Dec 22, 2017

ஏன் இந்த முடிவு?

நேற்றிலிருந்து மின்னஞ்சல்கள், அலைபேசி அழைப்புகள், வாட்ஸப், ஃபேஸ்புக் தனிச் செய்திகள் எனத் திணறிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வியிருக்கிறது. யாருமே ‘இதை நீ செய்யக் கூடாது’ என்று உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால் அக்கறையுடன் கூடியதான விசாரணைகள், வினாக்கள், மற்றும் சந்தேகங்கள். நிசப்தம் அறக்கட்டளையைத் தொடங்கிய போது இத்தகைய கேள்விகளை எதிர்கொள்ளவில்லை. அப்பொழுது யாருக்கும் பெரிய அளவில் தெரியாது. ‘ஒருத்தன் ஆரம்பிக்கிறேன்னு சொல்லுறான்..ஆரம்பிக்கட்டும்’ என்பதான மனநிலைதான் பலருக்கும் இருந்திருக்கும். இப்பொழுது அப்படியில்லை. நிறைய நண்பர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அக்கறை கொண்டிருக்கிறார்கள். ‘நீ அகப்பட்டுவிடக் கூடாது..பிற வேலைகளையெல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்ற அக்கறைதான் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் தெரிகிறது. 

உள்ளபடியே நெகிழ்ச்சிதான். 

‘எண்ணித் துணிக கருமம்’.நிறைய யோசித்திருக்கிறேன். கேட்கப்பட்ட வினாக்கள், நான் யோசித்தவை ஆகியவற்றிலிருந்து சில விவகாரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

1) ‘பள்ளிக்கூடத்தை எடுத்துக்குறீங்களா?’ என்று கேட்ட போது எனக்குள் எழுந்த முதல் கேள்வி ‘எதுக்கு?’ என்பதுதான். ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. நாமும் ஒன்றை இழுத்துப் போட்டு எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வியிலிருந்துதான் யோசனைகள் சுழன்றன. 

பெற்றோர் இல்லாமல் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து குழந்தைகளையாவது அழைத்து அவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது வெகு நாள் கனவு. ஆனால் அதற்கு ஆகும் மாதாந்திரச் செலவு பயமூட்டியது. ஆசிரியர்களை நியமித்து, உணவுக்கான செலவுகள் என்று கையைக் கடித்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அப்படியொரு அமைப்பை ஆரம்பித்துவிட்டால் இடையிலும் நிறுத்த முடியாது. அதனால்தான் இவ்வளவு நாட்களாகத் தயங்கிக் கொண்டிருந்தேன். 

அரசு உதவி பெறும் பள்ளி (Govt Aided school) என்பது நல்லதொரு வாய்ப்பு. ஆசிரியர்களுக்கான ஊதியம், உணவு என சகலத்தையும் அரசாங்கம் வழங்கிவிடுகிறது. அற்புதமான நிர்வாகத்தை நாம் கொடுத்தால் குழந்தைகளை மேலே கொண்டு வந்துவிட முடியும். யோசித்துப் பார்த்தால் பள்ளிக் கூடத்தை எடுத்துக் கொள்வது சரியான முடிவாக இருக்கும் எனத் தோன்றியது. ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் குழந்தைகளை விட்டு அவர்களுக்கான கட்டணத்தைக் கட்டிவிடலாமே என்று கேள்வி எழலாம். குழந்தைகளுக்கான உணவையும் உறைவிடத்தையும் வழங்குவது மட்டுமே நோக்கமில்லை. அவர்களை முழுமையான மனிதர்களாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். தாங்கள் அநாதைகள் என்கிற மனநிலை கிஞ்சித்துமில்லாத ஆளுமைகளாக அவர்கள் இருக்க வேண்டும். அற்புதமான வசதிகளுடன் நல்ல உணவு, கல்வி என சகலவிதமான செகளரியங்களுடன் அந்தக் குழந்தைகள் மேலே வர வேண்டும். அதற்கு நிர்வாகம் நம் வசம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

2) நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான சூப்பர் 16, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சிகள், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிலரங்குகள் என தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். வகுப்பறைகள் கூட கைவசமில்லை. வெவ்வேறு பள்ளிகளில் இடம் கேட்டுத்தான் நடத்த வேண்டியிருக்கிறது. நிசப்தத்தின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு நமக்கென ஒரு களமாக இந்தப் பள்ளி இருக்கும் என்பது இரண்டாவது முக்கியமான காரணம்.

3) மிக முக்கியமான ஒரு அம்சத்திலும் தெளிவாக இருக்கிறேன். நிசப்தம் அறக்கட்டளை எந்தக் காலத்திலும் நிறுவனமயமாகாது (Institutionalize). ‘இதுவும் ஒரு என்.ஜி.ஓ’ என்கிற வடிவத்தை எந்தக் காலத்திலும் எடுக்காமல் தனியாக, உதிரியாகவேதான் செயல்படும். 

4) வேறொரு நிறுவனத்துடன் அல்லது அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிற எண்ணமும் இல்லை. அதனால் நம்முடைய இலக்கும், நோக்கமும் தடைபட்டுப் போகக் கூடும். நாம் ஒன்று நினைப்போம். கூட்டாளி இன்னொன்று நினைப்பார். அது தேவையில்லாத சச்சரவுகளை உண்டாக்கக் கூடும். எங்கேயாவது தேங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஆலோசனைகள் கேட்பதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றையும் குதப்பி முடிவு நாம் எடுப்பதாக இருக்க வேண்டும். ‘இந்த முடிவு கூட்டாளிக்குப் பிடிக்காதோ’ என்று நினைப்பதற்கான சூழலே உருவாகக் கூடாது. அது நம்முடைய தன்னிச்சையான தன்மையைச் சிதைத்துவிடும்.

5) கணக்கு வழக்குகளை பொதுவெளியில் வைப்பது என்பதான செயல்பாடுகளில் இப்பொழுது நிசப்தம் எப்படிச் செயல்படுகிறதோ அப்படியேதான் செயல்படும். பள்ளி என்பது நிசப்தம் அறக்கட்டளையின் ஓர் அங்கம். இப்பொழுது செய்து கொண்டிருக்கும் பணிகளுடன் சேர்த்துக் கூடுதலான இன்னொரு செயல்பாடு. இப்பொழுது பிற செயல்களில் தன்னார்வலர்கள் உதவுவது போல பள்ளியின் செயல்பாட்டில் ஆசிரியர்கள் உதவுவார்கள். அவ்வளவுதான். நாம் அடுத்த கட்டமாக நாம் நகர்வதற்கான படிக்கட்டு. அதைத் தாண்டி அதில் எதுவுமில்லை. 

6) நிசப்தம் வழியாக எளியவர்களுக்கான சீரிய மருத்துவ முகாம், மருத்துவப் பரிசோதனைக் கூடம் போன்ற சில கனவுத் திட்டங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் உடனடியாகச் செய்ய முடியாது. படிப்படியாகத்தான் நகர வேண்டும். அவற்றையெல்லாம் செயல்படுத்த இதுவொரு முன்னோடியான செயலாக இருக்கும். கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. இங்கேயிருந்து கற்றுக் கொள்வோம்.

பெரிய காரியம்தான். இன்னமும் ஐம்பது லட்ச ரூபாயாவது தேவை. சில நண்பர்கள் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சாதாரணமாக முடித்துவிட முடியாது என்று தெரியும்.

பார்க்கலாம்.

‘இதை எடுத்துச் செய்தே தீர வேண்டும்’ என்று எதையுமே செய்வதில்லை. சமூகப்பணிகளில் அது சரியான அணுகுமுறையும் இல்லை. ‘இதனை இவனால் இவன் முடிக்கும்’ என்ற குறள் மீது அசாத்தியமான நம்பிக்கை கொண்டவன். ‘இந்த வேலை இவனிடம் போக வேண்டும்’ என்று இயற்கை நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. அப்படி இயற்கை நம்மைத் தேர்ந்தெடுக்கும் போது இறுக்கமாக நிற்பதும் சரியில்லை. நெளிந்து குழைந்து வழிவதும் சரியில்லை. நாம் நாமாகவே இருப்போம். பள்ளிக்கூடத்தை நாம்தான் நடத்த வேண்டும் என்றிருந்தால் நம் வசம் வந்தே தீரும். நமக்கென அது விதிக்கப்படவில்லையெனில் தலை கீழாக நின்றாலும் நம்மிடம் வந்து சேராது. எனவே அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதே அர்ப்பணிப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எல்லாக் காலத்திலும் செயல்படுவோம். எந்தவொரு சிறு வட்டத்திலும் சிக்கிக் கொள்ளாமல்.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ள்ளிக்கூடத்தை நாம்தான் நடத்த வேண்டும் என்றிருந்தால் நம் வசம் வந்தே தீரும். நமக்கென அது விதிக்கப்படவில்லையெனில் தலை கீழாக நின்றாலும் நம்மிடம் வந்து சேராது.

Full Stop.

ADMIN said...

அடுத்த கட்ட நகர்வை நோக்கி நிசப்தம் ! வாழ்த்துகள் !

சேக்காளி said...

//உங்களால் முடியும் மணி
வாழ்த்துக்கள்//
இது தான் நான் அந்த பதிவிற்கு எழுதியிருந்த பின்னூட்டம்.
ஆனால் இதை எழுதுவதற்கு முன் சிலவற்றை எழுதி பின்பு அழித்து விட்டேன்.இன்றைய இந்த பதிவில் நான் அழித்தவற்றை பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்.
1. எண்ணித் துணிக கருமம்.
2. இதனை இவனால் இவன் முடிக்கும்.
3. நாம் ஒன்று நினைப்போம். கூட்டாளி இன்னொன்று நினைப்பார்.
இந்த மூன்றாவது விசயத்தை எப்படி கையாளுவீர்கள்?.பள்ளி செயல்பாடு என்பது அறக்கட்டளை செயல்பாடு போன்றது இல்லையே. தொடர்ந்த கண்காணிப்பும் , மேலாண்மையும் தேவைப்படும் ஒன்று. எனவே அடுத்தவர்களிடம் பொறுப்பு கொடுக்காமல் செயல்பட முடியாது.அந்த அடுத்தவர் உங்களைப் போன்ற மனநிலை உடையவர்களாக இருக்க மாட்டார்கள். அப்போது நிச்சயம் உரசல்கள் வரும்.அந்த உராய்வுகளை தாண்டுவது எப்படி?.இப்போதைய மனநிலை அதற்கு சரிபட்டு வருமா?.
அடுத்து உங்கள் சூட்டில் குளிர்காய வருவார்கள். சூடு கிடைக்காத பட்சத்தில் எதிராக செயல்பட ஆரம்பிப்பார்கள். என்ன செய்வீர்கள்?
தவறாக நினைக்காதீர்கள், இன்று கூட வேண்டாமென்றால் அறக்கட்டளையை நிறுத்தி விடலாம்.ஆனால் பள்ளியை அப்படி செய்ய முடியுமா?.இது போன்ற பிரச்னைகளை தாங்கும் ,தாண்டும் நிர்வாக படிப்பு படிக்கவில்லை.ஆனால் நேர்மையுடன் இருந்தால் வழி தோன்றும் என அனுபவ பூர்வமாய் உணர்ந்தவன்.
வாய்ப்பு இல்லாவிட்டால் உருவாக்கு என்பார்கள். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பது அதனை பற்றி சிந்திப்பவர்கள் அறிவார்கள்.இது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.வரிசையிலிருந்து விலகினால் தான் புதியதொரு காட்சி கிடைக்கும்.
ஏமாற்றங்கள் கிடைக்கும் பட்சத்தில் "காமராசரையே கவிழ்த்து ஆனந்தப்பட்டவர்கள் மத்தியில் நாமெல்லாம் எம்மாத்திரம்" எனும் மனநிலை அவசியம்.
என்றும் மணியின் நல்லெண்ணப் பயணம் தொடரட்டும்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

பின் ஊட்டங்களை நன்கு கவனித்து உங்கள் மனதில் உள்ளதையும் தெரிவித்து உள்ளீர்கள். நல்லது நடக்கும் என நம்புவோமாக.
வாழ்க வளமுடன்

Karthik.vk said...

Dear Mani Anna


I am not meet you..But I am regular reader of nisaptham from 2009...I will help you after three years by complete my ph.D..But Now I will help through giving some lectures and laboratory related training to the students in the field of life sciences through giving authorship in publication and promoting the students towards an great hyphothesis...By during my Post-Doc period I will definitely help you financially..

Jaypon , Canada said...

Karthik நண்பரே முதலில் இலக்கணப்பிழை இல்லாமல் ஆங்கிலம் எழுத பழகுங்கள். பிழை இருந்தால் உங்கள் உதவி மீது நம்பகத்தன்மை குறையும். தமிழில்த எழுதலாம். உதவுவதற்காக மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருக்கீங்க.

Anonymous said...

நிறைய யோசித்து நிதானமாக செய்ய வேண்டிய விசயம்... நல்ல நிர்வாகம் மற்றும் தொடர்ந்து செயல்பட வேண்டியது முக்கியம்... விளையாட்டு காரியமில்லை.. முன்னாடி பேஸ்புக் வாட்ஸ்அப் பயன்படுத்தலன்னு சொன்ன மாதிரி ஞாபகம்...