'எங்கள் ஊரில் ஓர் ஏரி இருக்கிறது. சுத்தம் செய்யுங்கள்' என்று யாராவது மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறார்கள். தனிப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவிகள், கல்வி உதவி என்றால் பிரச்சினை இல்லை. விசாரித்துவிட்டு சரியாக இருப்பின் அவர்களுக்கு உதவி விட முடியும். ஆனால் ஊர் பொதுக் காரியங்கள் என்றால் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வது சாத்தியமில்லை.
விவரங்களைக் குறிப்பிட்டு எழுதுவதற்கு மன்னிக்கவும் - இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைக் குறிப்பிட்டு அங்கு பணிகளைச் செய்ய இயலுமா என்று ஒருவர் கேட்டிருக்கிறார். நிச்சயமாக உதவ முடியும். ஆனால் உள்ளூரில் யார் முன்னின்று செயல்களைச் செய்வார்கள் என்று தெரிய வேண்டும்.
'நீங்க வர்றீங்களா?' என்றேன்.
'இல்லைங்க நான் அமெரிக்காவில் இருக்கேன்' என்றார்.
'நீங்க அங்க போங்க ஆளுங்க சேர்ந்துடுவாங்க' என்று பெரு மொத்தமாகச் சொல்கிறார். அவர் மீது தவறில்லை. தமது ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதே சமயம் எனது நிலைமையையும் கொஞ்சம் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்களைத்தான் என்னால் ஒதுக்கி பயணிக்க முடியும். இடைப்பட்ட ஐந்து நாட்களுக்கு யார் பணிகளை மேற்பார்வையிடுவார்கள்?
'வேலையை விட்டுட்டு முழுமையாக இதில் இறங்கிடு' என்று கூட அறிவுரை சொல்லி மின்னஞ்சல்கள் வரும். அது சாத்தியமில்லை. இப்பொழுதுதான் குடும்பம் துளிர்க்கிறது. என்னை நம்பி மூன்று ஜீவன்கள். குடும்பத்திற்கான வருமானம் முக்கியம்.
கடந்த மூன்றாண்டுகளாக நிசப்தம் செயல்படுகிறது. கல்வி மருத்துவ உதவிகளை விடுங்கள். பெரிய சிரமமில்லை.
பெரிய வேலை என்றால் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது செய்ததுதான். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து லட்ச ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் அவை. அச்சிறுப்பாக்கத்தில் நல்ல டீம் அமைந்தது. ஜெயராஜ் தனது வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு களத்தில் நின்றார். அவருடன் கடுமையாக உழைக்கக் கூடிய அணி அமைந்தது. அதே போல கடலூரில் சக்தி சரவணன் ஒரு அட்டகாசமான டீம் ஒன்றை தயார் செய்து வைத்திருந்தார். அந்தச் சமயத்தில் தமிழகமே எமோஷனலாக இருந்தது. பல்வேறு திசைகளில் இருந்தும் உதவிகள் வந்தன. நிறைய அதிகாரிகள் கை நீட்டினார்கள். இலகுவாகச் செய்ய முடிந்தது.
எல்லாம் முடிந்த பிறகு 'ஸ்டிக்கர் கவர்ன்மென்ட் எல்லாம் நமக்கு ஜுஜுபி. கடலூரிலேயே செய்துவிட்டோம்..இனி எந்த ஊரிலும் கை வைத்துவிடலாம்' என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். குருட்டு நம்பிக்கை.
ஒரு பொதுக் காரியத்தைச் செய்யும் போது அதில் பல காரணிகள் இருக்கின்றன. கூட்டு உழைப்பு தேவை. வேமாண்டம்பாளையத்தில் குளத்தைத் தூர் வாரினோம். குளம் நிறைய விரவிக் கிடந்த சீமைக் கருவேலத்தை அழிக்க முயன்றோம். அழித்தோம்தான். ஆனால் அதனை வெற்றி என்று பிரகடனப் படுத்திக்க கொள்ள முடியாது. உள்ளூர் ஆட்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. ஓர் அணியை உருவாக்க விரும்பினோம். அது சாத்தியப்படவில்லை. போதும் போதும் என்றாகிவிட்டது. குளம் சுத்தமானது. ஆனால் குளத்துக்கு நீர் வரக் கூடிய பாதையைச் சீர்படுத்த முடியவில்லை. மழை பெய்தால் குளம் நிரம்பும் என்று வானத்தை வேடிக்கை பார்க்க வேண்டியதாகிப் போனது. குளம் இன்னமும் காய்ந்துதான் கிடக்கிறது.
அடுத்து மலையப்பாளையம். சிகாகோவில் இருக்கும் நண்பர்கள் திரட்டிக் கொடுத்த பணம் அது. அனுபவங்களை மனதில் வைத்து காரியத்தில் இறங்கினோம். உள்ளூரில் நல்ல அணி உருவானது. ஊர்க்காரர்களின் ஒத்துழைப்பும் இருந்தது. ஆனால் நீதிமன்றம் சொதப்பியது. 'சீமைக் கருவேலத்தை வெட்டலாம்...வெட்டக் கூடாது' என்று மாற்றி மாற்றி தீர்ப்பைச் சொன்னார்கள். பொதுக் காரியங்களை எடுத்தால் தடைபடாமல் செய்து முடித்து விட வேண்டும். இல்லையென்றால் எல்லோருக்கும் அதே உற்சாகம் அப்படியே தொடரும் என்று சொல்ல முடியாது. வடிந்துவிடும். மலையப்பாளையத்தில் அப்படித்தான் ஆனது.
சிகாகோ குழுவினர் கொடுத்த பணம் கிட்ட தட்ட ஒரு லட்சம் இருக்கிறது. சரி இன்னொரு ஊரில் இறங்குவோம் என ஊர்க் கூட்டமெல்லாம் நடத்தினோம். ஆனால் அவர்களால் தாலுகா அலுவலகத்தில் அனுமதி வாங்க முடியவில்லை. அங்கே சம்திங் சம்திங் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கும் ஆர்வம் போய்விட்டது.
இப்படி வெவ்வேறு அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு கோட்டுப் புள்ளாம் பாளையத்தில் தூர் வாரினோம். அது மிகப் பெரிய வெற்றி. குளம் நிரம்பி நீர் வழிகிறது. அந்த குளத்தில் அடர்வனம் அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் ஹிட்டாச்சி வண்டிக்காரர்களை பிடிக்க முடிவதில்லை. பத்து மணி நேர வேலை என்றால் பம்முகிறார்கள். அவர்களுக்கு பல மணி நேரங்களுக்கான வேலை வேண்டும். அப்பொழுதுதான் வருவார்கள். இன்னமும் என்னவெல்லாம் தடை வரும் என்று தெரியவில்லை. செய்து முடித்தால்தான் தெரியும்.
தனிப்பட்ட உதவிகள் என்றால் அது கல்வி மருத்துவ உதவிகள் மட்டும்தான். அதுவும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் உதவி என்பதில் உறுதியாக இருக்கலாம். சில விதிவிலக்குகள் உண்டு. பெற்றவர்கள் இல்லாத குழந்தைகளை யாராவது உறவினர் தனியார் கல்வி நிறுவங்களில் சேர்த்து விட்டிருப்பார்கள் அல்லது கல்லூரியில் சேர்த்த பிறகு பெற்றவர்கள் இருந்திருப்பார்கள். இப்படியான சில மாணவர்களுக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் என்றாலும் கூட உதவியிருக்கிறோம்.
அதே சமயம் 'கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும், ஆராய்ச்சிக்கு நிதி வேண்டும்' என்று கேட்டால் கொடுப்பதில்லை. கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. ஒருவன் ஜெர்மனியில் படிக்கிறான். அநேகமாக படித்து முடித்திருப்பான். விசா சம்பந்தமாக ஊருக்கு அவசரமாக வந்து போக வேண்டும் என்றான். முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து இருந்தோம். திருப்பிக் கொடுத்துவிடுவதாகச் சொன்னவன் ஏமாற்றிவிட்டான். நிசப்தம் தளத்தில் கூட தனியாக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அவனது மனைவியை அழைத்தும் பேசினேன். ஒரு பலனில்லை. யாரோ கொடுத்த பணத்தை எவனோ தின்கிறான். அயோக்கியத்தனம்.
'கடனா கொடுங்க' என்று யாராவது கேட்டால் 'ஆளை விடுங்க சாமி' என்று கெஞ்சக் காரணம் இத்தகைய கசந்த அனுபவங்கள்தான். 'சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்' என்பது போல யாரை நம்புவது என்று தெரிவதில்லை. பி.ஹெச்.டி செய்து கொண்டிருப்பவனே ஏமாற்றுகிறான். 'அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா?' என்று தயவு செய்து கேட்காதீர்கள். அது பதில் சொல்ல முடியாத கேள்வி.
அடுத்தவர்களின் பணத்தை வாங்கி கடன் கொடுப்பது சரியானது இல்லை. அதனால் மறுத்துவிடுகிறேன். அதே போல சிலர் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் பரிந்துரை செய்வார்கள். எழுத்தாளர் ஒருவர் ஒரு மாணவியைப் பரிந்துரை செய்திருந்தார். 'பொண்ணு ஹாஸ்டல்ல இருக்கா' என்றார்.
'பேசணுமே சார்' என்றேன்.
'லீவ்ல வந்த உடனே பேசச் சொல்லுறேன்' என்றார். பத்தாயிரம் ரூபாய் கட்டினோம். பெண்ணும் பேசவில்லை. ரசீதும் அனுப்பவில்லை. இந்த முறை அழைத்து ஐந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார். அதன் பிறகு அழைப்பை எடுக்கவே இல்லை. எழுத்தாளரை மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் எந்த நம்பிக்கையில் அடுத்தடுத்த தடவை உதவ முடியும்?
நாம் உதவுகிற ஒவ்வொரு மாணவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பணத்தை இறைத்துவிடுவதால் நல்ல பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்படிச் செய்வதால் சமூகத்தில் நாம் நினைப்பது நடக்காது. உதவி பெற்றவர்களில் ஐம்பது சதவீதம் பேராவது இந்தச் சமூகத்துக்கு எதையாவது திருப்பித் தர வேண்டும். எவனோ பணம் கொடுத்தான். நானாகப் படிச்சேன் என்று மறந்துவிட்டுப் போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
உதவி கேட்டு வருகிறவர்களிடம் மறுக்கும் போது நிறைய சங்கடங்கள்தான்.
அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் பேசும் போது 'அவன் போனையே எடுக்கல' என்று பேசுவார்கள். அந்த நண்பர்கள் நம்மிடம் விசாரிக்கவா போகிறார்கள். அப்படியே எல்லாக் காலத்திலும் நினைத்திருப்பார்கள். நல்ல பெயரைவிடவும் கெட்ட பெயர் வாங்குவதுதான் எளிது. உதவி கேட்பவர்கள், கடன் கேட்பவர்கள் என சகலரும் அறிமுகமானவர்கள்தான். ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்கும். அவர்களிடம் 'இல்லை' என்று மறுப்பது எளிதில்லை. ஆனால் மறுக்க வேண்டியிருக்கிறது.அவர்கள் தரப்பிலிருந்து பார்க்கும் போது அது மிக முக்கியமான உதவியாக இருக்கலாம். ஆனால் நாம் சந்திக்கிறவர்களோடு ஒப்பிட்டால் அது ஒன்றுமே இல்லாமல் இருக்கக் கூடும். இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் வசை பாடுகிறார்கள். அது பற்றி எனக்கு பெரிய கவலை எதுவுமில்லை. எனக்கு இந்தச் செயல்பாட்டில் இருந்து இந்தப் பலனும் தேவை இல்லை. ஆன்ம திருப்திக்காகத்தான் இதைச் செய்யத் தொடங்கினேன். இப்படியேதான் தொடர்வேன். நல்ல பெயருக்காக வளைந்து கொடுத்தால் அது மிகப் பெரிய பாவ காரியம்.
நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு சாதி, மதம், ஊர், மாவட்டம் என்ற வரையறைகள் எதுவுமில்லை. தகுதியான பயனாளிகள் என்றால் யாராக இருந்தாலும் உதவலாம். ஓர் நல்ல அணியை அமைக்க இயலுமானால் எந்த மாவட்டத்திலும் களமிறங்கலாம். நிசப்தம் அறக்கட்டளையின் பாதை இப்படியே தொடரட்டும்.
6 எதிர் சப்தங்கள்:
ஏமாத்தறவங்கள 2 இல்ல 3 தடவ ஞாபகப்படுத்திட்டு அப்படியும் திருந்தலன்னா பேரையும் ஊரையும் பகிரங்கமாக சொல்லங்க மணி..தப்பில்ல...
சாம்
Sam aka anonymous...
// 'கடனா கொடுங்க' என்று யாராவது கேட்டால் 'ஆளை விடுங்க சாமி' என்று கெஞ்சக் காரணம் இத்தகைய கசந்த அனுபவங்கள்தான்.//
I believe Manikandan no longer gives away money that is expected to be returned after certain period, as a loan without any interest. This is after the incident on INR 30,000. So, there will not any more opportunity to publish the names. So, he gives away others' hard-earned money only for reasons such as... // உதவி பெற்றவர்களில் ஐம்பது சதவீதம் பேராவது இந்தச் சமூகத்துக்கு எதையாவது திருப்பித் தர வேண்டும். // .
///தகுதியான பயனாளிகள் என்றால் யாராக இருந்தாலும் உதவலாம். ஓர் நல்ல அணியை அமைக்க இயலுமானால் எந்த மாவட்டத்திலும் களமிறங்கலாம். நிசப்தம் அறக்கட்டளையின் பாதை இப்படியே தொடரட்டும்.///
உண்மை..உண்மையை தவிர வேறில்லை. சொல்ல வார்த்தைகள் இல்லை.
எனக்கு ரொம்ப நாளா ஆச்சரியம் எப்படி உங்களால மட்டும் வெற்றிகரமாக காரியத்தை முடிக்கமுடியுது என்று. உங்களுக்கும் நிறைய சறுக்கல்கள், அதையும்தாண்டி இவ்வளவு காரியம் பண்றது அவ்வளவு சுலபம் இல்லை. உங்க விடா முயற்சி, பொறுமையை நல்ல விஷயங்கள் பண்றதுக்கு ஒரு மனசு வேண்டும். உங்களுக்கும், உங்களுக்கு உதவியாக இருக்கிற உங்க குடும்பமும் நல்லா இருக்கோணும், இருப்பீங்க!!!
உம்மிடம் கடன் கேட்கவே நினைத்தேன். தர விருப்பம் இருந்தால் தரவும்.
உம் பொறுமையை, நேர்மையை,
நேர மேலாண்மையை, இன்னுமும்முள் உள்ள நல்லவை யெல்லாவற்றையும். வட்டியுடன் தருவேன்.
//உம்மிடம் கடன் கேட்கவே நினைத்தேன். தர விருப்பம் இருந்தால் தரவும்.
உம் பொறுமையை, நேர்மையை,
நேர மேலாண்மையை, இன்னுமும்முள் உள்ள நல்லவை யெல்லாவற்றையும்.//
:அவைத்தலைவன்
குடுத்து தொலைக்கவும்.
:கொபசெ
Post a Comment