Nov 8, 2017

குழந்தைகளிடம் சிரமங்களைப் பகிரலாம்

ஒலிம்பியாட் தேர்வு என்று பள்ளிகளில் நடத்துகிறார்கள். மூன்றாம் வகுப்பு மாணவனின் அறிவியல் வினாத்தாளை எடுத்துப் புரட்டினால் மண்டை காய்கிறது. எம்.டெக் படித்திருந்தால் என்ன? எம்.பி.ஏ படித்திருந்தால் என்ன? தலைமுறை வித்தியாசம் என்பது குழந்தைகளின் பாடங்களில் இருந்தே ஆரம்பிக்கிறது. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறைக்கான காலம் என்பார்கள். அது அப்பட்டமான உண்மை. தொண்ணூறுகளில் இருந்த சூழலுக்கும் இன்றைய சூழலுக்குமான வித்தியாசம்தான் தலைமுறை வித்தியாசம். 

குழந்தைகள் எதிர்கொள்ளும் சூழல்களிலும் அழுத்தங்களிலும் கூட இந்தத் தலைமுறை வித்தியாசமானது எதிரொலிக்கிறது. அதற்கேற்றபடி பெற்றோர் மாறுவதும் அவசியமாகிறது. 

குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மட்டும்தான் அழுத்தமா என்ன? நமக்கு இல்லையா? நமக்கும்தான் ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. ஆனால் ‘நான் கஷ்டப்பட்டால் பரவாயில்லை பையன் கஷ்டப்படக் கூடாது’ என்று ஏன் நினைக்கிறோம்? அப்படி நினைப்பதைப் போன்ற முட்டாள்தனம் எதுவுமில்லை. குடும்பம் என்ற அமைப்பின் அடிநாதமே நம்முடைய குடும்பத்தின் பலம் என்ன? பலவீனம் என்ன? யார் எதை விரும்புகிறார்கள், யாருக்கு என்ன சிரமம் என்பதைக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் புரிந்து வைத்திருப்பதுதான். அந்தப் புரிதலில் இடைவெளி விழும் போது குடும்பத்தின் அமைதி சிதையத் தொடங்குகிறது. 

‘நீ கேட்பதையெலலம் அப்பாவினால் வாங்கிக் கொடுக்க முடியாது சாமீ’ என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை. இதுதான் நம் குடும்பத்தில் சாத்தியம் என்று குழந்தைகளுக்கும் தெரிய வேண்டும். 

நண்பரின் மகன் தற்கொலை செய்து கொண்டான். பதினாறு வயது விடலை அவன். தகவல் தெரிந்து அழைத்துப் பேசிய போது நண்பர் நொறுங்கிப் போயிருந்தார். ஒரே மகன். என்ன காரணம் என்று தெரியவில்லை என்றார். அவருக்குக் காரணம் தெரிந்திருக்கலாம். மறைக்க விரும்பக் கூடும். எங்களிடையே பேசிக் கொள்வதற்கு எதுவுமில்லை. ‘உசுரு தவிர வேற எல்லாமே மசுருக்குச் சமானம்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன. என்ன காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். உயிர் போய்விட்டது அல்லவா? மனம் முழுவதும் இதுதான் உழப்பிக் கொண்டிருக்கிறது.

எப்படி இறப்புக்கான காரணம் தெரியாமல் இருக்கும்? குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான தகவல் தொடர்பு குறைந்து கொண்டேயிருக்கும் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். Proper communication. அவர்களிடம் அரை மணி நேரமாவது காது கொடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இங்கு நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றுக்குமே குழந்தை வளர்ப்போடு சம்பந்தம் இருக்கிறது. பொருளாதாரக் காரணிகள், சமூகக் காரணிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, வடிகால்கள் இல்லாத உணர்வுகள் என்று கலந்து கட்டி குழந்தைகளிடம் கபடி ஆடிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் தங்கள் வலியையும் பாரங்களையும் இறக்கி வைக்கும் தோள்களாக பெற்றவர்கள் இருக்க வேண்டும். பெற்றோர்களின் உயரம் தெரிந்தவர்களாக குழந்தைகள் இருக்க வேண்டும். இன்றைக்கு இந்த தொடர்புதான் எங்கேயோ அறுந்து கொண்டிருக்கிறது.

ஒரு புள்ளிவிவரத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். 2026 ஆம் வருடம் உலகத்திலேயே இந்தியாதான் மிக இளமையான நாடாக இருக்குமாம். அத்தனை பொடிசுகள் இருக்கிறார்கள். ஆனால் நிலைமை சாதகமானதாக இல்லை. இந்தியாவில்தான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிறுவன்/சிறுமி தற்கொலை செய்து கொள்கிறார்களாம். அதில் மஹாராஷ்ட்ரா முதலிடம். தமிழகத்துக்கு இரண்டாம் இடம். 

கல்விச்சாலைகள் உருவாக்கக் கூடிய அழுத்தம், குடும்பங்களில் செய்யப்படும் ஒப்பீடுகள் என எல்லாமே சேர்ந்து மாணவர்களின் மீது சுமையை இறக்கி வைக்கின்றன. ‘அவனுக்கு மாசம் 30000 ரூபாய் சம்பளம்’ என்று அடுத்தவர்களை ஒப்பீடு செய்வது மட்டுமே மட்டுமே பொருளாதாரக் காரணி இல்லை. ‘எம் பையனுக்கு எல்லா வசதியையும் கொடுத்துடணும்’ என்று அம்மா அப்பா நினைக்கிறார்கள் அல்லவா? அங்கேயிருந்து தொடங்குகிறது. 

பிள்ளைகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்ப்பது என்பது அவர்களுக்கு நம்முடைய பொருளாதார சிரமங்கள் தெரியாமல் வளர்ப்பது இல்லை. பொருளாதார ரீதியில் நம்முடைய பலம் என்ன என்று புரியாமல் அவர்கள் வளர்வது நல்லதுமில்லை. அம்மா அப்பாவின் பொருளாதாரம் என்ன? அவர்களால் எவ்வளவு  செலவு செய்ய முடியும் என்பது குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆசைப்பட்டுக் கேட்கும் ஒன்றை அப்பாவால் வாங்கித் தர முடியாது என்றால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள குழந்தைகளைப் பழக்கியிருக்க வேண்டும். கேமிரா கேட்டால் கேமிரா, பைக் கேட்டால் பைக் என்று அளவுக்கு மீறிய டாம்பீகம்தான் பெரும்பாலான குடும்பங்களில். நான்காம் வகுப்பு மாணவனுக்கு எதற்கு பாக்கெட் மணி? ஐம்பது ரூபாய் கொடுக்கும் பெற்றோரைத் தெரியும். பின்விளைவுகள் தெரியாமல் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த தலைமுறையில் ‘நானெல்லாம் ஓட்டை ட்ரவுசர் போட்டுட்டுத்தான் பள்ளிக்கூடம் போவேன்’ என்று சொல்லிக் கொள்கிற ஆட்கள் இருந்தார்கள். ‘இப்படி ஒரு சூழலிலிருந்து வந்துதான் நான் இன்னைக்கு நிக்குறேன்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்ட தலைமுறை இனி வரும் காலத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. பேருந்து ஓட்டுநரின் மகனுக்கு Duke KTM பைக் அவசியமில்லை. ஒன்றே முக்கால் லட்ச ரூபாய். அவர் வசதிக்கு இது பெருந்தொகை. ஆனால் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். கேட்டால் ‘மத்த பசங்க ஓட்டுறாங்க’ என்று பதில் சொல்கிறார்கள்.‘சிறு வயதிலிருந்தே கேட்கிறதெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கிட்டேன்’ என்று சமாதானம் சொல்லி சக்திக்கு மீறி வாங்கித் தருகிறார்கள்.

எல்லாமே கஷ்டப்படாமல் கிடைக்கும் என்று பிள்ளைகள் நம்பத் தொடங்குகிறார்கள். மிக ஆபத்தான நம்பிக்கை இது.

பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளைப் பக்குவமாகப் புரிந்து கொள்ளுதல் மனிதனுக்கு மிக இன்றியமையாதது. கனவுகள் வேறு; எதார்த்தம் வேறு என்பதை இளந்தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். திடீரென்று வகுப்பு எடுக்க முடியாது. தொடக்கத்திலிருந்தே பழக்கி வைத்திருந்தால்தான் சாத்தியம். குழந்தைகளிடம் பெற்றோர் பேசுவதிலிருந்துதான் வரும். பேசுவது என்றால் வெறுமனே பேசிக் கொண்டிருப்பதில்லை. நம்முடைய ஆதி அந்தம் முதற்கொண்டு அத்தனையும் குழந்தைக்குத் தெரிவது தவறில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் - நம் பொருளாதாரச் சூழலைக் குழந்தைகளிடம் பேசுவது என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்த விவகாரம் மட்டுமில்லை. உலகில் எதுவுமே கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இதுதான். ‘உங்க தாத்தா இவ்வளவுதான் சம்பாதிச்சு வெச்சிருந்தாரு..கையூன்றி கர்ணமடித்து அப்பா சம்பாதிச்சதுதான் இதெல்லாம்’ என்று அந்தக் காலத்தில் நமக்குச் சொன்னதில்லையா? அதை ஏன் நாம் நம் குழந்தைகளிடம் சொல்வதில்லை? இப்படிப் பேசுவது பெருமையடிப்பது ஆகாது. உலகம் எவ்வளவு கடினமானது என்பதைக் குழந்தைகள் வேறு எப்படிப் புரிந்து கொள்வார்கள்?  கஷ்டமேயில்லாமல் அத்தனையும் கிடைக்க வேண்டும் என்ற கனவிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். கஷ்டப்பட்டதால்தான் அப்பா இன்றைய நிலைமைக்கு வந்திருக்கிறார் என்றும் அதே கஷ்டத்தையும் அல்லது அதைவிடக் கூடுதலாகவும் தாம் கஷ்டப்படத் தயார் என்ற மனநிலையும் அவர்களுக்கு உருவாக வேண்டும்.

அதன்பிறகு இந்த உலகமும் குடும்பமும் உருவாக்கும் அழுத்தத்தை அவர்கள் தாங்கிக் கொள்ளத் தயாராவார்கள். கனவிலேயே இருப்பவர்கள் மீது அழுத்தம் உண்டாக்கப்படும் போதுதான் அவர்கள் மரணத்தை நாடுகிறார்கள். அழுத்தம் உருவாக என்ன காரணம் என்று தேடினால் நிறையச் சொல்ல முடியும். ஆனால் அழுத்தத்தைச் சமாளிக்கத் தெரியாமல் குழந்தைகள் வளர்வதற்கு ஒரே காரணம்தான் - பெற்றோர்கள்.

உலகில் எதுவுமே எளிதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. எல்லாவற்றுக்கும் ஒரு வலியுண்டு. தமது கனவை அடைவதற்கான வலியை ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை பெற்றோரால்தான் உருவாக்க முடியும். அப்படி உருவாக்காமல் குழந்தைகளிடம் அழுத்தத்தை மட்டும் உருவாக்கினால் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. நாம் யோசிக்க வேண்டிய தருணமிது.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

குழந்தைகள் சங்கடமின்றி வளர வேண்டும் என நினைத்து வளர்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
சங்கடம் தாங்கி வளர வைக்க வேண்டும்

raja said...

மிகவும் உண்மை. நம்பிக்கை வைக்க வேறு ஒன்றும் இல்லை என்பதாலா. அதிலும் பெண்கள்!! பாவம், குழந்தைகள்தான் அவர்கள் உலகம். போனை எடுத்தாலே அம்மாவிடம் எரிந்து விழும் பையன்களை தெரியும். அம்மா ஆசையுடன் வாங்கி குடுத்த ஐபோனை கேர்ள் பிரென்ட்க்கு குடுத்து விட்டு, "தொலைந்து விட்டது" என்று சொன்ன பையனுக்கு அம்மா வடித்த கண்ணீர் தெரியுமா!

"குடிக்காதேடா" என்று கூட சொல்ல முடியாமல் தவிக்கும் அம்மாக்கள்!

கௌதம புத்தரை கூட இப்படி வளர்த்து இருக்க மாட்டார்கள். சண்டை போட ஆரம்பிப்பார்கள், குழந்தை பார்க்கிறது என்றவுடன் சட்டென்று நிறுத்தி விடுவார்கள். ஏன் குழந்தை வெளியில், டீவியில் சினிமாவில் பார்க்காதா!!

வாஸந்தியின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. வீட்டில் பையன் இரவு வர மாட்டான். அப்பா அம்மாவிடம் அவன் நண்பர்கள் யார் இன்ன பிற கேள்விகள் கேப்பார். அம்மாவுக்கு தெரியாது. "என்னதான் தெரியும் உன் பையன பத்தி" என்று அப்பா கத்துவார். ஏதோ அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல.

போலீஸ் ஸ்டேஷனில், "தண்ணி போடுவானா" என்ற கேள்விக்கு "இல்லை" என்று சொல்ல நினைத்து "தெரியல" என்பார் அப்பா. உடனே ஹெட் கான்ஸ்டபிள் , "ஆங் அத சொல்லுங்க நம்ம பசங்க பத்தி நமக்கு தெரியாதது நெறய இருக்கு"!!

மகனை இழந்து தவிக்கும் உங்கள் நண்பருக்கு என்ன ஆறுதல் சொல்ல!! அமைதி கிடைக்கட்டும்.

Selvaraj said...

பொதுவாக தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாத இளம் பெற்றோர்கள் அதற்கு பிராயச்சித்தமாக விலை உயர்ந்த அத்தியாவசியம் இல்லாத பொருட்களை வாங்கி கொடுத்து குழந்தைகளின் மகிழ்ச்சியில் சுயதிருப்தி அடைகிறார்கள். 'எனக்க பிள்ள மொபைல எப்படி அழகா நோண்டுது தெரியுமா? எனக்கு தெரியாத எல்லாமே எனக்க பிள்ளைக்கு இந்த மூணு வயசிலேயே தெரியுது' என்று பெருமையாக பெற்றோர்கள் சொல்வது இப்போது சகஜம்.

தனக்கு கிடைக்காதது தன் குழந்தைக்கு கிடைக்க வேண்டுமென்று நினைப்பது சரிதான் ஆனால் அது நல்ல சத்தான உணவு, நல்ல உடை, கல்வியறிவுக்காக இருக்க வேண்டும். நிச்சயம் குழந்தைகள் கஷ்டம் தெரிந்துதான் வளரவேண்டும்