Apr 25, 2018

99 கிலோமீட்டர்

99 கிலோமீட்டர் கடை பற்றி அங்குமிங்குமாகத் தெரியும். பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? சென்னையிலிருந்து தொண்ணூற்று ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கடைக்கும் அதே பெயரை வைத்துவிட்டார். கூட்டம் அள்ளுகிறது. கடையின் உரிமையாளர் மனோகரன்தான் நண்பர் ஜெயராஜுக்கு வழிகாட்டி. அவரது ஆலோசனையின் பெயரில் ஜெயராஜ் சில தொழில்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மனோகரன் வழிகாட்டுவதற்கு சரியான ஆள். அவரைப் போன்றவர்களின் ஆலோசனை இருந்தால் எந்த மனிதனும் மேலே வந்துவிட முடியும். 


மனோகரன் மாதிரியானவர்களுடன் அரை மணி நேரம் அமர்ந்து பேச வேண்டும். எவ்வளவு சுறுசுறுப்பு? சுறுசுறுப்பு என்பது இரண்டாவது. அவருடைய வியாபார மூளை இருக்கிறதே. எல்லாவற்றையும் வாடிக்கையாளர்களை முன் வைத்தே யோசிக்கிறார். அதுதான் அவரின் பெரும் பலமும் கூட. 'வெளியிலிருந்து கொண்டு வரும் உணவுக்கு அனுமதி இல்லை' என்றுதான் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள். 'நீங்க சாப்பாட்டைக் கொண்டு வந்து இங்க வெச்சு சாப்பிடுங்க' என்கிறார். 

விக்கெட் அவுட். 

அப்படி வருகிறவர்களைக் கவர ஏகப்பட்ட அம்சங்களால் நிரப்பி வைத்திருக்கிறார். புத்தகங்கள். விளையாட்டுச் சாமான்கள். காபி கடை. கைவினைப் பொருட்கள். பழங்காலத்து பொருட்கள் என்று ஏதாவதொரு வகையில் ஈர்த்துவிடுகிறார்கள்.

'சாப்பிடறதுக்கு நிறுத்தினோம்ன்னு ஒரு நினைப்பே இருக்கக் கூடாது....என்ஜாய் பண்ணணும்' என்று மனோகரன் பேச்சு வாக்கில் சொன்னார். காலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. 'எண்ட் ப்ராடக்ட்டில் மட்டும்தான் எங்க கவனம் என்றிருந்தால் கவிழ்த்துவிடும்'. அப்படியொன்று எதுவுமே இந்தக் காலத்தில் இல்லை. எல்லாமே பேக்கேஜ்தான். எல்லாவற்றையும் கலந்து கட்டிதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. சாப்பிட வந்தாலும் சரி; சினிமா பார்க்க வந்தாலும் சரி. பேக்கேஜ். அதுதான் வெற்றியைக் கொடுக்கும். 

அப்பொழுதுதான் அச்சிறுப்பாக்கம் வந்து சேர்ந்திருந்தேன். 'மனோகரன் சாரை பார்த்துட்டு வரலாம்' என்று ஜெயராஜ் அழைத்தார். 

 'எந்த மனோகரன்?' என்றேன். சொன்னார்.

சலிப்பே தோன்றவில்லை. இத்தகைய வெற்றியாளர்களை பார்க்க எவ்வளவு வேண்டுமானாலும் சிரமப்படலாம். வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள எதையாவது வைத்திருப்பார்கள்.சக மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதைவிடவும் வேறு சுவாரசியம் இருக்கிறதா என்ன? சந்தோஷமாகத் தலையை ஆட்டினேன். 

நாங்கள் சென்றிருந்த பொது பாடகர் மனோ உணவருந்திக் கொண்டிருந்தார். பணியில் இருந்தவர்கள் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. 'மனோ வந்திருக்காரு' என்றேன்.  'பெரிய ஆளுக நிறையப் பேரு வருவாங்க சார்' என்றார் சூப்பர்வைசர். புரிந்து கொள்ள முடிந்தது. 

மனோகரன் வந்தார். எந்த பந்தாவுமில்லாத சாதாரண ஆள். எப்பொழுது நம் கால்  தரைக்கு மேலாகப் போகிறதோ அப்பொழுது இந்த உலகம் நம்மை விட்டு விலகிவிடும் என்ற வாக்கியம் நினைவில் வந்தது. 'அது ஆச்சா...இது முடிஞ்சுதா' என்று பணியாளர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்.

 'சாதாரணமாவே இருப்பாரு மணி..அதான் அப் டு டேட் ஆக இருக்காரு' என்று ஜெயராஜ் சொன்னார். அது சரிதான். 

பொதுவாக நம் மக்களில் 'சாப்பிட வந்தோம்னா சாப்பிடணும்' என்கிற ஆட்களும் இருப்பார்கள். அவர்களையும் விட்டுவிடக் கூடாது. அவர்களிடம் ஜிகினா வேலை எடுபடாது. இவர்கள் உணவிலும் பிரமாதப்படுத்திவிடுகிறார்கள். பாரம்பரிய உணவுகள்.  நிறையக்கடைகளில் பாரம்பரிய உணவுகள் என்ற பெயரில் மருந்தைக் கொண்டு வந்து வைக்கிறவர்கள்தான் அதிகம். ஏண்டா வாங்கினோம் என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். இவர்கள் வித்தியாசப்படுத்துகிறார்கள். இளநீர் பாயசம் மாதிரியான உணவுப் பொருட்கள் அட்டகாசம். எனக்கு சாப்பாட்டு ருசி பற்றி அவ்வளவாகத் தெரியாது. அங்கே சென்று வந்தவர்கள் என்னைவிடவும் தெளிவாகச் சொல்ல முடியும்.

என்னைக் கவர்ந்த அம்சமெல்லாம் மனோகரன்தான். விமானப்படையில் சில வருடங்கள் பணியாற்றிவிட்டு ஊருக்கு வந்துவிட்டார். சரியான தொழில் எதுவும் அமையவில்லை. இவரும் சரியான பாதையில் பயணிக்கவில்லை.இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். உருப்படியான வருமானம் எதையாவது அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர் ஏதோ கைக்கு கிடைத்த தொழில்களையெல்லாம் முயற்சித்துவிட்டு கடைசியாக பால் வியாபாரம் தொடங்குகிறார். பால் வியாபாரம் என்றால் பெரிய அளவில் இல்லை. உள்ளூர் வியாபாரம். அதிலிருந்துதான் 99 கிலோமீட்டரில் ஃபில்டர் காபி கடையை ஆரம்பிக்கிறார்.

காபி கடையிலிருந்து சிறகு விரிகிறது.விரிவாக்கிக் கொண்டேயிருக்கிறார். இப்பொழுது பிரமாண்ட வியாபாரம். கிட்டத்தட்ட ஜீரோவிலிருந்து தொடங்கப்பட்ட பயணம் இது. எட்டிப்பிடிக்க முடியாத உயரம். இதே சாலையில்  மால் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாலின் பட்ஜெட்டை இப்போதைக்கு வெளியில் சொல்லலாமா எனத் தெரியவில்லை. எனக்கு மூச்சு அடைத்தது.

'என்ன பிசினஸ் தொடங்கலாம்?' என்று கேட்கிறவர்கள் மனோகரன் மாதிரியான ஆட்களைத்தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே தொழில் தொடங்குகிறவர்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவதில்லை. நமக்கு யார் வாடிக்கையாளர் என்று தெரிந்து அவர்களை நோக்கி காய்களை நகர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

எவ்வளவு ஆரியபவன்களும்  வசந்தபவன்களும் மூடப்பட்டிருக்கின்றன என்று நமக்கு தெரியும்தானே? நல்ல பெயர் சம்பாதித்திருப்பார்கள். வியாபாரத்துக்கு உகந்த இடமாகவும் இருக்கும். ஆனாலும் கோட்டை விட்டிருப்பார்கள். தொடர்ந்து தம்மைப் புதுப்பித்துக் கொள்ளாத எந்த தொழிலும் நிலை பெற முடியாது. அது இந்தத் தொழிலாக இருந்தாலும் சரி. மனோகரன் மாதிரியானவர்கள் தொடர்ந்து தம்மை புதுப்பித்துக் கொள்கிறார்கள். ஐந்து வருடங்களில் உருமாறிவிடுகிறார்கள். 'எப்பொழுதும் புதுசு' என்பதுதான் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. அதுதான் தொழிலில் வெற்றி சூட்சமமே.   

3 எதிர் சப்தங்கள்:

Amanullah said...

வித்தியாசம் அல்லது மாத்தி யோசி , எப்போதும் கை விடாது என்பதற்க்கு மற்றும் உதாரணம் .

Jaypon , Canada said...

பதிவு நல்லா இருக்கு.

sonaramji said...

மிக அருமையான உணவகம் சிறு தானியங்களின் சமையல் அற்புதமாக இருக்கும். மற்ற உணவகங்கள் மாதிாி இல்லாமல் சட்னி சாம்பாா் தேவையான அளவு தருவாா்கள். நியாயமான விலை. சென்னைக்கு பயணித்தால் நாங்கள் நிச்சயம் செல்லும் இடம் இந்த உணவகம்