Jul 19, 2018

கொழுப்பும் நலமும்

மணி,

நிசப்தம் தளத்தின் நீண்ட நாளைய வாசகன் நான். உங்களின் "எவ்வளவு பெரிய மலையெல்லாம் பாத்தாச்சு" பதிவு படித்தேன்.

//..இரண்டொரு மாதங்களுக்கு முன்பாக ரத்த பரிசோதனை செய்து கொண்டேன். நாற்பதை நெருங்குகிறோம் அல்லவா? முன்னெச்செரிக்கை. கொழுப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்தது...//

பலரும் படிக்கின்ற தளத்தில் கொழுப்பை பற்றி பயமுறுத்தும் விதமாக போஸ்ட் செய்திருப்பது கொஞ்சம் நெருடுகிறது. கொழுப்பைப் பார்த்து பயந்தது/பயமுறுத்தியது போதும். Paleo பற்றி படியுங்கள். நீங்கள் பின்பற்ற வேண்டாம். உங்கள் சிந்தனைகளை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

முகநூலில் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" குழு மூலம் ஆயிரக்கணக்கானோர் கொழுப்பைப் பற்றி படித்து, தெளிந்து பயன் பெற்றும் இருக்கிறோம். தயவு செய்து நீங்களும் படித்து பயன் பெறுங்கள். 

இலக்கியம், சமூகம், தொழில் நுட்பம் என பல விஷயங்களில் உங்களுக்கு நல்ல கற்றல் இருப்பதை உணர்கிறேன். அதே போல் ஒரு கற்றலாக "ஆரோக்கியத்தையும்" அணுகுங்கள்.

மிக மிக முக்கியமாக "ஆரோக்கியம் & நல்வாழ்வு" குழு, முழுக்க முழுக்க இலவசம். எனவே இதை விளம்பரம் என்று மட்டும் எண்ண வேண்டாம். இது சித்த வைத்தியம்/ஆயுர்வேதம் போன்ற வைத்திய முறை அல்ல. வாழ்விற்கு தேவையான உணவு முறை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இக் குழுவில் பல மருத்துவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள். 

ஒருவேளை நீங்கள் அதைப் படித்து, பிடித்து பகிர்ந்தால் மேலும் பல்லாயிரம் பேர் பயன் அடைவார்கள். நீங்களே சொல்லி இருப்பது போல், 40 ஐ நெருங்கும் அல்லது தாண்டிய அனைவருக்கும் இது பயன் உள்ளதாக அமையும். 

முதலில் comment ஆக போட நினைத்தேன். ஆனால், முதலில் நீங்கள் தெளிவு பெற்று பின்னர் இதைப் பற்றி எழுதுவது உசிதம் என்றே மெயில் அனுப்புகிறேன்.

அன்புடன்,
திரு.

திரு அனுப்பியிருக்கும் இந்த மின்னஞ்சல் மகிழ்ச்சியளிக்கிறது.

'கொழுப்புடன் வாழ்க' என்றுதான் பேலியோக்காரர்கள் சொல்கிறார்கள். 'கொழுப்புக்கும் இருதய அடைப்புக்கும் சம்பந்தமேயில்லை' என்று ஒரு வீடியோ கூட வந்திருந்தது. அம்மாவிடமும் தம்பியிடமும் காட்டினேன். 'லூசு மாதிரி வாட்ஸாப்பையெல்லாம் நம்பி உடம்பை பார்த்துக்காம விட்டுடாத' என்கிறார்கள். எனக்கும் இது குழப்பம்தான். 

பேலியோ என்பது நீரிழிவை கட்டுப்படுத்துகிறது, உடல் எடையைக் குறைக்கிறது என்று தெரியும். ஆரோக்கியம் & நலவாழ்வு குழுவில் கூட எடையைக் குறைப்பது பற்றித்தான் நிறைய பேசுகிறார்கள். எனக்கும் எடைதான் பிரச்சினை. ஆனால் என்னதான் தலைகீழாக நின்றாலும் அறுபதைத் தொட முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. பேலியோ அது இதுவென எடை குறைந்தால் ஆடி காற்றில் பறந்துவிடக் கூடும். 

கூடுதல் எடை, டயாபட்டீஸ் என்றால் பேலியோவை நாடலாம். ஆனால் கொழுப்பு நல்லது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மருத்துவ நண்பர்களிடம் பேசினால் கொழுப்புதான் இருதயத்தின் ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்று சொல்கிறார்கள். 'வேணும்னா குறைஞ்ச டோஸ் மாத்திரை எடுத்துக்கலாம்' என்று சொல்கிறார்களே தவிர, இதுவொன்றும் பிரச்சினையில்லை என்று எந்த மருத்துவரும் சொல்லவில்லை. கொழுப்பு நல்லதுதான் என்றால் எப்படி நல்லது என்று புரியவில்லை. கொழுப்பு நல்லது என்றால் இருதய அடைப்புக்கு என்ன காரணம்? 'மன அழுத்தம்' காரணம் என்றாலும் எது அடைப்பை உருவாக்குகிறது? குழாய்களில் திரண்டு நிற்கும் கொழுப்பு இல்லையா? முப்பது மூன்று வயது நண்பர் ஒருவர் மாரடைப்பில் இறந்துவிட்டார். பயமில்லாமல் எப்படி இருக்கும்?

நம்முடைய உடல், அதன் செயல்பாடு, உணவு, எளிய மருத்துவமுறைகள் பற்றிய முழுமையான புரிதல் நம் தலைமுறைக்கு உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு செயல்பாட்டை மதத்தைப் போல புனிதப்படுத்துவதுதான் சற்று விலகி நிற்கச் செய்கிறது. இயற்கை உணவு, மாற்று மருத்துவம் என்பதெல்லாம் அவசியம்தான். ஆனால் முழுமையான நம்பிக்கை ஏற்படாமல் பரிந்துரை செய்ய முடிவதில்லை.

கொழுப்பு குறித்து முழுமையான புரிதல் எனக்கு இல்லை என்பது உண்மைதான். விரிவாகத் தேடுகிறேன். திருப்தியடைந்தால் இது குறித்து நானும் விரிவாக எழுதுகிறேன். உரையாடுவோம்.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

fat illattinaalum oru naal saavu thaan

Anonymous said...

Your question on heart attack is rite. Fat is necessary. Read the book from neander selvan from kilakku(Tamil book). A wonderful book which is easy to understand by layman. OR Watch Eric berg's video in Youtube.

பொன்.முத்துக்குமார் said...

இருதயத்தின் இரத்தக்குழாய்களின் உட்புறம் கீறல் மாதிரி ஏதாவது இருக்கையில் அதில்தான் கொழுப்பு படிந்து வில்லனாகிறது, இல்லாவிடில் சாதாரணமாக கொழுப்பு அப்படி படிவதில்லை என்று நினைக்கிறேன்.

ஒரே ஒரு சங்கடம், பேலியோவைப்பின்பற்ற நினைத்தால் சாதாரணமாக நாம் உண்ணும் நிறைய உணவுகளைத் துறக்கவேண்டி இருக்கும். அதுவும் சைவ பேலியோக்காரர்கள் பாடு படு சிரமம். எழுத்தாளர் பாராவின் அனுபவங்களைப் படிக்கையில் நமக்கெல்லாம் பேலியோ வேண்டுமா என்ன என்றுதான் தோன்றியது. ஆனால் அவர் எடையைக்குறைத்து ‘உடம்பு சிறகு போல இருக்கிறது’ என்று சிலாகித்திருந்தார்.

Yarlpavanan said...

சிறந்த உளநல வழிகாட்டல்
வரவேற்கிறேன்

thiru said...

ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவினர், "அமுதசுரபி" (https://www.facebook.com/groups/manimekalai/) என மற்றுமொரு குழுவில், பேலியோ தொடர்பான பல கட்டுரைகளை பதிந்திருக்கிறார்கள். அக்குழுவில் இணைந்து, அதில் உள்ள பதிவுகள் மூலம் உங்கள் சந்தேகங்கள் தெளிந்து கொள்ளலாம்.

வெங்கி said...

நான் கடந்த 13 மாதங்களாக பேலியோவில் இருக்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும். என்னை பேலியோவிற்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஜெயமோகன். எட்டு மாதங்கள் முடிவில், என் அனுபவங்களை அவருக்கு கடிதமாக எழுதினேன் (உங்களுக்கு தற்போது மின்னஞ்சல் செய்திருக்கிறேன்).

எனக்குத் தெரிந்து, யாரும் பேலியோ-வை மதமாகவோ, புனிதப்படுத்தவோ முயற்சிக்கவில்லை மணி. நான் சந்தித்த அலோபதி மருத்துவரும், பேலியோ என்ற உணவுமுறை இருக்கிறது; உங்களுக்கு விருப்பமிருந்தால் முயற்சி செய்து பாருங்கள்; மாத்திரைகள் எடுக்கவேண்டிய அவசியமிருக்காது. உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது பின்பற்ற சிரமமாயிருக்கிறது என்றால் சொல்லுங்கள்; மாத்திரைகள் தருகிறேன் என்றார்.
அலோபதி மருந்துகளின் மேல் எனக்கிருந்த மன விலக்கத்தால், பேலியோவே மேல் என்று முடிவெடுத்தேன்.

-வெங்கி

electricalcircuits said...

Anna..


Try pranic healing..