Dec 8, 2017

ஊட்டிக்கு வருகிறீர்களா?

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனை சில மாதங்களுக்கு முன்பாகச் சந்தித்த போது ‘ஊட்டியில் ஃபிலிம் பெஸ்டிவல் நடத்துறோம்..’என்றார். ஊட்டியில் இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதெல்லாம் சாமானியக் காரியமில்லை. ஆனால் தம் கட்டிவிட்டார்கள். இன்று தொடங்குகிறது. 127 குறும்படங்களை மூன்று நாட்களுக்குத் திரையிடுகிறார்கள். மிஷ்கின், சசி, லிங்குசாமி, பிரசன்ன வித்தனகே உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா, பவா செல்லதுரை உள்ளிட்ட எழுத்தாளர்கள், அஜயன் பாலா, லட்சுமி சரவணக்குமார், லீனா மணிமேகலை, ராஜு முருகன் போன்ற திரைப்படங்களில் பணியாற்றும் எழுத்தாளர்கள் என நிறைய முக்கியமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். நாளைக்குச் சென்று சில படங்களையாவது பார்த்து வரலாம் என்றிருக்கிறேன். 

எனக்கு ஊட்டி மீது தீராக் காதல். தூர்தர்ஷன் செய்திகளில் ஷோபனா ரவியும், ஃபாத்திமாபாபுவும் உதகமண்டலத்தில் கொடைக்கானலைவிட வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன். என்ன இருந்தாலும் நமக்கு பக்கத்து ஊர் அல்லவா என்கிற பாசம் அது. எங்கள் ஊரிலிருந்து ஊட்டி பக்கம்தான். ஒன்றரை மணி நேரத்தில் அடிவாரமான மேட்டுப்பாளையத்துக்குச் சென்றுவிடலாம். பிரதான சாலையில் நின்று பார்த்தால் கூட மலைகளின் அரசி தெரிவாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது முதன்முறையாக அழைத்துச் சென்றார்கள். இன்பச் சுற்றுலா அது. பள்ளியிலிருந்து ஒரு பேருந்து ஏற்பாடு செய்து அமர இடமில்லாத மாணவர்களுக்காக நடுவில் மர பெஞ்சுகளை நிறுத்தி கம்பியில் இறுகக் கட்டி அடைத்து அழைத்துச் சென்றார்கள்.

வாழ்க்கையில் அனுபவித்தறியாத அந்தக் குளிரில் தறிகெட்ட கழுதைகளாகக் குதித்தோம். அதில் ஒரு ஆகாவழி இருந்தான். பேருந்து கிளம்பியதிலிருந்தே கன சேட்டை. ஆசிரியர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஊட்டியில் இறங்கியவுடன் ஒரு பூங்காவின் இறக்கமான பகுதியில் ஓடியவன் நிற்க முடியாமல் ஓடி கம்பி வலையில் மோதி விழுந்தான். கம்பி வேலியின் முனை கண் இமையைக் கிழித்துத் தொங்கவிட்டிருந்தது. முகமெல்லாம் இரத்தம். ஒரே கூச்சல். ஆசிரியர்கள் அவனைத் தூக்கிச் சென்றார்கள். உடனடியாக கோவையில் சிறப்பு சிகிச்சையளிக்க வேண்டும் என்று சொன்னதாகச் சொல்லி கார் ஒன்றை வாடகைக்குப் பிடித்து கோவைக்குத் தூக்கிச் சென்றார்கள். கொண்டு வந்திருந்த சோத்து மூட்டையைப் பிரித்துத் தின்றுவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பினோம். அதன் பிறகு பல வருடங்களுக்கு ஊட்டியுடன் அதிகப் பரிச்சயமில்லை. ஜெயமோகன் நடத்திய நித்யா கவிதையரங்குக்காகச் சென்றிருக்கிறேன்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஊட்டியில் பாலநந்தகுமார் செய்கிறார். ஊட்டி என்பது வெறுமனே சுற்றுலாத்தலம் என்கிற பிம்பத்தைத் தாண்டி இலக்கிய நிகழ்வுகளை நடத்துவது, திரைப்படவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என பாலாவும் அவரது நண்பர்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊட்டி மாதிரியான ஊர்களில் சிரமப்பட்டு நடத்தப்படுகிற இலக்கிய நிகழ்வுகள், திரை நிகழ்வுகள் மிகுந்த கவனம் பெற வேண்டியது அவசியம். இத்தகைய நிகழ்வுகள் பரவலாக ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்படுவதுதான் அறிவார்ந்த தளத்துக்கு பெருவாரியான மக்களை இழுத்து வரும்.

ஏழு கோடி தமிழர்கள் இருக்கிறோம். எந்தவொரு புத்தகமும் ஐநூறு பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படுவதில்லை. தீவிர இலக்கியப் புத்தகங்களை விடுங்கள்.  உடல்நலம் சார்ந்த புத்தகங்களுக்கும் பணம் சார்ந்த புத்தகங்களுக்கும் இருக்கக் கூடிய ஆதரவு பிற எந்தத் துறை சார்ந்த புத்தகங்களுக்கும் இருப்பதில்லை. அடிப்படையான காரணம்- பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு நம்மிடமில்லை. நாம் வாசித்தால் நம் பிள்ளைகள் வாசிப்பார்கள். நாமே வாசிப்பதில்லை. அடுத்த தலைமுறை எப்படி வாசிக்கும்?

‘கேரளாவில் மட்டும் புக் விக்குது..இங்க யாருமே படிக்கிறதில்லை’ என்று புலம்பினால் மட்டும் என்ன மாற்றம் நிகழும்? சமூக அளவில் விரிவான அளவில் அதற்கான களங்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இப்பொழுதுதான் புத்தகக் காட்சிகள் பரவலாக நடத்தப்படுகின்றன. திரைப்பட விழாக்களுக்கான தேவையும் நிறைய இருக்கிறது.

நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள் முதலானவை குறித்தான நிகழ்வுகள், உரையாடல்கள் நம் அன்றாட உரையாடல்களில்- நண்பர்களுடனான உரையாடல்கள், குடும்ப உரையாடல்கள்- என சகல இடங்களிலும் இடம் பெறும் போது நம் சமூகத்தின் பக்குவத்தன்மை இன்னுமொருபடி மேலே உயரும். வெறுமனே கூச்சலும் உணர்ச்சிவசப்படுதலுமாகத்தானே நம் பெரும்பான்மைச் சமூகம் இருக்கிறது? படித்தவர்களே அப்படித்தான் இருக்க்கிறார்கள். சக மனிதர்களிடம் எப்படிப் பேசுவது என்கிற பக்குவத்தன்மை கூட இல்லாதவர்களை அத்தனை இடங்களிலும் பார்க்க முடிகிறது. 

நேற்று ஒரு நண்பன் அழைத்திருந்தான். வெகு அணுக்கமான பள்ளித் தோழன். பேசிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அநேகமாக பத்து வருடங்கள். பெங்களூரில்தான் இருக்கிறான். அவனுடைய எண் என்னிடமில்லை. அவன் அழைத்த போது அழைப்பைத் தவறவிட்டிருந்தேன். இன்று காலையில் அழைத்து ‘கூப்பிட்டிருந்தியாடா...என்ன அதிசயம்?’ என்றேன். ‘இன்னொருத்தனுக்கு பண்ண வேண்டியது..தெரியாம உன்னைக் கூப்பிட்டுட்டேன்’ என்றான். அதன் பிறகு என்ன பேசுவது?

எனக்கு வெகு ஆச்சரியம். ‘சும்மா பேசலாம்ன்னு கூப்பிட்டேன்’ என்று சொல்லி சக மனிதனை மகிழ்வூட்டுகிற நாசூக்குத் தன்மையைக் கூடவா இழந்துவிட்டோம்? அப்படி அவன் சொல்லியிருந்தால் பழையதை எல்லாம் கிளறி எவ்வளவோ பேசியிருப்பேன். ‘சரிடா பார்க்கலாம்’ என்று துண்டித்துவிட்டேன். பட்டங்கள் வாங்குவது வேறு; வாழ்க்கையைப் புரிந்து கொள்கிற சூட்சமம் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமேயில்லை. 

சிங்கம், சாமி போன்ற வணிக ரீதியிலான படங்கள் மட்டுமே படங்கள் இல்லை. சக மனிதனின் உடல்மொழி, சூழலுக்கு ஏற்ப மாறுபடும் அவனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்டுகிற, வணிக நோக்கங்கள் பெரியதாக இல்லாத திரைப்படங்கள் கூட நமக்கான புத்தகங்கள்தான். பாடங்கள்தான். இத்தகைய படங்கள் பற்றிய நம்முடைய அறிதலும் தெளிவும் விசாலமாக்கப்பட வேண்டிய தேவை நிறைய இருக்கிறது.

திரைப்பட விழாக்களின் வழியாகத்தான் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்பதில்லைதான். ஆனால் நம்முடைய ஆர்வத்தின் மீது அது ஒரு நெருப்புப் பொறியை உரசி வீசும். தேடுதலை விரிவாக்கும். அதற்கான களமாகத்தான் புத்தகக் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள் என்பவையெல்லாம். பெரு நகரங்களை விட்டு வெளியில் வந்திருக்கும் இத்தகைய நிகழ்வுகள் சகல ஊர்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, விரிவான உரையாடல்களுக்கான களம் ஏற்படட்டும். பேராசைதான். ஆனால் சாத்தியப்படக் கூடிய தொலைவில்தான் இருக்கிறது.

இன்று கிளம்பி வாருங்கள். ஊட்டியில் சந்திப்போம். இல்லையென்றால் ‘ஊட்டிக்குத் தனியாத்தான் போவோணுமாட்ட இருக்குடா மணியா’ என்று யாராவது நக்கலடிப்பார்கள்.

ஊட்டித் திரைப்படவிழா இணையதளம்

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

குழந்தை பருவத்தில் அதிகம் பேச வேண்டும் / பேச்சு கேட்க்க வேண்டும். பிறகு வயது ஆக ஆக அவர்கள் விரும்பியதை தேடும் போது வாசித்தலின் பக்கம் திரும்ப அதிக வாய்ப்புள்ளது. சிறு வயதிலேயே அலைபேசி மற்றும் தொலைக்காட்சியின் பக்கம் சென்றுவிட்டால் வாசிப்பு என்பது அந்நியமாகிவிடும்.

Anonymous said...

இதற்கு ஒரு கலாச்சார மாற்றம் தேவை. குடும்பத்தில் பெரியோர் பின்பற்றும் பழக்கங்களை குழந்தைகள் பின்பற்றும் வாய்ப்பு அதிகம். இதுபோன்ற நிகழ்வுகளை நோக்கி நம் குடும்பத்துடன் நகர்வது நல்ல தொடக்கமாக அமையலாம்.

Keerthi said...

8 ஆம் தேதி பிலிம் பெஸ்டிவல்-ஐ 8 ஆம் தேதி தான் சொல்லணுமா? ஒரு 4-5 நாள் முன்னாடி சொல்ல கூடாதா?

Vaa.Manikandan said...

புது மாப்பிள்ளை அது பத்தியெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது கீர்த்தி. அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்! :)