Dec 4, 2018

எது நல்லா இருக்கும்?

ஒரு காலத்தில்  ‘சி# தான் எதிர்காலம். மற்ற தொழில்நுட்பமெல்லாம் காலி’ என்றார்கள். ஏகப்பட்ட பேர்கள் பயந்து போய் இருட்டு அறையில் முரட்டுக் குத்தாக உருவேற்றிக் கொண்டிருந்தார்கள். ஜாவா படிக்க ஆரம்பித்திருந்தேன். குடி கெட்டுப் போய்விடும் போலிருக்கிறதே என்று அவ்வப்போது சி# - ஐ மேய்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படியொன்றும் புரட்டிப் போட்டுவிடவில்லை. பத்தோடு பதினொன்று அத்தோடு அதுவும் ஒன்று. அவ்வளவுதான். 

சி# என்றில்லை. பொதுவாகவே தொழில்நுட்பம், ஐடி ஆகியவற்றில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ‘இனிமேல் இதுதான்’ என்று அவ்வப்பொழுது ஒன்றை அவிழ்த்துவிடுவார்கள். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக மெக்கட்ரானிக்ஸ்தான் அடுத்த கத்தை என்றார்கள். அதை நம்பிப் படித்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். இன்றைக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் சாஃப்ட்வேருக்குள்தான் காலம் தள்ளிக் கொண்டிருப்பார்கள். அதே போலத்தான் பயோ-டெக்னாலஜி மீது ஒரு கவர்ச்சி இருந்தது. ‘இனி எல்லாமே பயோ டெக்னாலஜிதான்’ என்றார்கள். க்ளோனிங் எல்லாம் வந்துவிட்டது என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆனால் இன்று வரைக்கும் இந்தியாவில் அதுவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பிரச்சினை படிப்புகளின் மீது எனச் சொல்ல முடியாது. ஆராய்ச்சிக் கூடங்களில் அவற்றுக்கான மரியாதை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் வேலைச் சந்தையில் புதிய வஸ்துகள் என்னவிதமான தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பதுதான் முக்கியம். 

மெக்கட்ரானிக்ஸ் ஏன் பெரிய அளவில் எடுபடவில்லை என்று மிக எளிதாகச் சொல்லிவிட முடியும். மெக்கட்ரானிக்ஸ் என்பது மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸைச் சேர்த்துப் படிப்பது. ரோபோடிக்ஸ், தானியங்கி (ஆட்டோமேஷன்) என்பதற்கெல்லாம் எடுபடக்கூடிய படிப்பு அது.

2005 ஆம் ஆண்டு எம்.டெக் மெக்கட்ரானிக்ஸ் முடித்துவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தோம். நிறுவனத்தைப் பற்றிப் புரிந்து கொண்டு எங்கெல்லாம் ஆட்டோமேஷன் செய்ய முடியும், அதற்கு சந்தையில் கிடைக்கக் கூடிய எந்திரங்கள் எவை என்றெல்லாம் ஒரு திட்டமதிப்பீடு செய்து கொடுக்கச் சொன்னார்கள். எங்களுக்கு மேலாக ஒரு முதுநிலை மேலாளர் இருந்தார். கணக்குப் போட்டுப் பார்த்து ‘ஒரு கோடி ரூபாய் ஆகும்’ என்று சொன்னால் ‘ஒரு ஆளுக்கு மாசம் பத்தாயிரம் ரூபாய் கூலி..பத்து ஆட்களை வைத்துச் செய்தாலும் கூட மாசம் ஒரு லட்சம் போதும்...ஒரு கோடி ரூபாய் இருந்தால் பத்து ஆட்களை வைத்துக் கொண்டு நூறு மாசத்துக்கு வேலையைச் செய்துவிடலாம்..வட்டிக் கணக்கு என்ன ஆகும்’ என்பார். இந்தியாவில் ஆட்களுக்குப் பஞ்சமேயில்லை. திருப்பூர்க்காரன் வேலை செய்யத் தயாரில்லை என்றால் மதுரை, புதுக்கோட்டையிலிருந்து வந்து இறங்குவார்கள். அவர்களும் முரண்டு பிடித்தால் இருக்கவே இருக்கிறான் பீகார், ஒரிசாக்காரன். 

நிறுவனங்களின் முதலாளிகள் ROI என்பார்கள். Return Of Investment. அதைக் கணக்குப் பார்த்துவிட்டு ‘இதெல்லாம் வேலைக்கு ஆவாது தம்பி’ என்று சொல்லுகிற நிறுவனங்கள்தான் அதிகம். அதைத் தவறு என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர்கள் அனுபவஸ்தர்கள். தமது நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதா? இருக்கிற போட்டிச் சூழலில் பணத்தை எப்படி பெருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்களே தவிர முடக்கத் தயாராக இருக்கமாட்டார்கள். 

ஒரு தொழில்நுட்பம் சூடு பிடிக்க வேண்டுமானால் அதை நிறுவனங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த தொழில்நுட்பத்தில் வல்லுநர்களுக்கான தேவை இருக்கும். அதனால்தான் புதிய நுட்பம் ஒன்று சந்தைக்கு வரும் போது அதை தொழில் துறை சார்ந்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். கல்வியாளர்களுக்கும் (Academician) தொழிற்துறையினருக்கும் (Industrialist) இடையில் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம் இருக்கும். அதுவும் இந்தியாவில் இந்த வித்தியாசம் கற்பனையிலும் எட்டாதது. கல்வியாளர்கள் சொல்வதை மட்டும் நம்பினால் மெக்கட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி மாதிரிதான் இருக்கும்.

பயோ டெக்னாலஜி மோசமான படிப்பு என்று சொல்ல முடியுமா என்ன? நிச்சயம் அற்புதமான படிப்புதான். க்ளோனிங் மட்டுமே பயோ டெக்னாலஜி இல்லை.  பயோ-ஆயுதங்களுக்கு எதிர் மருந்து தயாரிப்பது மட்டுமே அதன் வீச்சு இல்லை. நம் தேவைகளுக்கு ஏற்ப உயிரி தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட வேலைகளைச் செய்ய முடியும். உதாரணத்துக்கு ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய சவால்களில் பிரதானமானது என்று எதைக் கருதுகிறீர்கள்? கழிவறையைத்தான் சொல்ல வேண்டும். பல ரயில்களிலும் கழிவுகள் அப்படியே தண்டவாளத்தில்தான் கொட்டுகிறது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நம்முடையதுதான். ஆனால் இந்த நாற்றம் பிடித்த பிரச்சினைக்கு இப்பொழுது வரைக்கும் முழுமையான தீர்வு இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பயோ டாய்லெட்டை சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அண்டார்டிக்கா பாக்டீரியாவின் மூலமாக மனிதக் கழிவுகளை மீத்தேன் வாயுவாகவும், நீராகவும் பிரித்துவிடுகிற நுட்பம் அது. இதை கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே இந்திய ரயில்வே துறை முயன்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு இவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. 

‘ஏன் இவ்வளவு வருடம் தேவைப்பட்டது’ என்று கேட்டால் அவர்களின் முன்னுரிமைகள் வேறு பலவாக இருந்தன. இந்த முன்னுரிமைகள்தான் கள நிலவரம். இதனைப் புரிந்து கொள்வதுதான் அவசியம். தொழிற்துறையினரின் நோக்கம், முன்னுரிமைகள் வேறாக இருக்கக் கூடும். ‘இதை அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அவர்கள் ஒதுக்கி வைத்தால் அந்தத் தொழில்நுட்பத்தில் வேலை வாய்ப்பு உருவாவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் கல்வியாளர்கள் இருபது வருடங்களுக்கு முன்பாகவே ‘அடுத்தது பயோ டெக்னாலஜிதான்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருந்தார்கள். நம்பிப் படித்தவர்களில் பலரும் வேறு துறைகளுக்குள் நுழைய வேண்டியிருந்தது.

பொதுவாகவே வேறொரு தொழில்நுட்பத்துக்கு மாறுகிறவர்கள், வித்தியாசமான படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்கள் எதையுமே கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சொல்வதை அப்படியே நம்புவதைவிடவும் தொழில் சார்ந்தவர்களிடம் பேசுவதன் மூலமாகவே முடிவு செய்ய வேண்டும். ஃபேன்ஸியான நுட்பங்களைத் அறிவுக்காகத் தெரிந்து கொள்வதற்கு வேண்டுமானால் படிக்கலாமே தவிர அதில் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதை தீர ஆலோசிப்பதன் மூலமாகவே முடிவுக்கு வர வேண்டும். 

மேற்சொன்ன ரோபோடிக்ஸ் உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். ‘ஒரு கோடி ரூபாய்க்கு ரோபோட் செஞ்சு கொடுத்தா வாங்கிக்குவீங்களா’ என்று முதலாளி ஒருவரைக் கேட்டுப் பாருங்கள். அவர் கட்டாயமாக வேண்டாம் என்றுதான் சொல்வார். அதுவே பத்து லட்ச ரூபாய் என்றால் அவர் சரி என்று சொல்லக் கூடும். ஆக, இன்றைய சூழலில் ரோபோடிக்ஸின் வேலைச் சந்தை மதிப்பு அவ்வளவுதான். நிறைய ரோபோக்கள் விற்றால் நிறைய ரோபோடிக்ஸ் பொறியாளருக்கான தேவை இருக்கும். குறைந்த அளவிலான ரோபோக்கள் விற்றால் குறைந்த அளவிலான ஆட்களுக்கு மட்டுமே தேவை இருக்கும். இதுதான் நிதர்சனம். இதுதான் வேலைச் சந்தைக்கான அடிப்படை. ‘ரோபோடிக்ஸ் படிச்சவுடனே உனக்கு வேலை கிடைச்சுடும்’ என்று யாராவது சொன்னால் அவருக்கு நிலவரம் தெரியவில்லை என்று அர்த்தம்.

ரோபோடிக்ஸ் மட்டுமில்லை. எந்தவொரு நுட்பத்துக்குமான வேலைச் சந்தைக்கு இதுதான் அடிப்படை. இதை வைத்துத்தான் கணக்குப் போட வேண்டும். முடிவும் எடுக்க வேண்டும்.

3 எதிர் சப்தங்கள்:

M.பழனியப்பன் மதுரை said...

R.O.I. யின் விரிவு Return On Investment என்பதுதான் சரி.

பே.ஆவுடையப்பன் said...

தொழில் நுட்பம், நிறுவனங்கள் இடையே என்ன தொடர்பு என்பதற்கான நிதர்சனமான விளக்கம். வேலைக்கு தான் படிப்பு என்று மாறி விட்ட நிலையில் சரியான தீர்வு சொல்லும் தகவல்.

Kannan said...

நம்முடைய அடிப்படை சித்தாந்தமே தவறு. வேலைக்காக படி என்பதை விடுத்து, பிடித்ததை படி என்று ஆக்குங்கள். வேலைக்காக படிக்க சொல்லி சந்தைக்கு மந்தை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். மனதுக்கு பிடிக்காமல் எதை படித்தாலும் அதில் பிரகாசிப்பது கடினம்.