Oct 27, 2017

மொட்டுக்கள்

சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி இருக்கிறது. தனியார் கட்டணம்தான் வசூலிக்கிறார்கள். கல்லூரியை அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் கட்டணத்தை மாற்றியது போலத் தெரியவில்லை. கல்லூரிக்கட்டணம் மூன்று லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய். விடுதிக் கட்டணம் ஐம்பத்து மூன்றாயிரம் ரூபாய். வசதி இருப்பவர்கள் கட்டிவிடுகிறார்கள். கெளதம் மாதிரியான ஆட்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். கெளதம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அப்பா தொகுப்பூதியம் பெறும் நூலகர். எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அரூர் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவர்கள். பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தான். தாழ்த்தப்பட்ட பிரிவு என்றாலும் கட்-ஆஃப் சற்றே குறைய ராஜா முத்தையா கல்லூரியில்தான் இடம் கிடைத்திருக்கிறது. ‘இந்த ஒரு வருஷம்தான்..அடுத்த வருஷம் ஃபீஸ் குறைஞ்சுடும்’ என்று எல்லோரும் சொல்ல கெளதம் மருத்துவப்படிப்பில் சேர்ந்துவிட்டான். வங்கிக் கடன் ஒன்றரை லட்சம் கிடைக்கிறது. இருந்த போதும் வருடம் கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாயைக் கூடுதலாகப் புரட்டியாக வேண்டும். முதல் வருடம் சமாளித்துவிட்டார்கள். இப்பொழுது இரண்டாம் வருடம்.

கெளதமும் அவனது குடும்பமும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த வருடமும் அதே மூன்றேகால் லட்ச ரூபாய்தான் கட்டணம். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மருத்துவர் ராமதாஸ் கல்லூரிக்கட்டணத்தை மாற்றச் சொல்லி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பெரிய அளவில் ஊடகக் கவனம் கிடைக்காத பிரச்சினையாகிப் போனது. மாணவர்கள் தரப்பு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் மாணவர்கள் கட்ட வேண்டிய கட்டணம் குறித்து தீர்ப்பு வரும் போலிருக்கிறது. மாணவர்கள் விடுதியில் இருந்துதான் படித்தாக இருந்தாக வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் சொல்லியிருக்கிறார்கள். விடுதிக் கட்டணம் ஐம்பதாயிரம் ரூபாய் கட்டிய மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன. கெளதமும் அவனது அப்பாவும் மாற்றி மாற்றிப் பேசினார்கள். நிறைய விசாரித்தோம். அவர்கள் சொன்ன எந்தச் செய்தியும் பொய் இல்லை. ஒதுக்கப்பட்டிருக்கும் வங்கிக்கடன் கல்லூரிக் கட்டணத்துக்கானது. விடுதிக் கட்டணத்தைக் கட்டிவிட்டால் வகுப்புகளுக்குச் செல்வான் என்று அவரது அப்பா சொன்னார். மகன் மருத்துவம் படிப்பதற்காக தமது மற்ற இரண்டு பிள்ளைகளையும் செலவில்லாத படிப்புகளாகச் சேர்த்திருக்கிறார்கள். 

கெளதமிடம் பேசினேன். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் மாணவனின் தோரணை அவனிடம் இருந்தது. ‘இந்த வருஷம் வகுப்புக்குப் போகாமல் இருக்க வேண்டாம்’ என்று அழைத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்திருக்கிறோம். அப்பா புரட்டிக் கொடுத்த மீதத் தொகையை விடுதியில் கட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டான். நேற்று அழைத்திருந்தான். ‘அநேகமா படிப்பை நிறுத்திடுவனோன்னு பயமா இருந்துச்சு’ என்றான். மருத்துவப்படிப்பை ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் பணத்துக்காக நிறுத்துவதை வேடிக்கை பார்ப்பதைப் போன்ற பாவம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் இன்னமும் கால்வாசி தூரத்தைக் கூடத் தாண்டவில்லை. தீர்ப்பு மாணவர்களுக்குச் சாதமாக வந்துவிட்டால் பிரச்சினையில்லை. ஒருவேளை எதிர்மறையாக வந்துவிட்டால் வருடம் நான்கு லட்ச ரூபாய் என்பது பெருந்தொகை. இப்போதைக்கு கெளதமின் வகுப்புகள் தொடர்கின்றன. அவன் கல்லூரிக்குச் சென்றுவிட்டான். பார்க்கலாம்.


பிரவீணா இன்னொரு முத்து. ஆயிரத்து நூற்றைம்பதுக்கும் அதிகமான மதிப்பெண்கள். அரசுக் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அப்பா தனியார் மில் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகள். நன்றாகப் படிக்க வைத்துவிட்டார். பிரவீணா முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது அப்பாவுக்கு நெஞ்சுவலி. நாமக்கல்லில் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார். நான்கைந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால் பலனில்லை. இறந்துவிட்டார். அம்மாவும் பிரவீணாவும் மட்டும்தான். சொந்த வீடு எதுவுமில்லை. அப்பாவின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கி வைத்திருந்த தொகையில் கொஞ்சம் மிச்சமிருக்கும் போலிருக்கிறது. அதை வைத்துத்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக வாடகை உள்ளிட்ட செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தானும் ஏதாவதொரு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்றார் பிரவீணாவின் அம்மா. என்ன வேலை என்பதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. உடைந்து போயிருந்தார்.

பிரவீணாவின் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாம் இப்பொழுது பெருஞ்சுமை. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அவர்கள் விழிக்க ஒரு கல்லூரி பேராசிரியர் விவரங்களைக் கொடுத்திருக்கிறார். தயங்கித் தயங்கித்தான் தொடர்பு கொண்டார்கள். யோசித்துப் பார்த்தால் அவர்களுக்குக் கடினமான சூழல். கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரவீணாவைத் தேற்றுவதுதான் பெரிய காரியமாக இருந்தது. இரண்டாம் ஆண்டுக்கான முழுத் தொகையையும் நிசப்தம் வழியாகக் கட்டிவிடலாம் என்று காசோலையைக் கொடுத்தோம். இப்போதைக்கு இருக்கட்டும். ஒருவேளை பிரவீணாவின் அம்மா திடம்பெற்று சம்பாதிக்க ஆரம்பித்தால் ஒரு பகுதியை அவர் சமாளிக்கட்டும்.

பிரவீணாவும் கெளதமும் வெவ்வேறு படிப்புகள். இரண்டு பேருமே மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடியவர்கள். முதலாமாண்டு மிகுந்த நம்பிக்கையுடன் படிப்பில் சேர்கிறார்கள். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது பெரும் பாறாங்கல் உருண்டு வந்து விழுகிறது. யாருக்கு எப்பொழுது எந்த மாதிரியான தடைகள் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது. ஆனால் எங்கேயோ இருந்து யாரோ கை நீட்டுவார்கள். அதுதான் உலக நியதி. இங்கே கைவிடப்பட்டவர்கள் என்று யாருமில்லை. அவர்கள் இரண்டு பேரிடமும் அதைத்தான் சொன்னேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் இதுவரை அவர்கள் படித்தது வீணாகிவிடாது. உள்ளுக்குள் நெருப்பை மட்டும் அணையாமல் பார்த்துக் கொண்டால் அவர்கள் படித்து முடித்துவிடுவார்கள். 

ஆயிரம் கைகள் இருக்கின்றன.

இருவரையும் தொடர்ந்து கவனித்துக் கொள்ளலாம். பெரும் பிரச்சினைகள் சூழாமல் இருவரும் மருத்துவராக இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

6 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

சிறப்பா வருவாங்க மணி..

அன்பே சிவம் said...

அட போங்கைய்யா!

இப்படியே ஏதாவது செய்ய வேண்டியது?

அத எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம நாங்க

திணற வேண்டியது.

ABELIA said...

எழுத்தறிவித்தவன் இறைவன். அதை எட்டிப்பிடிக்க உதவியவன் அவனினும் மேல். எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் காப்பாற்றட்டும் இதுபோன்ற நல்லுள்ளங்கள் வாயிலாக..!

சேக்காளி said...

மணிக்கு ஒரு நிஜாம் பாக்கு பாக்கெட் பார்சேல்ல்ல்ல்ல்ல்.

சேக்காளி said...

//அட போங்கைய்யா! இப்படியே ஏதாவது செய்ய வேண்டியது? அத எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம நாங்க திணற வேண்டியது.//
தெளிய வச்சி தெளிய வச்சி திணற வைக்குறாராமாம்.
என்னை வச்சி செய்ய ஆசைப்பட்டீங்க ல்ல அன்பே பார்வதி புருசா.
இப்ப அவரு (மணி) நம்மள வச்சி செய்யுறாரு.ஆனாலும் இந்த வச்சி செய்யுறது "கறை நல்லது" வகையை சேர்ந்தது ங்கறதுனால பெருமிதமா தான் இருக்கு.

Sakthivel Viru said...

பாராட்டுதலுக்கு உரிய பெரும் சேவை பணி செய்கிறீர்கள் மணி ....தலை வணங்குகிறேன்