Dec 13, 2017

உங்களுக்கு என்ன ராசி?

‘உங்களுக்கு என்ன ராசிங்க?’ கடந்த வாரத்தில் ஒரு நண்பர் கேட்டார். சரியாகச் சொன்னால் செவ்வாய்க்கிழமை. நேரில் சந்தித்துக் கொண்டோம்.

‘துலாம் ராசிங்க’

‘அட நம்ம விஜயகாந்த் ராசி’- எனக்கு கோபம் வந்துவிட்டது. வேறு துலாம் ராசிக்காரர்கள் யாரும் இல்லையா என்ன? விஜயகாந்த்தைப் பிடிக்காது என்றில்லை. ஆனால் சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாரே என பல்லை வெறுவினேன்.

‘டிசம்பர் 19 சனிப்பெயர்ச்சி..உங்களுக்கு ஏழரை முடியுது’ என்றார். 

‘துலாம் ராசிக்கு சனி பகவான் தப்பொண்ணும் பண்ண மாட்டாருன்னு சொன்னாங்க’ என்றேன்.

‘யாரு சொன்னது?’ என்று மடக்கினார். 

‘ரோகிணி அய்யர்’. பெயர்தான் ரோகிணி. ஆண்தான். திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இருக்கிறவர். அவருடன் எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. ஃபோன் எல்லாம் கிடையாது. அங்கேயிருக்கும் யாரிடமாவது ‘ரோகிணி அய்யரைப் பார்க்கணும்’ என்று சொன்னால் கைகாட்டிவிடுவார்கள். அவர்தான் சொல்லியிருந்தார். 

ஆனால் இவர் விடுவதாக இல்லை. ‘போன ஏழரை வருஷமா உங்களுக்கு பிரச்சினையே இல்லையா?’ என்றார்.

‘மனுஷன்னா பிரச்சினை இல்லாம இருக்குமாங்க?’

‘பிரச்சினை இருக்கும்..ஆனா உங்களுக்கு அதிகமா இருந்திருக்கும்..ஏன்னா ஏழரைச் சனி ’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை’ என்று சொன்ன போதும் அவர் அமைதியாகவில்லை. உண்மையில் கடந்த ஏழரை வருடங்களில் நல்ல வளர்ச்சிதான். நிறுவனம் மாறினேன். நல்ல சம்பள உயர்வு- 

‘எப்போ சம்பள உயர்வு கிடைச்சுது?’

‘2015ல..’

‘பாருங்க..சனி உங்களை விட்டு விலகறதுக்கு முன்னாடி கொடுத்திருக்காரு..அஷ்டமத்துல சனி அள்ளிக் கொடுப்பாரு’

எதைச் சொன்னாலும் அவர் சொல்வதுதான் சரி என்கிறார். அதற்குமேல் அவர் சொல்வதற்கு தலையாட்டிவிடலாம் என்றுவிட்டுவிட்டேன்.

அவர் பெங்களூருவாசி. பிடிஎம் லே-அவுட்டில் குடியிருக்கிறார். 

‘ஜாக்கிரதையா இருந்துக்குங்க...உடம்பு உபாதை ஏதாச்சும் வரும்....விஜயகாந்த் சிங்கப்பூர் போற மாதிரி’ என்றார். 

‘யோவ் விஜயகாந்த் சிங்கப்பூர் போறாருன்னா...நானும் போகணுமா?’ என்று மனதுக்குள் பொங்கிப் பிரவாகம் எடுத்தது.

நம்புவீர்களா என்று தெரியவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமையன்று சொல்லிவிட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமையன்று ஒரு சேட்டையைச் செய்துவிட்டேன்.

அலுவலகத்தில் ஒரு வெந்நீர் எந்திரம் உண்டு. எப்பொழுது திறந்தாலும் ஆவி பறக்கத் தண்ணீர் கொதிக்கும். பீங்கான் குடுவை ஒன்றையும் அலுவலகத்தில் வைத்திருக்கிறேன். அதில் வெந்நீரைப் பிடித்து பாத்திரங்களை கழுவுவது வழக்கம். சனிக்கிழமை ஊட்டி போவதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிய படியே வெந்நீரைப் பிடித்து வாயில் ஊற்றிவிட்டேன். அந்த ஒரு கணம்தான். அப்படி ஏன் மடத்தனத்தைச் செய்தேன் என்று இதுவரை புரியவில்லை. நல்லவேளையாக தொண்டைக்குச் செல்லவில்லை.

புஸ் புஸ்ஸெண்று நின்ற இடத்திலேயே துப்பிவிட்டு அலுவலகத்தில் வைத்திருந்த வெண்ணெய்யை எடுத்து வாய் நிறைய அப்பிக் கொண்டேன். அடுத்த சில வினாடிகள் சுவையரும்புகள் வெடித்து உரிந்து கிடந்தன. நாக்கை நீட்டி கண்ணாடியில் பார்த்தால்... அடங்கொக்கமக்கா.

‘சொல்லாமலே’ லிவிங்ஸ்டன் மாதிரி ஆகிவிடுவேனோ என்று பயமில்லாமல் இல்லை. வாயில் ஒரு புண் வந்தாலே ஒரு வழியாக்கிவிடும். இது நூற்றுக்கணக்கில். சனிக்கிழமை வரைக்கும் வலி தெரியவில்லை. மரத்துப் போய்க் கிடந்தது. எதைத் தின்றாலும் மசமசவென்று மண்ணைத் தின்பது போலத்தான் இருந்தது. ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மரமரப்பு சரியாகி வலி ஆரம்பித்தது. தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.  ரணகளம்!

ஒவ்வொரு கணமும் பிடிஎம் லே-அவுட்வாசியும், விஜயகாந்த்தும்தான் நினைவுக்கு வந்து போனார்கள். ஒருவேளை நாக்கு வழியாக நரம்பு மண்டலம் கசமுசாவாகி விஜயகாந்த் போலவே நமக்கும் நரம்பு பாதிப்பு வந்துவிடுமோ என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று மாலையிலிருந்து தப்பித் தேறிவிட்டேன். அந்த நண்பரை அழைத்து விவகாரத்தைச் சொன்னேன்.

‘நான் தான் சொன்னேன்ல’ என்றார். 

‘இதைச் சொல்லுறதுக்கே இங்க வந்தீங்களா சார்?’ என்றேன்.

நமக்கு நடக்கப் போற ஒவ்வொண்ணையும் எப்படியாவது ஒரு வகையில் இயற்கை நம்மிடம் அறிவிச்சுடும்..அதை எப்படி சீரியஸா எடுத்துகிறோம்ங்கறதுல இருக்கு’ என்றார். அது சரி.

நலம் விசாரித்துவிட்டு ‘நீங்க என்ன நட்சத்திரம்ன்னு சொன்னீங்க?’

‘விசாகம்’

‘அட நம்ம டிடிவி தினகரனுக்கும் அதே நட்சத்திரம்தான்’ என்றார்.

மறுபடியும் முதலில் இருந்தா? ‘சார் மேனேஜர் கூப்பிடுறார்’ என்று கொன்ன வாயில் நாக்கைக் கடித்தபடியே சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.

15 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Appo RAID confirm...

கோவை நேரம் said...

அடுத்து தினகரன்?..
ஹாஹா..பலமா வச்சி செய்ய போறாங்க..

Jaypon , Canada said...

ஹா..ஹா எனக்கும் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் தான். எங்கே போனாலும் சட்டம் பேசி .....பேர் வாங்குவேன். நான் செய்யும் தவறுகளையும் ஆமாம் என பொதுவெளியில் சொல்லி மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன். அதற்கு தனி தைர்யம் வேண்டும் என ப்ரகலாய்ப்பேன்.ஆனால் இந்நட்சத்திரத்தில் பிறந்தவங்க எல்லொரும் இப்படியா என தெரியாது.

Unknown said...

நம்பிக்கை.......

மூடநம்பிக்கை......

��������

Anonymous said...

"நண்பர் ஒருவரிடம் பேசிய படியே வெந்நீரைப் பிடித்து வாயில் ஊற்றிவிட்டேன்." இதை படிக்கும்போது சிரிப்பு வந்தாலும் அந்த சூழ்நிலையை நினைத்துபார்க்கும் போது ஒரு நிமிடம் பகீர் என்றிருக்கிறது.

"நமக்கு நடக்கப் போற ஒவ்வொண்ணையும் எப்படியாவது ஒரு வகையில் இயற்கை நம்மிடம் அறிவிச்சுடும்..அதை எப்படி சீரியஸா எடுத்துகிறோம்ங்கறதுல இருக்கு" இது உண்மைதான். நாம் சில செயல்கள் செய்யும் முன் இரண்டு வித எண்ணங்கள் தோன்றும் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து செயல் முடிந்த பின்னர் பார்த்தால் இதை அப்படி செய்திருக்கலாமோ? என்று தோன்றும்.

சேக்காளி said...

//‘போன ஏழரை வருஷமா உங்களுக்கு பிரச்சினையே இல்லையா?’ என்றார்.//
அமெரிக்க சனாதிபதி தேர்தல் ல நிக்க முடியாம போனதை பத்தி சொல்லிருந்துருக்கலாம்.

Anonymous said...

வருத்தம் அளிக்கிறது


Jegadeesh said...

//எனக்கும் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் தான். எங்கே போனாலும் சட்டம் பேசி .....பேர் வாங்குவேன். நான் செய்யும் தவறுகளையும் ஆமாம் என பொதுவெளியில் சொல்லி மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன். அதற்கு தனி தைர்யம் வேண்டும் என ப்ரகலாய்ப்பேன்.ஆனால் இந்நட்சத்திரத்தில் பிறந்தவங்க எல்லொரும் இப்படியா என தெரியாது.//

பெரும்பாலும் ஒத்து போகுது.. நானும் உங்க கட்சிதான். சட்ட நியாயம் பேசுவேன். ஆனா என்னியதான் ஒருத்தனும் மதிக்கமாட்டான்...

Unknown said...

Take care and get well soon.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

போகும் போது எடுத்ததையெல்லாம் சனி கொடுத்து விட்டுச்செல்வார் என்பது போல உங்களுக்கு 7 1/2 முடியுதே அமோகமாக அல்லவா இருக்க வேண்டும் ?

Asok said...

I did not believe Astrology because it may spoil our every step in our life. My father keep telling me that I am going to get some kind of problems or some of them are life threatening. I ignored him but it keeps happening as per his alert. Now, I am cautiously making my decisions but I will not avoid my regular activities. Astrology is a science, at least we will try to standardize some of the things and use it before any big disaster happening.

Jaypon , Canada said...

//பெரும்பாலும் ஒத்து போகுது.. நானும் உங்க கட்சிதான். சட்ட நியாயம் பேசுவேன். ஆனா என்னியதான் ஒருத்தனும் மதிக்கமாட்டான்...// யாருங்க மதிக்கனும். ஊருக்காக நடிக்காம என் மனசுக்கு பிடிச்சமாதிரி உண்மையா நடப்பதினால் என்னை நான் மதிக்கிறேன். அதில் கிடைக்கும் திருப்தி யாருக்கு கிடைக்கும். நாளாகலாம் ஆனால் நாம் நடுனிலையோடு வாழ்ந்தோம்கிற நிம்மதி எல்லொருக்கும் கிடைக்காது.

Vaa.Manikandan said...

//போகும் போது எடுத்ததையெல்லாம் சனி கொடுத்து விட்டுச்செல்வார்//

எங்கள் அப்பாவைக் கொடுத்துவிட்டுச் செல்வாரா? இதெல்லாம் ஒரு நம்பிக்கைதானே! நம்மை சுழலச் செய்யும் நம்பிக்கைகள்...

Malar said...

Get well soon and take care.

அன்பே சிவம் said...

அதான் மஹிக்கு டக்கரான இல்லயில்ல! 'அப்பா'டக்கரான ஒரு அப்பாவ கொடுத்திருக்காரே. பொறவென்ன.