ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை ட்ரெக்கிங் குழுவினர் நாகம்மாள் என்ற அம்மையாரைப் பற்றி எழுதியிருந்தார்கள். கண் பார்வையற்ற, ஆதரவுக்கு யாருமில்லாத பெண்மணி. கஜா புயலில் அந்த அம்மையாரின் குடிசையும் சிதைந்து போயிருந்தது. வாட்ஸாப் குழுவில் ‘அடுத்த வேலை நாகம்மாளின் குடிசையை தயார் செய்வதுதான்’ என்று பீட்டர் எழுதியிருந்தார். இன்றைக்கு முடித்துவிட்டார்கள். உள்ளூர் ஆட்களின் உதவியுடன் சென்னை ட்ரெக்கிங் குழுவின் நண்பர்கள் இணைந்து குடிசையை அட்டகாசமாகச் செய்துவிட்டார்கள்.
இதைவிடவும் சந்தோஷப்பட கூடிய தருணம் என்று ஏதாவது இருக்கிறதா?
புயல் வீசி ஓய்ந்து, கால் நீட்ட இருந்த ஒற்றை குடிசையையும் இழந்து, நிராதரவான பெருவெளியில் அமர்ந்திருந்த அந்த பாட்டியின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? இனி யார் நம்மைக் காக்கப் போகிறார்கள்? அடித்த புயல் நம்மையும் சேர்த்து வாரிச்சுருட்டிச் சென்றிருக்கக் கூடாதா என்ற எண்ணம் வந்திருக்காதா என்ன? எல்லாவற்றையும் இழந்து நின்ற பாட்டியின் கரங்களை வெதுவெதுப்பாக பற்றிக் கொள்ள யார் இவர்களை அனுப்பி வைத்தார்கள்? இந்த உலகம் இயங்குதலுக்கான ஆதாரப்புள்ளியே இந்த அன்பும் கனிவும்தானே?
ஒரு கணம் அமைதியாக அமர்ந்தால் எவ்வளவு வினாக்கள் தோன்றுகின்றன? தென் தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் கிழிந்த கந்தலெனக் கிடக்கும் ஒரு மூதாட்டிக்கு சம்பந்தமேயில்லாத மனிதர்கள் கைகொடுக்க வேண்டும் எங்கே விதிக்கப்பட்டிருக்கிறது?
எழும்புகிற கேள்விகளில் மனம் சஞ்சலமடைந்து கிடக்கிறது. அடுத்த கனமே சலனமற்றும் அடங்கி ஒடுங்கிறது. முந்தைய படத்தையும் இன்று பீட்டர் அனுப்பியிருந்த படங்களையும் பார்த்த போது கண்ணில் நீர் கசிந்துவிட்டது.
இலக்கியம் படி; அரசியல் பேசு; தொழில்நுட்பம் பழகு என்று யாராவது எங்கேயாவது நம்மை திசை மாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் வாழ்தலின் அர்த்தம் மனிதம் மட்டும்தான். அதை மட்டும்தான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் உணர்த்திச் செல்கிறான். மனிதம் தாண்டி பெரியது எதுவுமில்லை.
9 எதிர் சப்தங்கள்:
அன்று குரங்கணி.. சமயத்தில் கன்னா பின்னாவென்று இதே பீட்டரைப் பற்றி எழுதியவர் எல்லாம் இன்று இவரின் தன்னலம் இல்லாச் சேவையை அறிவார்களா..அறிந்தாலும் கண்களை மூடி கொள்வார்கள். அனைவருக்கும் இறையருள் துணை நிற்கட்டுமாக. வாழ்க வளமுடன்
//இலக்கியம் படி; அரசியல் பேசு; தொழில்நுட்பம் பழகு //
அத்தனையையும் மனிதம் காக்க வளர்க்க பயன்படுத்து
@Thiru.Gopalakrishnan சரியாக சொன்னீர்கள்
Well said Mr. சேக்காளி!
//இலக்கியம் படி; அரசியல் பேசு; தொழில்நுட்பம் பழகு //
அத்தனையையும் மனிதம் காக்க வளர்க்க பயன்படுத்து
- அருமை சேக்காளி! எல்லா நேரமும் இலக்கியமாகட்டும் , அரசியலாகட்டும் அல்லது தொழில்நுட்பமாகட்டும் மனிதத்தை நோக்கியே இருக்க வேண்டும் - எப்போது அதிலிருந்து மாறுகிறதோ அப்போது அதன் பொருளிழந்து விடும் - அப்போது அதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
There is no word can express their Humanity. Only we can pray to Almighty to give them good health and strength to serve poor people.
//மனிதம் தாண்டி பெரியது எதுவுமில்லை.
இது புரிந்தால் இன்று நாம் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகளில் (day-to-day issues ) பாதிக்கு மேல் இல்லாமல் போகும்!
வழக்கம் போல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
வாழ்த்துகிறேன்..வணங்கிறேன்..
தங்களின் பணி தொடர வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகிறேன்..வணங்கிறேன்..
லலிதா.ச
Post a Comment