Oct 29, 2019

எல்லா குளங்களிலும் ஒரே நிலா

வெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா? ஒவ்வொரு நாளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தூண்டிலை வீசிக் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் அகப்பட்டு, போராடி உயிர் பிழைக்கவென பிய்த்துத் தப்பிப்பதே ஒவ்வொரு நாளின் போராட்டமாக இருக்கிறது. போராட்டத்தின் வலியும் ரணமும் வேதனையும் ஒவ்வொரு நாளும் நம்மை சலிக்கச் செய்துவிடுகிறது. வலியோடு படுக்கையில் விழுந்து மறுநாள் எழும் போது இன்னொரு தூண்டில் நமக்கான ரொட்டித்துண்டைச் செருகி வாய்க்கு முன்பாக காத்திருக்கிறது. 

அவசர உலகின் எல்லா நசநசப்புகளிலிருந்தும் ஏதோ ஒரு கணம் குழந்தைகள் நம்மைக் கைபிடித்து தங்களின் உலகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். அது ஒற்றைப் புன்னகையாகக் கூட இருக்கலாம் அல்லது அவர்கள் பிய்த்துத் தரும் மிட்டாயின் சிறு துணுக்காக இருக்கலாம். அவசரகதியில் அலுவலகம் கிளம்பும் மனிதர் பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் ‘நீ அவ்வளவு அழகா இருக்க...ஒரு கடி கடிச்சுக்கட்டுமா’ என்று கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். முரட்டுத்தனமான அம்மனிதர்  அந்த ஒற்றைக் கணத்தில் அப்பாவியாகி தனது நாளை புத்தாக்கம் செய்து கொண்டார். அப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் குழந்தைகளை ரசித்துக் கொண்டிருக்கும் மனநிலை நம்மிடம் இருப்பதில்லை.

பால் நிற வெள்ளைத்தாள் அல்லவா குழந்தையின் மனம்? அதில் நம் கற்பனைக்கே எட்டாத வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களாகவே எதை எதையோ வரைகிறார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்தச் சித்திரங்கள்தான் உலகின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். ஆனால் அதை ரசிப்பதற்குத்தான் நம்மில் பலருக்கும் நேரமுமில்லை. மனமுமில்லை. 

குழந்தைகள் வரையும் ஓவியங்களும் அப்படியானவைதான். உலகின் அதியற்புதம் என்று நினைத்துக் கொண்டிருப்பதை நான்கைந்து கீறல்களில் கொண்டு வந்து நம் முன்னால் காட்டிவிடும் வித்தை அவர்களைத் தவிர யாரிடம் இருக்கிறது? கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளின் ஓவியங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். 

சிறுவன் சுஜித் இறந்துவிட்டான். அவனும் இப்படியானதொரு வெள்ளைத்தாள்தான். குழிக்குள் விழாமல் இருந்திருந்தால் அவனும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்திருப்பான். சாலையில் செல்லும் யாராவது ஒருவரைப் பார்த்து புன்னகைத்திருப்பான். அம்மாவும் அப்பாவும் வரும் வரைக்கும் சோளக் காட்டைத் தாண்டிச் சென்று விளையாடி இருப்பான். இப்பொழுது உடலை எடுத்தார்களா என்று கூடத் தெரியவில்லை என்கிறார்கள்; இரண்டு கைகளை மட்டும் பிய்த்தெடுத்தார்கள் என்கிறார்கள். மண்ணின் ஆழத்தில் புதைந்து போய்விட்டான்.

நினைக்காமலேயே விட்டுவிட்டால் ஒன்றுமில்லை. நினைத்தால் வாதைதான். ஏதேதோ குழந்தைகளின் முகங்கள் வந்து போகின்றன. அதற்காகவே குழந்தைகளின் ஓவியங்கள் தேவையானதாக இருந்தது. கோவை புத்தகக் கண்காட்சியில் ‘எல்லா குளங்களிலும் ஒரே நிலா’ என்ற புத்தகத்தை வாங்கி வந்திருந்தேன். மொழிபெயர்ப்புக் கவிதைகள். கவிதைகள் என்றால் ஜென் கவிதைகள். பெரும்பாலும் ஒரு காட்சியைக் காட்டுகிற கவிதைகள். அதிலிருந்து நமது கற்பனை விரிவடைந்து செல்லக் கூடும். தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்திருக்கிறார்.

புத்தகத்தின் சிறப்பே சிறார்களின் ஓவியங்கள்தான். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு குழந்தையின் ஓவியம். காஞ்சிபுரத்தில் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்காக சுற்றுவட்டார பள்ளிக் குழந்தைகள் வரைந்திருக்கிறார்கள். அப்படி சேகரிக்கப்பட்ட ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளுக்கு இணையாக ஓவியங்களுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைத்திருக்கிறார்கள்.


செதுக்கிய வடிவமைப்பு. புத்தகம் எங்கே கிடைக்கும் என்கிற குறிப்புதான் புத்தகத்தில் எங்கேயும் கண்ணில்படவில்லை.  (மின்னஞ்சல்: thumbigal@gmail.com)

கவிதைகளைப் பற்றியும் ஓவியங்களைப் பற்றியும் நிறைய நிறையப் பேசலாம். இன்று சில கவிதைகளை இங்கே பதிவிடுகிறேன். நான்கு கவிதைகளையும் சுஜித்துடன் இணைத்துக் கொள்ள முடியும். அப்படி இணைத்தால் நான்காவது கவிதையை வாசிக்கும் போது துளி கண்ணீராவது கசிந்துவிடும்.

பெருஞ்சுமையை இறக்கி வைக்க உதவிய இந்த நூலுக்கும் அதை வடிவமைத்தவர்களுக்கும் எனது அன்பு!

சுஜித்தின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்!

                                        (1)

பூவைக் 
காட்டும்போது
வாயைத் திறக்கிறது
அந்தச் சிறு குழந்தை.
- Seifu-Jo

                                       (2)

கோவில் மணிமேல்
ஓய்வெடுக்கும் 
வண்ணத்துப் பூச்சிக்கு
நல்ல உறக்கம்
மணி ஒலிக்கும் வரை
- Busn, Yosa

                                         (3)

காற்று ஓய்ந்த பின்னும்
உதிர்கின்றன
மலர்கள்;
பறவையின் அலறலில்
ஆழமுறுகிறது மலையின் மெளனம்.

                                         (4)

ஒரு உயிரைக் 
காக்க வேண்டுமென்றால்
அழித்தாக வேண்டும் அதை.
முற்றாக அழித்த பிறகு
முதல் முறையாக 
சாந்தமாய் இருக்கிறது அது. 

1 எதிர் சப்தங்கள்:

Maanava Nanban said...

Kumar Shanmugam
9940580495


மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
கிடைக்கும் என நம்புகின்றேன்