Jul 19, 2018

ஐயோ கலக்குதே

கர்நாடகாவில் மழை கொட்டித் தள்ளுகிறது. லிங்கணமாக்கி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ், துங்கபத்ரா உட்பட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன. மழை நீரை அவர்கள் திறந்துவிடுவதில் ஆச்சரியமே இல்லை. இதை பெரிய கொண்டாட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசும் ஏதோ விழா போலக் கொண்டாடுகிறது. ஜூலை மாதம் தமிழகத்துக்குத் தேவையான நீர் 31 டி.எம்.சி மட்டும்தான். ஆனால் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் அளவைப் பார்த்தல் அந்த அளவைத் தாண்டிவிடும். குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி சமயத்தில்தான் தமிழகத்துக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும். அந்தச் சமயத்தில்  'எங்களுக்கு நீர் கொடுங்கள்' என்று கேட்டால் 'அதான் ஜூலையிலேயே கொடுத்துட்டோமே' என்பார்கள். இதற்குத்தான் இவ்வளவு கொண்டாட்டம்.

தவறில்லை. தண்ணீர் எப்பொழுது வந்தால் என்ன? ஆனால் வரும் போது அதை எப்படி உருப்படியாக்கிக் கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது அல்லவா? மேட்டூர் அணை நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஒரு முறை அணை நிரம்பினால் குறைந்தபட்சம் நான்காண்டுகளுக்கு அதன் பலன் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதானே நல்ல நீர் மேலாண்மை? அப்படியா இருந்தது? இரண்டாம் வருடத்திலேயே கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. சத்தியம் கூடச் செய்யலாம்- அடுத்த வருடமும் இதேதான் நிகழும். மழை பெய்தால் திறந்து கடலில் விடுவோம். மழை இல்லாத காலத்தில் எலிக்கறி தின்னுங்கள் என்கிற லட்சணம்தான் இங்கே நிலவுகிறது.

அவிநாசி அத்திக்கடவு என்றொரு திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. பவானி ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து வறண்ட பகுதிகளில் இருக்கும் குளம் குட்டைகளை நிரப்பும் திட்டம் அது. இந்த திட்டத்துக்கு வெறும் இரண்டு டி.எம்.சி தண்ணீர்தான் தேவை. எழுபது குளங்கள், 630 குட்டைகள் என்று நிரப்பி வைத்தால் அடுத்த பல ஆண்டுகளுக்குத் தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி வைக்கலாம். மூன்று மாவட்ட மக்களுக்கு பயன்படும். இன்றைய சூழலில்  இரண்டாயிரம் கோடி ரூபாய் இருந்தால் நிறைவேற்றிவிடலாம். ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேவையில்லாத எட்டுவழிச் சாலையை போடுவார்கள் தவிர இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அல்லது இதே ஆச்சு; அதே ஆச்சு என்று பாவனை செய்வார்கள்.  

சாலை மேம்பாட்டுத் திட்டங்களை விடவும் நீர் மேலாண்மைத் திட்டங்களே மக்களுக்கு மிக அவசியம். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் நாற்பது சதவீதம் வரைக்கும் கமிஷன் அடிக்க முடியும். ஆனால் நீர் மேலாண்மைத் திட்டங்களில் அது சாத்தியமில்லை. அதனால் அரசியல்வாதிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. 

வருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு என ஒதுக்கி சிறு சிறு திட்டங்கள் வழியாக அந்தந்த பகுதிகளில் பாயும்  நதியின் நீரை மழைக் காலத்தில் சரியாகப் பயன்படுத்தி அல்லது சேகரித்து வைத்தால் துணை ஆறுகளின் நீரை காவிரியில் கொண்டு வந்து கலக்க விட வேண்டியதில்லை. காவிரிக்கு மட்டுமே அமராவதி, நொய்யல் என பல துணையாறுகள் இருக்கின்றன. மழைக் காலத்தில் இந்த ஆறுகளில் ஓடும் உபரி நீரை இப்படி சிறு சிறு திட்டங்களுக்கு பயன்படுத்தினாலே தமிழகத்தின் பல பகுதிகளை வளமாக்கிவிட முடியும். இதையெல்லாம்தான் யாருமே யோசிப்பதில்லை. 

தூர்வாருவதில் சுணக்கம், அப்படியே தூர் வாரினாலும் மண்ணை எவ்வளவு காசுக்கு விற்கலாம், எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்று கணக்கீடுகள் - இப்படியெல்லாம்தான் பலமாக சிந்திக்கிறார்கள். எந்தக் காலத்திலும் நீர் வராத ஓடையை ஒன்றரை கோடி ரூபாய் கணக்கு காட்டி மண்ணள்ளி விற்றிருக்கிறார்கள். பெரிய பதாகை ஒன்றையும் வெட்கமேயில்லாமல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதே சமயம் நீர் வரக் கூடிய வாய்ப்புள்ள நீர் வரத்துப் பாதைகள் புதரண்டிக் கிடக்கின்றன.

யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. ஆனால் இதுதான் நிதர்சனம். 

'ஐயோ கடலில் கலக்குதே' என்று இன்றைக்கு கதறுவோம். அவ்வளவுதான். இனி அடுத்த முறை மேட்டூர் அணை நிரம்பும் போதுதான் இதை பற்றி பேச ஆரம்பிப்போம். ஒரு நாள் ஆயுள். அதன் பிறகு வேறொரு பிரச்சினைக்குத் தாவிவிடுவோம். இப்படித்தானே நம் ஒவ்வொரு பிரச்சினையும் கிடப்பில் போடப் படுகின்றன.இதெல்லாம் நாம் என்ன செய்ய முடியும்? அரசு பார்த்துச் செய்ய வேண்டிய வேலை என்று நம்மை நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம். தவறில்லை. ஆனால் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதில்தான் நாம் ஏமாந்து போகிறோம். நீண்டகால நோக்கம் கொண்ட ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் வாய்த்து அவர் தகுதி வாய்ந்த துறைச் செயலாளர் ஒருவரை தமக்கு உதவிக்கு அமர்த்தி திட்டங்களை வகுத்தால் மட்டுமே தமிழகத்தை எப்பொழுதும் வளம் கொண்டதாக மாற்ற முடியும். இல்லையென்றால் 'மழை பெஞ்சா சோறு' என்றுதான் காலம் நகரும். 

கவனித்துப் பார்த்தால் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகள் நிரம்பிய பிறகுதான் நமக்கு தண்ணீர் வருகிறது. அவர்கள் பல குளம் குட்டைகளை நிரப்பிவிடுகிறார்கள். அவர்களிடம் கையேந்தும் நிலையில் நாம் இருக்கிறோம். அவர்கள் உபரி நீரை வெளியேற்றும் போது நம்முடைய நோக்கமெல்லாம் 'அப்பாடா மேட்டூர் நிரம்பிவிட்டது' என்பதில்தான் இருக்கிறதே தவிர பிற அணைகள் குறித்தான செய்திகள் கூட வருவதில்லை. மேட்டூரில் இருந்து ஈரோடு வரைக்கும் கூட சிறு அணைகள் பத்து இருக்கின்றன. இவை தவிர மாயனூர் தடுப்பணை (3 டி.எம்.சி), கல்லணை (3 டி.எம்.சி) கீழணை (இரண்டரை டி.எம்.சி) , சேத்தியாத்தோப்பு (ஒன்றரை டி.எம்.சி) என்று நாம் நீரைச் சேகரித்து வைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதையே கூட சரியாகச் செய்யமாட்டார்கள் என்பதுதான் வேதனை. சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு உங்களுக்கு.

9 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு உங்களுக்கு.//
ஆமாமா. நானும் கும்புட்டுக்கறேன்ங்க

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

#சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு# உங்கள் கும்பிடுக்கெல்லாம் தேவை இருக்காது.. வாழ்க வளமுடன்

Selvaraj said...

'அவிநாசி அத்திக்கடவு திட்டம் - இன்றைய சூழலில் இரண்டாயிரம் கோடி ரூபாய் இருந்தால் நிறைவேற்றிவிடலாம். ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேவையில்லாத எட்டுவழிச் சாலையை போடுவார்கள் தவிர இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்'

Selvaraj said...

'ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் நாற்பது சதவீதம் வரைக்கும் கமிஷன் அடிக்க முடியும்'

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை 10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு என்றால் கமிஷன் மட்டும் குறைந்தது 4000 கோடியா? இனிமே எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்திற்கு யாரும் போகாதீங்க. ஸ்டெரிலைட் காரன் கொடுத்த கொஞ்சம் கமிஷனுக்கே 11 பேர சுட்டுக்கொன்னானுங்க. 4000 கோடி கமிஷன்னா அணுகுண்டையே தூக்கி நம்ம தலைமேல் போட்டுடுவானுங்க .

Anonymous said...

//சாலை மேம்பாட்டுத் திட்டங்களை விடவும் நீர் மேலாண்மைத் திட்டங்களே மக்களுக்கு மிக அவசியம்.// ennai kettaal matra ethai vidavum itharkkuthaan thaneerukkuthaan munnurimai thara vendum.

Jaikumar said...

அத்திக்கடவு திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்பது சந்தேகமே. காரணம்: நாம் கடந்த 50 வருடங்களாக பணப்பயிர்களுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி தள்ளினோம். வானம் பார்த்த பூமியான நம்பியூரிலும், பட்டிமணியாரம்பாளையத்திலும் கடற்கரையில் வளரக்கூடிய அதிகத் தேவையான தென்னையை தோப்பாக வளர்த்தோம், ஆற்றங்கரைகளில் வளரக்கூடிய நெல்லையும், கரும்பையும், வாழையையும் வளர்க்க ஆழ்துளை கிணறு அமைத்து உறிஞ்சி தள்ளினோம்.

நீர் இருக்கும் ஆழத்தை வைத்து அதை ஆங்கிலத்தில் surface water, sub-surface water and ground water என்று பிரிப்பர். Sur face water என்பது 5 அடி ஆழம் வரை கிடைப்பது. Sub-surface water என்பது 5 அடி முதல் 50 அடி ஆழம் வரை கிடைப்பது. Ground water என்பது 50அடி ஆழத்திற்கு கீழ் கிடைப்பது. Groundwater என்பது பல ஆயிரம், லட்சம் ஆண்டுகளாக சேர்ந்து இருந்தது.


மேலும் அதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட
அண்ணன் செந்தமினின் உரைகளை கேட்க வேண்டுகிறேன்.

நிலத்துக்கு (மருதம், நெய்தல், பாலை, முல்லை, குறிஞ்சி) ஏற்ற வேளாண்மை

https://youtu.be/FjYr0-PLiaY

இராமநாதபுரத்தில் செயல்படுத்தப்படும் நீர்நிறை திட்டம் பற்றி

https://youtu.be/tHxm8KgV6Os


கொங்கு நிலத்தில் செயல்படுத்தப்படும் நீர்நிறை திட்டம் பற்றி

https://youtu.be/vYaIzt8zL8Q

மேலும் உரையாடலாம்

senthilkumar said...

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.

senthilkumar said...

இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.

மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.

ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.

இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.

ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.

காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.

முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.

பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

senthilkumar said...

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.

“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"

என்கிறது அகநானூறு (126 : 4-5)