Jan 18, 2018

பலூன் உடைவது போல

வாழ்நாளில் இவ்வளவு கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டதேயில்லை. அழுத்தித் தள்ளிவிட்டார்கள். மூச்சு முட்டி, சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இன்னமும் முடிந்தபாடில்லை. மாலை ஏழரை மணிக்கு ஒரு மின்னஞ்சல் வரும். நிறுவனத்தின் பெருந்தலைகள் எல்லோரையும் மின்னஞ்சலில் வைத்து ‘இன்றுக்குள் முடித்துவிட முடியுமா?’ என்று கேட்டு எழுதியிருப்பான் ஒருத்தன். எட்டு மணி நேர வேலை அது. இப்படித்தான் நாட்களைத் தின்றார்கள். 

கடந்த வாரத்தில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தோம். காலையில் பத்து மணிக்கு அழைத்தார்கள். பக்கமாகச் சென்றாகிவிட்டது. ‘இதெல்லாம் பிரச்சினை..பார்க்க முடியுமா?’ என்றார்கள். சனிக்கிழமையும் முடிந்து போனது. ஞாயிறும் முடிந்து போனது. பொங்கலுமில்லை. போகியும் இல்லை. புத்தகக் கண்காட்சிக்குக் கூடச் செல்ல முடியவில்லை. ஒரே அங்கலாய்ப்புதான். முதலில் திணறலாக இருந்தது. உள்ளே இருக்கும் அழுத்தம், உள்ளரசியல் இன்னபிற கச்சடா.

வேலைதானே? செய்து கொடுப்போம் என நினைக்க நினைக்க என்னையுமறியாமல் சிக்கிக் கொள்ளத் தொடங்கியிருந்தேன். காலையில் எழுந்தவுடன் ‘ஆபிஸிலிருந்து ஏதாச்சும் மெயில் வந்திருக்குமா’ என்கிறளவுக்குச் சிக்கியிருந்தேன். ஆறு மணி நேரத் தூக்கம். பிற வேலைகள் நியூரான்களுக்குள் ஓரங்கட்டப்பட்டு சிந்தனை முழுவதும் அலுவலகப் பணியிலேயே இருந்தது. எல்லோருமே இப்படியான தருணங்களை எதிர்கொண்டிருக்கக் கூடும். இன்னமும் ஒன்றிரண்டு மாதங்களுக்காவது இந்த வேலை இப்படித்தான் இருக்கும். நானும் அப்படியே ஓடிக் கொண்டிருந்திருக்கக் கூடும். 

எங்கள் வீதியில் நஞ்சுண்டா என்றொருவர் குடியிருந்தார். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறவர். சமீபத்தில் இரண்டு வீதிகள் தள்ளி இடம் வாங்கி புதியதாக வீடு கட்டிக் குடி போயிருக்கிறார்கள். 60x40 இடத்தில் வீடு. ஒரு வருடம் கூட முழுமையாக முடிந்திருக்காது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்திருக்கிறார். மகன் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அப்பனும் மகனுமாக மதியவாக்கில் ஏரிக்குச் சென்றிருக்கிறார்கள். இவர் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க பொடியன் நீருக்குள் இறங்கிவிட்டான். 

மாநகராட்சிக்காரர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்த ஏரி அது. அடியில் இன்னும் மண் இறுகவில்லை போலிருக்கிறது. பொடியன் தண்ணீருக்குள் திணறுவதைப் பார்த்தவர் ஓடி வந்து நீருக்குள் இறங்கி பையனை மேலே தூக்கிவிட்டு அவர் சிக்கிக் கொண்டார். பையன் கத்திக் கதறிப் பார்க்க ஓடி வந்த யாராலும் காப்பாற்ற முடியவில்லை. மகனுக்காக உயிரையே கொடுத்துவிட்டார் மனுஷன். தீயணைப்பு வீரர்கள் வந்து மேலே எடுத்தார்களாம்.

‘எனக்காக அப்பா இறந்துட்டார்’ என்று பையன் அழுது கொண்டேயிருந்ததாகச் சொன்னார்கள். இதுதான் உள்ளுக்குள்ளேயே உறுத்திக் கொண்டேயிருந்தது. 

இருக்கும் கொஞ்ச நஞ்ச வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதில்லை. வாழ்வதற்கான ஒத்தாசைதான் வேலையும் சம்பளமும். அதுவே வாழ்க்கை என்றால் வாழ்நாளில் கணிசமான நாட்களையும் வருடங்களையும் இழந்துவிடக் கூடும். உடல்நிலையைக் கெடுத்து மனநிலையைக் கெடுத்து எல்லாவற்றையும் அமெரிக்காக்காரனுக்கு அர்ப்பணிக்க வேண்டியதில்லை. பணிச்சுமை இருக்கும்தான். ஆனால் அது எந்தவிதத்திலும் நமது செயல்பாடுகளை பாதித்து நம் உடலைக் கெடுத்துவிடக் கூடாது.

கடந்த சில நாட்களாக யோசித்து அழுந்தச் சூழ்ந்திருந்த வேலையின் சிக்கல்களை நீக்குவதற்கு மேலும் சில நாட்கள் ஆகிவிட்டன. அவர்கள் மீட்டிங் வைப்பார்கள். அழுத்துவார்கள். கழுத்தைப் பிடிப்பார்கள். எல்லாவற்றையும் சமாளித்து நம்முடைய தினசரி செயல்பாடுகளை மெல்ல மீட்டெடுப்பதுதான் விடுபடுதலுக்கான வழி. அதிகபட்சமாக என்ன நடக்கும்? அதற்கு பயந்து நம்மை அடகு வைத்துவிட வேண்டியதில்லை. எழுதுவதும் வாசிப்பதும் எப்பொழுதுமே வடிகாலாக இருந்திருக்கின்றன. ஆசுவாசம். அதை விட்டிருக்கிறேன். குழந்தையுடன் ஆத்ர்மார்த்தமாக பேச வழியில்லாமல் திணறியிருக்கிறேன். அலுவலகத்தின் ஏசி அறையைத் தாண்டி உலகம் மிகப் பெரிது. அதை விட்டுவிட்டு அமெரிக்காவாழ் மிஸ்ராக்களுக்குக்கும், அகர்வால்களுக்குமாக பினாத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

கடந்த சில நாட்களாக மணீஷூம் அவனது அப்பாவுமாகவே நினைவுகளில் ஊசலாடுகிறார்கள். பலூன் உடைவது போலத்தான். இல்லையா? எல்லாமும் சில கணங்களில் முடிந்துவிடுகிறது.

வேலையை ஓரங்கட்டிவிட்டு நேற்று அருவி படம் பார்த்தேன். அமேசான் ப்ரைமில் இருக்கிறது. வாசிப்பதற்காக சில புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன். எழுதத் தொடங்கியிருக்கிறேன். வேலை ஒரு பக்கம். நாம் நாமாகவே இருக்க வேண்டும். பல்பு எரிவது போல இதை உணர்ந்து கொள்ள ஒரு நஞ்சுண்டாவின் மரணத்தை நேரில் பார்க்க வேண்டியிருந்திருக்கிறது. கொடுமை.

13 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// மணீஷூம் அவனது அப்பாவுமாகவே //
மணீஷ் யார்? என கட்டுரையில் குறிப்பிட்டது போல் தெரியவில்லை யே.

raja said...

இறந்து போன நஞ்சுண்டாவின் மகன்தான் மணீஷ்.

raja said...

மிக சிறந்த கட்டுரை. 9 to 5 வேலை பார்ப்பதை போல் கொடுமையானது எதுவும் இல்லை. அரக்கத்தனமான செயல்.

இந்த உலகில் கண்டிப்பாக நடக்க போவது ஒன்று உண்டென்றால் அது நம் மரணமே. வெளி நாடுகளில் மின் தகனத்தில் (cremation process) சாம்பலை அல்லது எலும்புகளை பொடி ஆக்கி ஒரு டப்பாவில் பெயர் எழுதி கொடுத்து விடுகிறார்கள். அது பார்ப்பதற்கு வீடுகளில் சமையலறையில் இருக்கும் ஹார்லிக்ஸ் டப்பா மாதிரி இருக்கிறது. அந்த பவுடருக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்!!


தெரிந்தும் நாம் வாழும் முறை மிகவும் வருந்தத்தக்கது.

Anonymous said...

Raja...// மிக சிறந்த கட்டுரை. 9 to 5 வேலை பார்ப்பதை போல் கொடுமையானது எதுவும் இல்லை. அரக்கத்தனமான செயல்.

This essay is not about 9 to 5 work..
its about morning 6 to night 12 work -> for 7 days a week throughout a year including national holidays and personal leaves....

Everybody will be Okay to work from 9 to 5....for 5 days a week throughout a year excluding national holidays and personal leaves

சேக்காளி said...

//இறந்து போன நஞ்சுண்டாவின் மகன்தான் மணீஷ்.//
பதிவில் எந்த இடத்தில் வருகிறது? என கொஞ்சம் குறிப்பிட்டு சொல்லுங்களேன் ராஜா.

Bala said...

"அதிகபட்சமாக என்ன நடக்கும்? அதற்கு பயந்து நம்மை அடகு வைத்துவிட வேண்டியதில்லை."

இந்த கட்டுரையின் மிக முக்கியமான வரி இதுதான்.

tirupurashok said...

அந்தச் சிறுவனின் துயரம், மனது ஒரு கொடும் பேய்.

Saravanan Sekar said...

ஆஃபிஸில் work pressure அப்படினு நீங்க சொன்னபோது இவ்வளவு அழுத்தம் என நான் உணரவில்லைங்க. எது எப்படியோ அதிலிருந்து விடுபட்ட மனநிலைக்கு வந்தால் நலம்.. எழுத்திற்கு விட்ட சிறிய இடைவெளியை முடித்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

பணிச்சுமை உடலுக்கு முன்பாக மனதின் நலத்தை பதித்து விடுகிறது. இந்த அழுத்தத்தை ஏதேனும் ஒரு ஆக்கபூர்வமான வகையில் விட்டொழிக்கும் பழக்கத்தை (குடி,புகை, போதை போன்றவை தவிர்த்து ) கண்டடைவது என்பது முன்னெப்போதும் இருந்ததை விட முக்கியமானதாக ஆகி விட்டது.

அன்புடன், சரவணன்

raja said...

சேக்காளி,

மகனை காப்பாற்ற இறந்த தந்தை இந்த பதிவில் யார்? நஞ்சுண்டா.

கடந்த சில நாட்களாக மணீஷூம் அவனது அப்பாவுமாகவே நினைவுகளில் ஊசலாடுகிறார்கள். பலூன் உடைவது போலத்தான். இல்லையா? எல்லாமும் சில கணங்களில் முடிந்துவிடுகிறது.

பல்பு எரிவது போல இதை உணர்ந்து கொள்ள ஒரு நஞ்சுண்டாவின் மரணத்தை நேரில் பார்க்க வேண்டியிருந்திருக்கிறது.

இப்போது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

raja said...

Anonymous,

9 to 5 பற்றித்தான் நான் பேசுகிறேன். நமக்கு பிடித்த விஷயத்தை செய்வதானால் நேரத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பணத்துக்காக செய்வது ஒரு மணி நேரமாக இருந்தாலும் சரி, மிகவும் பரிதாபத்திற்குரியது.

கேட்டால் எல்லாவற்றையும் செட்டில் செய்ய வேண்டியுள்ளது என்று நாம் நெனைக்கிறோம். இந்த தடவை செட்டில் செய்து விட்டு அடுத்த தடவை பிறந்து நமக்கு பிடித்த விஷயத்தை செய்யலாம் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு ஒரே ஒரு முறைதானே, எந்த சூழ்நிலையிலும் இன்னொரு முறை இல்லையே!!

குடும்பத்தை பற்றி கவலைப்பட்டு வேலை செய்து செட்டில் பண்ணுவதில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இன்று நான் நாளை நீ என்றுதானே அவர்களுக்கும் பிறப்பு இறப்பு உள்ளது. என்ன செய்ய?

மற்றொன்று, இந்த 9 TO 5 ஒரு 50,60 வருடங்களாக தானே நடைமுறையில் உள்ளது. யாரோ ஒருவர் கொண்டு வந்தார், நாம் பின் பற்றுகிறோம். அதற்கு முன்னரும் மக்கள் வாழாமல் போய் விட வில்லையே. இன்று நாம் இந்த செக்கு மாட்டு முறையை மாற்றினால் அதை மற்றவர்கள் நாளை பின் பற்றுவார்கள்.

ஆனால் இங்கு பிரச்சனை மற்றவர் இந்த மாற்றத்தை கொண்டு வர நாம் காத்து கொண்டு இருப்பதுதான்!!

Vinoth Subramanian said...

feel pity for that family.

சேக்காளி said...

//பல்பு எரிவது போல இதை உணர்ந்து கொள்ள ஒரு நஞ்சுண்டாவின் மரணத்தை நேரில் பார்க்க வேண்டியிருந்திருக்கிறது//
பட்டனை தட்டினால் எரியும் பல்பு போல் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
என்ன செய்ய?. இதோடு முடித்துக் கொண்டால் தான் கச்சிதமாக எடிட் செய்யப் பட்ட வெற்றிப்படத்தின் முடிவு போல் இருக்கும்.

கலியபெருமாள் புதுச்சேரி said...

என்னதான் பிடித்த வேலையாக இருந்தாலும் எந்திரத்திற்குக் கூட ஓய்வு தேவை.