Nov 19, 2019

செல்போனும் கையுமாக...

கடந்த வாரத்தில் ஒரு நிகழ்ச்சி. உறவுக்காரக் குழந்தைகள் அத்தனை பேரும் ஆளுக்கொரு செல்போனை வைத்துக் கொண்டு அங்குமிங்குமாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். பத்து வயது கூட நிரம்பாத குழந்தைகள். பெரியவர் ஒருவர் அழைத்து கூட்டத்தில் நல்ல காரியத்தைச் செய்வதான நம்பிக்கை மற்றும் பாவனையுடன் ‘இவன் யாருன்னு உனக்குத் தெரியுமா?’ ‘அந்தப் பாப்பா யாரு?’ என்றெல்லாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்த முயற்சி செய்தார். அந்த நேரத்தையும் கூட வீணடிக்க அந்தக் குழந்தைகள் தயாராக இருப்பதாக இல்லை. ஒவ்வொருவராகத் தப்பிச் சென்றுவிட்டார்கள். சில நிமிடங்களில் கூட்டம் கரைந்து போனது. பல்பு வாங்கிய அந்தப் பெரியவர் ‘இந்தக் காலத்து குழந்தைகளே இப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு அவர் தனது செல்போனை பார்க்கத் தொடங்கிவிட்டார். 

சில வருடங்களுக்கு முன்பாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் செல்போன் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு ‘இனிமே வாட்ஸாப் கிடையாது; ஃபேஸ்புக் கிடையாது’ என்று சொல்லிப் பார்த்தேன். சில மாதங்களுக்கு அதைக் கடைபிடிக்கவும் முடிந்தது. ஆனால் அலுவலகத்தில் ஏதோ ஒரு ப்ராஜக்ட்டுக்காக வாட்ஸாப் குழுமம் ஆரம்பித்தார்கள். அதற்காக வாட்ஸாப் தேவைப்பட்டது. செல்போனில் நிறுவிய அடுத்த கணம் உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டது. முன்பெல்லாம் இரவு நேரப் பேருந்து பயணங்களில் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவேன். இல்லையெனில் கண்களுக்கு துணியைக் கட்டிக் கொண்டு உறக்கம்தான். பகல் நேரப் பயணமெனில் வாசிப்பதுண்டு; பேசுவதும் அதிகம். இப்பொழுதெல்லாம் யூடியூப்பில் படம் பார்க்கிறேன். அல்லு அர்ஜூன், ரவிதேஜா, சாய் தரம் தேஜ்- சிரஞ்சீவியின் உறவுக்காரப் பையன், வி.ஐ.டி மாணவர் என்று கொல்ட்டிகளின் எந்தப் படங்களையும் விட்டு வைப்பதில்லை. இவையெல்லாம்தான் செல்போனை விட்டு விலகவே விடுவதில்லை. 

ஒரு நாளின் அதிகபட்ச நேரத்தை செல்போன் திரையே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தாலும் அவ்வளவு எளிதில் உதறிவிட முடிவதில்லை. எலெக்ட்ரானிக் பொருட்கள் நமது நேரத்தை கோரப்பசியோடு தின்று கொண்டிருக்கின்றன. நமது நேரத்தை விடவும் குழந்தைகளின் நேரத்தை அவை அள்ளித் தின்பதைப் பார்க்க பயமாக இருக்கிறது. எங்கள் அடுக்ககத்தில் பதினான்கு பதினைந்து வயது குழந்தைகள் செல்போனோடு தனியாக அமர்ந்து மணிக்கணக்கில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட சற்றே சிறியவர்கள் செல்போனைத் தூக்கி வந்து அதில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்போனும் அதன் விளையாட்டுகளும் வளர்ந்த மனிதர்களின் மனதினை கூட மாற்றிவிடவல்லது என்றுதான் பல ஆராய்ச்சியின் முடிவுகளும் சொல்கின்றன. குழந்தைகளின் மனநிலை எம்மாத்திரம்? அடுத்தவர்களுடன் பழகாத, குரூர புத்தியுடைய, வெளியுலகத் தொடர்புகளற்ற குழந்தைகளாக அவர்களின் வட்டத்தை மிக மோசமாகச் சுருக்கிவிடும் வல்லமை செல்போன் விளையாட்டுகளுக்கு உண்டு. எல்லாம் தெரிகிறதுதான். ஆனால் என்ன செய்கிறோம்? 

பொதுவிடங்களில், நிகழ்ச்சிகளில் மற்ற விளையாட்டுகளை விளையாடும் குழந்தைகளைப் பார்க்க அதிசயமாக இருக்கிறது. வெளி விளையாட்டுகளை விளையாடுகிற குழந்தைகள் மிகக் குறைந்துவிட்டார்கள். பல பெற்றோரும் ‘இது ஒருவகையில் பாதுகாப்பானது’ என கைகளில் செல்போனைக் கொடுத்து அமர வைத்துவிடுகிறார்கள்.  சோம்பேறிகளாக, தமது அடிமைகளாக குழந்தைகளை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த செல்போன்களின் கதிர்வீச்சும் குழந்தைகளை பாதிக்கக் கூடும் என்கிறார்கள்.  இந்த செல்போன்களிடமிருந்து குழந்தைகளை மீட்க வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இணையத்தில் தேடினாலும், குழந்தைகள் மனநல மருத்துவரிடம் பேசினாலும் ஒன்றைத்தான் மிக முக்கியமாகக் குறிப்பிட்டார்கள். ‘நீங்க எந்நேரமும் செல்போனை பார்த்துட்டு இருந்தா குழந்தைகளும் பார்க்கத்தான் செய்வாங்க’ என்கிறார்கள். அது மிகச் சரி. முதலில் நாம் ஒழுங்குக்கு வர வேண்டியிருக்கிறது. அப்படி நம்மிடமே ஒழுங்கின்றி, குழந்தைகளை மிரட்டினால் அவர்கள் செல்போனை அந்தப் பக்கமாக நகர்த்தி வைக்கக் கூடும் ஆனால் மனதுக்குள் ‘அம்மா மட்டும் பார்க்கிறாங்க; அப்பா மட்டும் பார்க்கிறாங்க’ என்று புலம்புவார்கள். குழந்தைகள் பெரியவர்கள் செய்வதைக் குற்றமாகக் கருதினாலும் கூட அதனை வெளிப்படையாகப் பேசுகிற தைரியம் அவர்களிடம் இருக்காது. அப்படி அவர்கள் அதனை வெளியில் காட்டிக் கொள்ளவில்லையெனில் நம்மை விட்டு அவர்கள் விலகுவதற்கு நாமே ஒரு அடித்தளம் போட்டுக் கொடுத்தது போல ஆகிவிடும். ஒருவேளை குழந்தைகள் செல்போனிலிருந்து விடுபட வேண்டுமானால் முதலில் நாம் அவர்கள் முன்னால் விடுபட்டது போன்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் ‘செல்போன் டைம்’ என்று குழந்தைகளுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிடுகிறார். தினமும் அரை மணி நேரம். அவர்கள் எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். நல்ல வெளிச்சமான, அனைவரின் நடமாட்டம் இருக்குமிடத்தில் அமர்ந்து அவர்கள் செல்போன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கேம் பார்த்தாலும் தடுப்பதில்லை. வீடியோ பார்த்தாலும் தடையில்லை. அந்த நேரத்தைத் தாண்டி குழந்தைகள் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள். அரை மணி நேரம் என்பது முக்கால் மணி நேரம் வரைக்கும் போகலாமே தவிர அளவுக்கு மிஞ்சி நிகழ்வதில்லை.

வேறொரு நண்பர் சில நாட்களுக்கு முன்பாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சலை முழுமையாகப் பிரசுரம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அனுப்பியவரின் பெயர் நினைவில் இல்லை. தேடி எடுக்க முடியவில்லை. அவர் அனுப்பியிருந்ததன் சாராம்சம் இதுதான் - குழந்தைகள் குறைந்தபட்சமாவது செல்போன் கேம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களது நண்பர்கள் அது குறித்துத்தான் அதிகம் பேசுகிறார்கள்.  அப்பொழுது நம் குழந்தை எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தால் அது அவர்களுக்கு தாழ்வுணர்ச்சியை உருவாக்கிவிடாதா? என வினவியிருந்தார். அதுவும் சரியான வருத்தம்தான். ஆனால் குழந்தைகள் பேச எவ்வளவோ சமாச்சாரங்கள் இருக்கின்றன. சச்சின் பற்றியும், சவுரவ் பற்றியும் நம் காலத்தில் ஒருத்தன் பேசிக் கொண்டிருந்த போது கூட கிட்டிப்புள் குறித்து பேசி, கவனத்தை இழுக்கக் கூடியவன் நம் கூட்டத்தில் ஒருவன் இருந்தான். அத்தகைய ஒருவன் நம் குழந்தைகள் கூட்டத்திலும் ஒருவன் அல்லது ஒருத்தி இருக்கக் கூடும். அப்படியொரு ஆளாக நம் குழந்தைகளும் இருக்கலாம்.

இதையெல்லாம் பற்றி சற்று விவாதிக்கவும் ஆலோசிக்கவும் வேண்டிய தருணம் நம் காலத்தில் உருவாகியிருக்கிறது.

குழந்தைகளை மிரட்டுவதால் அல்லது அவர்களிடமிருந்து செல்போனை பறித்து வைப்பதனால் மட்டும் நாம் நினைப்பது நிகழ்ந்துவிடாது. நம் சிறுவயதில் தொலைக்காட்சி இருந்த போது என்ன செய்து கொண்டிருந்தோம்? வெறும் தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் ஒளியும் ஒலியும் அல்லது ஞாயிறு சினிமாவைத் தவிர நமக்கு தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு வேறொன்றும் இருக்காது. அப்பொழுது தொலைக்காட்சியைவிடவும் தெருக்கள்தான் சுவாரசியமாக இருந்தன. வெளியிலேயே கிடந்தோம். பிறகு கேபிள் டிவி வந்தது. சுவாரசியமோ இல்லையோ- நம்மை தம்மோடு கட்டிப்போடும் வித்தை அதனிடமிருந்தது. எதையாவது ஒன்றைப் பார்க்க வைத்தார்கள். தெருவை விட தொலைக்காட்சிகள் சுவாரசியம் என நினைக்க ஆரம்பித்தோம். அப்படித்தான் தெருவை விட்டு மெல்ல மெல்ல விலகினோம்.

இன்றைக்கு செல்போன் அந்த வேலையைச் செய்கிறது. ஒன்றை விட வேண்டுமென்றால் அதனைவிட சுவாரசியமான ஒன்றை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். செல்போனைவிடவும் தெருவும், வெளியில் தெரியும் வானமும் சுவாரசியமானவை என்று காட்டி செல்போனில் பார்க்க எதுவுமில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். ஆனால் அதை நம்மால் நிரூபிக்கவே முடியாது. ஆனால் இன்னொரு வழி இருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரமும் செல்போன் பேட்டரி நிறைந்து கிடக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாலை வேளைகளில் அணைந்து கிடந்தாலும் தவறில்லை என்று விட்டுவிடலாம். தூர்தர்ஷன் மாதிரி- அங்கே ஒன்றுமில்லை என்கிற மனநிலையை உருவாக்க வேண்டும். அந்த நேரத்தில் குழந்தைகள் போரடிப்பதாக உணரும் போது அவர்கள் வேறு ஏதேனும் ஒன்றுடன் ஒன்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுதான் இருப்பதிலேயே எளிய வழி.

இரவு ஒன்பது மணிக்கு மேலாக சார்ஜரில் போட்டு பத்து மணிக்கு மேலாக, குழந்தைகள் உறங்கிய பிறகு வேண்டுமானால் நாம் ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம். தலை போகிற விவகாரமாக இருந்தாலும் வாட்ஸாப்பில் தகவல் அனுப்பிவிடுவார்கள் என்பதால் நாம் எதையுமே தவற விட வாய்ப்பில்லை.

சொல்வது எளிது; செயல்படுத்த மெனக் கெட வேண்டும். ஆனால் நாம் மெல்ல மெல்ல இதையெல்லாம் பழக்கப்படுத்தி ஒழுங்குக்கு கொண்டு வர வேண்டியது மிக அவசியம். இப்படி அவரவர் சாத்தியங்களுக்கு ஏற்ப செல்போன்களிடமிருந்து குழந்தைகளுக்கு மெல்லிய இடைவெளியை உருவாக்கி அவர்களை விலகச் செய்ய வேண்டும். மேற்சொன்னவை எல்லாம் சிறு சிறு தீர்வுகள்தான். நண்பர்களிடம் விவாதித்தால், பத்தில் ஒருவரிடம் சிறப்பான தீர்வு இருக்கக் கூடும். அந்தத் தீர்வைக் கண்டறிவதும் நமக்கேற்ப மெருகேற்றுவதும் முக்கியம். கடினமான காரியம்தான் ஆனால் செய்யவே முடியாத காரியமில்லை. நம் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்காக நாம் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// நம் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்காக நாம் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது//
முடியாது. ஊரெல்லாம் மரம் வளர்த்தால் (நம்மூர்களில்) ஏசியின் தேவை இருக்காது. ஊரெல்லாம் வளர்க்க முடியாது என்ற எண்ணத்தை விதைத்து நம் வீட்டில் ஏசி வைத்துக் கொள்வோம் என்ற மனநிலையை உருவாக்கி விட்டார்கள்.
உலகம் எளிமையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.அந்த உண்மையை வியாபார உலகம் பணமாக்கி கொண்டிருக்கிறது.
குழந்தைகளின், சந்ததிகளின் எதிர்காலம் மனதிலிருந்தால் மலைகளையும்,ஆறுகளையும் இழந்திருக்க மாட்டோம்.
சிந்துசமவெளி நாகரிகம் அழிந்த பின்பு புதிய நாகரிகம் உருவாக்கி வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்.
ஊர்கூடி தேரிழுத்தல் என்பது அதனால் ஏற்படும் சிரமங்களை காரணம் காட்டி மெல்ல மெல்ல சாகடிக்கப்படும்.

Mahesh said...

அல்லு அர்ஜூன், ரவிதேஜா, சாய் தரம் தேஜ்- சிரஞ்சீவியின் உறவுக்காரப் பையன், வி.ஐ.டி மாணவர் என்று கொல்ட்டிகளின் எந்தப் படங்களையும் விட்டு வைப்பதில்லை.//////

நீங்கள் குரிப்பிட்ட யாருடைய படங்கலையும் நான் இப்போ எல்லாம் விரும்பி பார்க்கிரது இல்ல.

ஒன்லி natural star nani படங்கள் மட்டும் விரும்பி பார்ப்பது....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவனிக்க வேண்டிய விஷயம். அலுவலகத்திற்கு பஸ்ஸிலோ ட்ரைனிலோ போகும்போது காத்துக் கிடக்கும் நேரமாக இருந்தாலும் செல்போனை எடுக்கக் கூடாது(கால் வந்தால் தவிர) என்றுமுடிவு செய்திருந்தேன்/. அதனைப் பின்பற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது

Paramasivam said...

I feel that it is Better to watch Whatsapp during night times

Anonymous said...

Facebook லிருந்து வெளிவந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. என் ஒருதலைக் காதல் நாயகியின் வரவால் எனது கணக்கை ஆரம்பித்தேன். ஆரம்பித்ததும் முதல் Friend Request அவளுக்குத்தான். ஆனால் கடைசி வரை என் விண்ணப்பத்தை ஏற்கவே இல்லை கிராதகி. ஆரம்பித்தில் ஒன்றும் புரியாமல் நகர்ந்து கொண்டிருந்த என் facebook அரசியல் பதிவுகளின் சுவாரசியத்தால் மடை மாறியது. தினமும் அரசியல் திருக்குறள் பிரேக்கிங் நியூஸ் களால் என்னையறியாமல் மிக அதிக நேரம் செலவழித்து கொண்டிருந்தேன். டாட்டா ஸ்பீட் e லிருந்து h+ கு மாறியதில் இருந்து என் நேரத்தை உறிஞ்சி கொண்டிருந்தது. என் நேரம் தேவை இல்லாமல் செலவழிக்கப்படுகிறது என்று உணர்ந்தபோது உடனே வெளிவர நினைத்தேன். அதற்கு சில வழிகளை வகுத்துக்கொண்டேன்.
1. facebook செயலியை நீக்கி browser ல் உபயோகப்படுத்த ஆரம்பித்தேன்.
2. சில நாள்கள் கழித்து browser ல் save paasword ஐ நீக்கி ஒவ்வொரு முறையும் paasword கொடுத்து உள்ளே சென்றேன். தானாகவே கடுப்பாக ஆரம்பித்தது.
3. பின் போதும்டா சாமி என்று delete request கொடுத்து கணக்கை விட்டு வெளியேறினேன்.
அடுத்து whatsapp கும் சில யுக்திகளை கடை பிடித்துக்கொண்டிருக்கிறேன். அலுவலக ஆட்களால் சரியாக கடைபிடிக்க முடிவதில்லை. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை process status கேட்டு குடைந்து கொண்டிருக்கிறார்கள்.