சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் ‘என்னதான் அறிவிருந்தாலும் சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லையெனில் நீங்கள் கற்கால மனிதரைப் போலத்தான்’ என்று பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம். இப்பொழுதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையெனில் அட்டைகளை எந்திரத்தில் உரைக்கவே வேண்டியதில்லை; பக்கத்தில் கொண்டு போனாலே போதும் என்று சொன்னார்கள். யாருடைய கடனட்டையாவது திருட்டுப் போனால் அந்த ஆள் சுதாகரிப்பதற்குள் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில் பத்துக் கடைகளில் சுருட்டிவிட முடியாதா என்ற கேள்வி உண்டானது. பத்து நிமிடங்கள் ஒதுக்கி இணையத்தில் தேடினால் தெரிந்து கொள்ளலாம். ‘சரி தெரிய வரும் போது தெரிஞ்சுக்குவோம்’ என்று விட்டுவிட்டேன். இதனை ஓர் உதாரணத்திற்காகச் சொல்கிறேன்.
தொழில்நுட்பம் நம்மைவிடவும் படுவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்டத்திலாவது சலித்து நிற்கும் கணத்திலிருந்து நாம் முந்தைய தலைமுறை ஆள் ஆகிவிடுவோம். அதன் பிறகு எந்தக் காலத்திலும் அதை எட்டிப் பிடிக்கவே முடியாது.
தகவல் தொழில்நுட்பம் மாதிரி மாறிக் கொண்டேயிருக்கும் துறைகளில் பணியாற்றும் நண்பர்கள் இதில்தான் கவனமாக இருக்க வேண்டும். சற்றே ஏமாந்தாலும் ‘பழைய ஆட்கள்’ ஆகிவிடுவோம். அதுவும் பதினைந்து இருபது வருட அனுபவங்கள் இருக்கிறது என்று சொல்கிறவர்கள் பல வீட்டு பிச்சை உணவைக் கலந்துண்டு வாந்தி எடுக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஒன்றில் ஆழமாகவும், பிறவற்றில் மேம்போக்காகவாவது அறிவிருந்தால்தான் வேலைச் சந்தையில் நம் மதிப்பைக் கூட்டும். அப்படி எல்லாவற்றிலும் வாய் வைத்த நாய் என்பதுதான் நம்மை தப்பிக்கவும் வைக்கும்.
‘சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்தான் என் ஏரியா’ என்று வெகு காலம் நினைத்துக் அதை மட்டுமே படித்துக் கொண்டிருந்தேன். இன்னொரு பக்கம் க்ளவுட் பயங்கரமாக சிறகு விரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதே சுதாரித்து க்ளவுடின் அடிப்படை அம்சங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என விட்டுவிட்டேன். திடீரென்று இனி சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்டும், க்ளவுட்டும் இணையும் என்றார்கள். தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. ஒவ்வொரு தொழில்நுட்பமும் இப்படித்தான். ஏதாவதொரு கட்டத்தில் இன்னொரு நுட்பத்துடன் இணையும். வடிவேலு சொல்வது போல- ரயில் நிலையத்து தண்டவாளங்களைப் போல எப்பொழுது கட்டிப்பிடிக்கும், எப்பொழுதும் பிரியும் என்றே தெரியாது. அதனால், புதிய சொற்கள் காதில் விழும் போதே ‘அது என்ன’ என்கிற ஆர்வக்கோளாறு வந்துவிட்டால் இன்னமும் கால ஓட்டத்திலேயே இருக்கிறோம் என்று பொருள்.
பிக்டேட்டா, க்ளவுட் என்றெல்லாம் கேள்விப்படும் போது சர்வதேச சஞ்சிகைகளில் வரும் சில கட்டுரைகளை வாசித்தால் ஓரளவுக்கு பாதை புலப்பட்டுவிடும்.
ஆரக்கிள் ஆப்ஸில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் ‘இதில்தான் பணியாற்றுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். அப்படிக் குறிப்பிடுவது அதே துறையில் பணியாற்றும் சில நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஏதேனும் சந்தேகமெனில்- கூச்சமேயில்லாமல் அழைத்துக் கேட்பேன். சமூக வலைத்தளங்களின் பயனே அதுதானே?
இப்பொழுது டேட்டா அனலிடிக்ஸ் துறையிலும் சில நண்பர்களைப் பிடித்து வைத்திருக்கிறேன். ஜெய்சங்கர் எக்ஸெல் புலி. பூபதியும் அதே மாதிரிதான். மண்டை காயும் போது அழைத்துப் பேசினால் ‘அனுப்புங்கண்ணா முடிச்சு அனுப்புறேன்’ என்று வாங்கி வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். கொச்சின் ராதாகிருஷ்ணன் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அவரது மகன் ஐஐடி சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதாகிருஷ்ணன் இன்னமும் படிப்பின் மீதான மோகம் குறையாமல் பிக்டேட்டாவில் ஐஐஎம்மில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். செம மண்டை. ஒரே பிரச்சினை அவர் சொல்வதெல்லாம் தலைக்கு மேல் வெள்ளம் போவது போலவே இருக்கும்.
கடந்த ஒரு வருடத்தில் பிக் டேட்டா, டேட்டா அனலிடிக்ஸ் ஆகியவற்றில் ஒரு கைப்பிடி அளவுக்குக் கூட கற்றுக் கொள்ளவில்லைதான் என்றாலும் நம் பணி சார்ந்த, துறை சார்ந்த நெட்வொர்க்கை அமைத்து வைத்துக் கொள்வது நம்மைக் கூர்படுத்திக் கொள்ள உதவும் என்பது நன்கு புரிந்திருக்கிறது.
வாசிப்பது, நட்பு வட்டாரத்தை விரிவாக்கம் செய்வது என எல்லாவற்றையும் விட இரண்டு முக்கியமான இணைய தளங்கள் இருக்கின்றன. சுயகற்றலுக்கு உதவக் கூடிய தளங்கள்.
வெறுமனே அலசிப்பாருங்கள். இந்தத் தளங்களில் கிட்டத்தட்ட அனைத்துத் துறை சார்ந்த படிப்புகளும் இருக்கின்றன. சான்றிதழ் தேவையெனில் காசு கொடுக்க வேண்டும். அறிவை மட்டும் வளர்த்துக் கொள்வதாக இருந்தால் இலவசம்தான். பெரும்பாலும் எந்த நிறுவனத்திலும் சான்றிதழ்களை மதிப்பதேயில்லை. ‘தெரியுமா? தெரியாதா?’ என்று மட்டும்தான் கேட்கிறார்கள். அதனால் சான்றிதழ்கள் அவசியமேயில்லை.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றும் சங்கர் என்றொரு நண்பர் ‘இதை நிசப்தத்தில் எழுதுங்க’ என்று வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் சில நண்பர்களிடம் இத்தளங்களைப் பற்றித் தெரியுமா என்று கேட்டால் பலரும் தெரியவில்லை என்றே சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை என்றில்லை ஆசிரியர்கள் உட்பட அத்தனை பேருக்கும் பயன்படும் தளங்கள் இவை.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றும் சங்கர் என்றொரு நண்பர் ‘இதை நிசப்தத்தில் எழுதுங்க’ என்று வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் சில நண்பர்களிடம் இத்தளங்களைப் பற்றித் தெரியுமா என்று கேட்டால் பலரும் தெரியவில்லை என்றே சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை என்றில்லை ஆசிரியர்கள் உட்பட அத்தனை பேருக்கும் பயன்படும் தளங்கள் இவை.
இரண்டு தளங்களிலும் கணக்கு வைத்திருக்கிறேன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன். முதலில் இத்தளங்களில் என்ன இருக்கின்றன என்று அலசி ஆராய்ந்துவிட வேண்டும். பிறகு தமக்கு பொருத்தமான, விருப்பமான பாடங்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதன் பின்னர் ‘எப்பொழுது படிக்க போகிறோம்’ என்கிற திட்டமிடலைச் செய்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு, காணாத நாய் கருவாட்டைக் கண்டமாதிரி எல்லாவற்றையும் மேயத் தொடங்கினால் உருப்படியாக எதையுமே படித்து முடிக்க மாட்டோம்.
சமீபத்தில் ஒருவர் ‘எங்கீங்க எனக்கு நேரமே இல்லை’ என்றார். ஆனால் இராத்திரி ஒரு மணிக்கு ஃபேஸ்புக்கில் ஆன்லைனில் இருக்கிறார். நேரமெல்லாம் நாமாக ஒதுக்கிக் கொள்வதுதான். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். கடலலளவுக்குக் கற்றுக் கொள்ளலாம். ‘அப்புறம் ஏன் கைப்பிடி அளவுக்குக் கூட நீ கற்றுக் கொள்ளவில்லை?’ என்று குறுக்குசால் ஓட்டாமல் அறிவை வளர்த்துக் கொள்ளவும். ஆமென்!
5 எதிர் சப்தங்கள்:
https://learning.oreilly.com
50 டாலர் மதிப்புள்ள புத்தகங்கள் எல்லாம் 10 நாளைக்கு இலவசம் (அதற்குள் உங்களுக்கு தேவையான புத்தகத்தை வாங்குவது/பிரதி எடுக்க வேண்டியது உங்கள் விருப்பம்)
one more good habit is read more technical content from different technical blogs and keep all the blogs at one place like Feedly.com
udemy is another good site with lots of courses.
Dear Mani, Beautiful artical thanks for your insights in simple language. Please do write more
about working professional lives.Very impressive.
Regards,
Manimaran.N.S - Dubai - UAE(Sr.SCM-Production IT Consultant)
Very good article.
Post a Comment