Oct 5, 2017

குட்டியாக ஒரு போட்டி

குட்டியாக கதை எழுதும் போட்டி இது. விவரங்களைக் கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்பாக ஒரு தகவல்.

அகிலா மென்பொறியாளர். குழந்தைகளுக்கான கதை சொல்லி. குழந்தைகளுக்காக சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பார் போலிருக்கிறது. அநேகமாக ஒரு வடிவத்துக்கு வந்த பிறகு வெளியில் சொல்லக் கூடும். அவரே சொல்லட்டும். அவர் ரோபோஜாலம் புத்தகத்தின் ஐம்பது பிரதிகளை வாங்கி பள்ளிகளுக்குக் கொடுத்திருக்கிறார். வேறு சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர் இப்படி பள்ளிகளுக்கு வழங்கியிருக்கிறார் என்று தெரியும். ரோபோஜாலம் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது.

சில கல்லூரிகளிலிருந்து தமது மாணவர்களுக்குக் கொடுப்பதற்காகக் கேட்டிருக்கிறார்கள். இடையில் யாராவது புகுந்து கலைத்துவிடுவார்கள். அப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. ஒருவேளை எல்லாவற்றையும் மீறி கல்லூரி நிர்வாகத்தினர் பிரதிகளை வாங்கினால் தெரியப்படுத்துகிறேன். ரோபோஜாலத்தை பெரிய அளவில் புத்தகத்தை விளம்பரப்படுத்தவில்லை. கரிகாலனிடம் முன்பே அப்படித்தான் பேசி வைத்திருந்ததுதான். அலம்பல் எதுவும் செய்யாமல் எவ்வளவு பிரதிகள் விற்பனையாகின்றன என்று பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஒன்றும் மோசமில்லை. ஆனால் புத்தகங்களுக்கு விளம்பரம் அவசியமாக இருக்கிறது. வருடம் பல்லாயிரம் புத்தகங்கள் வந்து குவிகின்றன. பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செய்ய எழுத்தாளர்கள் தயாராக இருக்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு புத்தகம் அச்சடித்துத் தர பதிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்கள். மிகப்பெரிய வணிகம் இது. அந்த மலைக்குள் குட்டியாக புத்தகம் ஒன்றை எழுதி சத்தமில்லாமல் விட்டுவிட்டால் நசுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.

அடுத்தவர்களுக்கு அலர்ஜியாகாமல் விளம்பரம் செய்வது எப்படி என்று சில ஐடியாக்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதில் ஒரு ஐடியாதான் இப்படி நாசூக்காக பதிவு ஒன்றை எழுதுவது.

அகிலாவின் பதிவு-

ரோபோஜாலம் புத்தகம் வெளிவந்தவுடன் 50 காப்பிகள் வாசிப்பதற்கு முன் வாங்கியாகிவிட்டது புத்தக அறிமுக விழா ஒன்றில் ஆறாவதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அளிக்கும் அவசரம். விழாவிற்கு செல்லும் ஒரு மணி நேர பிரயாண நொடிகளை நானோ வினாடிகளா சுருக்கி 10 அத்தியாயங்களை மூளைக்குள் அசால்டாக ஏற்றியது வா.மணிகண்டனின் எழுத்து. அன்றைய விழாவில் மாணவர்களுக்கு அளிக்கையில் படு திருப்தி. 

30 புத்தகங்கள் பள்ளிகளுக்கு கொடுப்பதற்கு என எடுத்து வைத்து, குன்றத்தூர் தாய் தமிழ் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வெற்றிமாறன் அவர்களிடம் 5 புத்தகங்கள், பண்ருட்டி மேல்நிலைப்பள்ளிக்கு முனைவர் பரமேஸ்வரி அவர்கள் வழி 5 புத்தகங்கள் எனச் சேர்த்தாகிவிட்டது.

10 வருட காலத்திற்குள் யாரும் எதிர்பாராத வகையில் தனிமனித வாழ்வில் தொலைத்தொடர்பு சாதனைகளும், இணையமும் எவ்வாறு ஊடுருவியுள்ளதோ அது போல் ஒரு ரோபோ நம்முன்  சில வருடங்களில் நின்று கொண்டிருக்கும். ஜப்பான் மற்றும் ஜெர்மனி சென்று வந்தவர்கள் ரோபோக்களுடன் கைகுலுக்கி வருகிறார்கள். ரோபோடிக்ஸ் என்றால் என்ன என்பது பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் ஓர் எளிய அறிமுகமே ரோபோஜாலம். - ரோபோடிக்ஸ் டெக்னாலஜி பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக அறியும்முன் மாணவர்களுக்கு இப்புத்தகம் ஒரு முன்னோட்டம். அறிவியல் சார்ந்த வாசிப்பை விரும்பும் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் குறித்து அறிய மட்டுமல்ல, அறிவியல் ஆசிரியர்களும் வாசிக்கலாம் - மாணவர்கள் முன் கெத்துகாட்ட நினைத்தால்.

வெவ்வேறு பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கி அளித்திருந்தாலும், நான் படித்த, என் கனவுகளுக்கு வண்ணம் தீட்டிய, கணக்கிலடங்கா புத்தகங்களை என்கண்முன் காட்டிய, என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு வகிக்கும் என் பள்ளி நூலகத்திற்கு இதுவரை ஒருமுறை கூட புத்தகங்கள் அளிக்கவில்லை என்பது நினைவிற்கு வர, 5 புத்தகங்கள் இன்று அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்த நொடிமுதல் மனதில் திக் திக். புத்தகம் அருமை, மணிகண்டனின் எழுத்து பிரமாதம். பிரச்சனை என்னவென்றால் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அதற்காகவும் என் கையெழுத்திற்காகவும் தமிழம்மா [ தமிழாசிரியையை அவ்வாறு அழைப்பது பள்ளி வழக்கம் ] முட்டிக்கால் போடச்சொல்லி 10000 மனப்பாட செய்யுள் எழுதச் சொல்வார்களோ என பயமாக உள்ளது.

அகிலாவுக்கு நன்றி.

இன்னமும் நூறு பிரதிகள் கைவசமிருக்கின்றன. முத்துக்கெளசிக் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். அவற்றில் பத்து பிரதிகளை பரிசாகக் கொடுத்துவிடலாம். ஐநூறு சொற்களுக்கு மிகாமல் அறிவியல் புனை கதைகளை அனுப்பச் சொல்லி இறுதியாகக் கதைகளுக்கான தேர்தலை நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பத்து கதைகளுக்கு ரோபோஜாலமும் கூடுதலாக இன்னுமொரு துக்னியூண்டு புத்தகம் ஒன்றையும் அனுப்பி வைத்துவிடுகிறேன். போட்டி என்றில்லை. ஜாலியான விளையாட்டு இது.

என்ன பெரிய எழுத்து? நாம் எழுதுவதுதான் எழுத்து.

சனிக்கிழமை (அக்டோபர் 07, 2017)  இரவுக்குள் கதைகளை அனுப்பி வையுங்கள். ஒருவரே எவ்வளவு கதைகளை அனுப்பினாலும் சரி!

vaamanikandan@gmail.com

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// நாம் எழுதுவதுதான் எழுத்து.//
படிக்கவே முடியலியாம். இதுல எங்கேருந்து எழுதுறதாம்.
அதாம்யா. தலையெழுத்து.

karthickg said...

please let me know more details about Akila storyteller.
Her website or story books for reference. planning to buy for my kid