Oct 18, 2019

அசுரன்

சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இளைஞனொருவன் அருகில் அமர்ந்திருந்தான். ‘எப்படிங்கண்ணா புக் ரிலீஸ் பண்ணுறது?’ என்று ஆரம்பித்தான். கவிதை எழுதுவானோ என்று நினைத்து சற்று தள்ளி அமர்ந்தேன். சாதியப் பெருமைகளை புத்தகமாக எழுதப் போகிறானாம். இப்படி நிறையப் பேர் சுற்றுகிறார்கள். கிடா வெட்டுவது கூட அவர்களுக்கு சாதியப் பெருமைதான். ‘என்ன மாதிரியான பெருமைகள்’ என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி கெளரவமாக இருந்தோம் என்று எழுதுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் குழப்பமாக இருந்தது.  உண்மையில் அவன் பெருமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது அன்றைக்கு அப்பட்டமாக வெளிப்பட்ட சாதிய வெறி. அக்கம்பக்கத்தில் கேள்விப்படும் நான்கைந்து சாதிகளைத் தவிர அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை. அவன் பேசுவது அத்தனையும் செவிவழிச் செய்தி- செவிவழி என்பதைவிட வாட்சாப் வழிச் செய்தி.

தமிழகத்தின் சாதியச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாத இளந்தலைமுறையினர் மிகப்பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேம்போக்காகத் தெரிந்ததெல்லாம் எங்கள் தாத்தா காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தங்களது அப்பன் காலத்தில் திமிர் பிடித்தவர்களாகிவிட்டார்கள் என்பதுதான். அவர்களை பழையபடி மீண்டும் அடக்கி வைப்பதுதான் தங்களின் வாழ்நாள் லட்சியமாகச் சொல்லிக் கொண்டு வாட்ஸாப்பில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள். சிலர் கைகளில் சாதியப் பெருமைகளைப் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுக்குள் குத்திக் கொள்கிறார்கள். 

இங்கே நிலம்-அரசியல்-சமூகம்- பொருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கான அரசியல், அரசியலுக்கான பொருளாதாரம், பொருளாதாரத்துக்கான நிலம் என எந்தவொன்றையும் இன்னொன்றோடு தனித்தனியாகவும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான் தமிழகத்தின் வரலாற்றின் ஒரு நுனியை எட்டிப்பிடிக்க முடியும். இத்தகைய விரிவான புரிதலானது பரவலாக, வெகுஜன மட்டத்தில் உண்டாகாமல் ‘சமத்துவ சமூகம்’ அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஆனால் அத்தகைய புரிதல்களுக்கான வாய்ப்புகளே உருவாக்கப்படுவதில்லை. இங்கே இது வரை நடந்த போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், சட்டங்கள் யாவும் பிற சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், ஆதிக்கம் செலுத்தினால் எதிர்த்து நில் என்பதையும் சாதித்திருக்கும் அளவுக்கு பரவலான மனநிலை மாற்றங்களை உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். 

ஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக புரையோடிக் கிடக்கும் சாதியக் கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பதே பெரிய சாதனைதான் என்றாலும் நாம் முன்னே பயணிக்க வேண்டியது வெகுதூரம் பாக்கியிருக்கிறது. 

சாதிய அடுக்குகள், அவற்றோடு பிணைந்திருக்கும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிலம் சார்ந்த கண்ணிகளை மேம்போக்காகவாவது புரிந்து கொள்ளாமல் சாதி வெறியேற்றுகிறவர்களுக்கு ஒரு கூட்டம் இரையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அசுரன் மாதிரியான படங்களின் தேவை உருவாகிறது. இன்றைக்கும் கூட சாதி வெறி அடங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன? நீறு பூத்த நெருப்புதான் அது. உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. ஆனால் துணிந்து எரிந்துவிடாது. எதிர்தரப்பினர் விழித்துக் கொண்டார்கள். படித்து விவரம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். மிரட்ட எத்தனித்தால் எதிர்ப்பார்கள். அவர்களின் இந்த எதிர்ப்புதான் சாதிய உணர்வு கொண்டவர்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது.

காலங்காலமாக அடங்கியே கிடந்தவர்களுக்கு அப்படி என்ன திமிரு என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கும்,  ‘அவர்கள் ஆடுகிற ஆட்டத்தையெல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா?’ என்று கண்மூடித் தனமாக கேள்வி கேட்கிறவர்களுக்கும் என்ன சொல்வது?  

கட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், ரவுடியிசம் என்றுதானே இருக்கிறார்கள் என்பதை பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். சாதிக்காரர்கள் நான்கு பேர் சந்தித்தால் இதைத்தான் பிரதானமாகப் பேசுகிறார்கள். பிற சாதிகளில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று கேட்டால் நடக்கும். ஆனால் அது அடுத்தவர்களை உறுத்தாது. அதுவே தாத்தா காலத்தில் செருப்பு கூட போட அனுமதியற்றவர்கள் இன்றைக்கு மிரட்டுகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றால் அது உறுத்தும். அதுதான் ஒரு தரப்பின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். ஆனால் பி.சி.ஆரின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. 

இங்கே என்னதான் சட்டம் இருந்தாலும் கூட ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்படுகிறார்கள். டி.எஸ்.பிக்கள் கூட மர்மமாகச் சாகிறார்கள். இத்தகைய செய்திகளை எவ்வளவு நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அதிகபட்சம் ஒரு வாரம். அந்த வாரத்து ஜுவி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் கட்டுரை வெளியானவுடன்  ‘இப்படியெல்லாம் செஞ்சாத்தான் பயமிருக்கும்’ என்பதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.


அசுரன் படம் பார்க்கும் போது படத்தோடு சேர்ந்து இப்படித்தான் ஏதோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

பூமணியின் வெக்கை, வெற்றிமாறன், தனுஷ், சுகா, ஜி.வி.பிரகாஷ் என எல்லோரும் கச்சிதமாகக் கலந்திருக்கிறார்கள். பொதுவாக, திரையரங்குக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் வண்ணமயமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். ஆடல், பாடல், கொண்டாட்டமாக இரண்டரை மணி நேரங்களைக் கழித்துவிட்டு வர வேண்டும் என்று நினைப்பேன். தமிழ் சினிமா நாயகர்கள் எதிரியை அடிக்க இடைவேளை வரை காத்திருக்க மாட்டார்கள். நான்காம் காட்சியில் விசிலடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுஷ் காத்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை ஏற்றியும் இறக்கியும் கூட்டியும் குறைத்தும் உருமாறும் தனுஷ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். 

முதல் பத்தியில் குறிப்பிட்ட, புத்தகம் எழுத விரும்பும் பையனைப் போலவே பாரம்பரியத்தைக் காட்டுகிறேன், சமூகக் கட்டமைப்பை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று குறிப்பிட்ட சாதியப் பெருமைகளை வண்ண வண்ணக் காட்சிகளுடன் முன் வைத்து ஹீரோயிசத்தை அளவுக்கதிமாகத் தூக்கிப் பிடித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிற படங்களின் காலத்தில் அசுரன் தேவையானதாக இருக்கிறது. அசுரன் படத்திலும் கூட சில நம்ப முடியாத காட்சிகள் உண்டு. ஒற்றை ரூபாய் பெரிய பணமாக இருந்த காலத்தில், செருப்பு அணியவே அனுமதிக்கப்படாத காலத்தில் - முதலாளிக்காக சாராயம் காய்ச்சுகிறவன்- அவனது திறமை என்னதான் மதிக்கப்பட்டாலும் ஊருக்குள் அவ்வளவு கெத்தாக அனுமதித்த ஊரா நம் ஊர் என்று கேள்வி எழாமல் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.

யதார்த்தத்தைப் பேசுவதாகக் கருதி வன்மத்தை ஊட்டாமல், வெறுப்பை ஏற்றாமல் ‘நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சிக்கலின் ஒரு பிடி இது’ என்று காட்டுகிற அசுரன் போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். அப்படி வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள்//
அங்கொன்றி இங்கொன்று என இருக்கலாம். ஆனால் பி.சி.ஆர் வழக்கு பதிய வைப்பது அத்தனை எளிதல்ல.
பி.சி.ஆர் பதியப் படாமல் பஞ்சாயத்து பேசி முடித்து வைக்கப் படும் வழக்குகளையும்,பி.சி.ஆர் தவறாக பயன்படுத்தப் படும் வழக்குகளையும் விகிதாச்சார முறையில் கணக்கிலெடுத்தால் தவறாக பயன்படுத்தப் படும் வழக்குகள் 1% கூட இருக்காது.