Jul 18, 2019

அஸ்திவாரம்

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் ஊரக நூலகங்களின் நிலைமை எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பல  ஆண்டுகாலமாக நூலகர்கள் நியமனமில்லை. புத்தகங்களின் கொள்முதல் சரியாக இல்லை. பல நூலகக் கட்டடங்கள் சீரழிந்து கிடக்கின்றன. எந்த ஊரிலும் செல்போனை நோண்டியபடி குட்டிச்சுவரில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள்தான் அதிகமே தவிர நூலகங்களில் படிப்பதற்கு வாசகர்களும் இல்லை. இந்த லட்சணத்தில் பள்ளிகளை எல்லாம் நூலகங்களாக மாற்றுகிறோம் என்பது எவ்வளவு அபத்தமான அறிவிப்பு? பள்ளிக்கூடத்தை மூடுவது என முடிவு செய்துவிட்டார்கள். எப்படி அறிவிப்பது என்று யோசிக்கும் போது கூட இருக்கும் யாரோ ஒருவர் ‘இப்படிச் சொன்னால் பயங்கரமாகக் கைதட்டுவார்கள்’ என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். 

பிற துறைகளில் நடக்கும் அக்கிரமங்கள், அபத்தங்கள் சமூகத்தின் மீது உருவாக்கும் நேரடி பாதிப்பைவிட கல்வித்துறை அபத்தங்கள் கடுமையான விளைவுகளை உண்டாக்கக் கூடியவை.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லையெனில் அரசாங்கம் செய்ய வேண்டியது பள்ளிகளை மூடுகிறோம் என்று அறிவிப்பதுதானா? அரசிடம் இல்லாத புள்ளி விவரங்களா? ஒவ்வொரு சிற்றூரிலும் எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரியும். எவ்வளவு பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று தெரியும். பக்கத்திலேயே இருக்கும் அரசுப்பள்ளியில் சேராமல் வேறு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றால் என்ன காரணம் என்று அலசிக் கண்டறிய எவ்வளவு நாட்கள் ஆகும்? கல்வித்துறை அதிகாரிகளுக்கு புள்ளிவிவரங்களை வாங்குவது மட்டும்தான் வேலையா? அவர்களிடம் இதே இரண்டாயிரம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன வழி என்று விவரங்களைக் கேட்க முடியாதா? அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் சரியா என்பதைச் சரிபார்க்க ஒரு குழுவை அமைக்கலாம்.

இப்படி அலசத் தொடங்கினால் ஆயிரம் காரணங்கள் அடுக்கப்படக் கூடும். ‘அங்க போனா இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க’ என்பது தொடங்கி ‘தனியார் பள்ளியில் படிக்க வைப்பது சமூக அந்தஸ்து’ என்பது வரைக்கும் வரிசையாக அடுக்கியிருக்கக் கூடும். அதில் ஒவ்வொன்றாகக் களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்தான் அமைச்சகமும், அமைச்சரும், அதிகாரிகளும் இருக்கிறார்களே தவிர மூடிவிட்டு தனியாருக்குத் தாரை வார்க்க இல்லை. அரசுப்பள்ளிகளை மூடுவது என்பது நேரடியாக தனியார் பள்ளிகளில் சேர்க்கையை நிரப்புவதற்கான நடவடிக்கைதானே?

ஒருவேளை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை என்றால் இடமாற்றம் செய்து, பதவி உயர்வை நிறுத்தி வைத்து, சம்பள உயர்வை நிறுத்தி என மிரட்டி வழிக்குக் கொண்டு வர முடியாதா என்ன? சங்கம் சேர்த்துப் போராடுவார்கள் என்பதெல்லாம் மொன்னைச் சாக்கு. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போராடிய ஆசிரியர் சங்கங்கள் எப்படி அடிபணிய வைக்கப்பட்டன என்பதை நாமும்தானே பார்த்தோம்? செயல்படாத ஆசிரியர்களை, தங்களை தரம் உயர்த்திக் கொள்ளாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. அப்படியே கேட்டாலும் மக்களின் ஆதரவு இருக்கப் போவதில்லை. 

இவற்றையெல்லாம் நாம் சொல்லித்தான் அரசாங்கத்துக்குத் தெரிய வேண்டுமா என்ன? அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். 

கார்போரேட் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன? ஒவ்வொரு வருடமும் பணியாளர்கள் எப்படி செயலாற்றினார்கள் என்று பார்க்கிறார்கள். அவர்களின் செயலுக்கு ஏற்ப ஊதிய உயர்வு; தகுதியை உயர்த்திக் கொள்ளாத பணியாளர்களுக்கு சில தேர்வுகள் வைத்து வாய்ப்பு வழங்கப்படுகின்றன.  அப்படியும் ஒத்து வராத ஆட்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இதில் ஐம்பது சதவீதத்தையாவது கல்வித்துறையில் செயல்படுத்த முயற்சிப்பதுதானே அரசாங்கத்தின் வேலையாக இருக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளை எப்படி தரமுயர்த்தலாம், சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு ‘வாத்தியார்களுக்கு சம்பளம் அதிகம்’ என்பது மட்டுமே கல்வி அமைச்சரின் கண்களை உறுத்துவது துரதிர்ஷ்டம்தான். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லி அரசு ஆசிரியர்களைச் சமூகத்தின் எரிச்சலுக்குள் தள்ளுவதை நிச்சயமாக ஒரு நீண்டகால நோக்கிலான திட்டமிடல் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசுப்பள்ளிகள் மோசம்; அரசு ஆசிரியர்கள் மீதான பொதுமக்களின் எரிச்சல் என பெரும்பான்மைச் சமூகத்தை அரசுக் கல்விக்கு எதிராக மடை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் நவோதயா பள்ளிகள், சி.பி.எஸ்.ஈ முதலான மத்திய அரசின் கல்வித்திட்டப் பள்ளிகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்பதும், மாநில அரசிடமிருந்து கல்வியானது முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதற்கான திட்டமிடல்கள்தான் இவையெல்லாம் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

தேசம் முழுமைக்குமான ஒரே கல்வி,  ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதையெல்லாம் இத்தகைய அறிவிப்புகளோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை மூடுகிறோம்’ என்று அறிவிப்பது அரசுக்கல்வியை குழி தோண்டி புதைப்பதற்கான முதல்படி. இதற்கு வெவ்வேறு பெயர்களைச் சொல்கிறார்கள். குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒன்றாக்குகிறோம்; பணி நிரவல் மூலம் ஆசிரியர்களை இடமாற்றுகிறோம்- இப்படி எல்லாமே சல்ஜாப்புதான். அத்தகைய சால்ஜாப்புகளில் ஒன்றுதான் பள்ளிகளை நூலகங்களாக மாற்றுகிறோம் என்பது. 

யாரோ இயக்குகிறார்கள். அறுபதாண்டு காலமாக கட்டமைக்கப்பட்ட தமிழகக் கல்வித்துறையின் உள்பக்கத்தைச் சுரண்டி பொக்கையாக மாற்றுவதற்கான திட்டமிடலுக்கான முகமாக கல்வியமைச்சர் இருக்கிறாரோ என்று பதற்றமில்லாமல் இல்லை. கவனித்துப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் - கடந்த மூன்றாண்டுகளாக கல்வித்துறையிலிருந்து வெற்று அறிவிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும்’ என்பதை நிச்சயமாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வாக்கியத்தை மேடையில் நீங்கள் ஆக்ரோஷமாகச் சொல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள். கூட்டம் கைதட்டுவதாக உணர முடிகிறதா? அவ்வளவுதான். அந்தக் கணத்துக்கு கைதட்டு வாங்கினால் போதும். ஆனால் பின்னணியில் ஏதோ நடந்து கொண்டிருக்கும். 

தமிழகத்திலேயே சிறப்பாகச் செயல்படும் துறை கல்வித்துறைதான் என்று பலூன் ஊதப்பட்டுக் கொண்டேயிருந்ததன் பின்னணியும் இதுவாகத்தான் இருக்க வேண்டும். மிகப்பெரிய மாற்றங்களும், புரட்சியும் கல்வித்துறையில் நடப்பதாக ஊடகங்கள் வழியாக பிம்பத்தை உருவாக்கி, இன்னொரு பக்கம் மிக வேகமாக தமிழகக் கல்வியின் அஸ்திவாரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

4 எதிர் சப்தங்கள்:

Asok said...

We have to agree that people does not have any responsibility especially government employees, they are doing services. Here people means including me. Government school disaster happened not just within few years, it has been happening for past 20 to 25 years. I agree there is a good and service minded teachers, but they are not able to raise their voice against of bad people who does not take any responsibility. You can see the recent election that are we able to elect the right candidate in all areas? You can say government can correct all the issues, but it is not easy job and it is time consuming. First, People have to correct themselves, then we will think about how to the run government.

Yarlpavanan said...

தங்கள் கண்ணோட்டம் அருமை

senthilkumar said...

அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என ஒருங்கிணைந்த செயல்பாடும், முறையான நிர்வாகமும் இருந்தால் மாற்ற முடியாதது எதுவும் அல்ல.. தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தாலும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஒரு தனியாரால் அனைத்தையும் சரியாக நிர்வாகிக்க முடியும் என்றால் அரசின் துறைகளும் அதுசார்ந்த அமைச்சர் கள்,அதிகாரிகளின் தேவை கேள்விக் குறியாகிறது..

MURALIDHARAN said...

RTE மூலமாக 25% சேர்க்கச் சொல்லி கட்டாயபடுத்தி அதற்கு கட்டணமும் அரசே கொடுத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எப்படி சேர்வார்கள். அரசு பள்ளி அலுவலர்களைக் கேட்கும் அதே நேரத்தில் 25% தனியார் பள்ளி rte சேர்க்கையை வலியிறுத்தி கண்காணிக்க செய்வதும் அதற்கு விளம்பரப் படுத்தச் சொல்வதும் விநோதம். பெரும்பாலான நேரத்தை 25% தனியார் சேர்க்கை பற்றி கண்காணிக்கவும் தகவல்களை அளிக்கவும்அரசு அலுவலர்கள் ஒதுக்க வேண்டி இருக்கிறது