சூப்பர் 15 என்றொரு தொடர் நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு தொடங்ப்பட்டது. இந்த முறை அடுத்த மாணவர் குழுவைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறோம். பதினைந்து முதல் இருபது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். சூப்பர் 15, சூப்பர் 16 அல்லது சூப்பர் 17 என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தப் பெயர் மாறுபடும். இந்த வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கையினை நவம்பர் மாத இறுதிக்குள் முடிவு செய்து டிசம்பரில் முதல் வகுப்பைத் தொடங்கிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்.
கடந்த முறை வருடத்தின் தொடக்கத்திலேயே இந்த வகுப்புகளை ஆரம்பித்தோம். அத்தனை மாணவர்களும் தமிழ் வழிக் கல்வி என்பதாலும் கிராமத்தின் பின்னணி என்பதாலும் அவர்களால் கல்லூரிப் பாடத்திலேயே கவனம் செலுத்துவதில் சிரமங்கள் இருந்தன. அதனால் இந்த முறை வகுப்புகளை ஆரம்பிக்கும் தருணத்தில் மாணவர்கள் ஓரளவுக்கு ‘செட்டில்’ ஆகட்டும் என்பதும் ஒரு காரணமாக இருந்தது.
கடந்த முறை நிசப்தம் வழியாக உதவி பெறும் மாணவர்களுக்கும் மட்டும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முறை அப்படியன்று. ‘பற்ற வைத்தால் போதும்’ என்கிற திறனுள்ள மாணவர்கள் அதே சமயத்தில் பற்ற வைக்க ஆள் இல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். முறையாக விண்ணப்பங்களைப் பெற்று, நேர்காணல் நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். எளிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்படும் என்பதால் வெகு தூர மாணவர்களை இந்த முறை சேர்த்துக் கொள்ள இயலாது. மாணவர்களுக்கும் அது சாத்தியமாகாது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வகுப்புகளைப் பரவலாக ஏற்பாடு செய்யும் போது பிற மாவட்ட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வருடம் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மாணவர்கள் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம். மாதத்தில் ஒரு நாள் (வார இறுதியில்) வகுப்பு நடைபெறும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் தகுதியில் இருக்கும் அதிகாரிகள் பயிற்றுநர்களாக இருப்பார்கள். அவர்கள் தவிர ஆங்கிலம், மனோவியல் உள்ளிட்ட வல்லுநர்களும் வகுப்புகளை நடத்துவார்கள். அடுத்தடுத்து எதைப் படிக்கலாம், திறன் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் என்பதோடு சேர்த்து மொத்தமான ஆளுமை உருவாக்கப் பயிற்சியாக இருக்கும்.
கடந்த முறை பயிற்சி பெற்றவர்களில் ராஜேந்திரன் (ஐஐடியில் ஆராய்ச்சி முனைவராகச் சேர்ந்திருக்கிறார்), அரவிந்த் (மீன்வளக் கல்வியில் முதலாண்டு முடிக்கிறார்), தமிழரசன், சார்லி, விக்னேஷ் உள்ளிட்ட ஜிம்னாஸ்டிக் மாணவர்களைக் குறிப்பாகச் சொல்ல முடியும். இந்த வருடம் அதைவிடச் சிறப்பான முடிவுகளை அடைய வேண்டும் என்பதுதான் இலக்கு.
மாணவர்கள் தங்கள் விவரங்களை மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். (பெயர், கல்லூரி, எந்த ஆண்டு படிக்கிறார், ஊர்) ஆகிய விவரங்களை அனுப்பி வைத்தால் முதற்கட்டத் தேர்வுக்குப் பிறகு நேர்காணலுக்கு அழைக்கிறோம். நவம்பர் 22க்குள் இந்த விவரங்களை அனுப்பி வைக்கவும். அந்த வார இறுதியிலேயே நேர்காணல் நடத்தப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளைத் தொடங்கிவிடலாம்.
மேலதிக விவரங்களுக்கு +91 98420 97878 (திரு. அரசு தாமஸ்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இந்தத் தொடர் பயிற்சிக்குக் கட்டணம் எதுவுமில்லை. முழுமையான இலவசப் பயிற்சி. தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணத்தைச் சொல்லி ஒரு வகுப்புக்கு வராமல் இருந்தாலும் அடுத்த வகுப்புக்கு அனுமதி மறுக்கப்படும். மாணவர்களுக்கு வழிகாட்டிகள்(Mentor) நியமிக்கப்படுவார்கள். அவர்கள் மாணவர்களைப் பின்தொடர்வார்கள்.
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”
அக்கினிக் குஞ்சுகளை அடையாளம் காண உதவுங்கள். முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் யாரேனும் இந்தப் பயிற்சி வகுப்புக்குப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் எனக் கருதும் பட்சத்தில் அவர்களிடம் இந்தத் தகவலைப் பகிரவும்.
நன்றி.
1 எதிர் சப்தங்கள்:
Oops...You are about to get 1000's of mails...
Post a Comment