Sep 23, 2019

ஜெயமோகனிசம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது’ கட்டுரையின் இணைப்பை அனுப்பி வைத்திருந்த நண்பர் ‘ஓரளவுக்கு நம்பகமானவர் என்று நம்பப்பட்ட எழுத்தாளரின் மாபெரும் வீழ்ச்சி. இந்துதுவர்கள் இவரை விட்டு விலகி இவரை கடுமையாக எதிர்த்த போது கூட இவரின் மேல் நம்பிக்கை இருந்தது’ என்று பின்குறிப்பையும் அனுப்பியிருந்தார். வலதுசாரி சிந்தனையுடைய நண்பர் அவர். ஏற்கனவே ஜெமோவின் இக்கட்டுரையை வாசித்திருந்தேன். நண்பருக்கு எந்த பதிலையும் அனுப்பவில்லை. 

ஜெயமோகனை யாராவது விமர்சிக்கும் போது அமைதியாக இருந்து கொள்வதுதான் சரி என்கிற நிலைப்பாடு உடையவன் நான். இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் தனிமனித விருப்பங்களும் இருக்கிறது. ஆனால் நாம் விரும்புகிறவற்றை மட்டுமே ஓர் எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புவது எப்படி சரி ஆகும்? எனக்கு என்று சில சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைகளையும் சித்தாந்தங்களையும் விமர்சித்து ‘இந்த ஆளு இருக்காரே’ என்று அவர் மீது கடுமையாகக் கோபம் வருமளவுக்கு எழுதிவிடுவார். ஆனால் அதற்காக அவரது அடுத்த கட்டுரையை வாசிக்காமல் விடுவதில்லை. அது அவரது நம்பிக்கை, அவரது சித்தாந்தங்கள் சார்ந்த விஷயம். அப்படித்தான் எழுதுவார். அவர் எழுதியதிலிருந்து ஒட்டியும் வெட்டியும் புரிந்தும் தெளிந்தும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதானே நமக்கான வளர்ச்சியாக இருக்கும்? எழுத்தாளன் அதைத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்.

அடுத்தவர்கள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல்வேறு தளங்களிலும் களங்களிலும் புதிய சாளரங்களை, சிந்தனைகளைத் திறப்பதில் தமிழ் எழுத்துலகில் ஜெமோ மிக முக்கியமானவர் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகம்.

தமிழில் எழுதியவர்கள் அல்லது எழுதிக் கொண்டிருப்பவர்களில் ஜெயமோகன் அளவுக்கு சகல தரப்பினரிடமும் திட்டு வாங்குகிறவர்கள் வேறு யாரும் இருக்க சாத்தியமில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள்/கருத்தாளர்கள்/சிந்தனையாளர்கள் ஒரு தரப்பிடமிருந்துதான் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். ஜெயமோகன் அப்படியில்லை. திடீரென்று ஒரு பக்கம் அடி வாங்கிக் கொண்டிருப்பார். இன்னொரு தரப்பு சிலாகித்துக் கொண்டிருக்கும். சில நாட்கள் கழித்துப் பார்த்தால்  சிலாகித்துக் கொண்டிருந்த வேறொரு தரப்பு தாக்கிக் கொண்டிருக்கும். தாக்கிக் கொண்டிருந்தவர்கள் சிலாகித்துக் கொண்டிருப்பார்கள்.  அடுத்த சில நாட்களில் இன்னொரு தரப்பு. இப்படி 365 நாட்களும் 360 டிகிரியில் சகலராலும் தூற்றப்பட்டும் போற்றப்பட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் அவராக மட்டுமே இருக்க முடியும். அவர் ஏதாவது அலட்டிக் கொள்கிறாரா? ‘ஏய்..ஏய்..நாங்க வாங்காத அடியா?’ என்று அடுத்த கட்டுரையை எழுதத் தொடங்கிவிடுகிறார்.

உண்மையில் ஜெயமோகனின் உழைப்பும்,  வீச்சும் அபாரமானது. அதனால்தான் அவர் எழுதுவது தம்முடைய சித்தாந்தத்துக்கு எதிரானது என்றோ அல்லது தம்முடைய எண்ணங்களுக்கு மாறுபாடானது எனத் தோன்றும் போது பதறுகிறார்கள். விதவிதமான எதிர்ப்புகளையும் காட்டுகிறார்கள்.  ‘அவருக்கு அஜெண்டா இருக்கிறது’,‘அவர் ஒரு விஷக்கிருமி’ என்றெல்லாம் வசைபாடுகிறார்கள். இப்படியெல்லாம் விமர்சிப்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழில் எழுத்தாளர்களை வைத்து பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்பதெல்லாம் அபத்தமான வாதம். எந்தச் சித்தாந்தத்தையும் எழுத்தாளர்களை வைத்து பரப்பிவிட முடியாது. சிறு வட்டத்தில், மெல்லிய சலனத்தை உண்டாக்குவதைத் தவிர பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். ஜெயமோகன் நிறைய வாசிக்கிறார், பல தரப்பிலும் விவாதங்களை மேற்கொள்கிறார். ஒவ்வொன்றும் குறித்தும் தம்முடைய பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். தாம் கருதுவதிலிருந்து ஒரு விவாதத்தை அவரால் முன்னெடுக்க முடிகிறது. அவரைத் தொடர்ச்சியாக வாசிக்கிறவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

பிரச்சினை என்னவென்றால் ‘ஜெயமோகன் நம்ம ஆளு’ என்கிற நம்பிக்கையில் அவரைப் பின் தொடர்கிறவர்களை திடீரென்று கைவிட்டுவிடுகிறார். கீழே விழுந்தவர்கள் ஒரு கணம் அதிர்ச்சியாகி பிறகு கதறுகிறார்கள். கண்டபடி திட்டுகிறார்கள்.  சிலர் மற்றொரு வகையினர். தமது சித்தாந்தத்துக்கு எதிராக ஜெயமோகன் ஒரு கட்டுரையோ, பத்தியோ, வரியோ எழுதியிருப்பதை யார் மூலமாகவோ தெரிந்து கொண்டு அந்த ஒரு பத்தியை மட்டும் படித்துவிட்டு ‘எனக்குத் தெரியும் இந்த ஆளைப் பத்தி’ என்று பாட்டு பாடுகிறவர்களாக இருப்பார்கள். அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதியது பற்றியெல்லாம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஏதாவதொரு முத்திரை குத்தி திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். 

தாம் நினைப்பதை எந்தத் தயக்கமுமில்லாமல் சொல்லிவிட்டு ‘யாரோ கத்திட்டு போகட்டும்’ என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார் என்கிற விதத்தில் எனக்கு ஜெயமோகனை மிகப் பிடிக்கும். அவரிடம் உண்மையிலேயே விவாதம் செய்ய விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் சிரத்தையாக பதில் எழுதுகிறார். மற்ற எந்தவிதமான விமர்சனங்களையும் - ‘அந்த ஆளு என்ன அத்தாரிட்டியா?’ என்றெல்லாம் பொதுவெளியில் அவரை விமர்சித்துக் கொண்டிருப்பவர்களை சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார். வெளியிலிருந்து பார்க்கிறவர்கள் ‘இவர் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடுகிறார்’ என்று சொல்லிவிடுகிறார்கள். விமர்சனங்களைக் கடந்து போதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அப்படி அவர் கடப்பதால்தான் சகலவிதமான தாக்குதல்களும் ஏவப்படுகின்றன. ‘சினிமாவுக்கு கதை எழுதுகிறார்’ என்பதைக் கூட ஏதோ கொலைக்குற்றம் போலச் சொல்வார்கள். 

ஜெயமோகனை பாராட்டி எழுதுவதும் வம்புதான். ‘ஓ..இவன் ஜெமோ ஆளா’ என அவர் அடி வாங்கும் போதெல்லாம் நாமும் அடி வாங்க நேரிடும்.  அவர் தாங்குவார். நான் வீக் பாடி. 

ஜெயமோகனின் எழுத்துக்கள் பாம்பு சட்டையை உரிப்பது போலத்தான். அவரது ஒரு கட்டுரை அல்லது அவரது ஒரு காலகட்டத்து மனநிலையை மட்டும் வைத்துக் கொண்டு ‘ஜெயமோகனின் வீழ்ச்சி’ என்று சொல்வதில் அர்த்தமில்லை. உலகமயமாகிவிட்ட நுகர்வுக் கலாச்சார காலகட்டத்தில், இன்பர்மேஷன் யுகத்தில் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், கொள்கையும், சித்தாந்தமும் நீரோட்டம் போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்தால் அது மட்டுமே முழுமையாகச் சரி என்று இறுகிப் பற்றிக் கொள்ளுதல் அவசியமுமில்லை. என்னால் நம்பப்படுகிறவற்றையெல்லாம் அவர் விமர்சிக்கும் போதும் கூட ஜெமோவை முழுமையாகப் பின் தொடர்கிறேன். அவர் நம் காலத்தின் பெரும் சிந்தனையாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. பாம்பு சட்டை உரிப்பதைப் போல- வெவ்வேறு மனவோட்டங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டேயிருப்பதால் அவரை பின் தொடர்வதை நிறுத்திக் கொள்வது என்பது என்னளவில் சாத்தியமில்லை. 

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அவர் நம் காலத்தின் பெரும் சிந்தனையாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.//

சேக்காளி said...

//பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது’//
5000 ஓவா டெபாசிட் கட்டி வாங்கியிருந்த இண்டர்நேசனல் ரோமிங் போஸ்ட் பெய்ட் லைன் ஐ ஒரு மாசம் 500 ஓவா பில் கட்டலேங்கறதுக்காககேன்சலே பண்ணிட்டாங்க. (அதுக்கு முன்னால் வரை மாத வாடகை கட்டலேன்னா அவுட் கோயிங் கட் பண்ணி அப்புறம் இன்கமிங் தான் கட் பண்ணியிருக்காங்க.)
"நான் வெளிநாட்ல இருக்கேன். ரீஆக்டிவேட் பண்ண என்ன செய்யணும்?" ன்னு கேட்டா 'நீங்க நேர்ல வந்து புதுசா எழுதி குடுத்து அந்த எண் (சிம்) ஐ வாங்கிக்காங்க' ன்னாங்க.
சரி அப்டின்னு ஊருக்கு வந்த நேரத்துல போயி கேட்டா
"அதே நம்பர் வேணும்னா கோயம்புத்தூர் ல இருந்து தான் ஆர்டர் வரணும்" ன்னாங்க. சரி மெயில் அனுப்பி கேளுங்க ன்னா 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' ன்ன மாதிரி இன்னைக்கு அனுப்புனா நாளைக்கு தான் ரிப்ளை வரும்னு கெத்தா சொன்னாங்க. "சரி அதையாவது செஞ்சு தொலைங்க" ன்னேன். அதுக்கு ப்ரீ பெய்டு ன்னா தான் நாளைக்கு பால். போஸ்ட் பெய்ட் ன்னா நாலு நாளுக்கு அப்புறமா தான் பால் ன்னாங்க.
"எப்பா! சாமியளா நான் பொண்ணு பாக்க கூட இப்பிடியெல்லாம் அலைஞ்சது இல்ல. நீங்க பாலே ஊத்த வேண்டாம் நான் கட்டுன 5000 ஓவா டெப்பாசிட் ஐ யாவது திரும்ப தாங்க" ன்னேன்.
அதுக்கு, "மாடி ல ஒரு ஆப்பிசர் இருக்காரு. அவருட்ட போயி எழுதி குடுங்க" ன்னாங்க
சரி ன்னு மாடிக்கு போனேன். அங்க ஒரு ஆளு பிரிண்டர ஒக்கிட்டுட்டு இருந்தாரு ஒத்தையில அவரு மட்டும் தான் இருந்தாரு. அவருட்ட வெவரத்த சொன்னேன். "அப்டியா சங்கதி ஒரு நிமுசம் இருங்க" ன்னுட்டு போயி கைய கழுவிட்டு வந்து ஒரு கிளாசு ல தண்ணிய ஊத்தி "குடிங்க" ன்னு குடுத்தாரு. "ஐயா நான் கட்டுன பணத்த வாங்க எழுதி குடுக்கணும். அதுக்கு யாரை பாக்கணும்" ன்னு கேட்டேன். "எங்கிட்ட தான் சார்" ன்னு பதில் சொன்னாரு. ஆத்தாடி நம்மளயும் சார் ன்னு சொல்லிப்புட்டாரே ங்கற ஆச்சரியம் ஒரு பக்கம். நம்மள சார் ங்கறாரே அவரு எப்படி ஆப்பிசரா இருப்பாருங்கற சந்தேகம் இன்னொரு பக்கம் ஓடுது. அப்ப அவரே ஒரு தாளை எடுத்து எழுதி அங்குன ஒண்ணு இங்குன ஒண்ணு ன்னு ஒரு அஞ்சாறு கையெழுத்தையும் வாங்கிட்டு "தபால் ல செக் கு வீட்டுக்கு வந்துரும் போயிட்டு வாங்க" ன்னாரு.
இந்த எழுத்து வேல நடந்துட்டு இருந்த நேரத்துல "ஏஞ்சாமி இந்த ரிலையன்ஸ் காரன் சிம் மு கேட்ட அடுத்த 5வது நிமுசத்துலயே அத கை ல குடுத்து அதுக்கு அடுத்த அரை மணி நேரத்துல கனேசன் னும் குடுத்துருதானே நீங்க மட்டும் ஏன் நாளைக்கு பாலு நாலு நாளைக்கு அப்புறமா பாலு ன்னு யாவாரம் பண்ணுறீங்க?" ன்னு கேட்டேன்.
அதுக்கு அவரு, "நாங்க ஒழுங்கா யாவாரம் பண்ணுனா தனியாரு கம்பனி காரனுகளுக்கு நிரந்தரமா பாலு தான்.அதனால 'நீங்க யாவரமே பாக்க வேண்டாம்' ன்னு எங்களுக்கு மேல் இடத்துல இருந்து வாய் மொழியா உத்தரவு போட்டுருக்காங்க சாமி" ன்னாரு.
"ரொம்ப சந்தோசம் சாமி" ன்னு கையை குலுக்கிட்டு வந்துட்டேன்.
'ஒத்த சிம்' முக்கே என்னால இவ்ளோ எழுத முடியுதுன்னா அங்குன வேல பாத்த ஜெமோ "பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது" ன்னு எழுதுனது ரொம்ப கொறைவு தான்.

Saravanan said...

உங்கள் கருத்தோடு முழுவதும் உடன்படுகிறேன்,

சரவணன்
சென்னை

Atheist said...

பொதுத்துறை நிறுவனங்கள் கைவிடப் படுவதைப் போலவே "public limited companies listed in stock market" ம் கைவிடப் படுகின்ற்ன என்பதுதான் உண்மை. இத்தகைய கம்பெனிகள் நட்டத்தில் போனால் யாரையும் குறை சொல்ல இயலாது. பிரைவேட் கம்பெனிகளில் அத்தகைய செயல்பாடுகள் இருக்கலாகாது! டெல் நிறுவனத்தை அதனால்தான் மைக்கேல் டெல் பிரைவேட்டாக மாற்றியமைத்தார்!

உண்மையிலேயே வல்துசாரி பொருளாதாரத்தை மெச்சுபவர்கள் இத்தகைய நிலையில் செயல்படும் பப்ளிக் லிமிடட் கம்பெனிகளின் ஊழலை அம்பலப் படுத்தவும் செய்ய வேண்டும்! ஆனால் அதியமான் முதற்கொண்டு யாரும் இதைப் பற்றி பேசுவதே இல்லை. அவர்கள் கண்ணுக்கு தெரிவது எல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே!

இன்றைய வலதுசாரிகள் ஊழலில் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல. உண்மையான வலதுசாரிகள் நேர்மையானவர்கள். கொள்கைகள் மட்டுமே வேறே தவிர அவர்கள் உண்மையான் உழைப்பாளிகள் மற்றும் பேராசைப் படாதவர்கள். ஆனால் அப்படி யாருமே இப்போது இல்லை.

The capitalists nowadays are benefiting from rigged capitalism and they won't support a real capitalistic model unless they make a lot of money.

ashok said...

https://www.financialexpress.com/industry/air-india-disinvestment-on-fast-track-govt-aims-to-sell-bpcl-container-corp-too-by-march-2020/1714989/

Samkev said...

நம் காலத்து ஆக சிறந்த சிந்தனையாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனக்கும் இதில் உடண்பாடு உண்டு.