Dec 15, 2017

பள்ளியை மூடிவிடாதீர்கள்!

வெற்று அறிவிப்புகளால் மட்டுமே இந்த அரசாங்கம் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகமில்லாமல் இல்லை. அதுவும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் மிகுந்த சலிப்பூட்டுகின்றன. வண்ணமயமான அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிடுகிறவர்கள் அதில் எவ்வளவு சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்? 

486 பள்ளிகளில் கணினி வழி கற்றல் மையங்கள் தொடங்கப்படும் என்பதில் ஆரம்பித்து முப்பது கோடி செலவில் நூலகங்களுக்கு புத்தகம் வாங்கப்படும், முதுகலை மாணவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, கீழடியில் நூலகம் அமைக்கப்படும் என முப்பத்தியேழு அதிரடி அறிவுப்புகளை ஜூன் மாதத்தில் வெளியிட்டார்கள். எத்தனை அறிவிப்புகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகளாவது தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாள்கள் வழங்கப்படும், 100 அரசுப்பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைப்போம் என்று கல்வித்துறை அமைச்சர் செல்லுமிடங்களில் எல்லாம் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஜூன் மாதத்தில் ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்டு வெளியான முப்பத்தியேழு அறிவிப்புகளில் தமிழகம் முழுவது 30 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்கிற அறிவிப்பு மிக முக்கியமானது. அதே சமயத்தில் காதில் பூ சுற்றக் கூடியதும் கூட. இன்றைக்கு எந்த அரசுத் தொடக்கப்பள்ளியில் வேண்டுமானாலும் விசாரித்துப் பார்க்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமாக இருக்கும். ‘நாங்க ரெண்டு வாத்தியார் இருக்கிறோம்...இருபத்திரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள்’ என்று ஓர் ஆசிரியர் சொன்ன போது ஐந்தாம் வகுப்பில் மட்டும் இருபத்தியிரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் சேர்த்து மொத்தமாகவே அவ்வளவு மாணவர்கள்தான். சமவெளிப்பகுதிகளிலும், நகரங்களுக்கு அருகாமையிலும் இருக்கக் கூடிய பள்ளிகளில் இந்த நிலைமை. ஊட்டி, பர்கூர் மாதிரியான மலைப்பகுதிகளில் இரண்டு இலக்கத்தைக் கூட மாணவர்களின் எண்ணிக்கை தாண்டுவதில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த நிலைமையில் இருக்கிற பள்ளிகளை மேம்படுத்துவதுதான் அவசியமான காரியமாக இருக்குமே தவிர எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்கிற கணக்கில் புதிய பள்ளிகளைத் தொடங்குகிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் கலர் கலராக ரீல் சுற்றுவதாகத்தான் இருக்கும்.

1990களில் தமிழகம் முழுவதும் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளிகளைத் தொடங்குவதற்காக வழி நடைப்பயணம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று நன்கொடை பெற்று- என்னுடைய நினைவு சரியாக இருக்குமானால் ‘வீட்டுக்கு ஒரு செங்கல்’ என்பதுதான் அந்த நடைபயணத்தின் முழக்கம்- தமிழகம் முழுவதும் பல தாய்த்தமிழ் பள்ளிகளைத் தொடங்கினார்கள். அந்தந்த ஊர்க்காரர்களே நிர்வாகிகளாகச் செயல்பட்டார்கள். அப்பொழுது நான் பொடியன். எங்கள் ஊரில் அந்த ஊர்வலம் வந்த போது அவர்களுடன் கூடவே கொஞ்ச தூரம் பயணித்துக் கத்திவிட்டு வந்தேன். அதன் பிறகு எங்கள் ஊரிலும் தாய்த் தமிழ் பள்ளியைத் தொடங்கினார்கள். பிறகு அது அரசு உதவி பெறும் பள்ளியாகவும் மாறியது. சற்றேறக்குறைய நூற்றைம்பது மாணவர்கள் படிக்கிறார்கள். முன்பு குறிப்பிட்டது போல அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் அந்தப் பள்ளியைத்தான் விரைவில் இழுத்து மூடப் போவதாக நிர்வாகிகள் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது. 

அந்தப் பள்ளியில் நிசப்தம் சார்பில் நூலகம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். பள்ளியின் ஓர் ஆசிரியை அழைத்து ‘சார் ஸ்கூலை மூடுறாங்க போலிருக்கு...ஏதாச்சும் செய்ய முடியுமா?’ என்றார். விசாரித்துப் பார்த்தால் பள்ளி வாடகைக் கட்டிடத்தில் நடைபெறுகிறது. இடத்துக்காரர் காலி செய்யச் சொல்கிறார். பள்ளி நிர்வாகம் நகராட்சியை அணுகி ஏற்கனவே மூடப்பட்ட பள்ளிகளின் இடங்களில் ஏதேனும் ஒன்றை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ கொடுத்தால் சொந்தமாகக் கட்டிடம் கட்டிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். நகராட்சி ஆணையரில் தொடங்கி அமைச்சர் வரைக்கும் பேசிப் பார்த்திருக்கிறார்கள். எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. வேறு வழியில்லை. ‘நடத்த முடியாதுன்னு எழுதிக் கொடுத்துடுறோம்..’ என்று சொல்கிறார்கள்.
கல்வித்துறை அமைச்சரின் ஊரில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிக்கே இதுதான் நிலைமை. இந்த லட்சணத்தில்தான் புதிய பள்ளிகளைத் தொடங்குகிறார்கள். புதிய பள்ளித் தொடக்கம் என்றாலும் கூட ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக்கு இடத்தைத்தான் மாற்றித் தரச் சொல்கிறார்கள். அதுவும் ஏற்கனவே வேறு பள்ளிக்கூடம் செயல்பட்ட இடங்களைச் சுட்டிக் காட்டி ‘அந்த இடத்தைக் கொடுங்க’ என்று கேட்கிறார்கள். வெறுமனே இடத்தைப் பூட்டி வைத்துவிட்டு உதடுகளை இறுக வைத்துக் கொண்டிருப்பதன் பின்னணி என்னவென்றுதான் மண்டை காய்ந்தது.

அரசியல் ரீதியிலான காரணங்கள் கூட பின்னணியில் இருக்கக் கூடும். தமிழ் உணர்வாளர்களால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியை ஜி.பி.வெங்கிடு என்கிற முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் இப்பொழுது நிர்வகிக்கிறார். கே.ஏ.செங்கோட்டையன் தனது தேர்தல் அரசியலில் ஒரேயொரு முறை தோற்றிருக்கிறார் என்றால் அது வெங்கிடுவிடம்தான். செங்கோட்டையன் மாதிரியான பண்பட்ட அரசியல்வாதி இத்தகைய சிறு காரணங்களுக்காக பள்ளியை மூட வைப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. அப்படியே அரசியல் காரணம் இருந்தாலும் அதுவொன்றும் தவறில்லை. தேவைப்பட்டால் நிர்வாகத்தினரை மாற்றிவிட்டு அரசாங்கமே பள்ளியை நடத்தட்டும். அரசியல் காரணங்களுக்காக ஏன் பள்ளியை மூடுகிறார்கள்? நூற்றைம்பது மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு ஏன் இடமாற்ற வேண்டும்?

இடமும் இருக்கிறது. நிர்வாகமும் இடம் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறது. பெற்றோரும் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள். கல்வியமைச்சரின் வெறும் கண்ணசைவில் முடிய வேண்டிய காரியம் இது என்றுதான் என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

அரசியல், நடைமுறைச் சிக்கல் என்ற எந்தக் காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. தமிழ் வழிக்கல்வி நிறுவனமொன்றை மூடுவது என்பது தமிழ் மொழியின் பொடனியில் அடிப்பது போலத்தான். வருடந்தோறும் பொங்கல் விழாவை நடத்தியும், ஆசிரியர்களை ‘அத்தை’ என்றும் ‘மாமா’ என்றும் அழைத்து பள்ளி செல்வதைக் கொண்டாட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றி நீர்த்துப் போகச் செய்துவிடாதீர்கள். அதுவும் கல்வியமைச்சரின் ஊரிலேயே!

பள்ளி குறித்து தி இந்துவில் வெளியான கட்டுரை:ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை: ஆனந்த விகடன் கட்டுரையை இணைப்பில் வாசிக்கலாம்.தாய்த்தமிழ் பள்ளியின் ஆசிரியர்கள் அழைத்துப் பேசிய போது சங்கடமாக இருந்தது. ‘இதில் என்னால் என்ன செய்ய முடியும்ன்னு தெரியலைங்க டீச்சர்...முடிந்தளவுக்கு செய்தியை வெளியில் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்..ஆனால் ஒருவேளை மூடி விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தால் இதற்கெல்லாம் அசந்து போக மாட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமையன்று (16-டிசம்பர்) மாலையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மாணவர்களின் பெற்றோர் நடத்துகிறார்கள். அந்தக் கூட்டம் தாய்த்தமிழ் பள்ளியின் இறுதி அஞ்சலிக் கூட்டமாக இருந்துவிடக் கூடாது என்றுதான் திகிலாக இருக்கிறது.

6 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

though not preferred, they cant vacate a school..that easily.

Anonymous said...

//செங்கோட்டையன் மாதிரியான பண்பட்ட அரசியல்வாதி இத்தகைய சிறு காரணங்களுக்காக பள்ளியை மூட வைப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது. //

ஓர் பண்பட்ட அரசியல்வாதி காசை கொட்டியா 2016 தேர்தலில் வெற்றி பெற வேண்டியாயிற்று?

Anonymous said...

though not preferred, they cant vacate a school..that easily.
TOTALLY/FULLY AGREE WITH THIS COMMENT.
SCHOOL IS A PUBLIC UTILITY AND THE LAND LORD CANNOT ASK TO VACATE.
SOME POLITICAL HEAVY WEIGHT MUST BE BEHIND HIS MOVE.
COURT WILL INTERVENE AND STAY THE VACATING. TEACHERS/PARENTS NEED NOT DO.
THEY WILL BE TARGETED.
ANY ACTIVIST CAN GO FOR A PUBLIC INTEREST LITIGATION.
IT IS SAD. BUT WHAT TO DO? TO SAVE A SCHOOL WE HAVE TO DO THIS UNPLEASANT TASK.
ANBUDAN,
M.NAGESWARAN.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு முடிவு கிட்ட இறைவனிடம் கையேந்துவோம்.கைவிட மாட்டான்.
வாழ்க வளமுடன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெரும்பாலும் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகள் வாடகையில் செயல்படுவதாகவே காட்டுவார்கள். உண்மையில் அது தாளாளரின் பரம்பரை சொத்தாகவே இருக்கும். முந்தைய தலைமுறையினரைப் போல கல்வி சேவை செய்ய விரும்புவதில்லை. பள்ளி நடத்துவதில் அவர்களுக்கு பயன் ஏதுமில்லை. வாடகைக்கு விட்டால் அதிக வருமானம் கிடைக்கும் . முன்பெல்லாம் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் அதிக மாணவர்கள் படித்து வந்தார்கள். ஆசிரியர் நியமனங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணம் ( உண்மையில் நிதி தீவை பெரும் கட்டணங்கள் மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது) என்று எப்போதும் களைகட்டிக் கொண்டிருக்கும். இப்போது அதற்கு வழியில்லை. பல பள்ளிகளில் மாணவர்கள் இல்லை.ஆசிரிர்கள் அதிக அளவில் உபரியாக உள்ளனர். பள்ளிகளை மூட வேண்டும் என்றே தாளாளர்கள் விரும்புகின்றனர். ஆசிர்யர்களின் பனிப் பாதுகாப்பு கருதியே இந்தப் பள்ளிகள் இயங்குகின்றன.உரிம சான்று,கட்டிட உறுதி சான்று,சுகாதார சான்று,தீயணைப்பு சான்று தொடர் அங்கீகார சான்று போன்றவற்றை பெற நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை. ஆசிரியர்களே தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்ள இச் சான்றுகளை செலவுகளைப் பகிர்ந்து பெற்று வருகிறார்கள்.கிருத்துவ மிஷனரி பள்ளிகள் கூட நிதி உதவி பள்ளிகளை மூடிவிட்டு ஸ்யா நிதி ஆங்கில வழிக் கல்வி தொடங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். அதே வளாகத்தில் ஆங்கில பள்ளி தொடங்கி தமிழ் வழியை மறைமுகமாக மூட முயற்சி செய்வதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது

Yarlpavanan said...

கல்விக்கூடங்கள் மூடப்படுவது
அறிவுக்கண்களை அகற்றும் செயலே!