குழந்தையொன்று ஆழ்குழாய் கிணற்றில் விழுந்துவிட்டது என்று செய்தியைக் கேள்விப்பட்ட போது அப்படியொன்றும் சலனம் உண்டாகவில்லை. தினசரி நூற்றுக்கணக்கான விபத்துச் செய்திகளில் இதுவும் ஒன்றுதான் எனத் தோன்றியது. ஆனால் தனது இரு கைகளையும் தலைக்கு மேலாக வைத்தபடி குழந்தை ஆழ்குழாய் கிணற்றுக்குள் கிடக்கும் படம் வெளியான போது அது மனதைப் பிசையத் தொடங்கியது.
ஒற்றை அறைக்குள் விளையாட்டுக்காக குழந்தையை உள்ளே விட்டுக் கதவை அடைக்கும் போது அது அடையக் கூடிய தவிப்பை பார்த்திருப்போம். அம்மாவைத் தேடும் அதன் பதற்றத்தை புரிந்திருப்போம். இப்பொழுது அந்தக் குழந்தை என்ன செய்திருக்கும்? ஆரம்பத்தில் இருபத்தெட்டு அடி ஆழம். ஆழத்தின் இருட்டும் அது உண்டாக்கக் கூடிய பயமும் அந்தக் குழந்தைக்கு மனதில் என்னவெல்லாம் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும் என நினைத்த போது திகிலூட்டக் கூடியதாக இருந்தது. அதன் பிறகு குழந்தை இன்னமும் ஆழமாகச் சென்றுவிட்டது என்றார்கள். தொலைக்காட்சியின் பக்கமே செல்லக் கூடாது என முடிவு செய்து கொண்டேன். ஆனால் அவ்வப்பொழுது செய்தியைப் பார்க்கும் போது குழந்தை மீட்பு என்பது இழுத்துக் கொண்டே போனது.
இரவின் இருட்டும், பகலின் வெக்கையும், பாறைச் சூடும் குழந்தையை என்னவெல்லாமோ செய்திருக்கும். ஒரு கணம் வெயிலுக்குச் சென்று வந்தாலே இரண்டு வயதுக் குழந்தையின் உதடுகள் வறண்டு போய்விடும். பகல் முழுவதுமல்லவா அந்தக் குழந்தை பாறையின் சூட்டில் தகித்திருக்கும்? இந்த மீட்பு நடவடிக்கையில் முழுமையாக நம்பிக்கை இழந்த பிறகு தீபாவளியன்று காலையிலேயே உறங்கச் சென்றுவிட்டேன். இது மட்டும்தான் காரணம் என்றில்லை. ஆனால் இதுவொரு வகையிலான மன உளைச்சல். ஊடகங்கள் நம்மை அவதிக்குள்ளாக்குவதாகத் தோன்றியது. உறக்கத்தின் போது விதவிதமான கனவுகள் அலைகழித்தன. காய்ச்சலில் கிடப்பவனுக்கு வரக் கூடிய கனவுகள் அவை.
உறங்கி எழுந்த போதும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்கள் வருகிறார்கள், எம்பிக்கள் வருகிறார்கள், நடிகர்கள் கருத்துச் சொல்கிறார்கள் என ஊடகங்களுக்கு ஒரு வகையில் இது கொண்டாட்டமாகவே தெரிந்தது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெருநகர மருத்துவமனைகளில் எத்தனையோ உயிர்கள் தவித்துக் கொண்டிருக்கக் கூடும். அதைப் பற்றி எந்தச் செய்தியுமில்லை. அங்கே செயல்பட வேண்டிய அமைச்சர் நடுக்காட்டுப்பட்டியில் அமர்ந்திருக்கிறார். தவறில்லை. ஆனால் அடுத்தது என்ன என்ற கேள்வியிருக்கிறது அல்லவா?
நிகழ்ந்த விபத்தை கையாளுவதில் நம்மிடம் உள்ள திறன் பலனளிக்காமல் போய்க் கொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கும் போது விபத்தை ஏதோவொருவகையில் நாடகமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பதற்றம் ஒட்டிக் கொண்டது. செய்தியாகச் சொல்லப்படுவதை மனம் எளிதில் கடந்துவிடும். ஆனால் அதுவே காட்சிப்படுத்தப்படுவதை விட்டு விலகுவது அவ்வளவு சுலபமில்லை. அதைத்தான் ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. வெகுஜன மனநிலை என்பது வெகு எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியது. சிக்கலான விஷயங்களை அது பெரும்பாலான சமயங்களில் பொருட்படுத்தாது. ஆனால் எமோஷனலான சங்கதியொன்றை இறுக்கமாக பற்றிக் கொள்ளும். நடுக்காட்டுப்பட்டியிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
குழந்தை ஆழ்குழாய் துளையில் விழுந்த விபத்தை அறுபது மணி நேரத்திற்கும் மேலாக நேரலையில் காட்டி நம்மை உணர்ச்சிப்பூர்வமாக பிணைத்தல் அவசியம்தானா? அதனால் விளையக் கூடியது என்ன என்று எதுவும் புரியவில்லை. எங்கே தவறு நடந்தது? யார் தண்டிக்கப்பட வேண்டும்? இனியேனும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பதையெல்லாம் விட்டுவிட்டு அத்தனை கறைகளையும் நேரலை வழியாக அழித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இடையிடையே விளம்பரங்களை ஒளிபரப்பி வருமானத்துக்கு வழி பார்த்துக் கொண்டிருந்த ஊடகம், நம் மக்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கிடையே ஒரு உச்சுக் கொட்டுவதற்கான இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருந்தது.
எவ்வளவு பெரிய துக்கத்தையும் ஒரு நாளுக்கு மேல் மனதுக்குள் நிறுத்திக் கொள்ளும் மனநிலை நமக்கு எப்பொழுதோ போய்விட்டது. இருபத்து நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு நமக்கு வேறொரு பிரச்சினை தேவையானதாக இருக்கிறது. வேறொரு ட்ரெண்ட் அவசியமாகிவிடுகிறது. இம்மிபிசகாமல் அதுதான் இப்பொழுதும் நடக்கிறது.
உயிர் ஒன்று தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து சகல ஜீவன்களும் பதைபதைக்கின்றன. அது அடுத்தடுத்த நாட்கள் என நீளும் போதுதான் கைகளில் இறுகிப் பற்றியிருந்த ஒரு கண்ணாடிக் குடுவை மெல்ல மெல்ல நம்மையும் மீறி கீழே விழுவதைப் போல ஆகிறது. சிறுவனை மறந்துவிட்டு சமூகம் வழமை போல தமது இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. சிறுவன் நம் கண் முன்னால் இருந்து தூரமாக நகர்ந்து சிறு புள்ளியாகிக் கொண்டிருக்கிறான். அரசியல்வாதிகள் தமது திறமைக்கு ஏற்ப தமக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
வேடிக்கை பார்ப்பதைத் தவிர சாமானியர்கள் இதில் என்ன செய்துவிட முடியும்?
அமைச்சர்கள், எம்பிக்கள், அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசும் அங்கே குவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் என்ன நிகழ்ந்துவிட்டது? அந்தக் குழந்தைக்கும் அவர்தம் பெற்றோருக்கும் என்ன பலன்? குழிக்குள் விழுந்த குழந்தையை அறுபது மணி நேரம் தாண்டியும் மீட்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். கடுமையாகப் போராடுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்பொழுது விழுந்திருக்கும் சிறுவன் முதலில் விழுந்தவனில்லை. இவனே கடைசியுமில்லை. கடந்த பல வருடங்களாகவே குழந்தைகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இனியேனும் தடுக்கவும், விழுந்தால் மீட்கவும் என்ன செய்திருக்கிறோம் என்பதைத்தான் குரல் உயர்த்திக் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தத் தருணத்தை விட்டுவிட்டால் அடுத்ததாக வேறொரு சிறுவன் விழும் போது மீண்டும் இந்தத் தொடக்கப்புள்ளி பற்றியே யோசிப்போமே தவிர தீர்வு நோக்கி நகரவே மாட்டோம்.
4 எதிர் சப்தங்கள்:
//வேடிக்கை பார்ப்பதைத் தவிர சாமானியர்கள் இதில் என்ன செய்துவிட முடியும்?//
அரளி விதையை அரைத்து குடித்து சாவலாம்.
நேரடியாக ஒளிபரப்பு செய்தால் கமெண்டுகள் அதிரும், லைக் குகள் எகிரும்,
டிஆர்பி ரேட் உச்சம் தொடும்
நேரடி ஒளி பரப்பை அனுமதித்து இருப்பதே தவறு தான்
அருமையான எண்ணங்கள்
Only positive effect of the media coverage in this case was the pressure on the authorities to act. Whether the actions were effective or not is a different issue.
Post a Comment