Mar 6, 2018

பள்ளிக்கூடம் என்னாச்சு?

நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பள்ளிக்கூடத்தை எடுத்து நடத்தலாம் என்றும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் முன்பு எழுதி இருந்தேன். நம்மிடம் ஒரு பள்ளிக்கூடம் இருக்குமானால் ஆதரவின்றித் திரியும் சில குழந்தைகளையாவது அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்திற்கான வெளிச்சமாக இருக்க முடியும். அடுத்த கட்டப் பயணத்துக்கு அதுவொரு நல்ல தொடக்கமாகவும் இருக்கும். அதுதான் திட்டமும் கூட.

பள்ளிக்கூடம் குறித்தான ஒரு சிறு பின்னணி: 

தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் அந்தப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி. ஆனால் பள்ளிக்கூடத்துக்குச்  சொந்தமாகக் கட்டிடம் இல்லை. வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த அந்தப் பள்ளியைக் காலி செய்யச் சொல்லி உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். 'பள்ளிக்கு இடம் தர வேண்டும்' என அரசாங்கத்தை நிர்வாகம் அணுகியது. விதிமுறைகளின்படி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடமோ கட்டிடமோ அரசாங்கம் வழங்காது என்று மறுக்கப்பட்டது. பிரச்சினை பெரிதானது. கல்வித்துறை, பள்ளியின் நிர்வாகத்தை தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆசிரியர்களை வேறு பள்ளிக்குச் செல்லச் சொன்னார்கள். மாணவர்களையும் இடம் மாற்றம் செய்யச் சொன்னது. பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. தினசரி அதே வளாகத்துக்குத்  தம் பிள்ளைகளை அனுப்பினார்கள். கிட்டத்தட்ட நூற்று முப்பது மாணவர்கள். பெற்றோரே பாடமும் நடத்தினார்கள். 

இடையில் பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. 'மே மாதம் வரைக்கும் பள்ளிக்கூடம் அதே வளாகத்தில் இயங்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கையை முன் வைத்தார்கள். நீதிபதி ஒரு கமிஷனை அமைத்தார். பள்ளியின் கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி அந்த கமிஷன் பணிக்கப்பட்டது. கமிஷனின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்ட பிறகு ஆறு வார கால அவகாசம் கொடுத்து கட்டிடத்தில் இருக்கும் பழுதுகளை நீக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தை நீதி மன்றம் அறிவுத்தியது. சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சிரமப்பட்டு கமிஷன் சொன்ன பணிகளை முடித்துவிட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள்.

வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் இது குறித்து எதுவும் எழுதவில்லை. 

இன்றைக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிக்கூடத்தை காலி செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். நிர்வாகத்துக்கு எதிரான தீர்ப்பு. 

நிசப்தத்தின் நிலைப்பாடு:

பெற்றோர், நிர்வாகம், நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என சகல தரப்பினருக்கும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். பிரச்சினைகள் இருந்தால் உள்ளே நுழைய விரும்பவில்லை; சிக்கல்கள் களையப்பட்டு தற்போதையை நிர்வாகமானது கல்வித்துறையின் ஒப்புதலோடு நிசப்தம் அறக்கட்டளைக்குக் கையளிக்குமானால் புதிதாக இடம் வாங்கி கட்டிடம் எழுப்பி பள்ளிக்கூடத்தை நாம் நடத்தலாம். இல்லையெனில் இது சாத்தியமில்லை. 

நல்லதொரு பள்ளிக்கூடம் மூடப்படுகிறது என்பது தனிப்பட்ட முறையில் மிக வருத்தம்தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் வேறு; பொதுப் பணம் வேறு. அறக்கட்டளையின் பணத்திலிருந்து பள்ளிக்கூடத்துக்கு என இடம் வாங்கிய பிறகு ஒருவேளை பள்ளிக்கூடம் ஏதாவதொரு காரணத்துக்காக நம் கைகளில் வந்து சேரவில்லையெனில் அது சரியாக இருக்காது. தனிப்பட்ட பணமாக இருந்தால் 'சரி, சொத்து ஆச்சு' என்று விட்டுவிடலாம். அறக்கட்டளையின் பணத்தை முடக்கி வைப்பது சரியான அணுகுமுறை இல்லை.

'அரசு உதவி பெறும் பள்ளியாக இல்லாவிட்டால் என்ன? இடத்தை வாங்கி புதிதாக  ஒரு பள்ளிக்கூடத்தை நீங்களே நடத்தலாமே' என்று கூடச் சிலர் கேட்டார்கள். ஆசிரியர்களின் சம்பளம், நிர்வாகச் செலவு என அது பெரிய வேலை. ஒவ்வொரு மாதமும் பணம் புரட்டி சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதையெல்லாம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். இப்போதைக்கு ஒத்து வராது. 

அரசு உதவி பெறும் பள்ளியாக இருப்பின் ஆசிரியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கொடுத்துவிடும். சீருடை, மத்திய உணவு, புத்தங்கள் யாவும் அரசாங்கத்தின் பொறுப்பு. மாணவர்களைச் சேர்த்து நிர்வாகத்தை நாம் பார்த்துக் கொண்டால் போதும். 

ஒரு வித்தியாசமான பள்ளியாக செயல்படுத்த வேண்டும் என்று நிறையக் கனவுகள் இருந்தன. 

அடுத்த கட்டம்:

பள்ளியின் நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து ஆலோசனை செய்யக் கூடும். கல்வித்துறையும் நிர்வாகமும் இணைந்து பள்ளியை கையளிப்பார்களெனில் நிர்வாகத்தை எந்தச் சமயத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் உடனடியாக இருப்பதாகத் தோன்றவில்லை.

துகின் என்னும் குட்டிப்பையன் இந்தத் திட்டத்துக்காக பணம் தருவதாக அவனுடைய அப்பா தகவல் அனுப்பியிருந்தார். ஐம்பது லட்சம் வரைக்கும் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு நண்பர் சொல்லியிருந்தார்.  சிலர் பணம் அனுப்பியும் இருந்தார்கள். நிறைய ஐம்பதாயிரங்கள்.

நிசப்தத்தை பொறுத்தவரை எப்பொழுதும் போலவே இப்போதைக்கு செய்து கொண்டிருக்கும் பணிகளைத் தொடர்வோம். 'இதனை இதனால் இவன் முடிக்கும்....' என்ற குறள்தான் மனதில் ஓடுகிறது. அப்படியொரு  அமைப்பு இருந்தால் - நாம்தான் நடத்த வேண்டும் என்றிருந்தால் பள்ளிக்கூடம் நம் கைகளுக்கு வந்து சேரும். இல்லையென்றால் பெரிதாகக் குழப்பிக் கொள்ளாமல் தொடர்ந்து பயணிப்போம்.

உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி. 

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

தல... enjoyed reading . ஜாதகத்தில செவ்வாயும் (aggression), புதனும் (wisdom ), சந்திரனும் (grasping/emotion ) கொஞ்சம் நல்ல இருந்தாலே சாமர்த்தியம் தானா வரும்....இந்த மூணு கிரகமும் கரெக்டான நேரத்தில activate ஆயிருக்கு :)

Anonymous said...

Dear Mani anna if suppose taking over the school is not happening then you can consider this. I think you know about National Institute of Open Schooling (NIOS),it offers 8,10,12 standards and vocational courses. Once registered we can study on our own no need to go to school except practical exams and we choose the exam date according to our convenient, syllabus is based on CBSE. It is approved by all higher educational institutions in India. We have many choices in subjects compared to regular schooling. If you have place to train students then as per your wish you can select super 16 students and register them in NIOS and train them with part time teachers or volunteers, also students get more time for other activities.

Anonymous said...

Mani, this comment was for "MULARI" post...

"தல... enjoyed reading . ஜாதகத்தில செவ்வாயும் (aggression), புதனும் (wisdom ), சந்திரனும் (grasping/emotion ) கொஞ்சம் நல்ல இருந்தாலே சாமர்த்தியம் தானா வரும்....இந்த மூணு கிரகமும் கரெக்டான நேரத்தில activate ஆயிருக்கு :)"