Nov 9, 2017

நீட்டை எதிர்கொள்ளல்..

நீட் தேர்வுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே, எந்தப் போட்டித் தேர்வாக இருப்பினும் தேர்வுக்கான தயாரிப்புகளைச் செய்வதோடு சேர்த்து அந்தத் தேர்வு குறித்தான சில அடிப்படையான தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பாடத்தில் இருந்து எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும், எந்தப் பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மதிப்பெண்களை வளைக்க முடியும், அந்தப் பாடத்தில் நம்முடைய அறிவு எவ்வளவு என்பது போன்ற தெளிவு இருப்பின் பாதிக் கடலைத் தாண்டிய மாதிரிதான். 

பள்ளிகளுக்கு ஒரு சுற்றுப் போய்விட்டு வந்த போது இத்தகைய தெளிவு எதுவும் பள்ளிச்சூழலில் இருப்பதாகத் தெரியவில்லை- குறிப்பாக கிராமப்புற அரசுப்பள்ளிகள்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நீட் தேர்வில் இந்த முறை போட்டி அதிகரிக்கும். தமிழகம் முழுவதும் நிறைய தனியார் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களை வெகு தீவிரமாகத் தயார் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த முறை தேவைப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களை விட இந்த வருடம் நிச்சயமாகக் கூடுதலாக வாங்க வேண்டியிருக்கும். இவையெல்லாம் சர்வ நிச்சயமாகக் கண்களுக்குத் தெரிகின்றன.

நீட் தேர்வுப் பயிற்சிக்காக தமிழக அரசு அறிவித்திருக்கும் இலவசப் பயிற்சி மையங்கள் இன்னமும் முழுமையான வடிவத்துக்கு வரவில்லை. அவை எப்படிச் செயல்படவிருக்கின்றன என்பதைப் பொறுத்து கட்-ஆஃப் மதிப்பெண்களில் மேலும் மாறுதல் இருக்கக் கூடும். தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என்பதையெல்லாம் அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு தரப்பினர் நடைபெறாது என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை நம்பினால் கடைசியில் காலை வாரிவிட்டுவிடுவார்கள். தேர்வு நடந்தாலும் சரி; நடக்காவிட்டாலும் சரி- நம் மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள்தான் உறுதிப்படுத்த முடியும். பல ஆசிரியர்களிடம் ஒருவிதமான நம்பிக்கையின்மை தெரிகிறது. ‘எங்க ஸ்கூல் பசங்களுக்கு இது கஷ்டம் சார்’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள். 

ஒரேயொரு வேண்டுகோள்தான் - கூந்தலைக் கட்டி மலையை இழுத்துப் பார்க்கலாம். வந்தால் மலை. போனால் வேறு வழிகளைப் பார்த்துக் கொள்ளலாம். மாணவர்களைவிடவும் ஆசிரியர்கள்தான் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் காலகாலத்துக்கும் தனியார் பள்ளி மாணவர்களும், சிபிஎஸ்ஈ மாணவர்களும்தான் மருத்துவம் படிக்கச் செல்வார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். ‘ஆகட்டும் பார்த்துவிடலாம்’ என்ற தைரியத்தோடு அணுகுவோம். இந்த வருடம் இல்லையென்றாலும் இன்னும் அடு சில ஆண்டுகளில் நமக்குப் பிடிபட்டுவிடும். அதற்குள் பாடத்திட்டங்களை மாற்றியமைத்தல், தரமான பயிற்சி என அரசும் சில நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என நம்புவோம். 

‘எங்க ஊருக்கு எதாச்சும் செய்யணும்’ என்கிற இளைஞர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் சொல்வதும் கூட இதுதான் - அவரவர் ஊர்களில் இருக்கும் சரியான மாணவர்களைக் கண்டறிந்து தேர்வு குறித்தான விவரங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிடலாம். புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள் போன்றவை மானவர்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். உள்ளூர் பள்ளிகளில் தலைமையாசிரியர்களிடமும் ஆசிரியர்களிடமும் இது குறித்து உரையாட வேண்டும்.

ஆசிரியர்களைப் பொறுத்த வரைக்கும் தமது மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்தான விவரங்களை அவ்வப்பொழுது சேகரித்துக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு வகுப்பறையில் முப்பத்தைந்து மாணவர்கள் இருந்தால் அத்தனை பேரும் இந்தத் தேர்வை எழுதப் போவதில்லை. எழுதுவதற்கான வாய்ப்புள்ள மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களிடம் பேசினால் போதும். கணிசமான மாணவர்கள் தயாராகிவிடுவார்கள்.

நீட் தேர்வு குறித்து இந்நேரம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலிருந்து மட்டும்தான் கேள்விகள் இடம் பெறும்.

இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 45 கேள்விகளும் உயிரியியல் பாடத்திலிருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். தமிழ்வழிக்கல்வி மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை. நீட் தேர்வினை தமிழிலும் எழுதலாம். மொத்தம் உள்ள 180 கேள்விகளுக்கும் சேர்த்து 720 மதிப்பெண்கள். அத்தனை கேள்விகளும் ‘சரியான பதிலைத் தேர்ந்தெடு’ வகையைச் சார்ந்தவை. சரியான பதிலை எழுதினால் ஒரு விடைக்கு நான்கு மதிப்பெண்கள் கிடைக்கும். தவறான பதிலைத் தேர்ந்தெடுத்தால் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். (Negative marking).

இவை தவிர, தேர்வு எழுத மாணவர்களிடம் ஆதார் அட்டை அவசியம் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் எனில் 1400 ரூபாய் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலினத்தவர் எனில் 750 ரூபாய் கட்ட வேண்டும் என்பவை போன்ற வேறு சில தகவல்களும் முக்கியமானவை. 

நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்:


2018 ஆம் ஆண்டில் தோராயமான கட்-ஆஃப் பின்வருமாறு இருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள்-



மாற்றுத் திறனாளிகள்
எஸ்.டி
288-451

எஸ்.சி
324-453
302-315
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)
450-453
312-322
பொதுப்பிரிவினர்
453-695
324- 449
(SC-A, BC-M உள்ளிட்ட உள் இட ஒதுக்கீட்டு முறைகள் அப்படியே தொடரும்)

மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் நாம் எவ்வளவு மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்பதை இதனடிப்படையில் திட்டமிட்டுக் கொள்ளலாம். ஏப்ரல் 02 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பின் பொதுத்  தேர்வு நிறைவடைகிறது. மே முதல் வாரத்தில் நீட் தேர்வு நடைபெறும். இடைப்பட்ட முப்பத்தைந்து நாட்களில் எந்தப் பாடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பதைக் கணித்துக் குறி வைக்கலாம்.

ஒரு தெளிவு அவசியம். ப்ளஸ் டூ தேர்வு நிறைவடையும் வரைக்கும் மாணவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தட்டும். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட மாதிரி ஆகிவிடக் கூடாது. இடைப்பட்ட காலத்தில் நேரமிருக்கும் போது நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், நம்முடைய ப்ளஸ் டூ பாடத்தில் கேள்வி கேட்டிருக்கிறார்களா, மாதிரி வினாத்தாள் போன்றவற்றை மேம்போக்காக அலசி வைத்திருக்கலாம். முப்பத்தைந்து நாட்கள் என்பது மிகக் குறைவான காலம்தான். 2017 ஆம் ஆண்டில் மருத்துவம் கிடைக்காத மாணவர்கள் கூட இந்த வருடம் எழுதுவார்கள். ஒரு வருடத் தயாரிப்பு அவர்களுடையது. அவர்களோடு போட்டியிட வேண்டும்தான். ஆனால் முயற்சித்துப் பார்த்துவிடலாம்.

நீட் தேர்வுக்கு மத்திய அரசு தமிழகத்துக்குக் கொடுத்திருக்கும் அவகாசம் மிகக் குறைவு. ஒன்றிரண்டு ஆண்டுகளாவது நம் மாணவர்கள் தயாரிப்புகளைச் செய்து கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் இதில் இனி பெரிய மாறுதல் இருக்கும் எனத் தோன்றவில்லை. மருத்துவப்படிப்பில் சேர்வதென்றால் நீட் தேர்வினை எழுதியாக வேண்டியிருக்கும். மிகக் கடினமான தேர்வுதான். ஆனால் நம்முடைய மாணவர்களும் வல்லவர்கள்தான். அவர்களுக்குத் தேவையெல்லாம் சரியான வழிகாட்டல் மட்டும்தான். அதைச் செய்தால் போதும். அவர்களாலும் கவனத்தை ஈர்க்க முடியும்.

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நம்முடைய மாணவர்களும் வல்லவர்கள்தான். அவர்களுக்குத் தேவையெல்லாம் சரியான வழிகாட்டல் மட்டும்தான்//