‘மூஞ்சி கருவழிஞ்சு போச்சு’ ‘இளைச்சு போய்ட்ட’ - கடந்த இரண்டு நாட்களாக நிறைய சொந்தக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். சந்தோஷம். அஜீத்குமார் மாதிரி வெள்ளையாக இருந்து த்ரிஷாவுக்கு அம்புவிடப் போகிறோமா? கட்டக்கரையே என இருக்கும் விஜய் சேதுபதிக்குத்தான் அந்தப் பெண் அட்டகாசமாகப் பொருந்துகிறார். ஊரே கொண்டாடுகிறது. நமக்கு எதுக்கு சிவப்பும் வெள்ளையுமாக முகம்? போதாக்குறைக்கு சொட்டை வேறு.
பெங்களூரும் தமிழ்நாடும் ஒன்றா? பெங்களூரில் அலுவலகத்தில் இருக்கும் போது சூடாக ஏதாவது குடிக்கலாம் எனத் தோன்றும். ஏ.சி அறையிலிருந்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கும். பல நாட்களில் வெளியில்தான் குளிர் அதிகமாக இருக்கும். ஒன்றுக்கு இரண்டாகக் குடித்துவிட்டு வருவேன். இங்கு அப்படியா இருக்கிறது? அதே பதினோரு மணியானால் நாக்கு நமநமக்கிறது. வெளியே போனால் மூளை உருகி காது வழியாக ஒழுகத் தொடங்கிவிடுகிறது. டீக்கடையைப் பார்த்தால் எண்ணெய்க் கொப்புரையை காய வைத்துக் கொண்டிருப்பவர்கள் போலவே தெரிகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அடுமனைக் கடை திறந்து வைத்திருக்கும் திராவிடச் சகோதரர்களான மலையாளிகளிடம் ‘ஒரு லெமன் ஜூஸ் கொடுங்க சேட்டா’ என்று வாங்கிக் குடித்துவிட்டு வருகிறேன்.
கொஞ்ச நஞ்ச வெயிலா கொளுத்துகிறது? முகம் கருக்கத்தான் செய்யும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாகச் சென்னை வந்திருந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் தமது அலுவலகத்தின் சாவியைக் கொடுத்துவிட்டார். ‘ப்லாக்ல கீது பேரை எழுதிடாதீங்க’ என்று அவர் கேட்டுக் கொண்டதால் ஒரு க்ளூ மட்டும்தான். ‘ச’வில் ஆரம்பித்து ‘ன்’ல் முடியும். அந்த அலுவலகத்தில் யாருமில்லை. பூட்டி வைத்திருக்கிறார்கள். வாடகையெல்லாம் தர வேண்டியதில்லையாம். வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னொரு நண்பர் ஃபோனில் அழைத்து கோயம்பேட்டில் ஒரு வீடு இருக்கிறது. ‘வாடைக்குத் தர்ற மாதிரியெல்லாம் இல்லை...நீங்க இருந்துக்குங்க’என்றார். நமக்கென்று சில மனிதர்கள்.
தி.நகரில் அறை. மாலை ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தது. நடந்து போய்விடலாம் என்று நான்கு எட்டு வைப்பதற்குள் பனியன் நனைந்து ஈரம் வழிந்து ஜட்டியை நனைக்கிறது. அவ்வளவு கசகசப்பு. ஆனால் இந்த அண்ணாச்சிமார்கள் பரவாயில்லை. தி.நகர் முழுவது ஏ.சி கடைகளைத் திறந்து வைத்து நன்றாகக் குளிரவிட்டிருக்கிறார்கள். போத்தீஸில் கொஞ்ச நேரம், சரவணாஸில் கொஞ்ச நேரம் என உள்ளே புகுந்து வெளியே வந்து உடலைக் குளிரச் செய்துவிட்டு வந்தேன். இதையேதான் இனி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்ய வேண்டும். எவ்வளவு சுகமாக இருக்கிறது. வாழ்க்கையில் வேறு எந்த சுகத்தையும்விட இதுதான் மிகச் சிறப்பு.
‘சென்னையில் ஏன் பெண்கள் சுடிதார் மட்டுமே அணிகிறார்கள்?’ என்று பெரிய பி.ஹெச்.டி மாணவனைப் போல எனக்கு நானே கேட்டு வைத்திருந்தேன். அப்படி ஏதாவதொரு ஆடையிருந்தால்- விஜய் டிவியில் வரும் அனந்து போல ஆண்களும் அணிந்து கொள்ளலாம். தவறேயில்லை.
சென்னையை பெங்களூரின் சீதோஷ்ணத்துடன் ஒப்பிடுவது போல அபத்தம் வேறு எதுவுமிருக்க முடியாது. வெப்பத்தைத் தாண்டி சென்னையிலும் தமிழகத்திலும் சந்தோஷம் தரக்கூடியவை எவ்வளவோ இருக்கின்றன. கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் நடத்துனரின் இருக்கையில் ஒருவன் அமர்ந்திருந்தான். நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்துவிட்டு வந்து அவனை எழச் சொன்னார். மறுத்தான். நடத்துனருக்குக் கோபம்.
சட்டையைப் பிடித்து எழச் சொன்னார். அவன் தென் தமிழகத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும். பேச்சு அப்படித்தான் இருந்தது. யாராக இருந்தால் என்ன? ‘ஏம்ப்பா அவர்தான் எந்திரிக்கச் சொல்லுறாருல்ல..எந்திரிக்க வேண்டியதுதானே’ என்றேன். இந்த தைரியம் பெங்களூரில் இருக்காது. பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் அந்நியன் அந்நியன்தானே? கமுக்கமாக இருந்து கொள்வேன்.
‘நீ வேலையைப் பாரு..எங்களுக்குத் தெரியும்’ என்றான் அவன். எனக்கு இன்னமும் சுள்ளென்றாகிவிட்டது. ஆள் கடாமாடு மாதிரிதான் இருந்தான். ஓங்கி அப்பினாலும் அப்பிவிடுவான். அப்பினால் யாராவது துணைக்கு வரக் கூடும். ஆனால் வலியை நாம்தான் பொறுத்தாக வேண்டும்.
இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ‘டேய் மரியாதையா சொன்னால் தெரியாதா? ...ண்ணா வண்டியை ஸ்டேஷனுக்கு விடுங்கண்ணா’ என்றேன். இந்த நோஞ்சானுக்குள் இவ்வளவு தெனாவெட்டா என்ற ஜெர்க்கில் அவன் நிற்கும் போதே கண்டக்டர் விசிலடித்துவிட்டார். நான்கைந்து பயணிகளும் எனக்கும் நடத்துனருக்கும் துணையாகச் சேர்ந்துவிட்டார்கள். நடத்துனருக்கும் வேகம் அதிகமாகியிருந்தது.
‘எந்திரிக்கிறயா? வண்டியை ஸ்டேஷனுக்கு விடட்டுமா’ என்றார். அவன் எழுந்தான். அவனும் நின்று கொண்டு வந்தால் எனக்குத்தான் ஆபத்து அதிகம். எதையாவது எடுத்து செருகித் தொலைத்துவிடப் போகிறான் என்று உள்ளூர உதறல். நல்லவேளையாக அவன் இன்னொரு முடிவை எடுத்துவிட்டான். ‘அப்படியொரு மசிருன்னா நான் இந்த பஸ்லேயே வர வேண்டியதில்லை’ என்று இறங்கிவிட்டான். அப்பாடா என்றிருந்தது. கவரிமான் பரம்பரையாக இருக்கக் கூடும். அவன் இறங்கிய பிறகு அதுவரை அமைதியாக இருந்தவர்கள் கூட ‘அவனையெல்லாம் போலீஸ்ல விட்டுரணும்’ என்று வெத்து கெத்து காட்டினார்கள்.
வீட்டில் வந்து பெருமையாகச் சொன்னேன். ‘இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணுறதுன்னா நாம பெங்களூரே போய்டலாம்’ என்று அம்மா சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலாக ரவுடி ஆகிவிட்ட சந்தோஷம் எனக்கு.
8 எதிர் சப்தங்கள்:
//அவன் தென் தமிழகத்தைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும்.//
கோயம்புத்தூர் ல காலை வச்சதுலேருந்து எங்கள வம்புக்கு இழுக்குறதே வேலையா போச்சு.
//‘ச’வில் ஆரம்பித்து ‘ன்’ல் முடியும். அந்த அலுவலகத்தில் யாருமில்லை.//
சலூன்...
இப்படி ரவுடி ஆவதற்கு காரணம், முந்தாநேத்து சத்தியமங்கலத்தில் ஒருத்தர் கிளப்பி விட்டாரே 'தமிழ்நாடு தலைவனுக்காக ஏங்குகிறதுனு' அது தானுங்க??
"இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணுறதுன்னா"-- அண்ணே உங்கள கொடுரமா கலாய்ச்சிருக்காங்க. 😊
செம்ம!! நானும் ரவுடி தான்!!!
இதே கோவை-திருப்பூர் வழி பேருந்து. 2005. ஓட்டுனர் அருகில் இருக்கும் என்ஜின் tank மேல உட்காந்திருந்தேன். 4 ஆவது இருக்கையில் ஒரு அம்மா, பொண்ணு. aisle பக்கமா உட்கார்ந்திருந்த பெண்ணை அருகில் ஒருத்தன் வம்புப் பண்ணிட்டே வந்திருப்பான் போல. கொஞ்ச நேரத்துல ரெண்டு பெரும் இடம் மாறி உட்கார்ந்திருக்காங்க. இந்த rascal ஏன் இடம் மாறி உட்காருறீங்க னு கேட்க, அந்த அம்மா அவனைத் திட்ட, அந்த பெண் கிட்ட, "இவ்வளவு நேரம் நல்லா இருந்துச்சோ, இப்போ தான் தெரியுதோ" என்கிற தொணியில கேவலமா கேட்க, அம்மா, பொண்ணு ரெண்டு பெரும் அழுறாங்க. ஒரு பெரிய சத்தம் போட்டேன், இருந்த எடத்துல இருந்தே. உனக்கு என்ன அக்கறை னு கேட்டான். அப்படிதாண்டா கேட்பேன் னு சத்தமா சொன்னேன். அடுத்த stop ல எறங்கிட்டான். அவ்வளவு தான் இவங்க வீரம்-எதிர்த்துக் கேட்காத வரை தான். ஆனா, ஒருத்தரும் கேட்கமாட்டாங்க என்கிற தைரியம். வீட்டில் சொன்னா, "வேலைக்குன்னு போன எடத்துல ஊர் வம்பு இழுத்துட்டு வராத. நாளைலேர்ந்து கவனமா போ, அவன் உன்னை ஏதாவது செஞ்சிற போறான்" னு அட்வைஸ். நானும் கொஞ்சம் பயந்தேன், ஆனா, ஒன்னும் இல்ல. உண்மையில், அந்த நேரத்துல, அவனுங்களுக்கு அவமானத்துலேயும், கேள்வி கேட்கப்பட்ட அதிர்ச்சியிலும், ஆள் யார்னு கவனிக்க முடியுமா னு தெரில.
நடத்துனருக்கு ஆதரவா நீங்க இவ்வளவு உணர்ச்சிவசபடவேண்டிய அவசியமில்லை. "மழை" காரணமா இடைத்தேர்தலையே தள்ளி வச்சிருக்காங்க நீங்க என்னடான்னா ஒருத்தன் எழும்பலேன்னதும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியவிடசொல்லிருக்கீங்க.
பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
Post a Comment