Jan 1, 2018

இனி வரும் காலம்..

2018 ஆம் ஆண்டின் தொடக்கம் அதன் அக்காக்காரி 2017ன் தொடக்கத்தைப் போல இல்லை. பட்டாசுச் சத்தமே கேட்கவில்லை. ஒருவேளை நம் காதுதான் செவிடாகிவிட்டதோ என்றுதான் தோன்றியது. காலையில் எட்டு மணிக்கு நகரத்தின் பல இடங்களிலும் சுற்றி வந்து பார்த்தாலும் சூழல் அப்படித்தான் இருக்கிறது. குப்பை எதுவுமில்லை. இங்கு மட்டும்தான் அப்படியா என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் பார்த்தால் கூட கடந்த வருடத்தில்தான் மிகப்பெரிய வேதனைகளையும் துன்பங்களையும் சந்தித்ததாக நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். உற்சாகத்தை வடியச் செய்ததில் 2017க்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கக் கூடும். 

எப்படியோ போகட்டும். முடிந்த வருடம் முடிந்ததுவிட்டது.

2018 ஐ வரவேற்க வேண்டுமென்பதில் வெகு தீவிரமாக இருந்தேன். சேலம் இரும்பாலைக்குச் செல்லும் சிக்னலில் நேற்று ஒரு சிறுவன் பலூன் விற்றுக் கொண்டிருந்தான். எட்டு வயதுக்குள் இருக்கும். ஒவ்வொரு பலூனும் பத்து ரூபாய். அந்தச் சிறுவனைப் பார்க்கும் வரைக்கும் பத்து மணிக்கு முன்பாக பெங்களூருவை அடைந்து பிரிகேட் சாலைக்குச் செல்ல வேண்டும் என்ற நினைப்பில் வந்து கொண்டிருந்தேன். பொதுவாக சனிக்கிழமை இரவுகளிலேயே யுவசக்தியால் நிரம்பிக் கிடக்கும் அந்தச் சாலை புத்தாண்டுத் துவக்கத்தில் கேட்கவே வேண்டியதில்லை. போதை தலைக்கேற இறுகிய உடைகளிலிருந்து உடல் பிதுங்க நடனமாடுவார்கள். வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம் என்றிருந்தேன். சிக்னல் சிறுவனிடம் இரண்டு பலூன்களை வாங்கிக் கொண்டோம். அவனைப் பார்த்த பிறகு பிரிகேட் சாலைக்குச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் வடிந்து போனது. அவனுக்கும்தான் விடிந்தால் புத்தாண்டு. வீட்டுக்கு வந்தவுடன் உறங்கிப் போனேன்.

ஒவ்வோர் ஆண்டும் முடிந்தவுடன் திரும்பிப் பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள், வழக்கமான மாணவர்களுடன் புதிதாக இணைந்திருக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவி, அவர்களுக்கான ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உயிர் காக்கும் மருத்துவ உதவிகள் என்று அறக்கட்டளையிலிருந்து சில முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறோம். இன்னமும் எவ்வளவோ திட்டங்கள் இருக்கின்றன. கனவுகளும்தான். காலமும் கடவுளும்தான் துணை இருக்க வேண்டும்.

சில மனிதர்களைச் சந்திக்கும் போது மனம் உண்மையிலேயே கசங்கிப் போகிறது. ‘எல்லோரும் நல்லா இருக்காங்க’ என்பதெல்லாம் ஒருவிதமான மேம்போக்கான வாதம். நம் வட்டத்திற்குள் இருந்து நாமாகவே கற்பிதம் செய்து கொள்வது. இங்கு மனித வாழ்க்கை மிகக் குரூரரமானது. ஊர்ப்பக்கம் சொல்வார்கள். ‘ஒரு பூ ஏற மிதிச்சுட்ட’ என்று. கொடுத்து வைத்துப் பிறந்தவர்கள் என்று அர்த்தம். நீங்களும் நானும் கொடுத்து வைத்துப் பிறந்தவர்கள். வாழ்க்கையின் கசங்கல்களுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிற மனிதர்கள் புவியின் ஏதோவொரு விளிம்பில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அத்தகைய மனிதர்களை எதிர்கொள்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 

‘ரேஷன் அரிசி வந்துட்டு இருக்கிறதால பரவாயில்லைங்க’ என்று ஒரு பெண்மணி அழும் போது அதற்கு ஏதேனும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட கணவரைக் கட்டிலில் கட்டி வைத்து கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரிசிதான் ஒரு குடும்பத்தின் பட்டினியைப் போக்குகிறது என்பதை சில வருடங்களுக்கு முன்பாக யாரேனும் சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். ‘மானியத்தை ஒழிப்போம்’ என்று பேசுவது வளர்ச்சி என நினைத்திருந்தேன். அப்படி ஒழிக்கப்படும் மானியம் எத்தனையோ குடும்பங்களில் நேரடி பாதிப்பை உண்டாக்கும் என்பதை கண்கூடாகப் பார்க்க நேர்கிறது.

நம்மைச் சுற்றிலும் நடக்கிற ஒவ்வொரு காரியத்திலும் ஏதோவொரு நுண்ணரசியல் இருக்கிறது. யாரையோ மேலே தூக்கிப் பிடித்து யாரையோ கால்களின் கீழாகப் போட்டு நசுக்கிறார்கள். டைனிங் டேபிளில் அமர்ந்து தேநீரை உறிஞ்சபடியே ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்று டார்வினைக் கையைப் பிடித்து இழுத்து தக்கன தப்பிப் பிழைக்கும் என்றும் உலகம் அப்படித்தான் என்றும் நா கூசாமல் பேசுகிறோம். சமூகப் பொருளாதாரத்தின் ஆழமான சிக்கல்களைப் பேசாமல் எல்லாவற்றையும் மேம்போக்காக கீறிவிட்டுச் சென்று கொண்டேயிருக்கும் ஒரு சமூகத்தை தொழில்நுட்பம் மிக இலாவகமாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே 2017லிலும் நிறையச் செய்திகளைத் தொட்டுவிட்டு மறந்த சமூகம்தான் நம்முடையது. வெறுமனே கவன ஈர்ப்புப் போராளிகளை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறோம். எல்லாவற்றையும் எல்லோருக்கும் அறிவித்துவிட எத்தனிக்கும் மனம். எத்தனை லைக், எத்தனை ஷேர், ஃபாலோயர்ஸ், ரிட்வீட் என்று எண்ணிக்கை சார்ந்த கவனத்துக்காக ஏங்குகிற மனம். நடித்து, போலியாக பிரஸ்தாபித்து கவனத்தை ஈர்க்கும் மனநிலை. எதைப்பற்றியும் கவலையில்லாமல் சகமனிதர்களிடம் அற்பக் காரணங்களுக்காக வன்மத்தையும் கோபத்தையும் கொட்டிக் கிழிக்கும் உபாயங்கள். 

யோசித்துப் பார்த்தால் பயமில்லாமல் இல்லை. 

உலகத்தின் இயல்பான வர்ணங்களையும் அதன் ஆழ பரிமாணங்களையும் புரிந்து கொள்கிற மனநிலை ஒவ்வொருவருக்கும் வாய்க்கட்டும். எதிர்வரும் ஆண்டில் எதிர்பார்ப்பு என்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் போது பெருத்த ஏமாற்றங்களாகிவிடும். எது குறித்தும் எந்த எதிர்பார்ப்புமில்லை. உலகம் அதன் போக்கில் இயங்கட்டும். அவரவர் அவரவருக்கான அர்ப்பணிப்புடன் பொறுப்புணர்ந்து செயல்பட புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆசைப்படும் அத்தனையும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஆசைப்படுகிற ஒவ்வொன்றிலும் சக மனிதனுக்கு எள்முனையளவு கூட துன்பமும் வலியும் நேராதிருக்கட்டும்.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

kals said...

உங்கள் கட்டுரைகளை வாசிக்கும் போதெல்லாம், "நீ இன்னும் சுயநலமான வாழ்வை தான் வாழ்ந்து வருகிறாய்" என்னும் கேள்வியை எனக்குள் ஒலிக்க செய்து விடுகிறீர்கள் மணி.

Suresh said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

=ஆசைப்படுகிற ஒவ்வொன்றிலும் சக மனிதனுக்கு எள்முனையளவு கூட துன்பமும் வலியும் நேராதிருக்கட்டும்=
மணி,இது தான் மணி மணியான ஆங்கில புத்தாண்டு வாழ்த்து.
வாழ்க வளமுடன்

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

2017 ல் சராசரி ஆக # நாள் ஒன்று பதிவு ஒன்று # போல இவ்வாண்டும் அமையட்டுமாக.
வாழ்க வளமுடன்

Selvaraj said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முனைவர் அ.கோவிந்தராஜூ said...

"ஆசைப்படும் அத்தனையும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஆசைப்படுகிற ஒவ்வொன்றிலும் சக மனிதனுக்கு எள்முனையளவு கூட துன்பமும் வலியும் நேராதிருக்கட்டும்."
இந்த விழிப்புணர்வை இறைவன் எல்லோருக்கும் வழங்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துகளுடன்,
இனியன்