Apr 10, 2018

37

முப்பத்தாறு வயது முடிந்துவிட்டது. முழுமையான அங்கிள். இதைத் தமிழில் சொன்னால் அத்தனை சிறப்பாக இருக்காது.

'நாளைக்கு பிறந்தநாளுங்க...ஹைதராபாத் போய்ட்டு வர்றேன்' என்று சொன்னால் யாருமே நம்புவதாக இல்லை. 'அங்க எதுக்கு போற?' என்கிறார்கள். சில்கூர் பாலாஜி. ஹைதராபாத்தில் இருக்கும் போதெல்லாம் அந்தக் கோவிலுக்குச் செல்வதுண்டு. பத்து வருடங்களுக்கு முன்பாக பெங்களூருவுக்கு வேலை மாறுதல் கிடைக்கப்பெற்று வந்த பிறகு ஒரு முறை வந்து போயிருக்கிறேன். இது இரண்டாவது முறை. 

நண்பர்கள் 'நீயாவது கோயிலுக்கு போறதாவதாவது' என்கிறார்கள். 'கேர்ள் ப்ரெண்ட் யாராவது இருக்காங்களா?' என்கிறார்கள். ஆண்ட்டி ப்ரெண்ட், பாட்டி ப்ரெண்ட் கூட இல்லை.  'பிரியாணி சாப்பிடத்தானே போறே' என்று கூட கேட்கிறார்களே தவிர நான் கடவுளை நம்புவேன் என்பதை நம்பத் தயாராக இல்லாத ஒரு கூட்டத்தை சுற்றிலும் வைத்திருக்கிறேன். தலையில் முடி இருந்தாலாவது மொட்டையடித்து நிரூபிக்கலாம். என்னதான் செய்வது? யோவ்..சத்தியமா கோவிலுக்குதாய்யா போறேன். 

ஆன்மிக அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் எனக்கென்று ஓர் ஆன்மிகம் இருக்கிறது. 

கடந்த வாரம் கூட ஒரு உறவுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பிசினஸ் புள்ளி. இன்னொரு உறவினரைச் சுட்டிக்காட்டி 'உன்னைவிட அவருக்குத் தொழிலில் சிரமங்கள் அதிகம்..ஆனால் அவர் எதையுமே அலட்டிக் கொள்வதில்லை..நீ ஏன் இவ்வளவு பதட்டமடையுறேன்னு தெரியுதா' என்றேன். அவருக்கு பதில் தெரியவில்லை. 

'அவர் கடவுளை நம்புகிறார்...இன்னுமொரு நாலு மாசத்துக்கு நேரம் சரியில்லைன்னு சொல்லி இருக்காங்க...அம்மனுக்கு தீபம் ஏத்திட்டு இருக்கேன்..ஐப்பசி பொறந்தா எல்லாம் சரியாகிடும்' என்பார். கடந்த பல வருடங்களாகவே இப்படி ஏதேனும் ஒரு சமாதானத்தைச் சொல்வார். எவ்வளவு பெரிய சிரமம் என்றாலும் நான்கைந்து மாதங்களில் மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை மிகப் பெரிய பலம். வரம். அவருக்குச் சிரமங்கள் உண்டு. ஆனால் நன்றாக இருக்கிறார். இதுதான் எனக்கான ஆன்மிகமும். நம்மை மீறி ஏதோவொரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கிறது. 'இவன் தாங்குவான்' என்று நமக்கான வலிகளையும் வேதனையையும் நமக்கு அந்தக் கடவுள் கொடுக்கிறது. ஒவ்வொரு அடியும் நம்மைப் பக்குவப்படுத்தும் கருவி. அப்படிதான் நம்புகிறேன். 

கடவுளிடம் ஆத்மார்த்தமான உறவு இருந்தால் வலி வந்தாலும் அவனிடம் கொடுத்துவிடலாம். புகழ் கிடைத்தாலும் 'நீ கொடுத்தது' என்று கடவுளிடம் ஒப்படைத்துவிடலாம். அப்பொழுதுதான் தலையில் கிரீடத்தைச் சுமக்காமல் நம்முடைய கடமையைச் செய்து கொண்டேயிருக்கலாம். நமக்கான அங்கீகாரம் என்ன, நமக்கான இடம் என்பதெல்லாம் தானாக அமையும். எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைக்காததெல்லாம் ஏமாற்றம்தான். ஏமாற்றமே நம் வலுவைக் குறைக்கும் மிகப்பெரிய ஆயுதம். 

கடவுளிடம் வேண்டுவதும் கூட அப்படிதான். 'எனக்கு எது சரி தப்புன்னு உனக்குத் தெரியும்..எந்தக் கட்டத்தில் எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடு..மற்றபடி எல்லாக் காலத்திலும் காற்றில் பறக்கும் இறகு மாதிரி இருக்கிற மனசை மட்டும் மாத்திடாத' என்பேன்.  

முப்பத்தியேழு என்பது நடு வயது. நம்மையும் பெரிய மனிதனாக உலகம் பார்க்கத் தொடங்கும் வயது. உலகம் பார்த்தால் மட்டும் போதுமா? நாமும் அதற்குத் தகுந்தபடி மாற வேண்டும். சற்று பிசகினாலும் ஆள் பார்ப்பஸ் அங்கிள் ஆகிவிடும் வயது இது. ஏ.பி.யூ என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூகிளிடம் கேட்டுப் பார்க்கவும். 'எனக்குத் தெரியாதா' என்கிற கெத்து பிறக்கும். நாய்க்குணம் எட்டிப்பார்க்கும். 'அவனெல்லாம் பெரிய மனுஷனா..த்தூ' என்று அடுத்தவர்கள் பேசுவதற்கான வாய்ப்பை நம்மையறியாமல் நாமே உருவாக்கிக் கொடுப்போம்.  வயது கூடக் கூட பக்குவம் வளர வேண்டும். வஞ்சகமும் பொறாமையும் குறைந்து 'அவனும்தான் நல்லா இருக்கட்டுமே' என்ற எண்ணம் துளிர்க்க வேண்டும். 

ஊர் பார்வைக்கு ஏற்ற பக்குவமும் மனமும் வேண்டுமென்று யாரைக் கேட்பது? பெருமாளிடம் கேட்டால் கொடுப்பார் என்று நம்பிக்கைதான். சில்கூர் பாலாஜிக்கு விசா பாலாஜி என்பதுதான் பிரதானமான பெயர். 'விசா கிடைக்க வேண்டும்' என்று வேண்டி பதினோரு சுற்று சுற்றிவிட்டுப் போனால் விசா கிடைத்தவுடன் வந்து நூற்றியெட்டு சுற்றுப் போடுகிறார்கள். டொனால்ட் ட்ரம்ப் கூடவே மோதிப் பார்க்கிற பாலாஜி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நகரம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை தன்னை உருமாற்றிக் கொள்ளும் என்பார்கள். பாம்பு சட்டையை உரிப்பது போல ஹைதராபாத் உரித்திருக்கிறது. காலையில் இறங்கிய போது ஒன்றுமே அடையாளம் தெரியவில்லை. படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு என்று வந்து இறங்கிய போது இந்த நகரம்தான் தனிமையின் பலத்தைக் கற்றுக் கொடுத்தது. 'தனியா சுத்துடா' என்று சொல்லிக் கொடுத்தது. இரவுகளில் தனித்து அலைந்திருக்கிறேன். கோல்கொண்டாவில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படுத்துக் கிடந்திருக்கிறேன். திருடர்களிடம் சிக்கியிருக்கிறேன். பணத்தைப் பறித்துக் கொண்டு அழ வைத்திருக்கிறார்கள். பருவத்தின் கனவுகளுக்கு வர்ணம் பூசியது இந்த நகரம்தான். நிறைய வாசித்ததும் இந்த நகரத்தின் இரவுகளில்தான். இருபதுகளின் நடுவில் ஒரு மனிதன் அனுபவித்த நகரத்தின் சுவைக்கும் முப்பதுகளில் அவன் பார்க்கும் போது உருமாறியிருக்கும் அந்நகரத்தின் சுவைக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? 

முப்பத்தியேழு என்பதை ஆர்வமாக வரவேற்கிறேன். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கு ஏற்ற மனதை காத்துக் கொள்ள வேண்டும். 'எதுக்கு இப்படி அலையுற' என்று அடுத்தவர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கும் அளவுக்கு அலைகிற உடலும் மனமும் அப்படியே இருக்க வேண்டும். வயதுதான் முப்பத்தியேழு. ஆனால் வாழ்க்கையின் அர்த்தத்தை மிகச் சமீபத்தில் கண்டறிந்த துளிர் நான். 'முளைச்சு மூணு இலை விடாத' துளிர். ஓட்டமும் நடையுமாக வெகு தூரம் ஓட வேண்டியிருக்கிறது. 

வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி. நல்லவர்களின் வாழ்த்துக்கள் நம்மை நல்வழிப்படுத்துகின்றன. 

17 எதிர் சப்தங்கள்:

Thirumalai Kandasami said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மணி அண்ணா

Felix said...

வாழ்த்துகள்!!!

கண்ணன் கரிகாலன் said...

முழுமையாக அங்கிள் என்பது கல்லூரி மாணவிகளாளும் , அங்கிள் என்று அழைக்கப்படும் நிலையோ.
37 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள் மணிகண்டன்.

Balasubramanian said...

many more happy returns of the day anna

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா☺☺ வாழ்க வளமுடன்

கொமுரு said...

வாழ்த்துக்கள் மணிகண்டன் , நூறாண்டு நலமுடன் வாழ்க !!

சேக்காளி said...

//முழுமையான அங்கிள். இதைத் தமிழில் சொன்னால் அத்தனை சிறப்பாக இருக்காது//
என்ன சின்னையா! இப்பிடி சொல்லிட்டேரு.
சித்தப்பு கூட நல்லாத்தான் இருக்கும் அத செவ்வாழைக்கே உட்டுருவோம்.

Anbu Bala said...

Happy Birthday Sir

Vignesh M Chidambaram said...

Happy Birthday !!!

Chilkur Balaji thaanae Visa Balaji, Friend enakkum serthu vendikittaru Visa lottery le pick aganum nu, kedaicha udana rendu paerum poi 108 suthittu vanthom. Vara Vali le Bawarachi le Briyani saapittu Nalla sweets/karachi biscuits vaangitu vanthom.

Like the way you have put, we all need a support system that we could have faith upon and in return help us believe.

Anonymous said...

மணி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்தப் பக்குவம் நிறைவாக இருக்கிறது.
மிக முக்கியமான ஒன்றை மறந்து விட்டிங்களோ.... உங்கட கஜாலுடன் ஒரு டூயட் பாட ஆசையும் இருந்ததை,,😃😃😃

Amanullah said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Muthu P.E said...

Wish you many more Happy and Healthy Birthdays sir.

krish said...

வாழ்த்துக்கள் சார்,நீங்கள் எப்பவும் பெரிய மனிதன்தான்,எங்களுக்கு.

Trade said...

Happy Birthday Sir...

Anwar Ali said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Selvaraj said...

உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லாக் காலத்திலும் காற்றில் பறக்கும் இறகு மாதிரித்தான் உங்கள் மனசு இருக்கும். மனதார ஆத்மார்த்தமாக உங்களை வாழ்த்துகிறேன்

raja said...

"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" Belated Happy Birthday Wishes, Dear Manikandan.