Apr 2, 2018

தென்னைகள் எப்பொழுதும் சரசரப்பதில்லை

தருமபுரி பக்கத்தில் ஒரு குக்கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர் பெட்ஷீட் வியாபாரம் செய்கிறார்.வியாபாரம் என்றால் பவானி, சென்னிமலை மாதிரியான ஊர்களில் நெசவாளர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்து இரு சக்கர வாகனத்தில் ஊர்களுக்குள் சென்று விற்பது. மனைவி இல்லை. குழந்தையும் இவரும்தான். ஏழு வயதுக்கு குழந்தை. பள்ளிக்கூடம் போவதில்லை. போக முடியாது. மாற்றுத் திறனாளிக் குழந்தை. இவர் வியாபாரத்துக்குச் செல்லும் போது பக்கத்து வீட்டுக் குடும்பம் பார்த்துக் கொள்ளும். பக்கத்து வீட்டில் இசுலாமியக் குடும்பம் இருக்கிறது. 

அருண் என்றொரு நண்பர் அப்பாவையும் மகனையும் பற்றிச் சொல்லி இருந்தார். அழைத்துப் பேசிவிட்டு 'நான் வர்றேன்...நீங்க இருக்கீங்களா?' என்று கேட்டிருந்தேன்.அவர் காத்திருந்தார். அவர்கள் குடியிருந்த வீட்டுக்கு முன்பாக தென்னை ஓலை தடுக்கு வைத்து மறைத்திருந்தார்கள். அன்றைய தினம் இசுலாமியர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் பேசினோம். 

குழந்தையைப் பற்றித்தான் நிறைய பேச வேண்டியிருந்தது.

அவருக்கு காதல் திருமணம். திருமணத்துக்குப் பிறகு வெளியூர் சென்றுவிட்டார்கள். குழந்தை பிறந்த ஒன்றிரண்டு வருடங்களில் மனைவி இறந்து போனார். காச நோய் என்றார். சொந்தபந்தம் என்று யாருமில்லை. இந்த ஊரில் வாடகைக்குத் தங்கியிருந்தார். 

'எல்லாம் போச்சுங்க..குழந்தைக்கு வேண்டி இருக்கிறேன்' என்றார். 

'நீங்க குழந்தையை வெச்சுட்டு சிரமப்படுறீங்கன்னு அருண் சொன்னாரு' என்றேன். 

'என்னை விட சிரமம் பையனுக்குத்தாங்க...வேவாரத்துக்கு போய்ட்டா சாயந்திரம் வரைக்கும் பாய்ல படுத்து மேலையே பார்த்துட்டு இருப்பான்' என்றார். 'இவங்க இருக்கிறதால கொஞ்சம் தைரியமா சுத்திட்டு வரேன்' என்றார். அவர் சொன்னது இசுலாமியக் குடும்பத்தை. அவ்வப்பொழுது  பாயம்மா எட்டிப் பார்த்துக் கொள்வார். சாப்பாடு செய்து வைத்துவிட்டுப் போனால் பாயம்மா ஊட்டி விட்டுவிடுவாராம்.  சில சமயங்களில் பாயம்மா வீட்டு உணவுதான் குழந்தைக்கும். 

'ஏதாச்சும் கடை வெச்சுட்டு ஒரே இடத்துல இருக்கலாம்ல' என்றேன். கொஞ்சம் கடன் இருப்பதாகவும் ஒன்றிரண்டு வருடங்கள் இப்படி உழைத்தால்தான் கடனைக் கட்ட முடியும் என்று அவர் சொன்ன போது சுரத்தேயில்லை.

'பையனை ஒரு நல்ல ஹாஸ்டலா பார்த்து சேர்த்துவிட்டுடலாம்...ஏற்பாடுகளைச் செய்யட்டுமா?' என்ற போது அவருக்குத் தயக்கமாக இருந்தது. தமக்கு இருக்கும் ஒரே பற்றுக்கோல் மகன்தான் என்கிற தயக்கம் அது. 'நீங்க வாரம் ஒரு தடவை போய் பார்த்துக்குங்க..எப்படியும் சுத்திட்டேதானே இருக்கீங்க? விடுதிக்குப் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து மாறிக்குங்க' என்ற போது அவர் ஒருவாறு சமாதானம் ஆனார். பொதுவாக சமாதானம் செய்ய முடியாது. கசந்த அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் புரிந்து கொண்டார். பாயம்மாவும் அவரிடம் 'இது நல்ல திட்டம்' என்றார். 

நல்ல திட்டம்தான். பையனுக்கும் சரியான மருத்துவ உதவியும், பராமரிப்பும் தேவையாக இருந்தது. நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தேன். ஜூன் மாதத்தில் அவனை  விடுதியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதெல்லாம் நடந்து ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கும். சில மருத்துவ நண்பர்கள் இலவசமாக சில உதவிகளைச் செய்வதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களிடம் மே மாதத்தில் அழைத்துச் செல்வதாகத் திட்டமிருந்தது.

இல்லாதவர்களை இத்தகைய நோய்மைகள் பாதிக்கும் போது நொறுங்கிப் போய்விடுகிறார்கள். சிறகொடிந்த மாதிரிதான். பெரும்பாலான மக்களுக்கு அரசாங்கத்தின் சிறப்புத் திட்டங்கள் முழுமையாகத் தெரிவதில்லை. வெறுமனே மருத்துவ உதவிகளைவிடவும் இத்தகைய மக்களுக்கு உதவுவதுதான் சரியான வழிகாட்டலாக இருக்கும். ஆனால் தேடியலைய வேண்டும். எல்லாச் சமயங்களிலும் சாத்தியமாவதில்லை. 

'யாரும் உங்ககிட்ட பேசறதில்லையா?' என்றேன். 

'பேசுவாங்க...வேவாரத்துக்கு போனா அதை மட்டும்தான் பேசுவேன்' என்று சொல்லியிருந்தார். பையனுக்கு ஆப்பிள் வாங்கிச் சென்றிருந்தேன். அவன் சிரித்தான்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். கடந்த வாரம்தான் தெரியும் - பையன் இறந்துவிட்டானாம். அருண் சொன்னார். 

'என்னாச்சு?'.

'உடம்பு சரியில்லாம இருந்திருப்பான் போலிருக்குங்க..சாப்பிட முடியலையாம்' என்றார். இத்தகைய குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு இல்லையென்றால் கடினம்தான். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடுகிறது. ஜூன் வரைக்கும் அவன் இருந்திருக்கலாம். 

'ஏற்பாடுகளை இன்னமும் கொஞ்சம் வேகப்படுத்தியிருக்க வேண்டுமோ' என மனதுக்குள் பதைபதைப்பாக இருந்தது. ஆனால் எப்படியிருந்தாலும் ஜூன் மாதம்தானே பள்ளிகளில் சேர்த்துக் கொள்வார்கள்?

'நான் வந்து அவரைப் பார்க்கிறேன்' என்றதற்கு 'அவங்கப்பா நெம்பர் சுவிச் ஆஃப்' என்றார் அருண். அவர் இல்லாவிட்டாலும் அந்த இசுலாமியக் குடும்பத்தை பார்த்து வரலாம் என்றுதான் யோசித்து வைத்திருந்தேன். அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது இரவு எட்டு மணியாகிவிட்டது. 

கடந்த முறை சென்றிருந்த போதும் வெகுவாக உபசரித்தார்கள். அதே திண்ணையில் அமர்ந்து கொண்டேன். தேநீர் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். 'நம்ம வீட்டில் இவன் சாப்பிட மாட்டான் போலிருக்கு' என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பொதுவாகவே எந்த வீட்டுக்குச் சென்றாலும் தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொள்வேன். 

'ரவிக்கு என்னாச்சு?' 

பாய் தனது மனைவியை அழைத்தார்.  நிறையச் சொல்லிவிட்டு  'ரொம்ப சிரமப்படலை...ரெண்டு நாள் காய்ச்சல் வந்த மாதிரி இருந்துச்சு...டக்குனு போயிடுச்சு' என்றார் பாயம்மா. அவருக்கு அழுகை வந்துவிட்டது. அவர்தானே அந்தக் குழந்தைக்கு அம்மா மாதிரி? தனது துணியை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டார். படித்த, நாகரிக மக்கள்தான் வெகுவாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எளிய மக்களிடம் மதம் ஒதுங்கித்தான் கிடக்கிறது எனத் தோன்றியது. 

பாயம்மாவின் கணவர் ஏதோவொரு கடையில் வேலை செய்கிறார். அவர் பேசத் தொடங்கினார். பையன் இறந்தவுடன் உடனடியாக எடுத்து அடக்கம் செய்துவிட்டார்கள். 

'ரவியோட அப்பா எங்க போனாருங்க? ஃபோன்ல கூட பிடிக்க முடியல'

'மனசொடிஞ்சு போய்ட்டாருப்பா.. நாங்க சொன்னோம்..சொல்லச் சொல்லக் கேட்காம கெளம்பி போய்ட்டாரு'

'எங்க போனாரு?'

'எங்கயாச்சும் போறேன்னு சொல்லிட்டு போய்ட்டாரு..சொந்த ஊருக்கு போயிருப்பாரா இருக்கும்'- அது கூட அவரது அனுமானம்தான். எனக்கு வேறொரு அனுமானம். இதைக் கேள்விப்படுகிறவர்களுக்கு வேறொரு அனுமானம். 

பேசுவதற்கு அதிகமில்லை. கிளம்புவதற்கு எத்தனித்தேன். 'ஒருவேளை உங்க கூட பேசினாருன்னா என்னைக் கூப்பிடச் சொல்லுங்க' என்றேன். 

 'சாப்பிட்டு போங்க' என்றார்.

'ஊருக்கு பஸ் பிடிக்கணும்..லேட் ஆகிடும்' என்றேன். சட்டையை எடுத்து அணிந்து கொண்டு பேருந்து நிறுத்தம் வரைக்கும் வந்தார்.

'நீங்க எந்த ஊரு? எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க?' என்றெல்லாம் கேட்டார். சூழல்கள்தான் கேள்விகளுக்கான பதில்களை வடிவமைக்கின்றன. மேம்போக்காக பதில்களைச் சொன்னேன். அது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

'உங்களுக்கு ஆண்டவன் துணையிருப்பார்' என்றேன்.

அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பேருந்து வந்தது. ஏறிக் கொண்டேன். டவுன் பஸ்ஸில் அதிகக் கூட்டமில்லை.

பாய், வறண்ட புன்னகையொன்றை உதிர்த்தார். 

அமைதியாக அமர்ந்திருந்தேன். பேருந்து தர்மபுரியை நோக்கி ஓடியது. ரவியின் வீட்டுக்கு முன்பாக இருந்த தென்னை மர ஓலையில் வேயப்பட்ட தடுக்குதான் அன்றைய பயணம் முழுவதும் மனதுக்குள் சரசரத்துக் கொண்டிருந்தது.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//எளிய மக்களிடம் மதம் ஒதுங்கித்தான் கிடக்கிறது எனத் தோன்றியது//
தோன்றுகிறது இல்லை.ஒதுங்கித்தான் கிடக்கிறது.
அதனால் தான் அந்த எளிமை பிடிப்பதே இல்லை சுயநலமி களுக்கு.

Kannan said...

மிகவும் கனத்து விட்டது இதை படித்த பிறகு. இதில் மதம் என்பது திணிக்கப்பட்டது போல் உணர்கிறேன்.

நாடோடிப் பையன் said...

A sad story. I hope that father find some solace with the fact that his son is in a better place.