Oct 3, 2018

பைனரி

கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள்.  சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட்.  (Central Institute of Plastic Engineering & Technology)


முதல் நாள் சரியென்று சொல்லியபிறகு அடுத்த நாள் அழைத்து ‘நீங்க மீட்டிங்குக்கு எவ்வளவு காசு வாங்குவீங்க?’ என்றார்கள். முன்பொரு சமயம் வேறொருவரை அழைத்திருந்தார்களாம். பேச வந்தவர் கிளம்புகிற தருணத்தில் ‘வெளி காலேஜ்ல காசு கொடுப்பாங்களே’ என்றாராம். அதன் பிறகு எப்படியோ ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை. இப்படி நேரடியாகக் கேட்டால் பதில் சொல்லத் தெரிவதில்லை.

‘நான் ஒண்ணும் வாங்கினதில்லைங்க’ என்றேன். தேதி உறுதியாக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்றிருந்தேன். நல்ல மரியாதை. சென்னையில் இருக்கும் இடத்தைக் கேட்டு ஒரு வாடகைக்கார் பிடித்து வந்துவிட்டார்கள்.

‘தம்பி..நீங்க வாடகைக்கார்ல வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா மெட்ரோவிலேயே வந்திருப்பேனே’என்றேன். 

‘அதெல்லாம் மரியாதை இல்லை’ என்றார்கள். 

சிப்பெட் ஒரு காலத்தில் கனவுக்கல்லூரி. மைதானத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பியிருந்தன. ‘நாம பேசறதைக் கேட்க இவ்வளவு கூட்டமா’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் போதும். கூட்டம் தூள் கிளப்பும். எந்தக் கட்சிக்காரர்கள் அழைத்தாலும் வஞ்சனையில்லாமல் வருவார்கள். ஆனால் மனசாட்சி என்று ஒன்றிருக்கிறதல்லவா? நமக்கெல்லாம் காசு கொடுத்து அழைத்து வருவார்கள் என்பது எவ்வளவு அற்பத்தனமான நம்பிக்கை. பிறகுதான் தெரியும் பேசி முடித்த பிறகு மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று. ‘இருபது நிமிஷம் பேசினா போதும்’ என்று அவர்கள் சொல்லும் போதே சுதாரித்திருக்க வேண்டும். 

ஒரே விஷயத்தைத்தான் அழுத்தம் திருத்தமாகப் பேச வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

பிறந்ததிலிருந்தே எல்லாமே பைனரிதான். 0 அல்லது 1. நடக்கும் அல்லது நடக்காது. சரி அல்லது தவறு. இந்த இரட்டைத்தன்மைதான் நம்மை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் -‘பிறக்கப்போவது ஆணா? பெண்ணா’ என்பதில் தொடங்கி ‘பாஸ் ஆவானா? இல்லையா?’ ‘வேலை கிடைக்குமா? கிடைக்காதா?’ ‘ப்ரோபோஸ் செஞ்சா ஏத்துக்குவாளா? மாட்டாளா?’ ‘கல்யாணம் ஆகுமா? ஆகாதா’ என நீண்டு சாகும் வரைக்கும் இப்படியான பைனரி பதில்கள் நமக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெறியெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். நிற்க நேரமில்லை. ஒவ்வொருவரும் ஆசுவாசமாக மூச்சு விட்டே வெகு காலம் ஆகிவிட்டது.  இந்த ஓட்டம் அவசியம்தான். மறுக்கவில்லை.

அதே சமயம் தலை தெறிக்க ஓடும் போது நம்மை சமநிலைப்படுத்திக் கொள்வதற்காக சில காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. பைனரி வாழ்க்கையிலிருந்து அவ்வப்பொழுது நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். அதற்காக நமக்கு நாமே சில கணங்களாவது பேசிக் கொள்ள வேண்டும். கையில் இருபத்து நான்கு மணி நேரமும் செல்போன் இருந்தால் அது சாத்தியமாவதில்லை. ஒருவன்/ஒருத்தி வாட்ஸாப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வோம் அல்லது ஒரு நிலைத்தகவலுக்கு ஒரு பின்னூட்டமிடுவோம். நிழற்படத்துக்கு ஒரு குறியிடுவோம். Action-Reaction mode. ஒன்றை முடித்துவிட்டு அடுத்த ஒன்றுக்கு ஓடுவோமே தவிர நின்று சிந்திக்க நேரமிருக்குமா என்று தெரியாது.

என்னதான் செய்வது? 

ஒரு வழியிருக்கிறது. நமக்கு நாமே கேள்விகளை எழுப்பச் செய்யும் சில காரியங்களைச் செய்யலாம். வைக்கம் முகம்மது பஷீரின் ‘தேன்மா’ என்றொரு கதை. அன்றைய தினம் அந்தக் கதையைத்தான் வாசித்திருந்தேன். ஓர் ஆசிரியரும் அவரது மனைவியும் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு வழிப்போக்கனுக்கு குடிக்க நீர் கொடுக்கிறார்கள். அவர் சாகக் கிடக்கும் முதியவர். அந்தப் பெரியவர் பாதியைக் குடித்துவிட்டு கொஞ்சம் நீரை பக்கத்தில் யாரோ சூப்பிப் போட்ட மாங்கொட்டைக்கு ஊற்றுகிறார். பிறகு இறந்தும் போய்விடுகிறார். அந்த மாஞ்செடியை எடுத்து நட்டு வளர்க்கிறார் அந்த ஆசிரியர். அந்தப் பெரியவரின் பெயரைத்தான் ஆசிரியர் தனது மகனுக்கும் வைக்கிறார். மிகச் சிறிய கதை இது. சில நிமிடங்களில் வாசித்துவிடலாம். ஆனால் வாசித்த பிறகு நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்க வைக்கும். இந்தக் கதையை வாசித்துவிட்டு என்ன புரிந்து கொண்டீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். (இணைப்பு)

பெரும்பாலான கதைகள் இப்படித்தான். ‘இந்தக் கதை என்ன சொல்ல வருகிறது?’ ‘மனிதம் என்பது மனிதர்களுக்கிடையேயானதா?’ என்பது மாதிரியான கேள்விகள். எந்தப் பதிலும் பைனரியில் இருக்காது. எந்தப் பதிலும் ரியாக்‌ஷன் மோடில் இருக்காது. இப்படி நம்மைக் கிளறுகிற எந்தவொரு செயலுமே நம் சம்பாத்தியத்திற்காக ஓடுகிற ஓட்டத்தை சமநிலைப்படுத்துகிற மனநிலையைக் கொடுக்கும். ஒரு பக்கம் ஓடிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் தினசரி அரை மணி நேரமாவது இந்த ஏகாந்தம் வேண்டும். இந்தச் சமநிலை மிக அவசியம்- உடல்நிலைக்கும் சரி; மனநிலைக்கும் சரி.

‘இலக்கியம் என்ன கொடுக்கும்?’ என்று கேட்டால் ‘சமநிலை’ என்பதையும் பதிலாகச் சொல்லலாம். வாழ்க்கையில் எல்லாமும் இருக்கட்டும். செல்போன், இணையம் என சகலமும் இருக்கட்டும். அதே சமயம் வாசிப்பும் இருக்கட்டும் என்று முடித்தேன்.

பேசி முடித்த பிறகு நிறையப் பேர் வந்து பேசினார்கள். சரியாகப் பேசிவிட்டதாகத்தான் நினைக்கிறேன். அதுதான் திருப்தியாக இருந்தது. கொஞ்ச நேரம் கலைநிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக மேடையில் இரட்டை அர்த்தம் தொனித்தாலே கிரண்பேடி மாதிரி கல்லூரி நிர்வாகத்தினர் மைக்கை அணைத்துவிடுவார்கள். இப்பொழுதெல்லாம் அப்பட்டமாகப் பேசினாலும் கூட கை தட்டி ரசிக்கிறார்கள். மாணவனாகவே இருந்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் பேராசிரியராக மாறியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். நாம் ஒன்று நினைக்க வாழ்க்கை இன்னொன்று நினைக்கும்.

திரும்ப வரும் போது மெட்ரோ நிலையத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். கோயம்பேடு வரைக்கும் முப்பது ரூபாய். 

9 எதிர் சப்தங்கள்:

Mani said...

Tough to understand this story. Who is really telling this.?

Murugan R.D. said...

திரும்ப வரும் போது மெட்ரோ நிலையத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். கோயம்பேடு வரைக்கும் முப்பது ரூபாய். ////////////// ஹாஹாஹாஹாஹாஹாஹ இந்த பஞ்ச் தான் எல்லோருக்கும் உங்களிடம் பிடித்தமான விசயம்,, உண்மையில் இப்படிப்பட்ட இயல்பான மனநிலை தான் எல்லோருக்கும் தேவைப்படுகிற சமநிலை என்று கருதுகிறேன்,,

சேக்காளி said...

// கல்லூரியில் பேராசிரியராக மாறியிருக்க வேண்டும் //
நானும் நினைத்திருக்கிறேன்

Muralidharan said...

In future, if possible add your speech in Audio / Video mode link :)

நந்தா said...

மனிதம்
பெரியவருக்கு தண்ணீர் கொடுத்தது.
மாஞ்செடிக்கு தண்ணீர் ஊற்றியது
பெரியவரை நல்லடக்கம் செய்தது
மாஞ்செடியை மாற்றி நட்டு பராமரித்தது
மாங்கனியை எல்லோருக்கும் கொடுப்பது

அன்பே சிவம் said...

நான் கொஞ்ச கடுப்புலதான் இருக்கேன்.கொஞ்சன்னா.., கொஞ்சுறது இல்லே.*கொஞ்சம்* பின்னே அந்த எரநூறு ஒவா சமாச்சாரம் முடிஞ்சுதா இல்லையா தெரியலை. இதுல கூட்டம் சேக்கிறாராமா..

Selvaraj said...

இனிமே பேசுறதுக்கு எவ்வளவு வாங்குவீங்கன்னு கேட்டாங்கன்னா - பத்தாயிரம் ரூபாயிலேர்ந்துன்னு சொல்லுங்க

சேக்காளி said...

//பின்னே அந்த எரநூறு ஒவா சமாச்சாரம் முடிஞ்சுதா இல்லையா //
முடியல

Anonymous said...

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!