Sep 7, 2018

எப்படி இருக்கு?

அடர்வனம் இப்பொழுது எப்படி இருக்கிறது என்று ஆயிரக்கணக்கானவர்கள் விசாரித்தார்கள் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.  நூறு என்பதும் கூட நம்பக் கூடிய கணக்கில்லைதான்.ஒன்றிரண்டு பேர் கேட்டார்கள் என்றால் அது மிகைப்படுத்திச் சொல்வதாக  இருக்காது. நிஜமாகவே ஒன்றிரண்டு பேர்கள் விசாரித்தார்கள். 

செடிகள் அட்டகாசமாக இருக்கின்றன. நண்பர்கள் மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள். தோராயமாக இரண்டாயிரம் செடிகளை நட்டிருந்தோம். அதிகபட்சமாக ஐம்பது செடிகள் பட்டுப் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. மற்ற செடிகள் ஜம்மென்று வளர்ந்து நிற்கின்றன. 


இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் அழைத்து 'அண்ணா செடியெல்லாம் வறண்டு போச்சா?' என்றார். திக்கென்றானது. வாட்ஸாப் குழுமம் ஒன்றை வைத்து தொடர்ந்து செடிகளின் நிழற்படங்களை கோட்டுப்புள்ளாம்பாளையத்திலிருந்து அவ்வப்போது  அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறார்கள். அவர் கேட்டவுடன் ஒரே நாளில் என்னவோ ஆகிவிட்டது போலிருக்கிறது என்று பதறி 'ஏன் கேட்குறீங்க?' என்று கேட்டேன்.

அரசியல்வாதி ஒருவர் ஒரு கூட்டத்தில் 'அடர்வனத்துல செடி எல்லாம் வறண்டு போனதாக'  பேசியதாகவும் அதைக் கேட்ட வேறொரு நபர் இந்த நண்பரிடம் விசாரித்திருக்கிறார். பேசுவார்கள். அரசியல்வாதிகளின் புத்தியே  அப்படித்தானே. இல்லாததையும் பொல்லாததையும் பேசிவிட்டுச் சென்று விடுவார்கள். அது வதந்தியாக உலவிக் கொண்டிருக்கும். சரியான சில்லறை புத்தி.

உண்மையில் இப்படியொன்றை கிளப்பிவிட்டு என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை. 

ஒருவன் நேரடி அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால் செடி நட்டு, குளம் தூர் வாரிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏதாவதொரு கட்சியில் உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொண்டு கரை வேட்டியைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால் அரைவேக்காட்டு அதிகார வர்க்கத்துக்கு இதெல்லாம் புரியவே  போவதில்லை. 'எங்கே இவன் நமக்கு போட்டியாகிவிடுவானோ' என்றுதான் எல்லோரையும் எடுத்துக் கொள்கிறார்கள். 

உள்ளூரில் யாராவது மேடையில் பேச அழைத்தாலும் கூட இதனால்தான் தவிர்க்க வேண்டியதாகிவிடுகிறது. யாராவது உதவி என்று கேட்டாலும் கூட உள்ளூர் என்றால் தவிர்க்கவே விரும்புகிறேன். இதெல்லாம் தர்மசங்கடம்தான். காசோலைகளைச் சத்தமேயில்லாமல் தூதஞ்சலில் அனுப்புவதும், தனிப்பட்ட முறையில் நேரடியாகச் சந்தித்து கொடுப்பதும் கூட இதனால்தான். இந்த வெளிச்சம் அவசியமில்லாதது. தேவையில்லாத பகைமையுணர்ச்சியைத்தான் உண்டாக்கும்.

நமக்கு இதெல்லாம் வேண்டியதில்லை என்ற மனநிலைதான் எனக்கு. இவனிடம் பணத்தை அனுப்பினால் சரியான மனிதர்களுக்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கையில் யாரோ பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு இயன்ற வேலையைச் செய்யலாம் என்பது மட்டும்தான் நோக்கம். அப்படி பயணிப்பதுதான் சரியானதாகவும் இருக்கும். 

ஆனால்  இன்றைய தலைமுறைக்கு அரசியல் ஆர்வம் அவசியம். நடுநிலை என்பதெல்லாம் சாத்தியமில்லை. சூழலுக்கு ஏற்ப யார் வெல்ல வேண்டும், யார் தோற்க வேண்டும் என்ற மனநிலை உண்டாவதில் தவறு எதுவுமில்லை. அதே சமயம் நேரடி அரசியல் என்பதெல்லாம் எல்லோருக்கும் அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். சாத்தியமும் இல்லை. 

அரசியலில் என்னுடைய ஆர்வமெல்லாம் பின்னணியிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதுதான். இந்தக் களத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் மனநிலை குறித்தான துல்லியமான அறிவு வேண்டும். எப்படி அரசியல் மாறுதல் நடக்கின்றன என்கிற தெளிவு இருக்க வேண்டும். இதெல்லாம்தான் விருப்பம். இந்த அறிவுக்காக வேலை செய்தாக வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச மாறுதல்களையாவது நம்மால் செய்ய முடியும் என நம்புகிறேன். ஆனால் இதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதில்லை. எதையாவது உளறி வைக்கிறார்கள்.

உண்மையில் இவர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் குளம் குட்டை எதுவும் நிரம்பவில்லை. பாசனத்துக்கு இன்னமும் நீர் வந்து சேரவில்லை. பல ஊர்களில் குடிக்க நீர் இல்லை. மராமத்துப் பணிகளுக்கு என்று கொள்ளையடித்த தொகையை விசாரித்து, எடுத்து வெளியில் பேசினால் நாறிவிடும். அரசுப் பணி நியமனதுக்கு எவ்வளவு லஞ்சம்? பணி இடமாற்றத்துக்கு எவ்வளவு லஞ்சம் என்பதையெல்லாம் ஒருவன் சாலையில் நின்று பேசினால் கதை கந்தலாகிவிடும். 

நேரடி அரசியலுக்கு வர நினைக்கிறவன் இதையெல்லாம்தான் கவனிப்பான். இந்த  பிரச்சினைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஊர்ப் பகுதியில் சுற்ற ஆரம்பித்தால் போதும். குளத்தை வெட்டி செடி நட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. முதுகெலும்பு இருக்கும் ஒருவன் சாலையில் இறங்கி இதையெல்லாம் பேசினால் ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். ஜெயிக்கிறானோ இல்லையோ- ஜெயித்துவிடலாம் என்று நினைங்கிற மனிதர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவிட முடியும். 

ஆனால் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வதுதான் காலத்தின் தேவை. வதந்திகளைக் கிளப்பிவிடுகிறவர்கள் கிடக்கட்டும். பெரிதாக பொருட்படுத்த வேண்டியதில்லை. 

செடிகள் நன்றாக இருக்கின்றன. எவ்வளவு மனிதர்களின் உழைப்பு? விட்டுவிடுவோமா?

நம்முடைய பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். அடுத்தடுத்த திட்டங்களை யோசித்துச் செயல்படுத்தலாம்.


3 எதிர் சப்தங்கள்:

MURUGAN RD said...

ஆனால் இன்றைய தலைமுறைக்கு அரசியல் ஆர்வம் அவசியம். நடுநிலை என்பதெல்லாம் சாத்தியமில்லை. சூழலுக்கு ஏற்ப யார் வெல்ல வேண்டும், யார் தோற்க வேண்டும் என்ற மனநிலை உண்டாவதில் தவறு எதுவுமில்லை. /////////////

ம்ம், எல்லாம் சரிதான்,,,, கட்டுமரம் கடற்கரைல உறங்கப்போன கையோடு நானும் திராவிட ஜ்ஜிலிப்பர் செல்லுன்னு கிளம்பினீங்களே அந்த அதிர்ச்சியிலிருந்தே என்னைப் போல இன்னும் பலரும் மீளவில்லை,,, நீங்க மேலே சொன்ன லாஜிக் (அது சரிதான் என்றாலும்) படி திடீர்ன்னு பிஜேபி சிலிப்பர் செல்லுன்னு இன்னொரு அவதாரம் எடுத்துருவீங்களோன்னு திக்,,திக்,குன்னு இருக்குது,,

மற்றபடி உங்கள் பொது சேவை, களப் பணி பாராட்டுக்குரியதே,,,,

Vaa.Manikandan said...

திமுகவின் ஸ்லீப்பர் செல் என்றா சொன்னேன்? திமுகவின் ஆதரவாளன் என்றுதானே சொன்னேன்? நீங்கள் தொடர்ந்து வாசிப்பதில்லை என்று நினைக்கிறேன். தொடர்ந்து வாசிக்கவும்.

சேக்காளி said...

//திமுகவின் ஸ்லீப்பர் செல் என்றா சொன்னேன்? திமுகவின் ஆதரவாளன் என்றுதானே சொன்னேன்?//
எனக்கு வயது 48
ஆனாலும் ஒரு தலைவன் நிலையில் தான் உங்களை பார்க்கிறேன்.
அந்த நேரத்து சாய்வு கொஞ்சம் தடுமாறத்தான் வைத்து விட்டது.