Dec 10, 2018

பவானியும் சத்தியமங்கலமும்

பவானி ஆற்றின் நீளம் 217 கிலோமீட்டர். மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் சமவெளியை அடைந்து பவானிசாகர், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம் வழியாகச் சென்று பவானி கூடுதுறையில் காவிரியாற்றில் கலக்கிறது. நதியின் மீது இரண்டு அணைகள் இருக்கின்றன- பவானிசாகர் அணை, கொடிவேரி அணை. பெரும்பாலும், எல்லாக் காலத்திலும் சிறு ஓடை அளவிற்கேனும்  வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளில் ஒன்று. நீர்தான் ஓடிக் கொண்டிருக்கிறதே தவிர பாதிப்பு இல்லாமல் இல்லை. மனிதர்களால் ஏதேனுமொரு வகையில் பாதிப்பு உண்டாவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

விஸ்கோஸ் என்ற நிறுவனம் சிறுமுகை என்ற இடத்தில் கழிவு நீரை எந்தவிதச் சுத்திகரிப்புமில்லாமல் அப்படியே ஆற்றில் கலக்கியது. மாசடைந்து கொண்டிருந்த நதியைக் காக்க பல்வேறு அமைப்புகள் களமிறங்கின. பவானி நதி நீர் கூட்டமைப்பும் அதன் தோழமை அமைப்புகளும் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்து வழக்கு நடத்தி ஆலையை மூடச் செய்தார்கள். நீண்டகாலப் போராட்டம் அது. ஆனால் விஸ்கோஸோடு அந்த நதிக்கான ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை. காகித ஆலைகள், சாயப்பட்டறைகள் என வழி நெடுகவும் அந்த நதிக்கு இன்னமும் ஆபத்துதான்.

காகித ஆலைகளில் பல நூறு அடிகளுக்கு ஆழ்துளைக் குழாய்களை அமைத்திருக்கிறார்கள். கண்காணிப்பு இல்லாத சமயங்களில் ஆற்று நீரில் கலப்பதையும், கண்காணிப்பு தீவிரமாகும் போது ஆழ்துளைக் குழாய்களில் இறக்குவதும் வாடிக்கை. இப்படி நீரும் மண்ணும் கசகசத்துக் கிடக்கின்றன. நோய்கள் வராமல் என்ன செய்யும்?


முதலாளிகள்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால் இப்பொழுது இன்னொரு ஆபத்தை அரசே உருவாக்குகிறது. சத்தியமங்கலம் நகராட்சியானது நகரம் முழுக்கவும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்துகிறது. சிறப்பு. ஆனால் அதைச் சுத்திகரிக்கும் நிலையத்தை பவானி ஆற்றங்கரையோரம் அமைத்திருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக மழை பெய்து கரை வழிய நீர் ஓடிய போது சுத்திகரிப்பு நிலையம் ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது. என்னவிதமான திட்டமிடல் என்றே புரியவில்லை. அடுத்த ஓரிரு மாதங்களில் பாதாளச் சாக்கடைத் திட்டம் இயங்கத் தொடங்கும் போது இப்படிச் சுத்திகரிப்பு நிலையம் நீரில் மூழ்கும் சூழல் வந்தால் மனிதக் கழிவுகள் அப்படியே ஆற்று நீரில் கலக்காதா? அல்லது நிலையத்தில் அடைப்பு ஏற்படும் போது நகரம் முழுக்கவும் நீர் எதிர்த்து வீடுகளுக்குள் புகாதா?

அரசின் திட்டங்களையும் அதை அமல்படுத்துவர்களைப் பற்றியும் நமக்குத் தெரியாதா என்ன? சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் நிறுத்தினால் கணிசமான இலாபம் கிடைக்குமெனில் அதிகாரிகள் அந்த இரண்டு மணி நேரமும் கழிவை அப்படியே ஆற்று நீரில் கலக்கிவிடுவார்கள். இரவு நேரங்களில் இதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆற்று வழியெங்கும் வாழும் மக்கள் அந்த நீரைத்தான் குடிக்க வேண்டும். காவிரியிலும் அதுதான் கலக்கும்.

தனக்கு நிகழும் எல்லா அநீதிகளுக்கும் அடங்கி ஒடுங்கி மெல்ல மெல்லச் செத்துப் போவதில் நதிகளுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. ஆதி மனிதனுக்கு தனது கரையில் வாழ்விடம் உருவாக்கிக் கொடுத்த அதே நதியைத்தான் இன்றைக்கு மனிதன் எல்லாவிதத்திலும் பலாத்காரப்படுத்துகிறான். தொழிற்சாலைக்கழிவுகள், மணல் திருட்டு, வரைமுறையற்ற நீர் உறிஞ்சல் என சகலவிதத்திலும் மனிதன் நதிகளைச் சீரழித்துக் கொண்டிருக்கிறான். எந்த நதியாவது எதிர்வினை புரிகிறதா? நதிகளின் இந்தச் சலனமற்ற தன்மைதான் அரசாங்கத்தையும் கூட அசமஞ்சமாக்கிவிடுகிறது. சின்னாபின்னப்படுத்தப்படும் நதிகளின் பட்டியலை எடுத்தால் பவானி நதியானது முதல் பத்து இடங்களில் இருக்கும்.

கொங்கு மண்டல மக்களில் பலருக்கும் இப்படியொரு திட்டம் நடந்து கொண்டிருப்பதே தெரியவில்லை. சில சிறு குழுக்கள் தவிர பெரும்பாலானவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே பவானி ஆற்றங்கரையிலும் காவிரியின் கரையிலும் வாழ்கிற மக்களுக்கு (குறிப்பாக ஈரோடு மாவட்டம்) புற்று நோய் அதிகம் என்று ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இன்னமும் நிரூபிக்கப்படாத தரவு. அது எப்படியோ இருக்கட்டும்- நேரடியாக மனிதக் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கும் போது அதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? இயற்கையை மனசாட்சியற்றுச் சீரழிக்கும் இத்தகைய திட்டங்களை எதிர்த்து பெருந்திரளாக மக்கள் கூட வேண்டும். அவர்களின் எதிர்ப்புகளினால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கும் நாம் அனுபவித்ததில் பாதியையாவது கொடுத்துவிட்டுச் செல்வோம். இல்லையென்றால் நம்மோடு சேர்த்து எல்லாமும் பாழாய் போய்விடும்.

4 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

கொங்கு மண்டல மக்களில் பலருக்கும் இப்படியொரு திட்டம் நடந்து கொண்டிருப்பதே தெரியவில்லை....
குறைந்த பட்சம் சத்திக்கு நேர் கீழே உள்ள மக்களுக்காவது தெரியுமா என்பதே கேள்வி குறி.பவானி படுகையில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். வாழ்க வளமுடன்

Thoddam Siva said...

நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்கள் எல்லாமே உண்மை தான் மணி. பவானி ஆற்றங்கரை மக்களுக்கு நிறைய கேன்சர் வருவதாக நிறைய மருத்துவ மனைகளிலேயே சொல்கிறார்கள். இங்கே மேட்டுப்பாளையத்திலேயே நிறைய பெரிய பெரிய தோல் தொழிற்சாலைகள் இருக்கிறது. நேரடியாக பவானி ஆற்றில் தான் கலப்பதாக சொல்கிறார்கள். மருத்துவ கழிவுகள் வரை எல்லாவற்றுக்கும் ஆறு தான் குப்பை தொட்டி. நீங்கள் சொல்வது போல நேரே ஆற்றுக்கு, இல்லை போர் போட்டு நிலத்திற்குள் விடுகிறார்கள். நடப்பது எல்லாம் எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். குடிக்கும் நீருக்கு கூட உத்தரவாதம் இல்லாத ஒரு பூமியாகி போனது. இதற்கு என்ன முடிவு வர போகிறது என்று தெரியவில்லை.

Anonymous said...

Most of the sewage treatment plants are located next to waterbodies. Whichever town is having a river or water stream, invariably, the sewage will be flowing into them from these towns. Salem city is a typical example. We are doing grave injustice to the nature and to the coming generations.

பழனிவேல் said...

பயம் தொற்றிக்கொண்டே இருக்கிறது...
அரிசி, முட்டை, கோழி, ...
இருக்கும் நீரையும் கொன்றுவிட்டால் ....