Feb 26, 2018

கேள்விக்கென்ன பதில்

இரு வாரிசுகள் உள்ள சம்சாரியாகிவிட்டீர்கள். பொது வாழ்க்கைக்கு இனி நேரம் குறையுமா? 

குடும்பத்தையும் வெளி வேலைகளையும் குழப்பிக் கொண்டால் பல சிக்கல்கள் வந்து சேரும். திருமணமாகி பாத்து வருடங்கள் ஆகின்றன. ஓரளவுக்கு அனுபவம் சேர்ந்திருக்கிறது. குடும்பமும் வெளி வேலைகளும் தனித் தனிக் குதிரைகள். இரண்டையும் ஒரே வண்டியில் பூட்டிக் கொள்ள வேண்டும். அதே சமயம் இரண்டும் வெவ்வேறு பக்கமாக இழுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவித இலாவகம்தான். ஆனால் ஓட்டி விட முடியும். 

கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் குளத்தைத் தூர் வாரும் பணி மிகச்சிறப்பாக முடிந்தது. வாழ்த்துக்கள். இந்தப் பணியை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள விரும்பி கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் அணுகினால் உங்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா? - வேல்முருகன்

நல்ல காரியத்தை யார் செய்தால் என்ன? யார் அணுகினாலும் முழுமையாக ஒத்துழைக்கலாம்.
  
நீங்க நல்லவரா? நல்லவர் மாதிரி நடிக்கிறீங்களா? ஹி.. ஹி.

இனிமேல் தொடர்ந்து நிசப்தம் வாசிக்கவும்.  நான் எவ்வளவு பெரிய தில்லாங்கடி என்று புரிந்து கொள்வீர்கள்.

அறக்கட்டளை சார்ந்த விதிகளில் மாற்றம் செய்யும்போது, முன்பே மாற்றம் செய்திருந்தால், அவர் பயனடைந்திருப்பார், இவர் பயனடைந்திருப்பார், என மனதில் தோன்றுமா? சிவக்குமரன் - விழுப்புரம்

சில சமயங்களில் விதிகளைத் தாண்டி  'இவர்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்' எனது தோன்றும். அப்பொழுது விதிகளை மீறத் தயங்கியதில்லை. விதிகளைவிடவும் மனிதாபிமானம்தான் முக்கியம் என்பதுதான் நிசப்தம் அறக்கட்டளையின் அடிநாதம்- ஆரம்பத்திலிருந்தே. விதிகள் என்பவை அதிகப்படியான கோரிக்கைகளில் இருந்து என்னைத் தற்காத்துக் கொள்ள உதவுகிறது. அவ்வளவே.

காதலி/மனைவி ஆணின் முன்னேற்றத்திற்கு ஆதாரமா? கல்யாணம் செய்தால் பொறுப்பு வந்திடுதா?

காதலி பற்றித் தெரியாது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஆணுக்கு ஒரு பக்குவம் வந்துவிடுகிறது. 'பொண்டாட்டியவே சமாளிச்சுடுறோம்..இந்த ஊர்க்காரங்களை சமாளிக்க முடியாதா' என்பது மாதிரியான பக்குவம். அது நிச்சயம் முன்னேற்றம்தான்.  

உண்மையைச் சொன்னால், மிகப் பெரிய தடைகளின் போதும் வலிகளின் போதும் மனைவியின் 'அட விடுங்க பார்த்துக்கலாம்' என்கிற சொல் மிகப் பெரிய பலம். மிகப் பெரிய ஆறுதல். 

After seeing the result of Kottupullampalayam lake work, why not try form a team in each district (at least with few in first attempt)and identify water bodies to save and improve ground water levels? As you know funding will not be an issue and local native manpower can be used. Only initiation at project planning level and guidance for implementation is sufficient. If properly taken it will reap results for our future generation. 

Thanks and expecting your reply. 

சொல் அல்ல செயல் என்பார்கள். 

'செய்துவிடலாம்' என்று சொல்வது எளிது. ஆனால் களம் அவ்வளவு எளிதன்று. யாராவது உள்ளூரில் முன் நின்று ஒருங்கிணைக்க வேண்டும். அதுதான் மிகப் பெரிய சவால். ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லி முன்னால் சென்றால் 'இவனுக்கு என்ன வந்துச்சு?' என்று நினைக்கிறவர்கள்தான் அதிகம். சந்தேகப்படுவார்கள். 'இல்லை உண்மையாகவே நல்ல நோக்கத்தில்தான் செய்கிறான்' என்று உள்ளூர் வாசி ஒருவர் புரியவைக்கவில்லையென்றால் மிகச் சிரமம். நீங்கள் எந்த ஊர்/ மாவட்டம் என்று தெரியவில்லை. நீங்கள் பிள்ளையார் சுழி போடுவதாக இருந்தால் சொல்லுங்கள். உதவுகிறேன்.

(Sarahah - இல் கேட்கப்பட்ட கேள்விகள்)

0 எதிர் சப்தங்கள்: