Nov 17, 2018

புயல்

சில விவகாரங்களில் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டியதில்லை. புயல் கரையைக் கடந்த அடுத்த அரை மணி நேரத்தில் இதுதான் நிலவரம் என்ற முடிவுக்கு வருவதெல்லாம் சரியானதில்லை. ஓய்ந்து, மழை நின்ற பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்கும் போதுதான் கோரதாண்டவம் கண்ணுக்குத் தெரியும். கஜ புயலுக்கு முன்பான அரசு எந்திரத்தின் செயல்பாடு பாராட்டக் கூடியதுதான். அதிகாரிகள் குழு ஓரளவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஆனால் அது யானைப்பசிக்கு சோளப் பொரிதான் என இன்றைய செய்தித்தாள்களையும் தொலைக்காட்சிகளையும் பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். பல பகுதிகளையும் சுருட்டி வீசியிருக்கிறது. மாநிலத்தில் கிட்டத்தட்ட  மத்தியப் பகுதியில் இருக்கும் திண்டுக்கல் கூட கிழிந்த காகிதமாகியிருக்கிறது. புதுக்கோட்டை, பேராவூரணி மாதிரியான ஊர்களில் இருக்கும் நண்பர்கள் கதறுகிறார்கள். படுமோசமான விளைவுகளைப் புயல் உருவாக்கியிருக்கிறது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் முத்துக்குமாரின் பதிவு இது-


இருபத்தைந்து வருட உழைப்பை நண்பர் இழந்திருக்கிறார். 260 தென்னை மரம், பத்து வருடம் வளர்த்த 500 தேக்குமரங்கள், 20 ஏக்கர் நெல் என அவர் இழந்தது மிகப்பெரியது.  இருபது நாட்களுக்கு முன்பாக அவருடைய வயலின் படம் கீழே இருக்கிறது.


பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். 

அரை ஏக்கரிலும் ஒரு ஏக்கரிலும் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக வளர்த்து வந்த கால்நடைகள், கோழிகள் என எல்லாவற்றையும் இழந்து நிற்கும் விவசாயிகள் பல்லாயிரம் பேர் இருக்கக் கூடும்.  முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களின் மரணம் என்பது சாதாரணமானதில்லை. ஏகப்பட்ட கால்நடைகள் இறந்திருக்கின்றன. மரங்கள் சாய்வதையும், விவசாயம் அழிவதையும் தடுத்திருக்க முடியாது என்றாலும் உயிர்ச்சேதத்தை அரசு நிச்சயம் தடுத்திருக்க முடியும். 

முன்னேற்பாடுகள் ஒரு பக்கம் என்றால் நிவாரணப்பணிகள்தான் மிக முக்கியம். தம் உழைப்பை, சொத்துக்களை இழந்து நிற்கும் அவர்களுக்கான சிறு ஆறுதல் என்பது நிவாரணப்பணிகள்தான். ஆனால் நிவாரணப்பணிகள் மிக மோசமாக இருப்பதாகத்தான் அந்தப் பகுதி நண்பர்கள் சொல்கிறார்கள். யாரையும் குறை சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு அவசரமாக ‘கூஜாவானது கஜா’ என்று ஆளும் வர்க்கத்தினர் மார்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை. விளம்பர வெளிச்சத்துக்காக எளிய மக்களின் வலியில் விளையாட வேண்டியதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஏதோவொரு கிராமத்தில் குடும்பத்தோடு அழுது கொண்டிருக்கும் ஏழை விவசாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அவசியம். 

மின் இணைப்புகளை சரி செய்தல், குடிநீர் விநியோகம், சாலைகளை சரி செய்தல் ஆகியவற்றில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் உடனடி நிவாரண உதவிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டும். ஏற்கனவே சில அமைப்புகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போதாது என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் எல்லாவற்றிலும் ‘எமோஷனலாக’ மாறி, கொண்டு போய் குவிக்கவும் வேண்டியதில்லை. உடனடியாகச் செயலாற்ற வேண்டியது அக்கம்பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். உணவு, உறைவிடப் பணிகளை அவர்கள் மேற்கொள்வது சரியாக இருக்கும். அவர்கள் ‘இன்னமும் தேவையிருக்கிறது’ என்று குரல் எழுப்ப எழுப்ப பிற மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் கை கோர்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு தூரப் பகுதிகளைச் சார்ந்தவர்கள் மறு-நிர்மாணம் சார்ந்த திட்டமிடலைச் செய்ய வேண்டும். கேரளாவில் வயநாட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ‘Donate a Cow' என்ற முன்னெடுப்பை ஹர்ஷா என்றொரு அதிகாரி செய்து வருகிறார். அந்த மாவட்டத்துக்கான பால்வள அபிவிருத்தி அதிகாரி அவர். தன்னார்வ அமைப்புகளில் பேசி அவர்களிடமிருந்து கறவை மாடுகளை வாங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்குகிறார். இன்னமும் பல மாத காலங்களுக்கு இந்தப் பணியைச் செய்யப் போவதாகச் சொன்னார். இத்தகைய பணிகள்தான் அவசியமானவை. பல நூறு குடும்பங்கள் மேலே வரும். 


இதையும் கூட கஜ புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யோசிக்கலாம். போலவே, தென்னை மரங்களை இழந்த குறுவிவசாயிகளுக்கு கன்றுகள் வாங்கி நட்டுத் தருவது, தொழில்களை இழந்த ஏழைகளுக்கு அவர்களுக்கான தொழில்களை மீண்டும் நிர்மாணிக்க உதவுவது போன்ற பணிகளைச் செய்வதற்கான திட்டமிடல்களைச் செய்யலாம். பொதுவாக இத்தகைய தருணங்களில் பேரிடரின் பாதிப்புகள் மறைவதற்கு முன்பாக கொட்டி குவித்து விடுவார்கள். நாம் அத்தனை பேருமே உணர்வுப்பூர்மானவர்கள்தான் இல்லையா? ஆனால் அடுத்த மாதத்திலிருந்து கண்டுகொள்ள ஆட்கள் இருக்க மாட்டார்கள். 

கஜ புயலிலிருந்து அத்தகைய மனநிலை சற்று மாறுபட வேண்டும். உள்ளூர்களில் சரியான நபர்கள் நீண்டகால நோக்கிலான செயல்பாட்டுடன் இறங்கிப் பணியாற்றுவது நல்ல பலன்களைத் தரும். அதுதான் அந்த மக்களுக்கான பெரிய ஆறுதலும் கூட. ஒவ்வோர் ஊரிலும் ஹர்ஷா மாதிரியான அதிகாரிகள் அமைவார்களா என்று சொல்ல முடியாது. மக்களே முன்னெடுக்க வேண்டியதுதான். 

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Kindly write about Crop Insurance Plans.

Selvaraj said...

நேற்று(17.11.2018) காலையிலேயே என் கல்லூரி நண்பனின் whatsaApp Statusல் இவரின் பதிவை பார்த்தேன். புயல் பாதிப்பை தெளிவாக அனைவரும் உணரச்செய்த பதிவு. 23 வருட வெளிநாடு உழைப்பு என்பது சாதாரணமானதல்ல.

Shan said...

என் அப்பா அவரது பல வருட உழைப்பில் உருவாக்கிய தெண்னை மரத்தோட்டம் ஒரு இரவில் இல்லாமல் ஆனது. எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் முன்னேற அடித்தளம் இட்டவை இந்த தெண்னை மரங்கள். பல எளிய குடும்பங்களின் உழைப்பையும் கனவையும் சிதைத்து விட்டது.