Oct 10, 2018

காது கொடுத்துக் கேளுங்க

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மாண்புமிகு கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டத்துக்காரர். பலருக்கும் இந்தப் பெயர் புதிதாக இருக்கக் கூடும். எளிமையாக நினைவூட்ட வேண்டுமானால் ‘மக்கள் அதிகம் சோப்பு பயன்படுத்துவதால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது’ என்றவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த செங்கோட்டையன் மீது அம்மையாருக்கு நல்ல அபிப்பிராயமில்லை. ஓரங்கட்டி வைத்திருந்தார். அதே போல கடந்த முறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தனி ஆவர்த்தனம் செய்கிறார் என்பதாலேயோ என்னவோ மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த பவானிக்காரரை மாவட்டத்துக்கு அமைச்சராக்கினார். 

நல்லதுதான். இன்றைய தேதிக்கு தமிழகத்திலேயே ஒரு மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்கள் என்றால் அது ஈரோட்டுக்குத்தான். சுற்றுச்சூழல் அமைச்சர் இதுவரை தமிழக சுற்றுச்சூழலுக்கு என்ன செய்தார் என்று தெரியவில்லை. பெரிய எதிர்பார்ப்புமில்லை. தமிழகத்தில் அமைச்சர்களிடம் எதிர்பார்ப்பதைவிடவும் பெரிய முட்டாள்த்தனம எதுவும் இருக்க முடியுமா? உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்கிற மனநிலைதான். ஆனால் இன்றைக்கு அதில் ஒரு பெரிய குண்டைத் தூக்கி வீசியிருக்கிறார்.

இனிமேல் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களிடம் கருத்துக் கேட்பு எதுவும் அவசியமில்லை என்று அவர் மத்திய அமைச்சரிடம் கையளித்த பதின்மூன்று அம்சக்கோரிக்கையில் பத்தாவது அம்சம் சொல்கிறது. சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்திருக்கும் இது  உண்மையான செய்தியாக இருந்தால் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். 

ஒரு திட்டத்தை அமல்படுத்தும் போது அந்தப் பகுதியைச் சார்ந்த மக்களிடம் ‘உங்களுக்கு இதில் ஏதாச்சும் பிரச்சினை இருக்கா?’ என்று கருத்துக் கேட்பது வழமையான செயல். ஓரிரு கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். கூட்டமே வராத ஒரு நாளாகப் பார்த்துத்தான் வைப்பார்கள்.  பொதுவாகவே எந்தக் கிழமையில் வைத்தாலும் அப்படித்தான் இருக்கும். ‘என்னமோ பண்ணிட்டு போகட்டும்..’ என்கிற மனநிலைதானே பெரும்பான்மைச் சமூகத்துடையது? ஒவ்வொரு தனிமனிதனும் வந்து சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது- எளிய மனிதர்களுக்கு பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரியாது. ‘ஹைட்ரோகார்பன் திட்டம்’ என்பதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் அந்தப் பெயரை உச்சரித்திருப்போம். ஆனால் இரண்டு நிமிடங்களுக்கு அந்தத் திட்டம் குறித்து நம்மால் பேச முடியுமா? பொதுவாகவே எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தளவுக்குத்தான் நம்முடைய புரிதல் இருக்கும். அதனால்தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்வார்கள். திட்டத்தின் சாதக பாதங்களைப் பற்றி எடுத்துரைப்பார்கள். திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏதேனும் சதி, ஊழல் இருந்தால் ‘இந்த நோக்கத்துக்காகத்தான் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்’ என்று மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். 

அதன் பிறகுதான் மக்களில் ஒரு சாரார் ‘ஓஹோ அதுதான் சங்கதியா’ என்று யோசிப்பார்கள். திட்டம் சம்பந்தமாக நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை யாராவது முன்வைக்கும் போது அரசின் சார்பில் பங்குபெறும் அதிகாரிகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுப்பார்கள். சில விளக்கங்கள் அதிகாரிகள் கொடுக்கும் போது அவை சிலரால் ஏற்றுக் கொள்ளப்படும். அதிகாரிகளால் சமாதானம் கொடுக்க முடியாத சமாச்சாரங்கள் முட்டுக்கட்டையாகத் தொடரும். அதன் பிறகு தேவைப்பட்டால் நீதிமன்றம்/பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு அந்தப் பகுதியினர் செல்வார்கள்.

கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது வெறும் நஷ்ட ஈடு பற்றியப் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசுவதற்கானதில்லை. மேற்சொன்ன எல்லாமும் அதன் ஒரு அங்கம்தான். அதற்குத்தான் காலங்காலமாக அப்படியொரு அம்சத்தை உள்ளே வைத்திருக்கிறார்கள். இப்பொழுது ஆல்வே அண்ணாசாமி மாதிரி ‘பொதுநல அமைப்புகள் தடை போடுகின்றன அதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதமாகிறது’ என்று காரணத்தைச் சொல்லி ‘இனி கருத்துக் கேட்பே அவசியமில்லை’ என்று மத்திய அரசிடம் சொல்வது எவ்வளவு மோசமான முன்னுதாரணம்? இவர் இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட்டால் அடுத்து வரும் ஆட்சியும் ‘நமக்கும் வசதிதான்’ என்று பழைய நடைமுறைகளையே தொடர்வார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.

கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தால் கூட ஏகப்பட்டவற்றை மூடி மறைத்துவிடுகிறார்கள். அதுவுமில்லையென்றால் சோலி சுத்தம். 

சமூகவிரோதக் கும்பல்கள் உள்ளே புகுந்துவிடுகின்றன என்றால் அவர்களையும் சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புதான். அதைவிட்டுவிட்டு ‘கமுக்கமாக காரியத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்பது எப்படித் தீர்வாகும்?

எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களிடம் ஒரு விவாதத்தை உருவாக்கி அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்து நிறைவேற்றப்பட வேண்டுமே தவிர மத்திய அரசும், மாநில அரசும் நினைத்ததை முடிக்கும் சர்வாதிகாரமாக இருக்கக் கூடாது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மக்களிடம் தகவல் தொடர்பு விரிவடைந்திருக்கிறது. விழிப்புணர்வும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தடை போடத்தான் செய்வார்கள். வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி நகர்கிற காலமிது. எல்லாவற்றையும் போர்வையைப் போர்த்தி மாட்டு வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. 

பிற அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் இந்த முன்னெடுப்பு குறித்து தம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள் என நம்புவோம்.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ஊதுற சங்கை ஊதிட்டாரு.(ஏர்போர்ட் பக்கம் போறதுல்லங்கற தெனாவெட்டு)
நல்லா இருக்குறதும் நாசமா போறதும் இனி நம்ம சிந்தனையையும், செயலையும் பொறுத்து தான் இருக்கு.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

பிற அரசியல் கட்சித்தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் இந்த முன்னெடுப்பு குறித்து தம்முடைய எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள் என நம்புவோம்...
நம்பினோர் கெடுவதில்லை. வாழ்க வளமுடன்

Anonymous said...

சரியான கருத்து. இது மாதிரி கூட்டங்கள் சரியான முன் அறிவிப்பு இன்றிதான் நடைபெரும். இனி அதுவும் இல்லையா?. ஊடகங்கள் வியாபார நோக்கில் மட்டுமே செயல் படுகிறது. இது போன்ற விபரங்களை மக்களிடம் கொண்டு செல்வதில்லை

கா. முத்துசாமி
கோயமுத்தூர்