Jan 30, 2018

நலம் வாழ...

நண்பரொருவருடன் திருமணத்துக்குச் சென்றிருந்தோம். அவருக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள்.நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மாத்திரைகளை விழுங்குகிறார். அது பிரச்சினையில்லை. வந்துவிட்டது. என்ன செய்ய முடியும்? உபாதைகள் கட்டுப்பாட்டை மீறும் போது வலுக்கட்டாயமாக வேதிப்பொருட்களை நாட வேண்டியதுதான். அதே சமயம் நாம் உள்ளே எடுத்துக் கொள்கிற அத்தனை வேதிப்பொருட்களையும் நம் உடலும் சுரக்கிறது. அதை சற்றேனும் ஊக்கப்படுத்துகிற வேலையை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. எவையெல்லாம் நம் உடலுக்கு எதிரானவையோ அவற்றைக் கட்டுப்படுத்தி எவையெல்லாம் உகந்தவையோ அவற்றின் மீது கவனம் செலுத்தி...

நிறைய இருக்கின்றன. 

சரவணன் அண்ணன் மாதிரியான சித்த மருத்துவர்களிடம் அவ்வப்பொழுது பேசுவதுண்டு. சிறு சிறு உபாதைகளுக்கு எளிய வைத்தியங்களைச் சொல்வார்கள். தொண்டையில் கிருமித் தொற்று என்றால் தேனில் மிளகு கலந்து அதை உட்கொண்டால் போதும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பட்டையைப் பொடியாக்கில் தேனில் கலந்து எடுத்துக் கொள்வது அதைவிட வீரியம் மிக்கது. இதையெல்லாம் முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. அப்படியும் சரியாகவில்லை என்றால் ஆண்ட்டிபயாடிக் தவிர வேறு வழியில்லை. ஆனால் பட்டையையும் மிளகையும் முயற்சித்துப் பார்க்கலாம் அல்லவா?. ‘அஞ்சரைப் பொட்டியில் ஆயிரம் வைத்தியம்’ என்று சொல்வார்கள். 

‘காலையில் எந்திரிச்சு பல்லை விளக்கிட்டு காபிக்கு பதிலா ரெண்டு டம்ளர் சுடு தண்ணீரைக் குடிச்சுடு’ என்பார்கள். அதனால் என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால் காபியைத் தவிர்த்துவிட்டு இரண்டு குடுவை வெந்நீரைக் குடிப்பதில் நிச்சயமாக எந்த துர்பலனும் இருக்காது. நம்மால் இயலக்கூடிய இப்படியான சில செயல்களைச் செய்து கொண்டிருக்கலாம். அதற்கே மொடத்தனம். செய்வதில்லை.

முதல் பத்தியில் சொன்ன நண்பர் எங்கள் லே-அவுட்டில்தான் இருக்கிறார். திருமணத்தில் அவரது நாவும் கட்டுப்பாட்டில் இல்லை. வாயும் கட்டுப்பாட்டில் இல்லை. பொறுக்கமாட்டாமல் கேட்டும்விட்டேன். ‘அதுதான் மாத்திரை சாப்பிடுறோமே’என்கிறார். வந்த கடுப்பில் ‘நீங்க எப்படியோ இருந்துட்டுப் போங்க..உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு..ஞாபகம் வெச்சுக்குங்க’ என்று சொன்னதும் முகம் இருண்டு போய்விட்டது அவருக்கு. ஆனால் ஆகட்டும்.

கண்களுக்கு முன்பாகவே சரிந்து போகிறார்கள். மாத்திரைகளை விழுங்கியபடியே அலட்சியத்தோடு இருக்கும் இப்படியொரு extreme என்றால் இன்னொரு பக்கம் ‘எனக்குத்தான் ஒண்ணுமே இல்லையே’ என்கிற எக்ஸ்ட்ரீம். உடல்நலத்தில் மட்டும் இப்படியொரு அலட்சியம் இருக்கவே கூடாது. 

மருத்துவரைப் போல பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள்.

எல்லாவற்றிலும் கவனமாக இருந்தாலும் நம்மை மீறி ஏதேனும் நிகழ்ந்தால் விதி என்று விட்டுவிடலாம். ஆனால் குறைந்தபட்ச ஒழுங்காவது வாழ்க்கையில் அவசியமில்லையா. தாந்தோன்றித்தனமாகத் திரிகிறவர்கள் இருந்துவிட்டுப் போகலாம். திருமணம் செய்து, ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் இப்படி ஒழுங்கீனமாக இருப்பதைப் பார்த்தால் அலறத்தான் செய்கிறது. முப்பது அல்லது முப்பத்தைந்து வயது வரைக்கும் பெரிய பிரச்சினையில்லை. கல்லைப் போட்டாலும் கரைக்கிற வயது என்பார்கள். ஆனால் அதன் பிறகு ஒவ்வொன்றாக மக்கர் அடிக்கத் தொடங்கும் போது அலர்ட் ஆகிக் கொள்ள வேண்டியதுதான்.

‘எங்கீங்க நேரம்?’என்பார்கள். 

ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் போதும். உடலை அப்படியும் இப்படியும் அசைத்தால் கன வேலை செய்யும். அதைக் கூடச் செய்வதில்லை. ஏ.ஸி.அறையில் அழுத்தி வைத்து குதச்சூடு தலையில் ஏறும் வரைக்கும் அப்படியே அமர்ந்திருந்தால் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாலாயிரத்துச் சொச்ச நோய்களில் கால்வாசியாவது எட்டிப்பார்த்துவிடும். அறிவுரை சொல்கிற அளவுக்கு வைத்தியசிகாமணி இல்லை. ஆனால் எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல இருக்கிறவர்களிடமாவது இதையெல்லாம் பேச வேண்டியிருக்கிறது.

திருமணத்தை முடித்துக் கொண்டு திரும்ப வரும்போது பைக்கில் நண்பர் பேசவே இல்லை. உம்மணாமூஞ்சியாகவே இருந்தார். இறங்கியவுடன் ‘தப்பா எடுத்துக்காதீங்க’ என்று சொல்லி விட வேண்டும் என நினைத்தேன். யோசித்துக் கொண்டே வந்திருப்பார் போல. ‘நீங்க சொல்லுறது சரிதான்’ என்றார். கடைபிடித்தால் சரி.

பெரியவர்கள் சொல்வார்கள். வயது இருக்கும் போது நம் உடல் நமக்கு பொருட்டே இல்லை. தாறுமாறாக இருந்துவிடுவோம். ஆனால் வயது கூடக் கூட உடல் மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும். நம்முடைய செயல்பாடுகளை முடக்கும் அந்தப் பிரச்சினைகள்தான் நம்முடைய சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கியெறிகிற வேலைகளைச் செய்யும்.

வாழ்க்கை முறையில் சில ஒழுங்குகளைக் கடைபிடித்தால் போதும். ‘எப்பவாச்சும் கல்யாணத்துல ஸ்வீட்’. ‘எப்பவாச்சும் பார்ட்டியில் பொறிச்சது’ ‘எப்பவாச்சும் சரக்கு’. எல்லாவற்றிலும் எப்பொழுதுமே அளவாக இருந்தால் தொந்தரவில்லை. ‘எப்பவாச்சும்’ என்ற சாக்குப் போக்கில் அள்ளிக் கொட்டுவதுதான் பெரிய வினை. உடலுக்கு ஏற்ற அளவில் தண்ணீர் அருந்துவது, ஏழு மணி நேரத் தூக்கம், பதினோரு மணிக்குப் பின்பாக விழிப்பைத் தவிர்த்தல், நாற்பது நிமிட நடைப்பயிற்சி, புகையைக் குறைத்தல், முடிந்த வரைக்கும் அசைவம் தவிர்த்தல், அப்படியே உண்டாலும் இரவுகளில் அசைவம் தவிர்த்தல், உறங்குவதற்கு முன்பாக வயிற்றுக் குழியை முழுமையாக நிரப்பாமல் காலியாக வைப்பது, அரிசியைக் குறைத்து, காய்கறிகள் அதிகம் சேர்ப்பது என இப்படி எல்லாமே எல்லோருக்குமே சாத்தியமான விஷயங்கள்தான். ஒரே சிரமம்- மனது வைக்க வேண்டும்.

‘என்ன ஆகிவிடும்?’ என்ற அசால்ட்தன்மை நல்லதுதான். ஆனால் உடல்நலத்தில் மட்டும் இது ஆகவே ஆகாது.

8 எதிர் சப்தங்கள்:

Raja said...

எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பொதுவாக தான் இருக்கிறது. நேரமில்லை என்று சொல்பவர்கள் முக்கால்வாசி பேருக்கு சீரியல் பார்க்கவும், கிரிக்கட் பார்க்கவும் தினமும் இரண்டு மணி நேரம் எப்படியும் இருக்கிறது. இப்படி நம்மை சோம்பேறிகளாக்கி ஒரு நோயாளி கூட்டத்தை உருவாக்கி இருப்பதும் நன்கு வரையறுக்கப்படட திட்டம் தான். அதில் சிக்கி சோம்பேறிகளாகி, நோயாளிகளாகி போகும் சதவிகிதம் அதிகமாகி கொண்டே போகிறது. எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

S.ஜஸ்டின் லியோன் said...

அவசியமான பதிவு நானும் கடைபிடிக்க முயலுகிறேன்.நண்பர்கள் உறவினர்களிடம் இதேபோல் சொல்வேன் ஆனால், இருக்கும் வரை பாவ்லா சாப்பிட்டு போவோம் என்று சொல்லுவார்கள் , இதுவரை ஆஸ்பத்திரிக்கு போனதேயில்லை என்று பெருமையாக பேசுவார்கள்.

sivam said...

அது போலவே இன்னொன்னும் நாம கடைபிடிக்கலாம் நமது ஒவ்வொரு வேளை உணவின்போதுமே. நமக்கு இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்னு தோனும்போதே நிறுத்திவிடலாம். அதுதான் அளவு. உதாரணமா, ஒருநாள் இட்லியும் சட்னியும் மிகவும் நன்றாகவே இருக்கும். அன்னைக்கு 5 இட்லி சாப்பிட்டபின்னாடி இன்னும் ரெண்டோ மூனோ சாப்பிட்டா தேவலைனு தோனும். உடனே அத்தோடு நிப்பாட்டிக்கனும், அப்போதைக்கு. வேண்டுமெனில் கொஞ்சம் இடைவேளைவிட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இது ஒரு உணவுக் கணக்கு.

Anonymous said...

AFTER A LONG TIME AN ARTICLE ON HEALTH . REFRESHING AND REALLY GOOD.

வாழ்க்கை முறையில் சில ஒழுங்குகளைக் கடைபிடித்தால் போதும். NO DECEASE WILL COME .

HOW MANY FOLLOW? THIS GOLDEN RULE.

ACCORDING TO DOCTORS MOST OF THE AILMENTS ARE DUE TO BAD/ OVER EATING.

P'IZZA'S,BURGERS AND AERATED WATERS (COKE,PEPSI) CAUSE MAXIMUM DECEASES. OUR YOUNGSTERS EAT ONLY THIS.

PARENTS TAKE PRIDE IN EATING OUT. CHILDREN COMPARE THE TIMES THEY ATE OUT AND DECIDE THE WINNER.

NO OF TIMES KIDS CONSUMED 'VISHAM' (POISION) HAS BECOME THE YARD STICK FOR BEING WEALTHY.

HOW MANY PEOPLE DO.EVEN IN OUR VILLAGE 'CAULI FLOWER MANCHURIAN', PANEER BUTTER MASALA ARE AVAILABLE WITH A PROUD STATEMENT ALL THINGS SHOWN IN T.V. ARE THERE

வைத்தியசிகாமணி இல்லை NALLADHU SOLLUM ELLORUM வைத்தியசிகாமணி THAN.

காலையில் எந்திரிச்சு பல்லை விளக்கிட்டு காபிக்கு பதிலா ரெண்டு டம்ளர் சுடு தண்ணீரைக் குடிச்சுடு’ என்பார்கள். அதனால் என்ன நடக்கும் என்பது தெரியாது. SURELY ,' CONSTIPATION'( MALA SIKKAL) WILL GO .IN SOUTH IT WAS RELATIVELY UNKNOWN DUE TO PLENTY OF WATER DRINKING AND காய்கறிகள் NIRAYA UNDATHAL.

,' CONSTIPATION'( MALA SIKKAL) MAY EVEN CAUSE INTESTINAL CANCER.

உடல்நலM KAPOM NEENDA NAAL VALVOM.

HATS OFF FOR A TIMELY ARTICLE. BEING MARRIAGE SEASON THE ARTICLE IS TIMELY/RELEVANT.

ANBUDAN,

M.NAGESWARAN.

Asok said...

எனக்கும், என் மகனுக்கும் ரொம்ப சளி தொல்லை. என் மகனுக்கு ரொம்ப அதிமாகி, ஆஸ்துமா வர்ற அளவுக்கு போயிருச்சு. அப்புறம் அவனுக்கு சளி அதிகமாகி, மூச்சிரைக்கிற போதெல்லாம், மருத்துவணைக்கு தூக்கிட்டு ஓடுவோம். அதனால், நாங்க ரெண்டு பேரும் சுக்கு காபி வாரத்துல இரண்டு நாள், ஒரு வருசம் குடிக்க ஆரம்பிச்சோம், இப்ப போயே போச்சு சளி, மூச்சிறைத்தல். ஆனா, சுக்கு காபியை நிறுத்தி விட்டால், திரும்ப வருகிறது. இதே பிரச்சினை, இன்னும் இரண்டு குழந்தைகளுக்கு இருந்து, சுக்கு காபியால சரியாகிருச்சு.

பொன்.முத்துக்குமார் said...

// ‘காலையில் எந்திரிச்சு பல்லை விளக்கிட்டு காபிக்கு பதிலா ரெண்டு டம்ளர் சுடு தண்ணீரைக் குடிச்சுடு’ என்பார்கள். அதனால் என்ன நடக்கும் என்பது தெரியாது. //

காலையில் இயற்கைக்கடன் தீர்ப்பது சுலபமாகும். மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நிறைய தொந்தரவுகளை தவிர்க்கலாம். “நாளைக்கு இருமுறை (இயற்கைக்கடன் தீர்த்தல்)” என்பது நமது பாரம்பரிய ஃபார்முலா ஒன்றின் முதலாவது.

Jaypon , Canada said...

https://youtu.be/8Tb6KywR3y0

இந்த பாட்டி யோகாவால் 98 வயதிலும் எப்படி இருக்காங்க. கட்டுப்பாடான வாழ்க்கைதான் காரணம்.

A.SESHAGIRI said...

மதிப்பிற்குரிய மணிகண்டன் அவர்களுக்கு,சற்றுமுன் இந்த செய்தியை இந்தியன் எஸ்பிரஸில் படித்தேன்.
தமிழ் உள்பட நமது பிராந்திய மொழிகளுக்கான 'UNICODE CONVERTER' முதலில் தயார் செய்த தர்மபுரியை சேர்ந்த இளம் மென் பொருள் என்ஜினீயர் தனது 42 வயதில் மாரடைப்பால் காலமானார் என்று.மிகவும் வருத்தமாக இருக்கிறது.இவரைப்பற்றி தங்களுக்கு ஏதேனும் தெரியுமா?

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/31/man-who-created-code-for-tamil-fonts-perishes-at-42-1765992.html