என நிறைய இருக்கின்றன. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ‘எல்லோரும் ஆன்லைன் வாங்க’ என்று கூட்டி வைத்து பாடம் நடத்துவது குழந்தைகளுக்கு பாடம் மீதான ஒவ்வாமையை உருவாக்கி விடக் கூடும்.

ஆன்லைன் பாடமே வேண்டாம் என்றோ, எதிர்மறையாகவோ சொல்லவில்லை- நாம் நம் குழந்தைகளை அப்படியானதொரு உலகத்திற்குள் இழுத்துச் செல்லும் முன்பாக பல்வேறு காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

குழந்தைகளுக்கு ‘screen addiction'ஏற்படாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம். நமக்கே இந்தப் பிரச்சினை உண்டு. படுக்கப் போகும் வரைக்கும் மொபைல் அல்லது லேப்டாப் திரையைப் பார்ப்பது, எழுந்தவுடன் செல்போனைத் தேடுவது- இதற்கு நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஆயிரத்தொரு காரணங்கள் குழந்தைகளுக்கும் உண்டாகிவிடும். விளையாடச் செல்வதில்லை, செல்போன், தொலைக்காட்சியை நோண்டிக் கொண்டேயிருக்கிறார்கள் என்ற குறைபாடுகள் உருவாக வாய்ப்பு அதிகம். குழந்தைகளின் பார்வைக் குறைபாடு, தலைவலி, முதுகுவலி போன்ற சிறு சிறு பிரச்சினைகள்- ஆரம்பத்தில் நாம் கவனிக்காமல் விட்டு பிற்பாடு சிக்கல்களை உருவாக்கலாம்.

‘நெகட்டிவாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் என மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. பத்தில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்புதானே?

குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் என்றால் ஆசிரியர்களுக்கு வேறு விதமான சிக்கல்கள் உண்டு. முதல் பத்தியில் குறிப்பிட்டதைப் போல கால மேலாண்மை என்பது முக்கியமான அம்சம்- வருகைப்பதிவை எடுக்கவே கால் மணி நேரத்தை வீணடிப்பது என்பதிலேயே முதல் சொதப்பல் தொடங்கிவிடும். அப்பொழுதே மாணவர்களின் கவனம் வேறு எங்கோ நகர்ந்துவிடும். 

அதே போல,  பாடம் நடத்துவதற்கு முன்பாக தேவையான தயாரிப்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்- திரையில் எதனைக் காட்டி மாணவர்களை ஈர்த்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியமான அம்சம். ஆசிரியர்கள் எப்படித் தயாரிப்புகளைச் செய்கிறார்கள், ‘விஷூவல் ப்ரசெண்டேஷன்’ என்ன செய்யப் போகிறோம், கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கித் தருகிறோம் என நிறைய விஷயங்களில் தேர்ச்சி அவசியம். அதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறையும், பள்ளிகளும் உருவாக்கித் தர வேண்டும்.  இன்றைய நவீன தொழில்நுட்பம்-பவர்பாய்ண்ட், ஃபோட்டோஷாப் தொடங்கி செல்போனையும், ஜூம் உள்ளிட்ட இணையவழி தொடர்புகளையும் கையாள்வது குறித்து ஓரளவுக்கேனும் புரிதல்களை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் ‘டெக்னாலஜி’யில் சிரமப்படுகிறவர்கள் என்பதுதான் முதல் தடைக்கல்லே. இதுவரையிலான காலத்தில் அரசாங்கமோ, கல்வித்துறையோ அல்லது தனியார் பள்ளிகளோ கூட எந்தவிதமான பயிற்சிகளையும் அளிக்கவில்லை என்பது நிதர்சனம். யாரையும் குறை சொல்லவில்லை. இப்படியொரு சூழல் உருவாகும் என்று யாருக்குத்தான் தெரியும்?

வகுப்பறையாக இருந்தால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் கண் வழியாகத் தொடர்பு இருக்கும்.  மாணவர்கள் இங்கே கவனிக்கிறார்களா, கவனம் சிதறுகிறதா, தூங்குகிறார்களா என்பதையெல்லாம் புரிந்து அதற்கேற்ப பாடத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு ஆசிரியர் வேறு ஏதாவது பேசுவது, மாணவன் அருகில் சென்று அவனது கவனத்தை திசை மாற்றுவது என்பதெல்லாம் சாதாரணமாக நடக்கும். ஆன்லைனில் இதற்கெல்லாம் எதுவுமே சாத்தியமில்லாத போது ஆசிரியர்கள் தம் ஆற்றலையும் வீணடித்து, மாணவர்களுக்கும் அர்த்தமில்லாமல் ஆன்லைன் வகுப்புகள் அர்த்தமற்றுப் போவதற்கு எல்லாவிதமான சாத்தியங்களும் இருக்கின்றன.

இன்னொன்று ஆன்லைனில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்கு ஏற்படக் கூடிய கவனச் சிதறல். கவனச் சிதறல் என்றால் ‘போர்னோகிராபி’ என்கிற அர்த்தத்தில் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  ‘முதுகு வலிக்கிறது’ என்று சொல்வது கூட கவனச் சிதறல்தான். ஜன்னலுக்கு வெளியில் காகத்தைப் பார்ப்பதும் கவனச் சிதறல்தான். யாராலும் கட்டுப்படுத்த இயலாத கவனச்சிதறல்கள் இவை. அவற்றை எப்படி கையாளப் போகிறோம்?

இப்படி நீண்டதொரு பட்டியலை வாசிக்க முடியும். ஆனால் அரசாங்கம்தான் இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்டகால நோக்கிலும், உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்களையும் மனதில் கொண்டு ‘உருப்படியான’ ஒரு குழுவை அமைத்து, மிக விரிவாக- மனநலம், குழந்தைகள் உடல்நலம், தொழில்நுட்பம், சமூகம், ஆன்லைன் பயிற்சி முறை, பாடத் தயாரிப்புகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய அந்தக் குழுவிடம் அறிக்கை பெற்று அவர்களின் பரிந்துரையை குறைந்தபட்சம் 90% அமல்படுத்தினால் மட்டுமே ஆன்லைனில் பாடம் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதற்கு ஆறு மாதங்கள் ஆனாலும் காத்திருப்பதில் தவறில்லை. ‘அய்யோ, ஆறு மாசம் என் குழந்தைக்கு படிப்பு என்ன ஆகும்’ என்று யோசிக்கும் பெற்றோர்கள் அவரவர் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப வீட்டில் எதையாவது செய்து கொண்டிருக்கட்டும். அரசாங்கம், கல்வித்துறை, பள்ளி என பெருமொத்தமாக ஒரு செயலை அமல்படுத்தும் போது அனைத்து மாணவர்களையும், அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டே செய்ய வேண்டும். குறுகிய கால, நீண்டகால சாதகபாதகங்களை தீர ஆராய்ந்தே செய்ய வேண்டும். மாணவர் நலனில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் நாம் ஒரு தலைமுறைக்கே உண்டாக்கும் பாதிப்பு என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஊரடங்கு கால ஸ்தம்பிப்பு என்பது குழந்தைகளுக்கான ஸ்தம்பிப்பு மட்டுமில்லை. தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் தடைபட்டிருக்கிறது. இதுவரையிலான அனைத்து சங்கிலித் தொடர்களும் அறுபட்டிருக்கின்றன. இயங்கிக் கொண்டிருந்த சக்கரம் நின்றிருக்கிறது. இயல்பு நிலைக்கு வர ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கூட ஆகலாம் என்கிறார்கள். எல்லோருக்குமே ஏதாவதொரு வகையில் பாதிப்பு இருக்கும் போது ‘குழந்தையின் படிப்பு தடைபடுதே’ என்று கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் சரி செய்வோம். ஓரளவு இயல்புநிலை திரும்பட்டும். அதுவரை குழந்தைகள் காத்திருக்கட்டும். படிப்பும் காத்திருக்கும். அவசர அவசரமாக அவர்களை நசுக்க வேண்டிய எந்த அவசியமும் இப்பொழுது இல்லை.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

தானாக சிந்திக்காமல் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்து வாழ்வை நடத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது

அன்புடன் அருண் said...

//‘நெகட்டிவாக எழுதியிருக்கிறான்’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் என மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. பத்தில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்புதானே?

பத்து குழந்தைகளும் பாதிக்கப்பட்டாலும்,

மகிழ்ச்சியாக வாழ, பணம் (மட்டும் தான்) தேவை என்ற எண்ணமும், அந்த பணத்தை சம்பாதிக்க படிப்பு (மட்டுமே) தேவை என்ற தோற்றப் பிழைகளும் மாறாத வரையில், யாரும், எதுவும் மாறப்போவதில்லை !!