வெள்ளியங்கிரியும் அவரது மனைவியும் கூலித் தொழிலாளர்கள். இரண்டு குழந்தைகள். இருவரும் அரசு ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மூத்த மகன் ஐந்தாவது படிக்கிறான். சில மாதங்களுக்கு முன்பாக ஒரு சாலை விபத்தில் தப்பி- அடித்துவிட்டுச் சென்றவனை உள்ளூர் பெண் காவல் அதிகாரி அடையாளம் கண்டறிந்து உரிய நஷ்ட ஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறார். வெள்ளியங்கிரியும் அவரது மனைவியும் அப்பாவிகள். விவரம் எதுவுமில்லை. கூரை வேய்ந்த வீடு. அதன் மீது இரும்புத் தகரத்தை அடுக்கியிருந்தார்களாம்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் வீட்டை பூட்டிவிட்டுச் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். பிள்ளைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்துவிட்டது. அந்தக் குடும்பத்தில் எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் மாலையில் அழைத்த பாலு, சில நிழற்படங்களை அனுப்பி வைத்து ‘முற்றாக எரிந்து போய்விட்டது; அவர்களிடம் மாற்றுத்துணி கூட இல்லை. நிசப்தம் வழியாக உதவ முடியுமா?’ என்றார். பாலு நிசப்தம் வாசகர். பரோபகாரி. எரிந்து போன வீட்டுக்கு அடுத்த தெருவில் வசிக்கிறார்.
அடுத்தநாள் காலை வரைக்கும் அவகாசம் கேட்டுக் கொண்டேன். அதற்குள் நண்பர்கள் சிலர் வழியாக அந்தக் குடும்பம் குறித்து விசாரித்துவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. விசாரித்தவர்கள் அத்தனை பேருமே ‘அப்பாவி குடும்பம்’ என்றார்கள். வீட்டில் குழந்தைகளுக்கு ரேஷன் அரிசி சாதம் தவிர எதுவுமில்லை என்றார்கள். பாலுவைத் திரும்ப அழைத்து ‘அந்தக் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிடலாம்’ என்று சொல்லியிருந்தேன்.
அடுத்த நாளே பாலுவும் அவரது மனைவியும் கடைக்குச் சென்று குக்கர் உட்பட பாத்திரங்கள், பாய், தலையணை உள்ளிட்ட வீட்டிற்கு தேவையான பொருட்களை பதினெட்டாயிரம் ரூபாய்க்கு எடுத்து வைத்துவிட்டு அழைத்தார்கள். கடையில் காசோலையைக் கொடுத்துவிட்டு இன்னுமொரு ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குத் தேவையான மளிகை, குழந்தைகளுக்கான நோட்டு புத்தகங்கள்- அவர்களின் பள்ளிப் புத்தகங்கள், பை என முற்றாக தீக்கிரையாகிவிட்டது.
பொருட்களை வண்டியில் ஏற்றிய வண்டியுடன் கிளம்பினோம். குடிசை முற்றும் எரிந்து பிறகு ஒரு பிடி சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அப்பொழுதுதான் அந்தக் குடும்பத்தையும் முதன்முதலாகச் சந்தித்தோம்.
‘எப்படி எரிஞ்சுது’ என்ற போது அவர்களுக்கும் சரியான பதில் தெரியவில்லை. பூட்டிவிட்டு வழக்கம் போல வேலைக்குச் சென்றவர்கள் தகவல் கேட்டு வந்து பார்க்கும் போது எல்லாம் கருகி பூப்பூத்துவிட்டது. சூடு தகிக்கும் அந்தப் பரப்பில் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. தீயணைக்கும் வண்டி வருவதற்கு சரியான பாதை இல்லாததால் அவர்களாலும் வந்து சேர முடியவில்லை.
வண்டியில் இருந்த பாத்திரங்களைப் பிரித்து அவர்களிடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளிடம் தைரியமாக இருக்கச் சொல்லிவிட்டு வெள்ளியங்கிரியின் மனைவியிடம் ‘இப்போதைக்கு இந்த உதவியைச் செய்கிறோம்; சிறுகச் சிறுக சேர்த்ததெல்லாம் தீயில் போய்விட்டது என்று அரசினை அணுகி வீடு கட்டித் தரச் சொல்லி கேளுங்கள். அவர்கள் செய்யாவிட்டால் அதற்கான ஏற்பாட்டையும் செய்து தருகிறோம்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். பாத்திரங்களை வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் வீட்டில் வைத்திருக்கிறார்கள்.
மளிகைப் பொருட்களை அருண் கொண்டு போய் கொடுத்துவிட்டார். குடும்பமே பேயறைந்தது போல இருந்தது. அந்தப் பெண்மணி நான்கு பவுன் நகை வைத்திருந்தாராம். அந்தப் பெண்ணுக்கு அதுதான் பெரும் சொத்து. இருந்த இடம் தெரியவில்லை. அதிர்ச்சி இல்லாமலா இருக்கும்? அவர்களிடம் பேசுவதற்கும் கூட சொற்கள் இல்லை. உடுக்கை இழந்தவன் கை போலத்தானே உதவியும் இருக்க வேண்டும்? பெற்றவர்களுக்காக இல்லையென்றாலும் அந்தக் குழந்தைகளுக்காக உதவ வேண்டியதில்லையா? இந்த மார்கழிக் குளிரில் போர்த்திக் கொள்ளக் கூட போர்வை இல்லை. அதை வாங்கித் தர வேண்டியது கடமை. அப்படித்தான் அந்தக் கணத்தில் தோன்றியது.
பொதுவாக, ஒரு குடும்பத்துக்கு வெள்ளம், மழை போன்ற பேரிடரின் போது அரங்கேறும் இழப்புக்கும், இத்தகைய தனிப்பட்ட சம்பவங்களில் நிகழும் இழப்புக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. பேரிடர் சமயங்களில் யாரோ தனிப்பட்ட சிலர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நம்மைப் பார்த்து அடுத்தவரும் அடுத்தவரைப் பார்த்து நாமும் ஆறுதல் அடையும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இத்தகைய தனிப்பட்ட இழப்புகள் நிராதரவான நிலையை உருவாக்கிவிடும். ‘நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ என்று கதற வைத்துவிடும். அப்படியான சூழல்தான் அந்தக் குடும்பத்துக்கு.
அந்தக் குடும்பத்தினர் மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகள் கூடப் பேசவில்லை. சுற்றியிருந்தவர்கள்தான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில்களைச் சொன்னார்கள். அரசு தாமஸ் அண்டை வீட்டாரிடம் ‘நல்லா பார்த்துக்குங்க’ என்றார். கார்த்திகேயன் ஒவ்வொருவராகச் சென்று பேசிவிட்டு வந்தார். மிகப்பெரிய துக்கம் அவர்களுக்கு. மீண்டு வர பல வருடங்கள் ஆகக் கூடும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது சில முறை சென்று பார்த்துவிட்டு வர வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
அண்டைவீட்டார் உதவக் கூடும். அரசு கூட ஏதேனும் இழப்பீடு தரக் கூடும். அப்படி ஒருவேளை உதவவில்லையென்றால் சிற்சில உதவிகளைச் செய்து கை தூக்கி விட்டுவிடலாம்.
நாங்கள் கொஞ்ச நேரம் அங்கே இருந்தோம். நன்றியெல்லாம் அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு அது தெரியவும் தெரியாது. ஆனால் நிச்சயமாக மனதுக்குள் நினைத்திருப்பார்கள். அந்த நன்றி நம் எல்லோருக்குமானது!
நாங்கள் கொஞ்ச நேரம் அங்கே இருந்தோம். நன்றியெல்லாம் அவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு அது தெரியவும் தெரியாது. ஆனால் நிச்சயமாக மனதுக்குள் நினைத்திருப்பார்கள். அந்த நன்றி நம் எல்லோருக்குமானது!
4 எதிர் சப்தங்கள்:
//ஆனால் நிச்சயமாக மனதுக்குள் நினைத்திருப்பார்கள்//
ஆம்
// பூட்டிவிட்டு வழக்கம் போல வேலைக்குச் சென்றவர்கள் தகவல் கேட்டு வந்து பார்க்கும் போது எல்லாம் கருகி பூப்பூத்துவிட்டது//
வாழ்க்கையின் அடுத்த நொடி பொதிந்து வைத்திருக்கும் மர்மங்கள் ஏராளம்
ஒரே ஒரு நொடி மனிதர்களின் வாழ்வினை மொத்தமாக திருப்பிப் போட்டு விடுகிறது. இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருவது இம்மாதிரியான மனிதர்கள் தான்.
மனதை நெருடும் பதிவு. எத்துணை நிலையில்லா வாழ்க்கை.
Post a Comment