Aug 20, 2018

இதுவரையிலும்...

கேரள நிவாரண பணிகளுக்காக இதுவரையிலும் பணமாக ரூபாய் 4,51,387.00 வந்திருக்கிறது. இவை தவிர ஈரோடு, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பொருட்களாகக் கொடுத்திருக்கிறார்கள். கிரி சூடன், காங்ககேயம் திருப்பூர் ஆகிய இடங்களில் அவரது நண்பர்கள் சேகரித்த தொகையான சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு போர்வை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக சென்னிமலை சென்றிருக்கிறார்.  கோபிசெட்டிபாளையம் வைரவிழா ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் நிதி சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னை, கடலூர்  வெள்ளத்தின் போது  மக்கள் காட்டிய அக்கறை கேரளாவுக்கு இல்லையென்றாலும் கடந்த வாரத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு நிலைமை பரவாயில்லை.பல தரப்பிலும் வெள்ளம் பற்றிய உரையாடல்  இருக்கிறது. நிறையப்  பேர் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனால் என்னெவென்று தெரியவில்லை- கடுமையான எதிர்மறை பிரச்சாரமும் நடைபெறுகிறது. மதம் சார்ந்து, மொழி சார்ந்து, இனம் சார்ந்து நிகழும் இத்தகைய பிரச்சாரம் கடுமையான எரிச்சலை  உண்டாக்குகிறது. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அவனுக்கு துன்பத்தில் உதவுதுதான்  மனிதாபிமானம். மனிதாபிமானத்தை மீறி இங்கே செய்யப்படும் அரசியல் நாம் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தாமல் இல்லை.

குழந்தைகள் எல்லா இடங்களிலும் குழந்தைகள்தான். மின்சாரமில்லாமல் மழை பெய்யப் பெய்ய அழும் குழந்தையை நினைத்தால் 'அவனுக்கு உதவாதீங்க' என்று சொல்ல எப்படி மனம் வரும்? மூத்தவர்கள் குளிரில் நடுங்குவதையும், நசநசவென நனைந்து வாடுவதையும், வறியவன் தம் தொழிலை இழந்துவிட்டு பதறுவதையும் நினைத்துப் பார்த்தால் எதிர்மறையாக பேச நா கூசாது?

கடந்த சில நாட்களாக கேரளாவில் இருக்கும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மழை  குறைந்திருக்கிறது. இருந்தாலும் உதவி தேவைப்படுகிறது  என்கிறார்கள். கேரள மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மேலே  வந்துவிடுவார்கள்.

கடலூர் சென்னை வெள்ளத்தின் போது உடனடித் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல் கட்டமாக  செய்தோம். அடுத்த கட்டமாக சுமார் முன்னூறு குடும்பங்களுக்கு மீண்டும் தொழில் தொடங்கும் விதமாக மாடுகள், ஆடுகள், தையல் எந்திரம், பெட்டிக்கடை, இஸ்திரி பெட்டி  என்று  உதவினோம். இந்த முறை என்ன செய்வது என்று தெளிவான முடிவில்லை. இத்தகைய பேரிடர்களின் போது  முன்பே திட்டமிடுவது சரியாக  அமையாது. அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

செய்துவிடலாம்.

புதன்கிழமை வரைக்கும் பொருட்களைச் சேகரிக்கும் பணியைச் செய்துவிட்டு வியாழன் மற்றும் வெள்ளியன்று இந்தப் பணிக்கு என வந்திருக்கும் தொகைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அனுப்பி வைக்கும் வேலையைத்  தொடங்க வேண்டும். என்ன மாதிரியான பொருட்கள் தேவை என்பதை  உமேஷ் மாதிரியானவர்களிடம் புதன்கிழமை மாலையில் பேசிவிட்டு முடிவு செய்து  கொள்ளலாம்.ஆரம்பத்தில்   இரண்டு லட்ச ரூபாய் என்பதுதான் மனதிலிருந்த தொகை. இப்பொழுது மொத்தமாக பார்த்தால் ஏழு அல்லது எட்டு லட்சம் மதிப்புக்கான பொருட்களை  அனுப்பி வைப்போம்  எனத் தோன்றுகிறது.

நிசப்தம் மீதான தொடர்ந்த நம்பிக்கைக்கு  நன்றி. இணைந்து செயல்படுவோம். மனிதாபிமானம் மட்டும்  நிலைக்கும். இதனை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம். 

தொடர்புடைய பதிவுகள்:


3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இணைந்து செயல்படுவோம். மனிதாபிமானம் மட்டும் நிலைக்கும். இதனை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.//

senthilkumar said...

நாளைக்கு நமது மாநிலத்தில் இப்படியொரு நிலைமை வராது என்பது நிச்சயமல்ல. அரசியல்வாதிகள் தான் மக்களை திசைதிருப்புவார்கள். எனென்றால் பிரித்தால்தான் புகழையும், ஓட்டையும் வாங்க முடியும் என்பது அவர்களது நோக்கம்.
அதிகமான நிவரணப்பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து போகிறது என்பது செய்தி. அவர்கள் தவறே செய்திருந்தாலும் இந்த உதவி அவர்கள் நெஞ்சில் ஈரத்தை உண்டாக்கட்டும். அதுவே மாற்றத்துக்கான விதையாக நம்புவோம்.

Kannan said...

//சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது மக்கள் காட்டிய அக்கறை கேரளாவுக்கு இல்லையென்றாலும்// தேவையற்ற ஒப்பீடு.