May 14, 2019

யூத் மாமூ

‘உங்களுக்கு வயசாயிடுச்சுங்கப்பா’ என்று மகி சொல்லும் போது கொஞ்சம் கோபம் வரும். அவன் இதை அடிக்கடி சொல்கிறான். 

முப்பத்தேழு எல்லாம் ஒரு வயதா? இன்னமும் ‘யூத் மாமூ’ என நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இந்த உலகம் சிலவற்றை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டும். உதாரணம் சொல்ல வேண்டுமானால் எல்லோருக்கும் தெரிந்ததுதான் - நம்மை விட இளவயதுள்ள இன்றைய கல்லூரிப் பெண்களை நாம் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருப்போம். அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பத்து வருடங்களுக்கு முன்பாக இப்படியில்லை. போனால் போகட்டும் என்றாவது திரும்பிப் பார்த்தார்கள். இப்பொழுதெல்லாம் ம்ஹூம். சோலி சுத்தம். 

‘அது வேறொண்ணுமில்ல சொட்டை விழுந்துடுச்சுல்ல’ என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். நாற்பதுகளை நெருங்குகையில் தலைக்கு மேலாக நிறத்தையோ, மொத்தமாகவோ இழந்து ஒரு கட்டத்தை அடைந்த பிறகுகும் கூட முப்பத்தைந்தைக் கடந்த பெண்கள் ஓரளவுக்கு கவனிக்கிறார்கள். சக வயது தோழியர். இளவயதுக் கணவனாக இருந்தால் இப்படி சைட் அடிப்பதைக் அறவே வெறுத்து நம்மை முறைப்பார்கள். ஆனால் முப்பத்தைந்தைக் கடந்த தோழியர்களுடன் இருக்கும் நம்மைப் போன்ற அரைக்கிழ அங்கிள்கள்- அவர்களுக்கு பெரிய அக்கறையெல்லாம் இல்லை. பார்த்தால் பார்த்துவிட்டுப் போ என்று தண்ணீர் தெளித்துவிடுகிறார்கள்.  இவர்களாவது கவனிக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகு முப்பத்தைந்துகளும் பார்க்க மாட்டார்கள். ஐம்பதைத் தொடும் பெண்கள் மட்டுமே பார்க்கக் கூடும். அதுவும் வாழ்க்கை சலித்துப் போன பெண்களாக இருந்தால் ஜந்துவைப் பார்ப்பதைப் போலக் கூட பார்க்காமல் தவிர்த்துவிடக் கூடும். அப்பொழுது அங்கிள் என்ற நிலையிலிருந்து தாத்தா என்றொரு கட்டத்துக்கு நகர்ந்துவிட்டோம் என்று அர்த்தம். 

அதன்பிறகு இந்த டோரிக் கண் சைட்டையெல்லாம் கூட சுத்தமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு அறிவுரை மட்டுமே சொல்ல வேண்டும். எங்கள் அபார்ட்மெண்ட்டில் ஒரு தாத்தா இருக்கிறார். காலையில் ஒரு தொப்பி, அரை ட்ரவுசரைப் சகிதமாக வந்துவிடுவார். எதிர்ப்படும் ஒருவர் பாக்கியில்லாமல் அட்வைஸ்தான். அதுவும் கடுப்பேற்றும் அட்வைஸ். அபார்ட்மெண்ட்டுக்கு குடிவந்த புதிதில் சின்னவனை எடுத்துக் கொண்டு போகும் போது அவன் செடியில் இருக்கும் பூவைக் கேட்டான். ஒரேயொரு பூவைப் பறித்தேன். தாத்தா வந்து ‘வணக்கம் சார்’ என்றார். நமக்கு எதுக்கு சம்பந்தமேயில்லாமல் வணக்கம் வைக்கிறார் என்று புரியாமல் ‘வணக்கம் சார்’ என்றேன். மீண்டும் அதே ‘வணக்கம் சார்’. ஒருவேளை லூசாக இருக்குமோ என்று நினைத்து அரை நம்பிக்கையில் மீண்டும் ‘வணக்கம் சார்’ என்றேன். அதன் பிறகும் அதே ‘வணக்கம் சார்’ சத்தியமாக லூசுதான். மெல்ல நகரப் பார்த்தேன். 

‘பூ வேணும்னா வெளியில் பத்து ரூபா கொடுத்தீங்கன்னா வேண்டாங்கிற அளவுக்கு கிடைக்குது..செடியில ஏன் பறிக்கிறீங்க?’ என்றார். அதாவது சண்டைபோடாமல் என்னைத் திருத்துகிறாராம். பூவைச் செடியில் பறிக்காமல் என் மண்டையிலா பறிக்க முடியும்? வந்த புதிதில் சண்டை வேண்டாம் என்று வழிந்து விட்டு வந்து கருவிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு எங்கே அந்த ஆள் கண்ணில்பட்டாலும் யாருக்காவது அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். கடைசியாகப் பார்த்த போது ‘மீண்டும் மோடி; வேண்டும் மோடி’ என்று டீஷர்ட் அணிந்திருந்தார். தலை தெறிக்க ஓடி வந்தவன்தான். 

அங்கிளில் ஆரம்பித்து மோடிக்கு வந்துவிட்டேன். யாராவது சண்டைக்கு வந்துவிடுவார்கள். எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் அந்தந்த வயதில் அதற்குரிய செயலை மட்டும் செய்ய வேண்டும். அங்கிள் ஆன பிறகு  டை அடிப்பதும், தொப்பையை உள் இழுப்பதும், நிறைய பவுடர் பூசி, செண்ட் அடித்தவர்களாகவும் திரிகிற அங்கிள்களும், தாத்தாக்களும் இந்த உலக உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று நினைக்கிறேன். தாம் இளமையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலரால் மட்டுமே வெற்றிகரமாக வயதைக் குறைத்துக் காட்ட முடிகிறது. பெரும்பாலானவர்களுக்கு அசிங்கமாகத்தான் இருக்கிறது. 

சமீபத்தில் மதுரை சென்றிருந்தேன். கடந்த சில முறைகளாக கோவிலுக்கு வரும் போதெல்லாம் ‘உன்னை அடிக்கடி பார்க்கிற மாதிரி வாய்ப்புக் கொடு’ என்று சொக்கநாதரிடம் கேட்டுக் கொள்கிறேன். அதனால் அடிக்கடி வந்துவிடுகிறேன் போலிருக்கிறது. அரசரடி சாலையில் நகரப்பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆளைப் பிடித்து செமத்தியாக மொத்தியெடுத்தார்கள். சலசலவென்று பேச்சுதான் ஆரம்பமானது. திரும்பிப் பார்ப்பதற்குள் சடசடவென்று அடி விழத் தொடங்கியது. மதுரைக்காரனுக இப்படித்தான் போலிருக்கிறது. அந்த ஆள் சற்று வயது கூடிய கிழம்தான். மேக்கப் போட்டு வந்து பேருந்தில் ஏறி அருகில் நின்ற பெண்ணிடம் உரசியிருக்கிறார். கும்மியெடுத்துவிட்டார்கள். ‘தெரியாம செஞ்சுட்டேன் மன்னிச்சுடுங்க’ என்று கெஞ்சி அழத் தொடங்கினார். அதற்குள் சிலர் கேமராவில் இந்த சம்பவத்தை பதிவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்நேரம் வாட்ஸாப்பில் உலா வரத் தொடங்கியிருக்கும். காவல் நிலையம் அழைத்துச் செல்வதாகக் கூட்டத்தில் ஒருவர் சொன்னவுடன் அவர் காலைத் தொட்டுக் கெஞ்சினார். கடைசியில் வெறியெடுத்த மாதிரி அடித்து கீழே இறக்கிவிட்டுவிட்டார்கள். அடியைக் கூட மறைத்துவிடலாம். வாட்ஸாப் வீடியோவை மறைக்கவா முடியும்? இனிமேல் எந்தக் காலத்திலும் அவர் மேக்கப் போடமாட்டார் என நினைக்கிறேன்.

சொக்கநாதரைப் பார்க்கச் சென்றேன். தனியான சந்நிதியில் அமர்ந்திருந்தார். நினைவு முழுவதும் பேருந்தில் அடி வாங்கியவரே ஆக்கிரமித்திருந்தார். நவீன காலத்தில் சிறு தவறு கூட மிகப்பெரிய தழும்பாக மாறிவிடும். ‘ஏஞ்சாமி உனக்கும் பொண்டாட்டிக்கும் தனித்தனி சந்நிதி’ என்று கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ‘பொண்டாட்டின்னாவே கூட தள்ளி இருந்துக்கிறதுதான் நல்லது. கைல கேமிராவை வெச்சுட்டு எவன் எப்போ கிளப்பிவிடுவான்னு தெரியாது’ என்றார் சொக்கநாதர். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று வாட்ஸாப்பில் வந்திருந்த செய்திகளை ஃபார்வேர்ட் செய்யத் தொடங்கினேன்.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

அங்க என்ன சத்தம்????

பழனிவேல் said...

தலைப்பே தெறிக்கவிட்டுவிட்டீர்கள்...
அருமை பதிவு..
இளமையும் முதுமையையும் அனுபவிக்க தெறிந்தவன் நல்ல மனிதன்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மணிக்கு வயதாகவில்லை..
மகிக்கு முதிர்ச்சி முகிழ்ந்து விட்டது.
வாழ்க வளமுடன்

Anonymous said...

அப்படி ஒன்றும் ஆகவில்லை உங்களுக்கு
அங்கிட்டு 37 தானே
இங்கிட்டு 45 ...நாங்க மனசுல சக்தி வாய்ந்த யூத்ல்