Jan 29, 2019

இதனை இதனால்...

சனிக்கிழமையன்று வேலூரில் இருந்தேன். எம்.டெக் படித்த கல்லூரி. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் நுழைகிறேன்.  இப்பொழுது அந்த வளாகத்தைக் கல்லூரி என்றே சொல்ல முடியாது. மிகப்பெரிய பூங்காவுக்குள் ஆங்காங்கே பிரமாண்ட கட்டிடங்கள் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மரங்கள். திரும்பிய பக்கமெல்லாம் புல்தரை. மிகப்பெரிய ஏரியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது நீர் நிறைந்து பிரமாண்டமாய் விரிந்திருக்கிறது.

கடந்த முப்பத்தைந்தாண்டுகளில் எழுபத்தைந்தாயிரம் பேர்களுக்கு மேல் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வெளியேறியிருக்கிறார்கள். ஒவ்வோராண்டும் ஜனவரி 26 ஆம் நாள் முன்னாள் மாணவர்களுக்கான நாள் கொண்டாட்டம் கல்லூரியில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாவில் சமூக மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பைச் செய்ததாக சிறந்த முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கினார்கள். பெற்றுக் கொள்வதற்காகச் சென்றிருந்தேன். 


ஏ.சி அறையை முன்பதிவு செய்து கொடுத்து, விருது பெறுகிறவர்களைக் கவனித்துக் கொள்வதற்கென தனித் தனியாக பேராசிரியரை நியமித்து, வீட்டிலிருந்து கிளம்பிய தருணத்திலிருந்து விழா முடித்துத் திரும்பும் வரைக்கும் ‘செளகரியமாக இருக்கிறதா? இது வசதியா இருக்கா?’ என பார்த்துப் பார்த்துச் செய்து கொடுக்கிறார் அவர். கூசச் செய்துவிடுகிற மரியாதை அது. லுங்கியைக் கட்டிக் கொண்டு கேட்பாரற்றுத் திரிந்த வளாகத்தில் இவ்வளவு மரியாதை என்பது கூசத்தானே செய்யும்? 

விழாவில் ஆறாயிரம் பேர் கலந்து கொண்டிருந்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். 

நிகழ்வுக்கு வேஷ்டி கட்டிக் கொண்டு வருகிறேன்; தமிழில் பேசுகிறேன் என்று முன்பே சொல்லியிருந்தேன். விருது பெற்றுக் கொண்டவுடன் இரண்டு நிமிடம் பேசச் சொன்னார்கள். 


‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்’ - தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள் மிகப் பிடித்த குறள்.

மனிதர்களுக்கு மட்டுமில்லை- கடவுளுக்கும் இக்குறள் பொருந்தும். இந்த வேலையை இவன் செய்வான் என்று ஆண்டவனுக்கும் தெரியும். எனக்கு இந்தப்பணியை எனக்குக் கொடுத்திருக்கிறான். அதற்கு மேல் இதில் எதுவுமில்லை. குறளை மேற்கோளாகக் காட்டிப் பேசினேன்.

பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் ‘ஏன் வீட்டிலிருந்து யாரையும் கூட்டி வரலை?’ என்று மேடையிலேயே கேட்டார். தனிப்பட்ட முறையில் சில எண்ணங்கள் உண்டு. விருது விழாக்களுக்கு அழைத்துச் சென்று ‘அப்பா ஏதோ பெரிய காரியத்தைச் செய்கிறார்’ என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது; அது போலவே,  இதைச் செய்தால் இப்படிப் புகழ்வார்கள் என்கிற எண்ணமும் வந்துவிடக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாக எதிர்கொண்டிருக்கும் மனநிலை அவர்களுக்கு முக்கியம். மேடையில் வேந்தரின் கேள்விக்கு சிரித்து வைத்தேன். ஆனால் குடும்பத்தின் ஒத்துழைப்பில்லாமல் இவையெதுவுமே சாத்தியமில்லை என்பதும் தெரியும். 

நிகழ்ச்சி முடிந்த பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஸ்ரீனிவாச ராகவன்- அவர்தான் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்- தேடி வந்து ‘உங்க செயலும், மேடையில் தமிழில் பேசியது என்னை நெகிழச் செய்துவிட்டது’ என்றார். சந்தோஷமாக உணர்ந்தேன். அருகிலேயே நின்ற திரு.சங்கர் விஸ்வநாதன் ‘நீ செய்யற வேலை பத்தியெல்லாம் சாருக்கு அனுப்பி வை’ என்றார். சங்கர் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட கவனம் உண்டு.  சிறப்பு விருந்தினர் ‘நானும் என்னால முடிஞ்ச பங்களிப்பைச் செய்யறேன்’ என்றார். மேடையில் சரியாகத்தான் பேசியிருக்கிறேன் எனத் தோன்றியது.

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி இன்றைக்கு சாம்ராஜ்யம். வேலூர், சென்னை, போபால், அமராவதி என நான்கு வளாகங்கள், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடனான பரந்துபட்ட தொடர்புகள், கல்லூரியின் வருமானத்தை பிற தொழில்களில் முதலீடு செய்யாமல் கல்லூரியின் வளர்ச்சிக்கு மட்டுமே திருப்பிவிடும் நிர்வாகம் என பல தனியார் கல்வி நிறுவனங்களால் செய்ய முடியாத செயல்களைச் செய்து வருகிறது. அங்குதான் படித்தேன் என்பதற்காக பெருமைக்குச் சொல்லவில்லை. அய்யாவு என்றொரு மாணவன் பற்றி எழுதியிருக்கிறேன். நிசப்தம் சூப்பர் 16 மாணவன். அப்பா மரம் ஏறுகிறவர். வெளியுலகமே தெரியாத கிராமப்புற மாணவன். விடுதிச் செலவு உட்பட ஒரு பைசா வாங்கிக் கொள்ளாமல் வேலூரில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான். ‘விஐடி ஸ்டார்ஸ்’ என்று கிராமப்புற மாணவர்களுக்கான இலவசக் கல்வித்திட்டத்தில் படிக்கிறான். இப்படி பல நூறு மாணவர்கள் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நிறையப் பேர் நெருங்கி வந்து பேசினார்கள். கல்லூரி சார்பில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக் கொள்ள முடியும்; கிராமப்புற பெண் குழந்தைகளை அடையாளம் காட்டினால் அவர்களின் படிப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும்; மாணவர்களுக்கு வழிகாட்டிகளை நியமிக்க முடியும்- என ஒவ்வொருவரும் ஒன்றைச் சொன்னார்கள். சொன்னவர்கள் அத்தனை பேரும் பெருந்தலைகள். சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய மாணவர்களுக்கு வெளிச்சம் காட்டிவிட முடியும்.

விருதுக்குப் பரிந்துரைத்த அத்தனை பேருக்கும் நன்றி. விஐடி நிர்வாகத்துக்கும் நன்றி. இந்தியக் கல்லூரிகள் அளவில் மிக வலுவாக இருக்கும் முன்னாள் மாணவர் சங்கங்களில் விஐடி முன்னாள் மாணவர் சங்கமும் ஒன்று. 

மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி- அப்பா பாராட்டுவது போல!

நிசப்தம் இல்லையென்றால் இவையெல்லாம் எதுவுமில்லை. நிசப்தம் நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.

28 எதிர் சப்தங்கள்:

பழனிவேல் said...

அருமை அண்ணா...

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

லுங்கியைக் கட்டிக் கொண்டு கேட்பாரற்றுத் திரிந்த வளாகத்தில் இவ்வளவு மரியாதை என்பது கூசத்தானே செய்யும்? -
#அப்போது சாதிக்க வேண்டும் என்ற நிலையில் லுங்கி.
#இப்போது சாதனையாளராக வேட்டியும், தமிழும்
#வாழ்க வளமுடன்

சிங்கை நாதன்/SingaiNathan said...

வாழ்த்துகள் மணி.

Anonymous said...

Many congrats Sir.

.....................
VIT is much much better than Many NITs and new IITs.
Apart from that,
1. Ofcourse, VIT is their family asset. Still, they should not interfere much in the admin.
2. World class VC, Dean, HOD's are needed.
3. Lack of foreign exposture & collaborative research except in Biotech dept.
4. Lack of high quality research papers...publishing in paid 3rd grade journals.
4. Government also should fund these private universities (BITs, VIT, Manipal, SRM) like in the USA. For this, they may follow NIRF.

vv9994013539@gmail.com said...

👍🥁🎸🌺🌹

Bala's Blog said...

Congrats! Well-deserved award. Many more will follow to you.

தேவா said...

வாழ்த்துக்கள் சகோதரா, உங்களை எனது முன்மாதிரியாக கொள்கிறேன். தேவா, யாழப்பாணம்.

அன்பே சிவம் said...

🙌

கொமுரு said...

💐👍 👏🏻வாழ்த்துக்கள்

Sriram said...

வாழ்த்துக்கள் ஐயா. VIT Kum
பெருமை.
If attended with family your kids also Wil get inspiration and follow your path. Great

Thirumalai Kandasami said...

வாழ்த்துகள்..

Jaypon , Canada said...

So proud of you. Congrats.

Saravanan Sekar said...

//மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி- அப்பா பாராட்டுவது போல!//

உங்கள் செயலை போலவே சொல்லும் மெருகேறிக்கொண்டே போகிறது.

வாழ்த்துக்கள் !

சேக்காளி said...

//நிகழ்ச்சி முடிந்த பிறகு நிறையப் பேர் நெருங்கி வந்து பேசினார்கள்//
வாழ்த்துக்கள் சின்னையா

சேக்காளி said...

//கடவுளுக்கும் இக்குறள் பொருந்தும்.//
பின்ன.
அப்பவே
ஆக்கல் தொழிலுக்கு ப்ரம்மன்
காத்தல் வேலைக்கு விஷ்ணு
அழித்தல் பணிக்கு சிவன்
அடியாளுக்கு எமன்.
எமனுக்கு அக்கவுண்டண்டா சித்திரகுப்தன் னு
எவ்வளவு தெளிவா டிபார்ட்மென்ட் பிரிச்சு
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’
வேலை பாத்துருக்காங்க

Sankar said...

Congrats.

நாடோடிப் பையன் said...

வாழ்த்துகள், மணி.

ram said...

வாழ்த்துக்கள் அண்ணா

Unknown said...

Super Sir. " ‘அப்பா ஏதோ பெரிய காரியத்தைச் செய்கிறார்’ என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு வந்துவிடக் கூடாது; அது போலவே, இதைச் செய்தால் இப்படிப் புகழ்வார்கள் என்கிற எண்ணமும் வந்துவிடக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாக எதிர்கொண்டிருக்கும் மனநிலை அவர்களுக்கு முக்கியம். " இது புதிதுபோல் தோன்றினாலும் தேவையே. நான் அறிந்த ஒரு SI (sanitary inspector) அவர்களுடன் ஏதோ பேசி கொண்டு இருந்த பொழுது அவர்களின் பையன் அவரிடம் ஏம்பா நீ SI தானே ஏன் நீ நேராக முதலமைச்சரிடம் பேசலாமே என்றான். இது அந்த பையனின் தவறு அல்ல என்று மட்டும் எனக்கு தெரிந்தது இந்த அளவிலான முன் தயாரிப்பை இப்பொழுதான் பார்கிறேன்.
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’ இதை நான் உங்கள் பதிவில் உணர்ந்துள்ளேன்.
நன்றி வாழ்த்துகள்.

Selvaraj said...

மனதார வாழ்த்துகிறேன் . இப்போது போன்று எப்போதும் காலை தரையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.


உங்களுக்கு மிக பிடித்தமான இரண்டு குறள்கள் இது என்று நினைக்கின்றேன்

1.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
2.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

சிழ்க் ஸ்மிதா & சன்னி ழியோன் said...

உங்கள் தலையை பார்க்கும் போது இடது மூளை, வலது மூளை தெளிவாக தெரிகிறது. நடுவே ஒரு சிறிய ரோடு....
இதுதான் உங்கள் இரகசியம். உங்கள் பணியையும், சமூக சேவையையும் சமப்படுத்தி கொண்டு செல்கிறது. வாழ்த்துக்கள் மணி சார்!

Anonymous said...

all the best and you deserve the recognition

radhakrishnan said...

மேன்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள், மணி

krish said...

Heartful greetings.

Sathya said...

Congratulations...

Anonymous said...

வாழ்த்துக்கள் ��

vinoth said...

Congratulations bro...

பொ . செல்வேந்திரன் said...

திரும்பி பார்க்கும் பொழுது வாழ்க்கை
முடிந்துவிடும் என்று உணரும் ஒரு சில
மனிதர்கள் மட்டுமே வாழ்க்கையை உணர்ந்து நடந்து கொள்வார்கள்.
அவர்களுக்கு மட்டுமே,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

உங்களிடம் இன்னும் நிறைய விடப்படும். திறம் பட அதை முடிக்கும் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

வாழ்த்துகள்.