Jan 28, 2018

யாவரும்

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் புத்தகத்துக்கு முன்பாக மூன்று புத்தகங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு உயிர்மை. ஒன்று காலச்சுவடு. அப்பொழுது ஜீவகரிகாலனிடம் அறிமுகம் இருந்தது. கப்பலில் சரக்கு அனுப்பி வைக்கும் நிறுவனத்தின் ஊழியர். வாசகர். அதற்கு மேல் ஒன்றுமில்லை. சென்னையில் இரண்டொரு முறை பைக்கில் அழைத்துக் கொண்டு சுற்றியிருக்கிறார். வேல்கண்ணன், சாத்தப்பன், கண்ணதாசன், பாலா இளம்பிறையுடன் சேர்ந்து ஒரு பதிப்பகம் தொடங்கப் போவதாகச் சொன்னார். ஆளுக்கு சொற்பப் பணம். அப்பொழுது அவர்களால் அவ்வளவுதான் முடியும். இருபதாயிரம் ரூபாய் இருந்தால் புத்தகம் வெளியே கொண்டு வந்துவிடலாம் என்றார். அப்படித்தான் லிண்ட்சே லோஹன் புத்தகம் வெளியானது. இருபதாயிரம் ரூபாயைப் புரட்டுவதற்கே பெரும் சிரமப்பட்டார்கள். அந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய ஆயிரம் பிரதிகள் விற்றன. அதில் பதிப்பகத்தின் உழைப்பு மிக அதிகம். புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு கரிகாலன் புத்தகக் கண்காட்சியில் கடை கடையாக அலைந்தது நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட நூறு கிலோ உருவம். வியர்த்து விறுவிறுக்க அலைந்தது மனதுக்குள் என்னவோ செய்தது. எத்தனை புத்தகம் எழுதினாலும் இவர்கள் பிரசுரம் நடத்துகிற வரையில் இவர்களிடம்தான் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். 

சுழி மட்டும்தான் லிண்ட்சே லோஹன். அதன்பிறகு பெரிய பங்களிப்பு எதையும் நான் செய்ததில்லை. ஆனால் அவர்களது வெற்றியை மகிழ்வாக உணர முடிகிறது. மெல்ல மெல்ல மேலேறியவர்கள் இந்தச் சில வருடங்களில் தமிழ் பிரசுரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டார்கள். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தனியாக அலுவலகம், நாற்பது தலைப்புகளில் புத்தகங்கள், ஏகப்பட்ட இளம் எழுத்தாளர்கள், புத்தகக் கண்காட்சியில் தனியாக ஸ்டால், சில லட்சங்களில் வியாபாரம் என்று தம் கட்டிவிட்டார்கள். கரிகாலன் தனது பழைய வேலையை விட்டுவிட்டு முழுமையாக பதிப்பக வேலைகளில் இறங்கிவிட்டார். பொருளாதார ரீதியில் பெரும் செல்வாக்கு இல்லையெனிலும் இது மிக முக்கியமான காலகட்டம். தழைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மகிழ்ச்சி.


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்துக்கு ஒரு கடை கிடைத்திருப்பதாகச் சொன்ன போது ‘நஷ்டப்படாம கடையை நடத்திடுங்க...’ என்றேன். அவர்களின் தோளுக்கு நஷ்டம் என்பது மிகப்பெரிய சுமை. கையூன்றிக் கர்ணமடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் பாரம் இறங்காமல் இருப்பது முக்கியம்.  இந்த வருடம் என்னால் புத்தக கண்காட்சிக்குச் செல்ல இயலவில்லை. கடைசி நாளில் கரிகாலனை அழைத்துப் பேசினேன். ‘லாபம்தாங்க..சந்தோஷம்’ என்றார். இந்த உற்சாகம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்களை இயங்க வைக்கும்.

திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு புத்தக மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இளம் வயதில் கிடைக்கக் கூடிய இத்தகைய சிறு சிறு வெற்றிகள்தான் எதிர்காலத்தில் நாம் நிகழ்த்தவிருக்கும் பெரும் சாதனைகளுக்கான படிக்கட்டுகள். யாராவது முன்னேறிக் கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சும்மா விட்டுவிடமாட்டார்கள். ஆயிரம் சச்சரவுகளைக் கிளப்புவார்கள். புரளிகள் மேலேறி வரும். கடந்த சில வருடங்களில் யாவரும் பற்றிய புரளிகளும் கிசுகிசுக்களும் எவ்வளவோ காதுகளில் விழுந்திருக்கின்றன. ஒவ்வோர் அடியையும் எண்ணி அளந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் பேசப்படுகிற புரளிகளில் எதுவுமே உண்மையில்லை என்று தெரியும். ஆனால் ஒவ்வ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் புரிய வைத்துக் கொண்டிருக்க முடியாது. அது அவசியமுமில்லை. கால ஓட்டத்தில் நாம் நட்டு வைத்துவிட்டு ஓடுகின்ற மைல் கற்கள்தான் வரலாறுகளாக நிலைக்குமே தவிர அடுத்தவர்களின் வெற்றுச் சொற்கள் இல்லை. சொற்கள் எதுவுமே யாவரும் குழுமத்தைச் சலனப்படுத்தவில்லை என்பதுதான் பெரும் ஆறுதல். 

‘உங்க பணத்துலதான் பப்ளிகேஷன் நடத்துறோம்ன்னு சொன்னாலும் சொல்வாங்க’ என்று சிரிப்பார். 

‘இது வேறயா? சத்தம் போட்டுச் சொல்லாதீங்க..என் தம்பி கேட்டான்னா சொத்தைப் பிரிக்கச் சொல்லிடுவான்’ என்று பதிலுக்குச் சிரிப்பேன். 

மிகச் சரியாகக் கணக்கு காட்டுவது, ராயல்டி தொகையைக் கொடுத்துவிடுவது என்று சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு யாவரும் வந்து சேர்ந்திருக்கும் தொலைவுக்கு நிறையப் பேர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ரமேஷ் ரக்‌ஷன், கார்த்திக் புகழேந்தி, அகிலா, கவிதைக்காரன் இளங்கோ என்று பெரிய பட்டியல் அது. பட்டியலை என்னால் முழுமைப்படுத்த முடியாது. இவ்வளவு பேர்கள் இவர்களுக்கு ஆதரவாக நிற்பதே பெரிய பலம்தான். 

பெரும் பதிப்பகங்களுக்கு ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் இருப்பார்கள். ஸ்டார் எழுத்தாளர்கள். அவர்களை மட்டுமே தூக்கிப் பிடிப்பார்கள். மற்றவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.  ‘அதை எந்தக் காலத்திலும் செய்துவிடாதீர்கள்’ என்பதுதான் அவர்களிடம் முன்வைக்க விரும்புகிற ஒரே விஷயம். பதிப்பகத்துக்கு ஒவ்வொரு எழுத்தாளனுமே முக்கியம்தான். ஒவ்வொரு வாசகனும் முக்கியம். யார் ஒருவரையும் தனியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சென்னை அற்புதமான ஊர். அர்ப்பணிப்புடன் வேலை செய்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்புக்கேற்ற இடத்தை அது ஒதுக்கித் தந்துவிடும். யாவரும் பதிப்பகத்துக்கும் அதுவொரு இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆனால் இன்னமும் வெகு காலம் இருக்கிறது. செல்ல வேண்டிய தூரமும் வெகு தொலைவு. போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும். அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது. இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

5 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

முழுவதும் படிக்காமல் முந்திரிக்கொட்டையாய் வருவதற்கு வருந்துகிறேன்.


பில்கேட்ஸுக்கு கேட்(Gate) மாதிரி.
உமக்கு கரிகாலனே காவல்.


வளர்க.

சேக்காளி said...

//இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். யாவரும் குழுமம் தொடர்ந்து வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்//

அன்பே சிவம் said...

கொ.ப.செ.
சமூகத்திற்கு வணக்கம்.
தேடுவது தானே கிடைக்கும்.

வா..வா.. யென்றழைத்தாலும் வரவும் தரவும் மறுக்கும்.மாந்தரில் வாராது வந்த வா.மணியைவிடவா இன்னொரு சிட்டுக்குருவி லேகியம் தேவையா நமக்கு....

Saravanan Sekar said...

//எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் சல்லிப்பைசாவுடன் ஒரு தொழிலைத் தொடங்கி முத்திரையைப் பதிப்பது இன்னும் நூறு இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமையும். அதற்காகவே இவர்களை வாழ்த்தத் தோன்றுகிறது. இந்த பாஸிட்ட்டிவ் எனர்ஜியை சமூகத்துக்கு யாராவது எங்கேயாவது விதைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.//

நம்பிக்கையூட்டும் வரிகள் இவை,நன்றி

சேக்காளி said...

//தேடுவது தானே கிடைக்கும்.
வா..வா.. யென்றழைத்தாலும் வரவும் தரவும் மறுக்கும்.மாந்தரில் வாராது வந்த வா.மணியைவிடவா இன்னொரு சிட்டுக்குருவி லேகியம் தேவையா நமக்கு....//
இருக்குறத Copy Paste பண்ணி அதுக்கு "√" குறியை போட்டது ஒரு குத்தம் ன்னா பிப்ரவரி 3ம் தேதிக்குள்ள சாசுடாங்கமா உழுந்து மன்னிப்பு கேட்டுருதேன் அவைத்தலைவரே.