Nov 23, 2017

பெரிய மனுஷன்

நண்பரொருவர் வீடு கட்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார். ஆந்திராக்காரர். பெங்களூரில் இடம்வாங்கிப் போட்டிருந்தார். இனி கட்டிடத்தைக் கட்டிவிடலாம் என்று முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

‘அப்ரூவல் வாங்கணும்...கூட வர்றியா?’ என்றார். அவர் என்னை ஒத்தாசைக்குத்தான் அழைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்குத்தான் NPK. நெனப்புதான் பொழப்புக் கெடுக்கும் வகையறா.   ஊருக்குள் ஆல் இன் ஆல் அழகுராஜா இருந்தால் இப்படியெல்லாம்தான் அழைப்பார்கள் என்று கெத்தாக நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இத்தகைய பணிகள் நடக்கும் போது உடன் ஒட்டிக் கொள்வது நல்லதுதான். நமக்கும் ஊர் உலகத்தில் என்ன நடக்கிறது என்று நான்கு விஷயம் தெரியும்.

நேற்று ‘ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பாலிக்கே’ அலுவகத்துக்குச் சென்றிருந்தோம்.  அடுத்தவர்கள் நம்மை நம்பி அழைத்துச் செல்லும் போது நாமே அமைதியாக இருந்தாலும் நம் வாய் அமைதியாக இருக்காது அல்லவா? எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல எதையாவது பேச எத்தனிக்கும். 

நுழைந்தவுடன் கண்ணில்பட்ட அதிகாரியிடம் ‘சார், பில்டிங் ப்ளான் அப்ரூவல் பேக்கு’ என்றேன். அவர் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவரிடம் போகச் சொன்னார். வார்த்தைகள் எல்லாம் இல்லை. சைகைதான். 

‘ஆயித்து சார்’ என்று சொல்லிவிட்டு நண்பரிடம் ‘இங்கேயே நில்லுங்க..முடிச்சுட்டு வர்றேன்’ என்றேன். 

‘இந்த சுண்டைக்காயன் அப்ரூவல் வாங்கிக் கொடுத்துடுவான் போலிருக்கே’ என்ற ஒளிக்கீற்று பரவியிருக்கும். ஆனாலும் ஒரு மார்க்கமாகத்தான் பார்த்தார். 

அனுமதி வழங்கக் கூடிய ஆளிடம் இரண்டொருவர் நின்றிருந்தார்கள். அருகில் சென்றவுடன் ஏறெடுத்துப் பார்த்தார். விவரத்தைச் சொன்னேன். ‘தெரியுதோ தெரியலையோ உள்ளூர்ல கன்னடத்துல பேசுனீங்கன்னா மரியாதை இருக்கும்’ என்று நண்பர்களுக்குள் பேசிக் கொள்வதுண்டு. அரை குறைக் கன்னடத்தில் கிண்டியவுடன் ‘லேட் ஆகும் சார்..உடனே ஆகாது’ என்றார். சுத்தத் தமிழில். அதன் பிறகு என்ன பேசினாலும் அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. முகத்தைப் பார்த்தால் பரிதாபம் வரும்படியான ஒரு கோணத்தில் வைத்துக் கொண்டு நின்றேன். அநேகமாக அவருக்கே பாவமாகத் தெரிந்திருக்க வேண்டும். போனால் போகட்டும் என இன்னொரு ஆளைக் காட்டினார். அந்த ஆள் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்திருந்தார்.

அருகில் சென்றவுடன் ‘என்ன சார்?’ என்றார். விவரங்களைக் கேட்டுவிட்டு ‘நேரா போனீங்கன்னா வேலைக்கு ஆகுமா சார்?’ என்றவர் ‘முதல்ல பூசாரிகளைப் பாருங்க’ என்று சிரித்தார். அரைகுறைத் தமிழ்.

‘அங்க ஒரு மேப் இருக்கு...பார்த்துட்டு வாங்க’ என்று கை நீட்டினார். ஒரு பழங்கால மேசை மீது மேப்பை ஒட்டியிருந்தார்கள். அது அரதப்பழசான வரைபடம். தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. அவரே எழுந்து வந்து ஆவணங்களை வாங்கிப் பார்த்துவிட்டு ‘சைட்டு க்ரீன் பெல்ட்டுல இருக்கும் போல இருக்கே..இந்த இடத்தை வாங்கினதே வேஸ்ட்..எந்தக் காலத்துலேயும் அப்ரூவல் வாங்க முடியாது’ என்றார். எனக்கு விக்கல் வந்தது. நண்பர் காதில் விழுந்தால் அவருக்கு மூச்சே நின்றுவிடும். அவர் தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்க்கும் போதெல்லாம் சிரித்துத் தலையை ஆட்டினேன்.

நண்பரிடம் ‘விசாரிச்சுட்டு வர்றேன்னு சொல்லியிருக்கணும்’ எனத் தோன்றியது. பெரிய இவனாட்டம் ‘முடிச்சுட்டு வர்றேன்’ என்று சொல்லியிருந்தேன். கார்போரேஷன்காரர் ‘இதெல்லாம் ஆகாது’ என்று சொல்லிவிட்டு அவருடைய இடத்துக்கு- பெஞ்ச்சுக்குக் கிளம்பிப் போய்விட்டார்.

இனி என்ன செய்வது? நண்பரிடம் சென்று விவரத்தைச் சொன்னேன். ‘இவனுக்கு எதுக்கு இந்த வேலை..இவனைப் போய் நம்பினேன் பாரு’ என்று நினைத்திருக்கக் கூடும். வெகு இயல்பாக ‘ஆரம்பத்துல அப்படித்தான் சொல்லுவாங்க...வாங்க பார்த்துக்கலாம்’ என அழைத்தார். கிராதகன். அவருக்கு ஏற்கனவே விவரம்  எல்லாம் தெரியும் போலிருக்கிறது.

மீண்டும் பெஞ்ச்க்காரரிடம் சென்றோம். ‘அதான் சொல்லியாச்சே’ என்று சொல்லிவிட்டு கட்டிட மதிப்பைக் கேட்டார். ‘முப்பது லட்சம் சார்’ என்றேன். நண்பர் முறைத்தார். அது பொய். கட்டிட மதிப்பைக் குறைத்துச் சொன்னால் செலவு குறைவாகும் என்கிற நல்ல எண்ணத்தில் சொன்னது. பெஞ்ச்வாசி ப்ளானைக் கேட்டார். நண்பர் கொடுத்தார். வாங்கிப் பார்த்துவிட்டு தனது காதைத் தொட்டுக் காட்டிச் சிரித்தார். ஏற்கனவே காது குத்தியாகிவிட்டதாம்.

‘ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டா?’ என்றார். எனக்கே வாய் பிளந்துவிட்டது. நண்பரைப் பார்த்தேன். அவர் ‘ஆமாம் சார்’ என்றார். நான் முப்பது லட்சம் என்று சொன்ன போதே இதைச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அப்பொழுது கமுக்கமாக நின்று கொண்டார். என் மானம் போனது.

ஒரு கோடி ரூபாயில் கட்டடம் கட்டுகிற தெலுங்குவாலாவுக்காக அலுவலகத்திலிருந்து வேலையை விட்டு வந்திருக்கிறேன். அந்தக் கேடிப்பயல் என்னிடம் மூச்சுவிடவில்லை.

கார்போரேஷன்காரர் ‘முப்பது லட்சம்ன்னு சொன்னீங்க?’ என்று என்னைப் பார்த்தார்.

‘ப்ரெண்டோட பில்டிங் சார்..எனக்குத் தெரியலை’

‘தெரியலன்னா பேசக் கூடாதுல்ல சார்?’ என்று கேட்டுவிட்டு நண்பரிடம் பேசத் தொடங்கினார். இவன் டம்மி பீஸு என நினைத்திருக்கக் கூடும். அதன் பிறகு என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.

பெரிய மனுஷனைக் கூட்டிட்டு வந்து அவமானப்படுத்துகிறோம் என்று தெலுங்கனாவது யோசித்திருக்க வேண்டாமா? ம்ஹூம். பேரத்தை  ஆறு லட்சத்தில் ஆரம்பித்தார்கள். கடைசியில் நான்கே முக்கால் லட்சத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்தத் தொகையில் எல்லாமே அடக்கம். பெஞ்ச்வாசி பொறுப்பெடுத்து வாங்கிக் கொடுத்துவிடுவார். இருபத்தைந்தாயிரம் ரூபாயை முதலில் கொடுக்க வேண்டும். முன்பணம். பிறகு மாநகராட்சிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை டிடி ஆக எடுத்துத் தர வேண்டும். அதுவே இரண்டு அல்லது மூன்று லட்சம் வரும் போலிருக்கிறது. செலவுத் தொகையைக் கடைசியாகக் கொடுத்துவிட்டு அங்கீகாரத்தை வாங்கிக் கொள்ளலாம்.

‘அப்பாடா...ஒரு வழியா பிரச்சினை முடிஞ்சுதுங்க..தேங்க்ஸ்’ என்றார். எனக்கு எதுக்கு நன்றி சொல்கிறார் என்று குழப்பம் வரத்தானே செய்யும்? கலாய்க்கிறாரோ என்று அமைதியாக இருந்தேன்.

‘என்னங்க லஞ்சம் கொடுத்து அப்ரூவல் வாங்குறீங்க?’ என்றேன். காந்தியாக மாறியது அவரைக் கலவரம் கொள்ளச் செய்தது. ‘அப்புறம் என்னங்க பண்ணுறது? க்ரீன் பெல்ட்டுல சைட் போட்டிருக்காங்க..வாங்கியாச்சு..காசு கொடுக்காம ஆகுமா?’ என்றார். எல்லாவற்றையும் விசாரித்து வைத்துக் கொண்டு தெளிவாக இருந்திருக்கிறார். 

நானாகத்தான் துள்ளியிருக்கிறேன். ‘இதுக்கு எதுக்குங்க என்னைக் கூட்டிட்டு வந்தீங்க?’ என்றேன்.

‘சரி வாங்க...டீ சாப்பிட்டுட்டு போலாம்’.  டீ வாங்கித் தருவதற்காக அழைத்திருக்கிறார் போலிருக்கிறது.

பெஞ்ச்சில் அமர்ந்திருந்த ஆள் புரோக்கராம். இத்தகைய வேலைகளை முடித்துக் கொடுக்கிற ஆள். அவரும் டீக்கடைக்குக் கூடவே வந்தார். அங்கேயும் என்னிடம் அவன் பேசவே இல்லை. அப்பொழுதும் அவன் என்னை டம்மி பீஸு என்றுதான் நினைத்திருக்க வேண்டும்.

முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு லைட் காபி ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு கிளம்பி வந்துவிட்டேன். வேறு எப்படித்தான் பந்தா காட்டுவது? ஊருக்குள் பெரிய மனுஷனுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது.ச்சை!

6 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

பில்டிங்கோட வேல்யு கேட்டப்பவாச்சும் அமைதியா இருந்திருக்கலாம்ல?

Kannan said...

ஆக, ஒரு ஊழலுக்கு சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். நீங்க எடுத்த வீடியோவ நண்பருக்கு போட்டு காண்பிச்சீங்களா?

அன்பே சிவம் said...

மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் ஆகும்னு அருக்காம விட்டாங்களேன்னு கருப்பரானுக்கு ஒரு கோழிய சுத்தி விடும்.

அப்புறம் ப்ரீயா இருந்தா நம்ம ஆபீஸுங்க பக்கம் ஒரு ரவுண்டு போரது.ஒலகத்த தெரிஞ்சி கிட்ட மாதிரியும் இருக்கும். எங்ளுக்கும் All in All அப்பாடக்கரு மூலமா ஒரு புது விசயமும் கிடைக்கும்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

பெரிய மனுசனாக இருந்தது போதும். சின்ன பசங்க எங்கள் உடன் உடனே பேசுங்கள்.
வாழ்க வளமுடன்

சேக்காளி said...

//பார்க்கும் போதெல்லாம் சிரித்துத் தலையை ஆட்டினேன்//
கற்பனை செய்து பார்த்தேன்.
சிரிப்பு தான் வந்தது. சிரித்துக் கொண்டேன்.

Aravind said...

கடைசிவரை எதுக்கு கூட்டிட்டுப்போனார்னு சொல்லவே இல்லயே தல!