Jan 23, 2018

செங்காயனின் அம்மா

செந்தில் ஒரு வருடம் மூத்தவன். அவனது அப்பாவைப் பார்த்ததில்லை. அம்மாதான் கடும் உழைப்பாளி. அவரிடம் எப்பொழுதுமே பத்து அல்லது இருபது மாடுகளும் எருமைகளும் இருக்கும். மாடுகளை விரட்ட ஒரு குச்சியையும் சோத்துப் போசியையும் எடுத்துக் கொண்டு காலையில் பண்டம்பாடிகளை ஓட்டிச் செல்வார். தினசரி குறிப்பிட்ட நேரத்தில் அவரைப் பார்க்க முடியும். வாய்க்கால் ஓரமாக அவற்றை மேய விட்டு சாயந்திரம் திரும்ப ஓட்டி வருவார். அவருடன் எப்பொழுதும் பேசியதில்லை. ஆனால் செந்தில் நல்ல நண்பன். விடுமுறை தினங்களில் கால்நடைகளை அவன் ஓட்டி வரும் போது என்னையும் அழைத்துக் கொள்வான். அவனிடம் ஒரு மிதி வண்டி இருக்கும். தள்ளியபடியே வாய்க்காலுக்குச் செல்வோம். மேய்ச்சலிலும் பெரிய வேலை இல்லை. காலங்காலமாக மேய்ந்து பழகிய கால்நடைகள் அவை. வெறுமனே மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் போதும். அவை தம் போக்கில் மேய்ந்து கொள்ளும்.

தூக்குப் போசியை அவன் எடுத்து வந்தால் அன்றைய தினம் செந்திலின் அம்மா மேய்ச்சலுக்கு வர மாட்டார் என்று அர்த்தம். ‘மேச்சுட்டு வான்னு அனுப்புச்சு உட்டுருச்சு..சாயந்திரமா கீது வந்தாலும் வரும்’ என்பான்.  ‘வயிறு நம்பியிருக்குதான்னு பார்க்கலைன்னா அம்மாவுக்குத் தூக்கமே வராது’ என்பான். தேர்வு விடுமுறைகளில் ‘நீயும் வர்றியா’ என்பான். டிபன் பாக்ஸில் சோற்றை எடுத்துக் கொண்டு நானும் கிளம்பிவிடுவேன். எங்கள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். அலுவலகத்திலிருந்து அம்மா வீடு திரும்புவதற்குள் வீடு திரும்பிவிட்டால் போதும். பிரச்சினை எதுவுமில்லை. சோத்துப் போசிகளை சைக்கிளில் வைத்துவிட்டு வாய்க்காலில் இறங்குவது, குருவி பிடிப்பது என்று எதையாவது செய்து கொண்டிருப்போம். நெற்கதிர்கள் முற்றுகிற தருணமாக இருந்தால் வயலுக்குள் பறவைகள் வந்து போகும் கால அளவை வைத்து குஞ்சு பொறித்திருப்பதையும் முட்டையிட்டிருப்பதையும் கண்டு பிடித்துவிட முடியும். அவன் அதில் கை தேர்ந்தவனாக இருந்தான். குஞ்சு பொறித்திருந்தால் விட்டுவிடுவோம். முட்டையாக இருந்தால் அவற்றை எடுத்து வந்து சாணத்தில் உருட்டி நெருப்பில் வாட்டி முட்டைகளை சோற்றுக்கு சைட் டிஷ்ஷாக மாற்றித் தின்போம். அதெல்லாம் ஒரு வித்தை.

வயல்காரனோ, குத்தகைக்கு வயல் ஓட்டுகிறவனோ, தண்ணிவாக்கியோ பார்க்காமல் இருந்தால் போதும். இல்லையென்றால் கத்துவார்கள். ‘நெல்லை முதுச்சீங்கன்னா இந்தப் பக்கமே அண்ட உடாம தொரத்திடுவோம்’ என்ற வரிகளுக்குப் பின்னால் இத்யாதி இத்யாதி வசையை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் எதிர்ப்புகளை மீறாமல் சந்தோஷம் எங்கே இருக்கிறது? 

செந்தில் அவனது அம்மாவுக்கு பயப்படுவான். காலங்காலமாக பண்டம்பாடிகளை மேய்த்ததைத் தவிர அதுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்குது என்பதை அவன் அப்பொழுதே உணர்ந்திருந்தான். அந்த உணர்வினால் வரக் கூடிய மரியாதை கலந்த பயம் அது. உண்மைதான். மழையும் வெயிலும் அந்தம்மாவை நிறுத்தியதே இல்லை. ‘அம்மா திட்டும்’ ‘அம்மா அடிக்கும்’ என்றுதான் எதற்கெடுத்தாலும் சொல்வான். 

வயல்வெளிக்குள் பாம்புகள் அதிகம். பெரும்பாலும் தண்ணீர் பாம்புகளாக இருக்கும் அல்லது பச்சைப் பாம்புகள். விஷமற்றவை. நான் பயந்து நடுங்குவேன். அவன் அவற்றை இலாவகமாகப் பிடித்து விளையாடுவான். ஒரு முறை விஷமில்லாத ஒரு பாம்பை என் மீதாக வீச தடுமாறி வரப்பிலிருந்து சேற்றுக்குள் விழுந்தேன். நான் விழுந்த நேரம் கீழேயும் ஒரு பாம்பு. அது வழுவழுவென வழுக்கிச் செல்ல சில கணங்கள் மூர்ச்சையற்றுக் கிடந்தேன். எழுப்பிவிட்டான். ‘செத்தே போய்ட்டேன்னு நெனச்சேன்’ என்றேன். அவன் அதிர அதிரச் சிரித்தான். எனக்கு செமக் கடுப்பு. அவன் ஆள் செவச் செவ என்றிருப்பான். ‘இந்தச் செங்காயன் மட்டும் பயப்படுவே மாட்டேங்குறான்’ என்று நினைத்துக் கொண்டேன். 

வயலும் வாய்க்காலும் அவனுக்கு அத்துப்படி. அதிலேயேதான் பிறந்து வளர்ந்திருக்கிறான். இப்படியான செயல்கள் எல்லாம் அவனை ஹீரோவாகவே வைத்திருந்தன. வயது கூடக் கூட என்னிடமிருந்த குழந்தைமை காணாமல் போகத் தொடங்கியது. அவன் அழைக்கும் போதெல்லாம் ‘இல்ல செந்திலு..நான் வரல’ என்று மறுக்க மறுக்க அவனும் நானுமாக விலகிக் கொண்டிருந்தோம். கல்லூரிக்காலங்களில் எதிர்ப்படும் போது சிரிப்பதும் ‘நல்லாருக்கியா?’ என்பதோடும் முடிந்துவிடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகப் பார்த்த போது வேலையைப் பற்றியெல்லாம் விசாரித்தான். யாரிடமும் சம்பளத்தைச் சொல்ல மாட்டேன். சொல்லக் கூடாது என்றில்லை. அவன் கேட்டான். சொன்னேன். ‘நல்லா இருந்தீன்னா செரி’என்றான். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு கிளம்பினான். 

இப்பொழுதும் அவனது அம்மாதான் பண்டபாடிகளை பார்த்துக் கொள்கிறார். கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது மதியம் இரண்டு மணி வாக்கில்தான் கால்நடைகளை அந்தம்மா வாய்க்காலுக்கு ஓட்டிச் சென்றார். ‘இந்நேரத்துக்கு அப்புறம் போறீங்க...எப்ப மேச்சுட்டு எப்ப வருவீங்க?’ என்றேன். கேட்டிருக்கக் கூடாது. கேட்டுவிட்டேன். ‘என்ன மேச்சு என்ன ஆவுது கண்ணு’ என்றார். ‘உன்னையைப் பார்க்கும் போதெல்லாம் பேசோணும்ன்னு நெனப்பு வரும்..நான் தான் பேசறதில்ல’ என்று சொல்லிவிட்டு தனக்குத் தானே நிறையப் பேசினார். அவருடைய அருகாமையிலேயேதான் நடந்தேன். ஆனால் அவர் பேசுவது காதுகளில் விழவேயில்லை. ‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்கவும் தைரியமில்லை. தனக்குள்ளாக புலம்பியபடியே நடந்தார். 

செந்தில் இப்போது இல்லை. இறந்துவிட்டான்.

கட்டுத்தறியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்து இறந்து போனான். என்ன காரணம் என்றெல்லாம் விசாரிக்கவில்லை. விசாரித்து என்ன ஆகப் போகிறது? அவனுக்குத் திருமணமும் ஆகியிருக்கவில்லை. காய்ச்சல் இருந்திருக்கும் போலிருக்கிறது. அடுத்த நாள் சாணம் வழித்து சுத்தம் செய்யும் போது கட்டுத்தறியிலேயே இறந்து கிடந்திருக்கிறான். 

எல்லாமே சரியாகப் போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பார்க்கவே இல்லாத ஒன்று மொத்தத்தையும் புரட்டிப் போட்டு தொடக்கப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போய்விடுகிறது. கனவுகளும் கோட்டைகளும் மண்மேடாகி அதன் மீது மனிதர்களை அமர வைத்துவிடுகின்றன. உச்சியில் இருப்பதுமாக கைக்கு எட்டாததுமாக எதுவுமே வேண்டாம். ஓடுகிறபடியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தால் போதும் என்று சில மனிதர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள். 

‘ஒத்த ஆளும் போய்ச் சேர்ந்துட்டான்’ என்று அந்தம்மா சொன்னது காதில் விழுந்தது. அவரைக் கிளறிவிட்டுவிட்டோமோ எனச் சங்கடமாக இருந்தது. புடவைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார். ‘நல்லா இரு சாமீ’ என்று சொல்லிவிட்டு தனக்குத்தானே பேசியபடியே நடந்தார். காலங்காலமாக அவர் நடந்து கொண்டிருக்கும் அதே பாதை. பண்டம்பாடிகளை மேய்த்ததைத் தவிர அதுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்குது என்று செந்தில் பேசியது நினைவில் வந்து போனது. பேச எதுவுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டேன். பண்டம்பாடிகள் மெல்ல நடந்து கொண்டிருந்தன. பல மனிதர்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

5 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மனச கனமாக்கிருச்சு.

வெங்கி said...

”நல்லா இரு சாமீ” - கண்களில் நீர்.

சேக்காளி said...

//ஒத்த ஆளும் போய்ச் சேர்ந்துட்டான்’ என்று அந்தம்மா சொன்னது காதில் விழுந்தது//

Raja said...

என்ன வரிசையா சோகமாவே போய்ட்டு இருக்கு.

இப்படி வாழ்க்கையில் கிடைக்கும் பாடங்கள் நிறைய. அவற்றை அள்ளிக்கொண்டு நடக்க வேண்டும் என்று ஓரிரு நாட்கள் மனசு கேட்கும். பிறகு வழக்கமான ஓட்டத்தில் நாமும் ஓட தொடங்கி விடுகிறோம்.

Vinoth Subramanian said...

Painful post.