'எங்கூர்ல ஒரு அசலூர்க்காரரு வந்து கிருஷ்ணன் வீடு எங்கிருக்கு? எப்புடி போவணும்னு கேட்டுகிட்டு வந்தாரு . அங்கிட்டு ஊர் மடத்துல உக்காந்துக்கிட்டு தாயம் விளையாடுதவுகளைத் தவுத்து, மத்த அம்புட்டு ஆம்பளைகளும் எந்திச்சு நின்னு என்ன ஏதுன்னாக .
"எதுக்காவேண்டி நீங்க வந்திருக்கீக" ன்னாக ... வந்தவரு பதில் சொல்லிட்டு இருக்காங்குள்ளேயும், பொறுக்காத ஒருத்தர், "கண்ணாடி கிட்ணன் வீட்டுக்கு போகுதீகளா இல்ல... கொழும்புக் கார கிட்ணனனை கேக்குதீ்களா... இல்ல கோணவாய் கிட்ணன் வீட்டுக்கா?" ன்னாராம் .
விலாசம் கேட்டவருக்கு இதெல்லாம் எங்கிட்டுக்கூடி தெரியும்? ஒத்தக் கேள்விக் கேட்டுட்டு, இம்புட்டு தும்பத்தை ஒரு மனுசன் அனுபவிக்கணுமானு அவருக்கு கண்டிப்பா வெளம் வந்திருக்கும். ஆனா, என்ன செய்ய சொல்லுதீக? எங்கூரு காரங்களே அப்பிடித்தான் . இதே அந்த அசலூர்க்கார் இவுககிட்டே, விசாரிக்கலைன்னு வையிங்க நிம்மதியாயிருந்திருப்பாரு. இவுகளும் பொன்னம்போல இருப்பாக. பாவம்! இப்பிடி இவுகக்கிட்ட மாட்டிக்கிட்டு லோல் படணும்னு எழுதியிருக்கு போல... என்ன செய்ய?
"கொஞ்சமாச்சும் கூறு இருக்காடே உங்களுக்கு? அவுக கோணவாய கண்டாகளா? கண்ணாடிய கண்டாகளா? ஏம்டா இப்பிடி அசலூர்காரகள இந்த பாடு படுத்துறீக? உள்ளூர்க்கார பய நீ வச்ச பேரு வெளியூர்காரவுகளுக்கு எப்பிடி தெரியுங்கேன்? செரியான கோட்டி பயலுவளாயிருக்கீகளே"
"ஐயா , நீங்க செத்த நில்லுங்க. நானே ஒத்த ஆளை உங்கக்கூட அனுப்பி வைக்கன். எதுக்கு இப்பிடி கேட்டுக்கிட்டு கிடக்கோம்ணா, இங்கே மூணு கிட்ணன் வீடிருக்கு. ஒண்ணொண்ணும் ஒரொரு திசையிலயிருக்கு... புது மனுசரு... உங்களுக்கு சிரமமாயிருக்கக் கூடாதில்ல. அதுக்கு தாம் இம்புட்டு கேள்விய கேக்குதோம்... நீங்கக் கேட்ட ஒத்தைக் கேள்விக்கு தாக்கல் சொல்ல இம்புட்டு நேரம் ..." அப்படினு ஒரு வயசாளி வைஞ்சு, இன்னும் ஏழெட்டுக் கேள்விய கேட்டு "ஏலே, விட்டி... இவரக் கூட்டுப் போயி கோணவாய் கிட்ணன் வீட்ல விட்டுட்டு வா. காமிச்சுட்டு வெரசா வா..அங்கியே என்ன பேசுதாக... ஏது பேசுதாகனு.... பராக்கு பாத்துட்டு நிக்காதே" ன்னவரு , " இந்த பய சரியான லெக்கைக் காமிப்பான்" ம்னாரு .
அதுக்காங்குளளேயும் அந்த விலாசந்தேடின மனுசன் தின்னச் சோறு செமிச்சுருக்கும் . தொண்டைத் தண்ணி வத்த அவரு பதில் சொல்லியிருக்கதுக்கு, கிட்ணன் வீட்டுல போயி ஒரு சொம்புத் தண்ணிய மிச்சம் சொச்சம் வைக்காம குடிச்சாதான் தண்ணித் தாகம் அடங்கும். அதுக்கங்கிட்டு தான் கிட்ணனுக்கு கோணவாயிருக்கானு பாப்பாரு.
' ஊர்ல அனிய ஆளுகளுக்கு பட்ட பேருண்டு. ஆளுக்கில்லினாச்சும் செரி, அவுக வீடுகளுக்காச்சும் பட்ட பேருண்டு. அது எப்படிக்கீங்களா? இந்தா சொல்லிருதேன் . கேட்டாக் கேளுங்க. கேக்காட்டிப் போங்க... மச்சு வீடு, தகரம் போட்ட வீடு, ரட்டை யானை தீப்பெட்டி வீடு, வேப்ப மரத்து வீடு இப்படி சில பேரிருக்கும்'
'சிலவுக வீட்டு பேரு, அந்த வீட்டாளுக பட்ட பேரோடு ஒட்டிக்கிட்டு ஒண்ணாமண்ணா திரியும். தொந்தி் வீடு, நொண்டியான் வீடு, வெள்ளையன் வீடு, கறுத்தையன் வீடு, சிவத்தையன் வீடு, கருவாய்ச்சி வீடு, முண்டங்கண்ணி வீடு, கோணக்கண்ணி வீடு, மண்டையன் வீடுனு பல பேரை இடும்பு பிடிச்சவுக வச்சிருப்பாக '
'பேரு வைக்க துட்டா வேண்டியிருக்கு? ஒண்ணுமில்ல. அதுனால, ஆம்பளைங்க, பொம்பளைங்க, சின்ன புள்ளைக - இப்பிடி ஆளாளுக்கு ஒரு பேரை வச்சி உட்டுருவாக. அது பாட்டுக்கு எல்லாத்துவுக வாயிலயும் உருண்டு பிரளும். தீக்கொளுத்தி, கோழிப்பீ, சுண்டெலி, எம்சியாரு, குந்தாணி... இப்பிடி சில பேருக.புது பேரு விளங்குதப்போ , கூடம்பிட்டு யார் எதுக்கு ஏன் வச்சாக ங்கிற கதையும் திரியும் '
'கம்பவுண்டர் வீடு, டாக்டர் வீடு, போலீஸ் கார் வீடு, வைஸ் வீடு, பிரசிடெண்ட் வீடு, டீச்சர் வீடுன்னா கோர் இறங்கிருமா என்ன ? அந்த வீட்டுக்காரவுகளே மத்தவகக் கிட்டே பேசுதப்போ அந்த பேரை வேணுமுன்னே சொல்லி விடுவாக . ஊரு சொல்லுதது ஒரு பக்கம்னா, இவுகளே வைஸ் வீட்டுக்குனு சொல்லுங்க . ஒண்ணுஞ்சொல்ல மாட்டாகம்பாக. அந்த நேரத்துல சொல்லுத வீட்டாளு மூஞ்சிய பாத்தீங்கன்னு வையிங்க ... அதுல அம்புட்டு கெத்தாப்பிருக்கும்'
'இன்னும் கொஞ்சவூண்டு பேரிருக்கு . ஆனா , அந்த பேரையெல்லாம் உங்கக்கிட்டே சொல்லதுக்கு ஒரு மாரியாயிருக்கு. அதுவுமில்லாம எழுதிக்காமிச்சேம்னு வைங்க... என்னை வஞ்சுப்போடுவீக. இதாம்டா சாக்குனு தூர தள்ளி வச்சிருவீக. என்னக்கென்னதுக்கு அந்த சோலி?...எதுல விட்டேம்... ஆங்! அம்புட்டும் வில்லங்கமான பேருக . சேக்காளிகக்குள்ளே பேசி சிரிச்சுக்குவாக. அதத்தாண்டியும் , ஊருக்குள்ளே அப்படி இப்படினு கசிஞ்சிரும். ஊரும் அப்படி சொல்லக்கூடாதுனு எண்ணாம, எண்ணங்கெட்டு போயி் அந்த பெயருகளை சொல்லிட்டு திரியும் நேர்ல அவுகளை பாக்கையிலை நல்ல பிள்ளை மானிக்கு, முழுப் பெயரை சொல்லிக் கூப்பிட்டுக்கிடுவாக. அயத்தும் பட்ட பெயரை சொல்லிக் கூப்பிட மாட்டாக . இதேது அந்த பட்ட பேருகளை பேர்க்கார ஆளு முந்தியும், அவங்க சொக்காரங்க முன்னாடியும் வாய் தவறி சொல்லிட்டாங்கன்னு வைங்க, கதை கெட்டுச்சு போங்க. அப்புறம் என்ன நடக்குங்கீக? '
'எசலிப்பை கொண்டு வந்து விட்டுறும். கேட்டவுக முறைக்கத முறையில சொன்னவனுக்கு தன்னால ஒண்ணுக்கு போயி்ரும்... இல்லன்னா, வாய் நீளமுள்ளவுக, வசவா உறிச்சிருவாக. உங்க வீட்டு வசவா? எங்க வீட்டு வசவா? நாற வசவு...
'செத்த கழுதை...கொள்ளி முடிவான்...பேதில போவான்... விளங்குவியா? நாசமா போவ" - இப்பிடி நாயாக் கொலைப்பாக கேட்குத நமக்கு "சீ"னு இருக்கும் . வெட்கம் , மானம் , அயிமானத்துக்கு கட்டுப்பட்டவுக இப்படி மானங்கண்ணியா பேசமாட்டாக. ஒத்தச் சொல்லோட, "இங்கேரு... இதென்ன பேரு...இப்பிடி பேசிட்டிருக்காதே . சொல்லிட்டேன். அப்புறம் மரியாதைக் கெட்ரும். ஒழுங்கு மரியாதையா வாலைச் சுருட்டிக்கிட்டு கிட" னு நிறுத்திக்கிருவாக.
கை நீளமுள்ள ஆளுக, செவிட்டோடு சேத்து வச்சி இழுத்திருவாக. சிலரு, சூசாண்டிருக்காம சரிக்கி சரியா எதித்தாப்புல நின்னு பேசின ஆளோட பட்ட பேரு, அவுக வீட்டு பட்ட பேரெல்லாம், சொல்லி சந்தி சிரிக்க வச்சிருவாக.
எப்படா எவம்டா சண்ட போடுவாம்னு, காத்துட்டு கெடக்குத கூட்டத்துக்கு, இதக் கண்டதும் ஒரே கும்மரிச்சமாயிருக்கும். அத வெச்சே அன்னைக்கு பொழுது போயிரும். அப்பையெல்லாம் பாக்கணும்... மடத்தில சிரிப்பாணிக்கு பஞ்சமில்லாம இருக்கும்.
முந்தியெல்லாம் ஊர்லயிருக்கவங்க பூரா பேரோட பட்ட பேரும் எனக்கு தெரியும். இப்பம் வயசாக வயசாக பாதி அயத்தே போச்சு. உங்கக்கிட்டே நா சொன்னதுக்கூட அரைவாசி, காவாசி தான். யாபகத்துல நிக்கதத்தான் சொல்லிருக்கன். எம்புட்டு வருசமாச்சு இப்டி இந்த பட்ட பேரு பழமை பேசி ! நான் பேசினது , புரியலைனு வையிங்க ... ஓங்கிக் கேளுங்க . நா ஒண்ணும் நினைக்க மாட்டேம் .
'எங்கிட்டு ஓடுதீக ? செத்தோடம் இப்டி குத்த வைங்க ! வராதவக வந்திருக்கீக ஒரு காப்பிய போடுதேம் . குடிச்ச பிறவு போங்க '
'இம்புட்டு நேரம் கதைக் கேட்ட உங்களுக்கு ஒரு வா தண்ணிக் கொடுக்கலின்னா நான் என்ன பெரிய மனிசி? வீட்டுத் துறவலை எங்கொண்டு போய் வச்சாளோ அந்த வெறுவாக் கெட்டவ? காலம் போன கடேசில என் பொழப்பு இப்டி அதையும் இதையும் தேடித் திரிஞ்சுக்கிட்டு இருக்கு ...போங்க! '
'ஐயையோ ! ஏம்மா ... வலி உயிர் போவுதே! இப்பிடி நடக்கத பாதையில சருவச்சட்டிய வச்சிட்டு போயிட்டாளா? என் நேரம் இப்டியா இடிபடணும்? என்னமா இரத்தம் கொட்டுது!'
'கிளம்பினவுகளை நிறுத்தி காப்பிய போடுதேம்னு சொல்லிட்டு வந்தவ, இப்பிடி இடிச்சுக்கிட்டேனே! எம்புட்டு அடி பட்டாலும், அழுத்தமா நின்னு வேலை பாக்குதவளுக்கு, ரெம்ப வலிக்கவுந்தான் அமயம் போட்டுட்டேன். வயசாயிருச்சு வேற! ஒண்ணுமில்லே . சரியா போயிரும். இந்தா கட்டுக் கட்டிட்டேம். இரத்தம் நின்னிரும் '
'நின்னுருச்சு'
' நீங்க நட்டமயே நிக்கீக ... உட்காருங்க '
'ஏடி , எங்கிட்டு போன ? '
'ஒரு சோலியா ஒரு காட்டுக்கு போனோமா வந்தமானிருக்கணும்... அதை விட்டுட்டு, இம்புட்டு நேரமா என்ன செஞ்ச ?'
'நம்ம வாசலுக்கு வந்த மனுசனுக்கு கறியுஞ்சோறும் ஆக்கிக் குடுக்காட்டி பரவால்லை. ஒரு சொம்பு பச்ச தண்ணியோ காப்பியோ தர வேணாம்? '
'மடக்கு மடக்குனு வேகமாக குடிக்காதீக... பதறாம குடிங்க... பாருங்க.. நாடியிலிருந்து தண்ணி வழிஞ்சி சட்டையெல்லாம் நனைஞ்சிருச்சு...அடிக்கத வெயிலுக்கும், இருக்கிற வெக்கைக்கும் செத்தோடத்துல காஞ்சிரும் '
காப்பி மட்டும் போதுங்கறீகளே? இனிப்பு சேவு நல்லாருக்கும். தினனு பாருங்க... நல்லாருக்கும் .
'வேற உரப்பா ஏதும் தீம்பண்டமிருந்தா எடுத்துக் கொடு ராணி..திங்கட்டும் '
'அது கும்பா... கூழுக்குடிக்கதுக்கு வச்சிருக்கோம். கூழு பானைலருந்து வேணுங்களவுக்கு எடுத்து, தண்ணி விட்டு கரைச்சு குடிப்போம் '
'இருங்க ... ரெண்டு வாய் சோத்தை அள்ளி போட்டுட்டு வந்திருந்தேம். வவுறு பழியா பசிக்கி. வெள்ளனயே எந்திச்சி அம்புட்டு பாடும் பாத்து, ஒத்த வாய் காப்பியத் தான் குடிச்சிருக்கேம். இந்தா இப்ப வயிறு கூப்பிடுது. இப்ப குலைக்குள்ளே ஏதும் போடாட்டி கிறு கிறுனு வரும். மண்டையடி வந்திரும். வந்திச்சின்னா உங்க வீட்டு வலி எங்க வீட்டு வலியில்ல. ஆளைக் கொன்னுரும் வலி! மண்டையடி வந்திச்சினா ஒண்ணும் செய்யமாட்டேன். பேசாம போய் படுத்துருவேன். கள்ளன் வந்து என்னத்தையாவது களவாண்டாலும் ஒண்ணுந்தெரியாது. வாடைக்காத்து அடிச்சாலும் மண்டையடி வந்திரும். கெட்ட வாடையை முகந்தாலும் மண்டையடி உடனே வந்திரும். அதுனால ஊர் வழி எங்கிட்டு போனாலும், மண்டையடித் தைலமில்லாம போகமாட்டேம் '
'புழு புழுனு அந்த பய அரிச்சுக்கிட்டு இருக்கவும், பத்தா பறக்க வெஞ்சனத்த செஞ்சு வச்சுட்டு போனியே! அது வாய்க்கு வெளங்குமா வெளங்கதா?'
'உக்காந்து உக்காந்து பேசினதில குறுக்கு வலிக்கி. அதை செத்த ஆத்தணும். சாப்பிட்டுட்டு கட்டைய சாய்ச்சத்தான் நல்லாருக்கும்'
'பிறகாட்டி வாறேன்'
'எம் பேரு என்னங்கீகளா? மகாதேவி'
'பள்ளிக்கூடம் போகாம இங்கன நின்னு என்ன கும்மரிச்சம் போடுதீக? ஓடுங்கடே..எங்க வாய பாத்தா எப்பிடி ? '
' என் பட்ட பேரா ? '
' ஏலே இப்ப வந்தேம்னா பாரு! ஓடுங்கலே ! '
' இந்த புள்ளைக்காடுக என்னத்தை சொல்லுதுங்கீகளா ? '
' ஆக்கங்கெட்ட கூவைக எனக்கு மண்டையடி தைலம்னு பேரு வச்சிருக்குக '
ஆக்கம் : தேவி பிரபா
aniruthdevi@gmail.com
7 எதிர் சப்தங்கள்:
👌👌👌
வெஞ்சனத்த
நீங்க நட்டமயே நிக்கீக ... உட்காருங்க
செத்தோடத்துல காஞ்சிரும்
சூசாண்டிருக்காம
வசவா உறிச்சிருவாக
மேல உள்ள வார்த்தை எல்லாம் எங்க விருதுநகர் மாவட்ட வட்டார வழக்குதான், சிறுவயதில் கேட்டு வளர்ந்த நினைவு இருக்கு
ஆனா
பிறகாட்டி வாறேன்'
கொஞ்சமாச்சும் கூறு இருக்காடே
போன்ற வார்த்தைகள்
நாகர்கோயில் வட்டார சொற்களாக தோணுது, ஏன்ன இப்பவரைக்கும் தொடர்பில் உள்ள சில நாகர்கோவில் காரர்கள் இடையிடையே உதிர்க்கும் வார்த்தைகள் இவை,,,
அருமை,,,,
//சேக்காளிகக்குள்ளே பேசி சிரிச்சுக்குவாக.//
இது வேறயா.
அவை தலைவரு வந்து என்ன சொல்லப் போறாரோ தெரியலியே.
ராசபாளையம் ,சங்கரங்கோயில் பக்கத்து பேச்சா ன்னு தேவி பிரபா ட்ட கேட்டு சொல்லுங்க.
வெஞ்சனமும் வசவும் தான் மதுரய ஞாவக படுத்துது
எந்தூரு இது. ?
தெக்க இருக்குற சம்சாரிக இப்படிதான் பேசுவாக....
நன்றி நட்புகளே . இது சங்கரங்கோயில் பக்க பேச்சு தான் .
- தேவி பிரபா
Post a Comment